Headlines News :
முகப்பு » , , , , , » றோயல் கல்லூரி : இலங்கையின் முதலாவது அரசாங்க பாடசாலை (கொழும்பின் கதை - 35) -என்.சரவணன்

றோயல் கல்லூரி : இலங்கையின் முதலாவது அரசாங்க பாடசாலை (கொழும்பின் கதை - 35) -என்.சரவணன்

இலங்கையின் முன்னணி கல்லூரியாக திகழ்வது கொழும்பு றோயல் கல்லூரி (Royal College). தமிழில் வேத்தியர் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல இது தான் இலங்கையின் முதலாவது அரசாங்க பொதுப் பாடசாலை. 1835ஆம் ஆண்டு இது நிறுவப்பட்ட இக்கல்லூரி இலங்கை அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள தேசியப் பாடசாலையாக திகழ்ந்தாலும் ஒரு தனியார் கல்லூரியின் வடிவத்தைத் தருவதற்குக் காரணம் இலகுவில் மாணவர்களை சேர்க்கமுடியாத அளவுக்கு போட்டியும், அதன் காரணமாக இறுக்கங்களும் அதிகம் உள்ள இலங்கை பாடசாலை இது தான்.

இக் கல்லூரியில் தமது பிள்ளைகளை சேர்த்துவிட கனவு காணாத பெற்றோர் அரிதென்றே கூறலாம். இலங்கையின் அரசியல் தலைவர்கள் பலர் இங்கே தான் கற்றார்கள்.

இலங்கையின் பணக்காரர்களின் கோட்டையாக அறியப்படும் கறுவாத்தோட்டப் பகுதியில் 15.5 ஹெக்டேர் பரப்பில் பெரிய விளையாட்டு வளாகம், நீச்சல் தடாகம் என பல வசதிகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இரண்டு நூற்றாண்டை எட்டப்போகும் இந்தக் கல்லூரியின் பின்புலம் முக்கிய வரலாற்றுப் பாத்திரத்தையும் கொண்டிருக்கிறது.


ஆங்கிலேயர்கள் இலங்கையைக் கைப்பற்றி சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் இலங்கையில் தமது ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல மாற்றங்களை செய்யத் தொடங்கினார்கள். கோப்பி, தேயிலை போன்ற பணப்பயிர்களின் உற்பத்தி வேகம் தொடங்கப்பட்டதும் புதிய பாதைகளை உருவாக்குதல், இலங்கைக்கான அடிப்படை உட்கட்டமைப்பை பலப்படுத்திக்கொள்வதற்காக பல விடயங்களைத் தொடங்கினார்கள். 1833இல் கோல்புறூக் தலைமையிலான ஆணைக்குழு இந்த மாற்றங்களை செய்வதற்கான பரிந்துரைகளை செய்தது. அதன் மூலம் தான் இலங்கைக்கான யாப்பும் முதற்தடவை உருவாக்கப்பட்டது. அதன் ஒரு பரிந்துரை தான் பிரித்தானிய பொதுப் பள்ளிக்கூடங்களைப் போல அரசாங்க பள்ளிக்கூடங்களை தொடக்குவதற்கான தொடக்கமாகும்.

ஏற்கெனவே நூற்றுக்கணக்கான மிஷனரி பாடசாலைகள் அப்போது ஆரம்பமாகியிருந்தன. இலங்கையின் முதலாவது பிரிட்டிஷ் ஆளுநரான பிரெடிரிக் நோர்த் (Frederick North) காலத்தில் 1800 இல் யாழ் குடா நாட்டில் மாத்திரம் கிறிஸ்தியான் டேவிட் பாதிரியாரைக் கொண்டு 47 மிஷனரி பாடசாலைகளை தொடக்கினார். ஆனால் அதற்குப் பின்னர் பதவிக்கு வந்த ஆளுநர் மெயிற்லான்ட் (T. Maitland) 1805 இல் அவற்றை நடத்துவதற்கான வளங்கள் போதாதென்று மூடிவிட்டார்.  1812 இல்  பப்டிஸ்ட் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றை நடத்த அரசு ஆதரவு வழங்கவில்லை. ஆனால் அவற்றை நடத்த அனுமதியளித்திருந்தது. 1833 இல் 15 பப்டிஸ்ட் பள்ளிகளும், 90 வெஸ்லியன், 78 அமெரிக்கன் மிஷன் மற்றும் 53 மிஷனரி சொசைட்டி பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஜோசப் மார்ஷ் பாதிரியார்

1835 ஆம் ஆண்டு றோயல் கல்லூரி தொடக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் 1831 இல் மெட்ராசிலிருந்து வந்த ஜோசப் மார்ஷ் (Joseph Marsh) பாதிரியாரால் அது தனிப்பட்ட ரீதியில் தான் தொடங்கப்பட்டது. அரசாங்கத்துக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 28 வயதேயான ஜோசப் மார்ஷ் பாதிரியார் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர். கோட்டேயில் இருந்த சேர்ச் மிஷனரி சொசைட்டியின் பணியாளராக அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். குறிப்பாக கணக்கியல், ஆங்கில இலக்கியம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்காக அவர் அனுப்பட்டிருந்தார். 1835 ஆம் ஆண்டு அவர் புறக்கோட்டை, புனித பவுல் தேவாலயத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இங்கே தான் றோயல் கல்லூரிக்கான ஆரம்பம் இடப்பட்டது.

Rev. Joseph Marsh, Sir robert Wilmot horton, John Barnabas Cull

1837ஆம் ஆண்டு அவர் நூலகத்தைத் தொடங்கினார். பாடசாலை சஞ்சிகை ஒன்றையும் தொடங்கினார். இலங்கையின் முதலாவது பாடசாலைச் சஞ்சிகையாக அது தான் கருதப்படுகிறது. அவர் ஒரு அச்சகத்தையும் நிறுவினார். பரிசளிப்பு நிகழ்வுகளையும் நடத்தி மாணவர்களை ஊக்குவித்தார். அப்போதே கிரிக்கெட் விளையாட்டையும் ஊக்குவித்திருக்கிறார். ஆனால் சில நாட்களிலேயே அவர் கடும் சுகவீனமுற்றார். 1838 ஆம் ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் அவரின் நாட்டுக்கே திரும்பினார். ஆனால் அவர் தாய்நாடு போய் சேரவில்லை.  1839ஆம் ஆண்டு கடல் பயணத்தின் போதே அவர்  சென்ற கப்பலிலேயே காலமானார்.  ஆனால் அவரின் குடும்பத்தினர் இலங்கையில் இருந்தனர். அவர் அப்போதைய கொழும்பு மாவட்ட நீதிபதி அன்ரூ வோக்கரின் சகோதரியைத் தான் மணமுடித்திருந்தார்.

ஜோசப் மார்ஷ் பாதிரியாரின் மகள் அக்னஸ் ஜேனின் கணவர் பார்குரோப்ட் போக் (ஜோசப் மார்ஷ்) பின்னர் இப்பாடசாலையின் அதிபராக ஆனார். றோயல் கல்லூரியின் வரலாற்றில் அதிக காலம் அதிபராக இருந்தவர் அவர் தான். அவர் பதவி வகித்த 1842 – 1870 காலப்பகுதிக்குள் தான் தங்குமிடம் (Boarding House) உருவாக்கப்பட்டது. கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இணை கல்லூரியாக ஆக்கப்பட்டது. அதுபோல கொழும்பு அக்காடமி; குயின்ஸ் கல்லூரியாக ஆக்கப்பட்டது. மிகவும் கண்டிப்பான அதிபராக இருந்ததுடன், மாணவர்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கிய ஒருவர். இலங்கையின் சுதேசிய மதங்களான பௌத்தம், சைவம் போன்ற மதங்களின் மீது அவரின் காட்டமும் இருந்தது பற்றிய குறிப்புகளையும் காணக் கிடைக்கிறது.

றோயல் கல்லூரியின் முதல் இடம்

முதன் முதலில் இந்தப் பாடசாலை எங்கே தொடங்கப்பட்டது என்கிற தகவல் வியப்பாக இருக்கும். புறக்கோட்டையில் ஐந்து லாம்பு சந்தியில் இன்றும் இருக்கிற புனித போல் (Chaplain of St Paul’s Church) தேவாலயம் இருக்கிறதல்லவா அந்த தேவாலயத்தின் வராந்தாவில் தான் இருபது மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. அப்போது இந்த இடம் வுல்பெண்டால் வீதி (22, Wolfendhal Street) என்று அழைக்கப்பட்டது. அந்த றோயல் கல்லூரியின் ஆரம்பப் பெயர் மேட்டுத்தெரு அக்காடமி (Hill Street Academy).

இந்தப் புறக்கோட்டைப் பகுதியில் அப்போது அதிகமாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தான். இந்த இடத்தைச் சூழ இருந்த முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்கள் இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று கொச்சிக்கடையில் இருந்து செட்டியார் தெருவுக்குள் நுழையும் முன்னர் உள்ள சுற்றுவட்டத்திற்கருகில் இடதுபுற மூலையில் இருக்கிற புனித தோமஸ் தேவாலயம் (Malabar Episcopalian Church, St. Thomas’s). இது ஆங்கிலேய ஆளுநர் சேர் ரொபர்ட் பிரவுன்றிக் (Sir Robert Bownrigg)1816இல் கட்டியது. இந்து சமுத்திரத்தைப் பார்த்தப்படி மேட்டுப் பகுதியில் கட்டப்படிருக்கிறது. எனவே “மேட்டுத்தெரு சேர்ச்” என்றும் அழைப்பார்கள். 1815இல் கண்டியைக் கைப்பற்றி முழு இலங்கையையும் ஆங்கிலேயர் கட்டுப்பட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது இவரின் தலைமையில் தான். இரண்டாவது தேவாலயம் தான் முன்னர் கூறியபடி ஐந்து லாம்பு சந்தியில் உள்ள  (St. Paul’s Church). இது முன்னர் போர்த்துகேயர்களின் வழிபாட்டிடமாக இருந்தது. இயங்காமல் இருந்த இந்த புனித போல் தேவாலயம் மீண்டும் 1816 யூலை 28 இலிருந்து வழிபாட்டுக்காக திறக்கப்பட்டன.  அங்கு தான் றோயல் கல்லூரியின் ஆரம்பம் நிகழ்ந்தது.

1836 இல் அன்றைய ஆளுநர் சேர் ரொபர்ட் வில்மட் ஹோர்டன் (Sir Robert Wilmot-Horton) கொழும்பு அக்காடமி (Colombo Academy)  என்று இதன் பெயரை மாற்றி அரசாங்க பொதுப் பாடசாலையாக ஆக்கினார்.  எனவே றோயல் கல்லூரியின் தோற்ற நாளாக 25.10.1836ஆம் திகதியை பதிவு செய்கிறார்கள்.  அவர் தான் இலங்கையில் கட்டாய சேவை “இராஜகாரிய முறை”யை ஒழித்தார். ஜோசப் மார்ஷ் பாதிரியார் அந்தப் பாடசாலையின் முதலாவது அதிபராக ஆகி அரசாங்க சம்பளம் பெற்றார். அவருக்கான ஆண்டு சம்பளமாக 200 பவுண்டுகள் வழங்கப்பட்டது. அதன் இன்றைய பெறுமதியில் கூறுவதாயின் ஐந்து மில்லியன் எனலாம். ஆளுநர் தான் அதன் புரவலராக இருந்தார். 

ஆரம்பத்தில் ஆங்கில, டச்சு சமூக பின்னணியுள்ளவர்களே கல்வி கற்கத் தொடங்கினார்கள். அதன் பின்னரே சுதேசிய இலங்கையைச் சேர்ந்த வசதி படைத்த மேட்டுக்குடியினர் முதலில் நுழைந்தனர்.

புறக்கோட்டை மெசேஞ்சர் வீதியில் 1836ஆம் ஆண்டு அமைந்திருந்த பாடசாலைக் கட்டிடம்

1836 ஜனவரியில் இந்த மேட்டுத்தெரு அக்காடமி கொழும்பு அக்காடமியாக பெயர் மாற்றப்பட்டு கொழும்பு புறக்கோட்டை, மெசேஞ்சர் வீதியில் உள்ள 144 ஆம் இலக்கக் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது, இன்று அது சனநெருக்கடிமிக்க சந்தைப் பகுதி. சுமார் ஆறு மாதங்களின் பின்னர் அதே ஆண்டு  அங்கிருந்து சென் செபஸ்தியன் வீதியில் உள்ள மேட்டுப் பகுதிக்கு மாற்றப்பட்டது. அதற்கு முனனர் அது பொலிஸ் குதிரை லாயமாக இருந்தது. இன்னும் உறுதியாக சொல்வதாயின் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளை வெளிக்கொணர்ந்த “தவச” கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள மிகுந்து மாவத்தை சிங்கள வித்தியாலயம் இப்போது அந்த நிலத்தில் தான் அமைந்திருக்கிறது. 

நீண்ட காலமாக (1836 - 1913) சென் செபஸ்தியன் வீதியில் இங்கே தான் இயங்கியது

அதுமட்டுமல்ல இங்கே தான் சுமார் 75 ஆண்டுகளாக றோயல் கல்லூரி இயங்கியது. தொடக்கத்தில் அங்கிலிக்கனிசத்துக்கு நெருக்கமாக இருந்தாலும் அது ஒரு மத சார்பற்ற பள்ளிகூடமாகவே இயங்கியது. 

1859ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது உயர்கல்வி நிறுவனமான குயின்ஸ் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆங்கில பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுப் பரீட்சையில் தொற்றுவதாயின் அப்போது கொழும்பு அக்காடமியில் தான் பரிட்சை எழுத வேண்டியிருந்தது. 1865 ஆம் ஆண்டு இலங்கையின் கல்வி நிலை பற்றி ஆராய்ந்த மோர்கன் குழு (Morgan Committee) மேற்படிப்புக்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்க புலமைப்பரிசில் வழங்கவேண்டும் என்கிற தீர்மானத்தைத் தொடர்ந்து; கல்விக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரித்தானியாவில் உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கே அடிப்படைக் கல்விக்கான உரிமை வென்றெடுக்கப்பட்ட அதே 1870 இல் தான் இலங்கையில் மோர்கன் ஆணைக்குழுவின் கல்வி குறித்த முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. சிங்கள, தமிழ் மொழிக் கல்விக்கான சுதந்திரம், மிஷனரி பள்ளிக்கூடங்களிலும் சொந்த மதங்களைக் கற்கும் உரிமை போன்றவற்றை பரிந்துரைத்த ஆணைக்குழு அது. அதன் விளைவாக 1859 ஆம் ஆண்டு குயின்ஸ் கல்லூரியும், கொழும்பு அக்காடமியும் ஒன்றாக இணைக்கப்பட்டது. குயின்ஸ் கல்லூரி என்றும் பெயர் மாற்றப்பட்டது. இலங்கையின் முதலாவது உயர் கல்வி நிறுவனம் அது தான்.


1881 இல் விக்டோரியா மகாராணியின் அரச அனுமதியுடன் கொழும்பு அக்காடமியானது; “றோயல் கல்லூரி” (Royal College Colombo) என்று பெயர் மாற்றப்பட்டது. 1881ஆம் ஆண்டு 31 யூலை வர்த்தமானிப் பத்திரிகையில் இதற்கான அறிவித்தலும் வெளியிடப்பட்டது. அப்போது கல்லூரியின் அதிபராக ஜோன் குல் (John Barnabas Cull) இருந்தார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பரீட்சை 1880 இல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதும் அதே ஆண்டு 21 அப்பரீட்சைக்கு தோற்றினர். அவர்கள் அனைவரும் ஆண்கள். ஆனால் 1915 ஆம் ஆண்டு மொத்தம் 2151 மாணவர்கள் அப்பரீட்சைக்கு தோற்றினர் அதில் 236 பெண்களாக இருந்தனர். இதன் அறிமுகத்தோடு பலர் இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்காக செல்லும் வாய்ப்பு விரிவானது.  


றோயல் கல்லூரிக்கான இடவசதியைப் பெருப்பிப்பதற்காக 1911 ஆம் ஆண்டு ரீட் அவெனியுவில் பெரிய காணியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தான் இலங்கையின் முதலாவது விமானமோட்டும் முயற்சியின் போது அந்த விமானம் அங்கே விழுந்து கட்டிடத்துக்கும் சிறு சேதத்தை விளைவித்தது. 1913 ஆம் ஆண்டு புதிய கட்டிடத்துக்கு கல்லூரி கொண்டுவரப்பட்டது. இன்றைய கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடம் தான் அது. 1923 இல் ரீட் அவெனியுவில் புதிதாக கட்டப்பட்ட இன்னொரு கட்டிடமான விக்டோரியா கோபுர வடிவத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டே 1914 இல் றோயல் கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றப்படவேண்டும் என்று உயர்கல்விக் குழு பரிந்துரைத்தது. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக அரசாங்க சபையில் பிரெடெரிக் டோர்ன்ஹோஸ்ட் (Frederick Dornhorst, KC) நீண்ட உரையை வழங்கினார். மேலும் அன்றைய ஆளுநர் சார்மர்ஸ் (Lord Chalmers) கூட கொழும்பு பல்கலைக்கழகம் தனியாக இயங்கவேண்டும் என்றார்.

இதன் விளைவாக இந்தக் கட்டிடங்களில் கொழும்பு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதே கட்டிடத்துக்கு சற்று அப்பால் கட்டப்பட்ட கட்டிடத்தில் றோயல் கல்லூரி இயங்கத் தொடங்கியது. 1923 ஆம் ஆண்டு ஆளுநர் வில்லியம் மனிங் ஆட்சியின் போது அவரின் கவனிப்பில்  தான் தற்போதைய நிலையான கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியது. இன்றுவரை அங்கே தான் நிலைத்து இயங்கி வருகிறது.


1940ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதியில் றோயல் கல்லூரி மூடப்பட்டு இக்கட்டிடங்கள் பிரிட்டிஷ் இராணுவத்துக்கான மருத்துவமனையாக இயங்கியது.  1945 இல் யுத்தம் முடிவடைந்ததும் மீண்டும் பழையபடி இயங்கத்தொடங்கியது.

சேர் முத்துக்குமாரசுவாமி, இராமநாதன் சகோதரர்கள், அநகாரிக தர்மபால, ஜே.ஆர், கொல்வின் ஆர் டி சில்வா தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை பல அரசியல் தலைவர்கள் இங்கு கற்றவர்கள் தான். ரணில் விக்கிரமசிங்க செல்வந்த குடும்பத்தின் வாரிசு என்பதை அறிவீர்கள். ஆனால் அவருக்கு வாரிசுகள் கிடையாது அவரின் தற்போதைய சொத்துக்கள் அவருக்குப் பின்னர் றோயல் கல்லூரிக்கே உயில் எழுதி வைத்துவிட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

றோயல் கல்லூரியின் பல செயற்பாடுகளில் தமிழ் விவாத அணியையும் முக்கியமாக குறிப்பட முடியும். இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த தமிழ் விவாத அணி அது. நீதியரசர்.சி.வி.விக்னேஸ்வரன், றவுஃப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியின் தலைமைப்பொறுப்பை வகித்தவர்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

றோயல் கல்லூரிக்காக கட்டப்பட்ட கட்டிடம் இன்று கொழும்பு பல்கலைக்கழகமாக

றோயல் கல்லூரியின் அதிபர்களாக சுமார் இலங்கை சுதந்திரமடையும் காலம் வரை ஆங்கிலேயர்கள் தான் இருந்து வந்தார்கள். அதன் பின்னர் தான் சுதேசியர்கள் அதிபர்களாக ஆனார்கள். இதுவரை ஒரு தமிழரும் அங்கே அதிபராக ஆனதில்லை.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் பலரை ஆண்டு தோறும் உள்வாங்கி அக்கல்லூரியின் தரத்தை மேலும் பலப்படுத்திக்கொண்டே வருகிறது இக்கல்லூரி. பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையின் சிவில் அதிகாரிகள் பலரை உருவாக்கிய கல்லூரி அது. ஆரம்பத்தில் உயர் வர்க்க, கொவிகம, வெள்ளாள ஆண்கள் பலர் கற்ற பள்ளிக்கூடமாகத் தான் இருந்தது என்கிறார் L.H.Gratiaen. 

20 மாணவர்களுடன் சிறு வராந்தாவில் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் இன்று 9000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்ற இலங்கையின் மிகப் பெரிய கல்லூரியாக இயங்கி வருகிறது.

நன்றி - தினகரன் வாரமஞ்சரி 24.07.2022



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates