Headlines News :
முகப்பு » , , , , » பழைய பாராளுமன்றத்தின் கதை (கொழும்பின் கதை – 24) - என்.சரவணன்

பழைய பாராளுமன்றத்தின் கதை (கொழும்பின் கதை – 24) - என்.சரவணன்

இலங்கை பிரித்தானியர் கைப்பற்றி சுமார் நான்கு தசாப்தங்களான பின் தான் இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவந்து ஆட்சி செய்வதற்கான முறையான அரசாங்க நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி நிறைவேற்றுப் பேரவை, இலங்கை முதலாவது சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833 ஆம் ஆண்டு ஆளுநர் சேர் றொபட் ஹோட்டன் (Governor Sir Robert Wilmot Horton) என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இன்றைய வெளியுறவு அமைச்சு இருக்கின்ற காரியாலயம் தான் முதலாவது சட்டவாக்கப் பேரவை நடைபெறும் நாடாளுமன்றமாக இயங்கத் தொடங்கியது.

இன்று வெளியுறவு அமைச்சகம் இருக்கிற கட்டிடத்துக்கு ஒரு முக்கிய வரலாறு உண்டு. பலருக்கும் அது ஒரு பழமையான கட்டிடமாக மட்டுமே தெரியும். இன்றைய ஜனாதிபதி மாளிகை சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இராணி மாளிகை என்றே அழைக்கப்பட்டது. அதற்கும் முன்னர் அது கோர்டன் கார்டன் (Gordon Gardens) என்று அழைக்கப்பட்டது. அதன் வரலாற்றுப் பின்புலத்தை தனியாக பிறிதொருமுறை பார்ப்போம்.

இராணி மாளிகையோடு அண்டிச்செல்லும் வீதி ராணி வீதி என்று அழைக்கப்பட்டது. இந்த இராணி மாளிகைக்கு (Queen's House) அருகாமையில் உள்ள வெளியுறவு அமைச்சுக் கட்டிடம் 1970 களின் பின்னர் குடியரசுக் கட்டிடம் (Republic Building) என்று அழைக்கப்பட்டது. 1920 களில் இலங்கையின் அரசாங்க சபை (அதாவது அன்றைய பாராளுமன்றம்) இங்கு தான் இயங்கியது என்றால் இன்று வியப்பான செய்தியாக இருக்கும்.

அதற்கும் முன்னர் இக் கட்டிடம் காலனித்துவ செயலாளரின் காரியாலயமாக இயங்கியது. ஆங்கிலேயர் காலத்தில் காலனித்துவ செயலாளர் என்கிற பதவி வெளியுறவு அமைச்சருக்கு நிகரானது. ஆனால் அதை விட அதிகாரம் கூடிய பதவியாக இருந்தது. இந்தக் கட்டிடத்தில் பழைய ஓலைச்சுவடிகள், மற்றும் அரச ஆவணங்களைப் பாதுகாக்கும் சுவடிகூடத் திணைக்களமும் இயங்கியிருக்கிறது. இன்னொரு பகுதியில் முன்னூறு ஊழியர்கள் பணிபுரிந்த அரசாங்க அச்சகக் காரியாலயமும் இயங்கியிருக்கிறது. அரசாங்க வெளியீடுகள், தபால் தலைகள், இரயில் டிக்கெட்டுகள் போன்ற பல விடயங்கள் இங்கே அச்சடிக்கப்பட்டுவந்தன.

இன்னும் சொல்லப்போனால் காலனித்துவ காலத்தில் கொழும்பின் அரச இயந்திரத்தின் பிரதான மையம் இந்த சுற்றுப் பிரதேசம் எனலாம். இதை மையப்படுத்திய சுமார் ஐநூறு மீற்றர் சுற்று வட்டத்தில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் முக்கிய கட்டிடங்களாக திகழ்ந்தன. எச்.ஏ.ஜே.ஹுலுகல்ல (H. A. J. Hulugalle) கொழும்பு மாநகரசபை பற்றிய தனது நூலில்  அரசாங்கக் கட்டிடக் கலைஞர் டாம் நெவில் வைன் ஜோன்ஸ் இந்தக் கட்டிடங்களின் வரலாற்றைக் கண்டறிந்த விதத்தையும் அவை எவ்வாறு காப்பாற்றப்பட்டன என்பதையும் பதிவு செய்கிறார். சேர்ச் வீதியிலும், ராணி வீதியிலும், பிரின்ஸ் வீதியிலும் இன்றும் பல பழைய அரசாங்கக் கட்டிடங்கள் உள்ளன. அரசாங்கத்தின் மேற்சபை இருந்த கட்டிடம் தான் குடியரசுக் கட்டிடம். ஆனால் அக்கட்டிடம் சிறிய அறைகளைக் கொண்டவை. இருட்டாகவும், காற்றோட்டமற்றதாகவும் அது இருந்தது. 1929ல் அரசாங்கத்தின் பிரதான காரியாலயம் காலிமுகத்திடலில் உள்ள செயலகத்திற்கு மாற்றப்பட்டதுடன், இந்த ராணி வீதிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டும் பல்வேறு மாற்றங்களுக்கும் உள்ளாகின. அதுபோல இந்த புனரமைப்புகளின் பின்னர் குறைந்த முக்கியத்துவத்தினாலும் அலட்சியத்தினாலும் விரைவாக சீரழிந்தன.

1948 ஆம் ஆண்டு சுதந்திர காலம் வரை அரசாங்கத்தின் காரியாலயங்கள் இங்கே இயங்கின. 1948 இன் பின் இக்கட்டிடத்தின் தோற்றம் நிறையவே மாற்றத்துக்கு உள்ளாகியது. இவை புதிய கட்டிடங்கள் என்று பலர் நினைக்குமளவுக்கு அவற்றின் தோற்றம் மாறி இருந்தன. இந்தக் கட்டிடத்தில் தான் பிரதமர் அலுவலகம், அமைச்சரவை, செனட் சபை என்பவை போன்றன இயங்கத் தொடங்கின.

1930 ஆம் ஆண்டில் அரசாங்க சபை காலிமுகத்திடலில் (இப்போது ஜனாதிபதி செயலகம்) கட்டப்பட்ட பாராளுமன்றக் கட்டிடத்திற்கு  நகர்த்தப்பட்டது. 1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றபோது, சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இயங்கிய பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையான செனட் சபை இக்கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியதால் அதன் பின்னர் இதை செனட் பில்டிங் என்றே பொதுவாக அழைத்தார்கள்.

1972 ஆம் ஆண்டில் நாட்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் செனட் கலைக்கப்பட்டபோது, இந்த கட்டிடம் குடியரசு கட்டிடம் என்று அழைக்கப்பட்டது. இராஜதந்திரிகளையும், அரச தலைவர்களையும் உத்தியோகபூர்வமாக வரவேற்று சந்திப்புகளை நடத்துவதற்கு 70 களில் பயன்படுத்தப்பட்டது. தற்போது அது வெளிவிவகார அமைச்சாக இயங்கி வருகிறது. அக்கட்டிடத்தோடு சேர்த்தாற்போல் அமைந்திருக்கும் கட்டிடம் தான் இலங்கையின் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகமாகவும் பலராலும் நான்காம் மாடி என்று அழைக்கப்படுகின்ற கட்டிடமும் அமைந்துள்ளது.

கறுவாத் தோட்டத்தில் சேர் எர்னஸ்ட் டி சில்வா (Sir Earnest De Silva Mawatha) மாவத்தையில் பிரதமர் அலுவலகம் அமைவதற்கு முன் இதுதான் பிரதமர் அலுவலகமாக திகழ்ந்தது. 

பழைய பாராளுமன்றக் கட்டிடம்

இந்தியப் பெருங்கடலை நோக்கிப் பார்த்தவாறு காலிமுகத்திடலின் ஒரு முனையில் பழைய பாராளுமன்றக் கட்டிடம் இன்று ஜனாதிபதி செயலகமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. மாலையில் இந்திய சமுத்திரத்தில் இறங்கும் சூரிய அஸ்தமனத்தின் போது நேரடியாக அடிக்கும் சூரிய ஒளியில் செம்மண்ணிறத்தில் அழகாக காட்சி தரும் பழமையான கட்டிடம். கிரேக்க கட்டிடக் கலையின் சாயலைக் கொண்டதாக ஐயோனிக் (Ionic) வடிவில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. ஏதென்ஸில் உள்ள (Parthenon) பழமையான பார்த்தினனை கட்டிடத் தூண்களை நினைவுபடுத்தும் மேற்கத்தேய பாணியிலான கட்டடக் கலையுடன் கூடிய அழகான கட்டிடம் அது. இதன் கலைத்துவ, கட்டுமான விடயங்கள் தனித்து பார்க்க வேண்டிய தனியான அங்கம்.

Sir Henry McCallum
1910 களில் அன்றைய ஆளுநர் சேர் ஹென்றி மெக்கலத்தின் (Sir Henry McCallum) திட்டத்தில் இது உருவானது. அப்போதைய பொதுப்பணித் துறையின் தலைமை கட்டிடக் கலைஞரான Austin Woodeson ஆல் வடிவமைக்கப்பட்டது இக்கட்டிடம். அப்போது 400,000 லட்ச ரூபாவில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டாலும் சுமார் 450,000 ரூபாய் இறுதியில் செலவானது.

இதனைக் கட்டி முடிப்பதற்கு தேவையான 1530 தொன் விசேட நிறமுடைய கருங்கற்கள் கொழும்பிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ருவன்வெல்லவில் இருந்து கொண்டு வரப்பட்டன. அப்போதெல்லாம் ஒழுங்கான பாதைகள் இல்லை. இன்று இருப்பதைப் போன்ற வாகன வசதிகளும் இல்லை. களனி கங்கைக்கு ஊடாக பேற வாவி வரை ஆற்றின் வழியாகவே இவற்றை கொண்டு வந்து சேர்த்தார்கள்.  கல்லொன்றின் உயரம் 51 அடியும் ஏழு தொன் எடையையும் கொண்டிருந்திருக்கிறது.

கட்டிடத்தின் முகப்பின் முக்கோணப் பகுதியில் 1948 வரை பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் அரச சின்னமே இருந்தது. அதன் பின்னர் அது அகற்றப்பட்டு இலங்கை டொமினியன் சின்னத்தால் அது அலங்கரிக்கப்பட்டது. மீண்டும் அது 1972 ஆம் ஆண்டு இலங்கைக் குடியரசின் புதிய அரச சின்னம் பதிக்கப்பட்டது.

இந்தப் பாராளுமன்றக் கட்டிடம் 1930 இல் திறக்கப்பட்டபோது நாட்டில் உள்ள அனைவரும் வாக்குரிமையை பெற்றிருக்கவில்லை. ஆனால் 1931 இல் டொனமூர் திட்டம் வழங்கிய சர்வஜன வாக்குரிமையை அனைத்து மக்களுக்கும் அனுபவிக்கத் தொடங்கி மக்களால் உருவான அரசாங்கம் முதலில் இங்கிருந்து தான் சட்டவாக்கப் பணிகளை ஆரம்பித்தது. அதிலிருந்து சுமார் அரை நூற்றாண்டு காலம் நாட்டின் சட்டமன்றமாக செயல்பட்டது.

1930, சனவரி 29 இல் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநர் சர் ஹெர்பர்ட் ஸ்டான்லி (Sir Herbert Stanley -1927–1931) இப்பாராளுமன்றத்தை திறந்து வைத்தார்.

1948 பெப்ரவரியில் சுதந்திரப் பிரகடனத்தைத் தொடர்ந்து 1972 வரை சுதந்திர இலங்கையின் முதலாவது சட்டமன்றமாக இயங்கியது. இளவரசர் ஹென்றி (Prince Henry, Duke of Gloucester) 1948 சுதந்திரத்தின் போது சம்பிரதாயபூர்வமாக அமர்வுகளுக்காக திறந்து வைக்கப்பட்ட பின்னர் “பிரதிநிதிகள் சபை”யாகவும் சுதந்திர இலங்கையின் முதலாவது சட்டவாக்க  சபையாகவும் 1972 வரை இயங்கியது. அதன் பின்னர் அது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சோசலிச அரசாங்கத்தின் கீழ் “தேசிய அரசுப் பேரவை”யாக 1977 வரை இயங்கியது. 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியின் பின்னர் “இலங்கைப் பாராளுமன்றம்” என அழைக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு  இலங்கையின் தலைநகராக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே அறிவிக்கப்பட்டு 1983 இல் அங்கு புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்டதன் பின்னர் 1983 செப்டம்பர் 08 இலிருந்து ஜனாதிபதி செயலகமாக மாற்றப்பட்டு இன்று வரை அப்படியே நீடிக்கிறதும். 

இது திறக்கப்பட்ட காலத்தில் 49 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது அரசாங்க சபை. டொனமூர் திட்டக் காலத்தில் 61 உறுப்பினர்களாக உயர்ந்தது. அதுவே சோல்பரி காலத்தில் 101 ஆக அதிகரிக்கப்பட்டது. 1959 இல் 157உறுப்பினர்களைக் கொண்டிருந்த சட்டவாக்க சபை, 1972 இல் 168 உறுப்பினர்களாக ஆனது. 1978 இல் 225ஆக உயர்த்தப்பட்டது. பாராளுமன்றத்தின் தேவைகளும் உயர்ந்தன. பெரியதொரு பாராளுமன்றக் கட்டிடத்தின் தேவையை அரசு உணர்ந்தது.

1979 யூலை 4 இல், அன்றைய பிரதமர் ஆர். பிரேமதாச கொழும்பில் இருந்து 16 கிமீ கிழக்கே கோட்டே நகரில் தியவன்ன ஏரியில் அமைந்துள்ள 12 ஏக்கர் தீவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை அமைக்க நாடாளுமன்றத்தில் இருந்து அனுமதி பெற்றார். இந்த இடத்தில் தான் முன்னர் கோட்டை அரசர் மூன்றாம் விக்கிரமபாகுவின் அமைச்சர் நிஸ்ஸக அலகேஸ்வரவிண் அரண்மனை அமைந்திருந்தது. புதிய பாராளுமன்றக் கட்டிடம் ஜெஃப்ரி பாவா என்கிற பிரபல கட்டடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டு, இலங்கை அரசின் நிதியுதவியில் கட்டப்பட்டது. 1982 ஏப்ரல் 29 இல் புதிய ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே பாராளுமன்றம் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவால் திறந்து வைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் சுகாதாரம், கல்வி, தொழில், கைத்தொழில், வர்த்தக அமைச்சுக்களைக் கொண்டிருந்த தலைமைச் செயலகக் கட்டிடமாக இது இயங்கியது. தற்போது நிதி அமைச்சும் பல வருடங்களாக இங்கே இயங்கி வருகிறது.

கட்டிடத்தின் முன்னால் இலங்கையின் தேசத் தலைவர்கள் நால்வரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஆரம்பப் பிரதமர்களான டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல ஆகியோரின் சிலைகளுடன் தமிழ் அரசியல் தலைவரான சேர் பொன்னம்பலம் இராமநாதன், தொண்டமான் ஆகியோரின் சிலைகளை இங்கே காணலாம்.

92 ஆண்டுகளை கடந்து பாராளுமன்றக் கட்டிடம் நாட்டின் பிரதான மைய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

நன்றி - தினகரன் 25.04.2022


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates