Headlines News :
முகப்பு » , , , , , » பதிப்புப் பண்பாட்டின் நினைவுச் சின்னமாகத் திகழும் வெஸ்லியன் சிட்டி மிஷன் - (கொழும்பின் கதை - 34) - என்.சரவணன்

பதிப்புப் பண்பாட்டின் நினைவுச் சின்னமாகத் திகழும் வெஸ்லியன் சிட்டி மிஷன் - (கொழும்பின் கதை - 34) - என்.சரவணன்

ஆசியாவின் முதலாவது மெதடிஸ்ட் தேவாலயம் இலங்கையில் தான் நிறுவப்பட்டது. கொழும்பு புறக்கோட்டையில் டாம் வீதியில் உள்ள கச்சேரிக்கு எதிரில் இது அமைந்திருக்கிறது. 1816 ஆம் ஆண்டு கொழும்பு சிட்டி மிஷன் (Colombo City Mission) என்கிற பேரில் அமைக்கப்பட்ட இது இன்றும் அதே பேரில் தான் அழைக்கப்படுகிறது. அதேவேளை இந்த தேவாலயம் பல முக்கிய வரலாற்றுக் கதைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

இலங்கையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதோடு பல கிறிஸ்தவ மிஷன்கள் இலங்கையை இலக்கு வைத்து வந்து சேர்ந்தன. அதற்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கத்தோலிக்க மதத்தை தடை செய்து வைத்திருந்ததால் இத்தகைய மிஷன்கள் தமது மதப் பிரச்சார, மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் இல்லாது இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் வந்ததோடு அந்த நிலை மாறியது. அவ்வாறு வந்திறங்கிய மிஷன்களுக்கு ஆங்கிலேய அரசே போதிய ஆதரவை வழங்கியது.

  • லண்டன் திருச்சபைக் கழகம் - London Missionary Society (LMS) - 1805,
  • பப்டிஸ்ட் திருச்சபைக் கழகம்  - Baptist Missionary Society (BMS) - 1812,
  • வெஸ்லியன் மெதடிஸ்ட் திருச்சபை - Wesleyan Methodist Mission – (WMM) - 1814,
  • அமெரிக்கன் மிஷன் The American Mission, (ABCFM- American Board of Commissioners for Foreign Missions) - 1816
  • சேர்ச் மிஷன் கழகம் Church  (of   England)  Missionary  Society  (CMS) – 1817

இவற்றில் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கிய மிஷன்கள் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனும், அமெரிக்க மிஷனும் தான்.

தெற்காசியாவை ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆக்கிரமித்தபோது, ஆங்கிலேய மிஷனரிகள் பிரிட்டிஷ் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி துருப்புக்களோடு சேர்ந்து நெருக்கமாக அவர்களைப் பின்தொடர்ந்தனர், 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் சிலோன் முடிக்குரிய காலனியாக அறிவிக்கப்பட்டபோது, ஆறு பேர் கொண்ட மெதடிஸ்ட் பணியாளர்கள் டிசம்பர் 1813 இல் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டனர். ஆறு மாத பயணத்தின் பின்னர் ஜூன் 1814 இல் அவர்களில் நான்கு பேர் தென்னிலங்கையின் வெலிகம கடற்கரையில் வந்திறங்கினர். இந்த இலங்கைப் பயணக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் டொக்டர் தோமஸ் குக் (Dr Thomas Coke). அவர் அந்தக் கடற்பயணத்தின் போது இறந்துவிட்டார். மற்றொருவர் இந்தியாவில் நிலைநிறுத்தப்பட்டார்.


அவர்களில் ஒருவர் வில்லியம் மார்ட்டின் ஹார்வர்ட் (William Martin Harvard). இன்னொருவர் ஆண்ட்ரூ ஆர்மர் (Andrew Armour) அவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. ஹார்வர்ட் இந்தியா, பம்பாயில் மிஷனரிப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட போதும் அவர் இடைநடுவில் 1815ஆம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கை வந்து தனது குழுவோடு இணைந்து கொண்டார். அவர் ஒரு கைதேர்ந்த அச்சகர். மிஷனரிப் பணிகளை முன்னெடுக்க பிரசுரங்களே சிறந்த வழி என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள். மார்ட்டின் ஹார்வர்ட் பம்பாயிலிருந்து அச்சு இயந்திரங்களை கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை ஏற்றார். அதன்படி அச்சு இயந்திரம், அதற்கான மை, நான்கு பெட்டிகளுக்கு எழுத்துவார்ப்புக்கள், கடதாசிகள் அனைத்தையும் அங்கிருந்து கொண்டு வந்து சேர்த்தார் அவர்.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள டாம் வீதியில் ஹார்வார்ட் வெஸ்லியன் சபைக்காக ஒரு நிலத்தை வாங்கினார். அங்கு தான் தேவாலயம் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. ஆசியாவின் மிகப் பழமையான மெதடிஸ்ட் தேவாலயம் இது தான். வெஸ்லியன் மிஷன் ஹவுஸ் (Weslyan Mission House) 1816 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நத்தாருக்கு சற்று முந்திய நாள் தனது முதல் ஆராதனையை நடத்தியது. தேவாலயத்தின் உட்புறப் பகுதிகள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு வந்தது. மேலும் வெளிப்புறமானது 1966 இல் மாற்றியமைக்கப்பட்டது.  இங்கிலாந்தின் லிவர்பூலில் உள்ள புகழ்பெற்ற  டோரிக் வடிவத்திலான  பிரன்சுவிக் வெஸ்லியன் சேப்பலின் (Liverpudlian Brunswick Wesleyan Chapel) தோற்றத்துக்கு நிகராக இன்றும் தோற்றமளிக்கிறது. அந்த தேவாலயத்தின் தோற்றத்தில் தான் இது அமைக்கப்பட்டது.

Liverpudlian Brunswick Wesleyan Chapel

யாழ்ப்பாணம் சென்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் வடிவமும் இப்படித்தான் இருக்கிறது.

இந்த தேவாலயம் ஆரம்பிக்கப்பட்டு சில காலத்தில் சிறுவர்களுக்கான ஞாயிறு பாடசாலை அங்கே ஆரம்பிக்கப்பட்டது. அங்கே தான் வெஸ்லியன் அச்சகமும் உருவாக்கப்பட்டது. 1874ஆம் ஆண்டு 2ஆம் திகதி டேனியல் ஹென்றி பெரேரா பாதிரியாரால் வெஸ்லி கல்லூரி இங்கே உருவாக்கப்பட்டது. அக்கல்லூரியின் முதலாவது அதிபரும் அவர் தான். புறக்கோட்டைப் பகுதியின் சத்தங்களும், தூசுகளும், வெக்கையும் பாடசாலையை தொடர்ந்து அங்கே நடத்த இடையூறாக இருந்தது. இடவசதியும் போதாமையாக இருந்தது. 1895இல் இக்கல்லூரிக்கு பொறுப்பாக வந்து சேர்ந்த  ஹைபீல்ட் (Highfield) 1905ஆம் ஆண்டு இகக்கல்லூரியை இடமாற்றம் செய்தார். அந்தக் கல்லூரி தான் இன்று இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாக திகழ்கிற பொரல்லையிலுள்ள வெஸ்லி கல்லூரி.

இலங்கையின் அச்சு ஊடக வரலாற்றின் முக்கிய திருப்பு முனையாக அமைந்த அந்த அச்சகம் கைமன் வீதியில் (Kayman’s Street) நிறுவப்பட்டது.  அது என்ன கைமன் வீதி என்கிறீர்களா? அது தான் பிற்காலத்தில் டாம் வீதி (Dam Street) என்று பெயர் மாற்றப்பட்டு இன்றும் நிலைத்து நிற்கிறது. டச்சு காலத்தில் கைமன் வீதி என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலேயர் காலத்தில் அது தம்ப வீதி (Damba Street) என்று அழைக்கப்பட்டது. தம்ப என்கிற பழ மரம் வழிநெடுக இரு மருங்கிலும் அப்போது இருந்திருக்கிறது. அதுவே பின்னர் டாம் வீதி என்று ஆகியிருக்கிறது.

மிஷனரி பாடசாலைகளுக்கான நூல்கள் தான் இந்த வெஸ்லியன் அச்சகத்தில் அச்சடிக்கபட்டன. குறிப்பாக ஞாயிறு பாடசாலைக்கான நூல்கள் அங்கே பிரசுரிக்கப்பட்டன. இந்த அச்சகம் வெற்றிகரமாக இயங்கிகொண்டிருந்த வேளை அன்றைய தேசாதிபதி சேர் ரொபர்ட் பிர்வுன்றிக் அச்சகத்தை அரசாங்கத்துக்காக வாங்குவதற்காக தனது தனிப்பட்ட செயலாளர் பிஸ்ஸத்தை (Bisset) பல தடவைகள் அனுப்பிப் பார்த்தார்.

இதற்கு ஒரு காரணம் இருந்தது. பிரவுன்றிக் தலைமையிலான அரசாங்கம் தான் கண்டி ஒப்பந்தத்தை 1815இல் செய்திருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் ஒரு உடன்பாட்டையும் (5வது ஏற்பாடு) எட்டியிருந்தது. ஆனால் இந்த மிஷனரிகள் மெதடிஸ்ட் இலக்கியங்களான கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களின் மூலம் சுதேசிகளிடம் சிக்கல்களை உருவாக்கி விடக்கூடும் என்று நம்பினார் அவர்.

ஆனால் ஹார்வார்ட் இந்த அச்சகத்தை விற்பதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தேசாதிபதியின் கோரிக்கையை மறுத்துவிட்டார். ஆனால் தேசாதிபதி வேறு விதமாக அணுகினார். அதாவது அரசாங்கத்தின் அச்சகத்துக்கு பொறுப்பாக வந்து பணியாற்றும்படியும் அதற்கு தகுந்த சம்பளத்தையும் வழங்குவதாக கேட்டுப்பார்த்தார். தமக்கு வெஸ்லியன் மிஷனை நடத்துவதற்கு அனுமதி கொடுத்த தேசாதிபதியை பகைத்துக்கொள்ள முடியாமல் இறுதியில் அவர் அரசாங்க அச்சகத்தை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். ஆனால் டாம் வீதி வெஸ்லியன் அச்சகத்தை மிகுந்த வினைத்திறனுடன் அவர் நடத்தவும் செய்தார். அந்த அச்சகத்துக்கு சிலவேளை தொழிநுட்ப உதவிகளோ, உபகரணங்களோ தேவைப்பட்ட வேளைகளில் அரசாங்க அச்சகத்தில் இருந்த வளங்களைப் பயன்படுத்த அரசாங்கம் அனுமதித்தது. குறிப்பாக இந்த அச்சகத்துக்கு தேவையான தமிழ் எழுத்துக்கள் அரசாங்க அச்சகத்திடம் இருந்து தான் பெற்றுக்கொண்டது. 

இந்த அச்சகத்தில் ஆங்கிலத்தை விட சிங்கள மொழி பிரசுரங்கள் பல அன்று அச்சடிக்கப்பட்டன.  இலங்கையில் வெஸ்லியன் மிஷன் வருவதற்கு ஈராண்டுகளுக்கு முன்னரே Auxiliary Bible Society தொடங்கப்பட்டுவிட்டாலும் அச்சகத்தை வெஸ்லியன் மிஷன் தான் தொடங்கியது. மேலும் ஏனைய மிஷனரி அமைப்புகளின் நூல்களையும் கூட வெஸ்லியன் அச்சகம் தான் அச்சிட்டு கொடுத்தது. இங்கு தான் ஆரம்பகால சிங்கள பைபிள் மொழிபெயர்ப்பு எல்லாம் அச்சடிக்கப்பட்டது. வடக்கு பகுதிக்கான தமிழ் மொழி பாடசாலை நூல்களும் இங்கிருந்து பிரசுரித்து அனுப்பப்பட்டன. அன்றைய மெட்ராசில் இருந்து தமிழ் மொழியிலான பழைய ஏற்பாடு பைபிள்கள் அச்சடித்து அனுப்பும்படி ஹார்வார்டிடம் கோரப்பட்டபோது இங்கிருந்து அதனை பிரசுரித்து அனுப்பியிருக்கிறார். 


ஹார்வார்ட் காலத்திலேயே இந்த அச்சகத்துக்குப் பொறுப்பாக மேலும் சிலர் இயங்கினார்கள். (Squance, Callaway, Spence, Hardy, Gogerly). இவர்களில் கோகர்லி முக்கிமானவர். அவர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வெஸ்லியன் பாதிரியார். இவர் வெஸ்லியன் மிஷன் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் அதாவது 1818 ஆம் ஆண்டு வந்து சேர்ந்து விட்டார்.

அவர் தெவுந்தர என்கிற சிங்கள பிரதேசத்தில் தங்கி வாழ்ந்து அங்கேயே சிங்களம், பாலி மற்றும் பௌத்தம் ஆகியவற்றைக் கற்று தேறினார். அவர் 'கிறிஸ்தவ சாசனம்' (The Kristiyani Prajnapti - “கிறிஸ்தியானி பிரக்ஞப்திய”) என்கிற நூலை 1848 இல் வெளியிட்டார்.  இந்த நூல் 1848இல் முதலில் வெளியிடப்பட்டு பின்னர் 1853, 1857 காலங்களில் மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்பட்டதுடன் 1862 இல் கொகெர்லி பாதிரியார் அதனைத் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பௌத்தத்துக்கு ஈடு கொடுப்பதற்காகவே தன்னை தயார் செய்து; தருணம் வந்ததும் பௌத்தத்தை அவர்களின் களத்திலேயே சவாலுக்கு இழுத்தது அவர் அந்தத் துறையில் பெற்றிருந்த பாண்டித்தியத்தின் காரணமாகத் தான். வரலாற்றில் அதுவரை பௌத்தம் சந்திக்காத தத்துவார்த்த சவால் அது.

இந்த நூலை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியவர் தான் பெந்தொட்ட அட்டதஸ்ஸி தேரர்.  அவர் கரதொட்ட தம்மாராம தேரரின் கடைசி சிஷ்யர்.  அட்டதஸ்ஸி தேரர் 1849 ஆம் ஆண்டு “கிறிஸ்தவ சாசனத்துக்கு பதில்” (ක්‍රිස්තියානි ප්‍රඥප්තියට පිළිතුරක්) என்ற நூலை வெளியிட்டு கோகர்லிக்கு சவாலுக்கு அழைத்தார். இது தான் பௌத்த தரப்பின் கண்டன இலக்கியத்தின் தொடக்கமாக கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்ல இலங்கையின் சமய கண்டன இலக்கியத் தொடரின் முதல் நூலாகவும் இதனைக் கொள்ளலாம். இலங்கையில் பௌத்த சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிரதான கண்டன இலக்கியமாக கொள்ளப்படுவது இது தான். சிங்கள பௌத்த அச்சகங்களின் உருவாக்கம் இதன் காரணமாகத் தான் எழுந்தது. இந்த விவாதங்கள் தான் பஞ்சமகா விவாதங்களாக தொடர்ந்து இறுதியில் பாணந்துறை விவாதத்தில் வந்து முடிந்தது. தமிழில் கண்டன இலக்கியம் தொடங்குவதற்கு முன்னரே சிங்களத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஆரம்பத்தில் டாம் வீதி வெஸ்லியன் மிஷன் தேவாலயம் இப்படித்தான் இருந்தது

ஆரம்ப கால டாம் வீதி வெஸ்லியன் கல்லூரி

ஆக இந்த டாம் வீதி வெஸ்லியன் அச்சகத்தில் இருந்து தான் சுதேசிய பௌத்த தரப்புக்கு எதிரான நிந்தனைப் பிரசுரங்கள் பல வெளியிடப்பட்டன. 

அதேவேளை கோகர்லி பல பௌத்த இலக்கியங்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து பிரசுரித்ததும் இங்கிருந்து தான். குறிப்பாக முதன் முதலில் அவர் தான் தம்மபதத்தை ஆங்கில உலகுக்கு மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தினார். அது இங்கிருந்து வெளிக்கொணரப்பட்ட “The Friends” என்கிற சஞ்சிகையில் தான் தொடராகப் பிரசுரமானது. அதுபோல வடக்கில் பேர்சிவல் பாதிரியாரின் பல பிரசுரங்களும் இங்கு பதிப்பிக்கப்பட்டன.

இந்த வெஸ்லியன் சபையோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர்; இலங்கையின் அன்றைய நீதியரசர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன். இலங்கையில் அன்று நிலவிய அடிமைமுறையை 1833இல் ஒழித்தவர் அவர். அவரின் துணைவி கொள்ளுப்பிட்டியில் இயக்கி வந்த பாடசாலையை ஹார்வர்டிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். வெஸ்லியன் மெதடிஸ்ட் சபை அதைப் பொறுப்பேற்று நடத்தியது. அந்த பாடசாலை தான் கொள்ளுப்பிட்டி சந்தியில் பிரதமரின் அலரி மாளிகைக்கு அருகில் இன்றும் இயங்கிவரும் பிரபல மெதடிஸ்ட் மகளிர் கல்லூரி.

வெஸ்லியன் திருச்சபையின் தலைமையகமாக பல வருடங்களாக இயங்கிய இந்த டாம் வீதி கட்டிடத்தை 2013 இல் இலங்கை அரசாங்கம் தொல்லியல் முக்கியத்துவமுள்ள நினைவுச்சின்னமாக அறிவித்தது.

நன்றி - தினகரன் - 10.07.2022


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates