Headlines News :
முகப்பு » , , , , , » பௌத்த மறுமலர்ச்சியின் தோற்றிடம் கொட்டாஞ்சேனை தீபதுத்தாராம - (கொழும்பின் கதை – 25) என்.சரவணன்

பௌத்த மறுமலர்ச்சியின் தோற்றிடம் கொட்டாஞ்சேனை தீபதுத்தாராம - (கொழும்பின் கதை – 25) என்.சரவணன்

கொட்டாஞ்சேனை ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதி. இன்றும் கூட கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை ஆகிய இரு பகுதிகளையும் உள்ளடக்கிய கொழும்பு 13 பகுதியில் பௌத்தர்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் ஏறத்தாள சமமாக வாழும் பகுதி. அதற்கேற்றாற் போல சமய ஸ்தலங்களும் சமமாக உள்ளன.

கொழும்பில் உள்ள சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த விகாரைகளில் முக்கியமான விகாரையாக கொட்டாஞ்சேனை தீபதுத்தாரம விகாரையைக் குறிப்பிடலாம். இரு நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது அது. கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் மதில் சுவர் தான் இந்த விகாரையின் எல்லைச் சுவரும்.

காலனித்துவ ஆட்சி காலத்தில் ஒல்லாந்தர்கள் கத்தோலிக்க சமயத்தை தடை செய்திருந்தார்கள். அத்துடன் சுதேசிய மதங்களையும் கடுமையாக ஒடுக்கினார்கள். இந்தக் காலப்பகுதியில் கொழும்பில் களனி தொடக்கம் பெல்லன்வில பன்சலை வரை எந்த பன்சலைகளும் இருக்கவில்லை. வெறும் புத்த சிலைகளை வைத்து மட்டும் தான் வணங்கி வந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் கொழும்பில் முதலாவது தொடக்கப்பட்ட பன்சலை தீபதுத்தாராம பன்சலை.

ஒல்லாந்தர் காலத்தில் ஜோசே வாஸ் பாதிரியார் இந்தியாவிலிருந்து வந்து கத்தோலிக்க மதப் பணிகளை மேற்கொள்வதற்காக இரகசியமாக வந்து தலைமறைவாகத் தான் திரிந்தார். இரகசியமாகத் தான் தனது பணிகளை மேற்கொண்டார். கொழும்பு நகரில் சுதந்திரமாக காவி உடை தரித்த பிக்குமார் உலாவக்கூடிய சுதந்திரம் அப்போது இருக்கவில்லை. 

குணானந்த தேரரும் இரகசியமாகத் தான் கொட்டாஞ்சேனைப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தார். காவி உடை தரித்து உலவும் சுதந்திரச் சூழல் அப்போது இருக்கவில்லை.

பௌத்த துறவிகளுக்கு அன்னமிடக் கூட பௌத்தர்களுக்கு வாய்பற்ற சூழல் நிலவியது. கொட்டாஞ்சேனை போன்ற கிறிஸ்தவ செல்வாக்கு அதிகம் இருந்த பகுதியில் பிக்குமாரை பரிகசிக்கின்ற சூழல் இருந்தது. வீதிகளில் “மஞ்சள் குருவி” (கஹா குறுல்லோ) என்று கிண்டல் செய்தார்கள்.

இப்படிப்பட்ட சூழநிலையில் ந்த விகாரைக்கு வந்து சேர்ந்த குணானந்த தேரருக்கு; அந்த விகாரையை வளர்த்தெடுப்பதை விட பாதுகாப்பதே முதற் கடமையாக இருந்தது.

ஏற்கெனவே கிறிஸ்தவர்களால் விகாரை சேதப்படுத்தப்பட்டநிலையில் உயரமான மதிலைக் கட்டினார். அந்த மதிலுடன் ஒரு பெரிய வாயிற்கதவையும் அமைத்தார்.

பிரதான வணக்கஸ்தலத்தில் உள்ள பதிவுகளின் படி அது ஒல்லாந்து காலத்துக்கு உரியது. 1785 என்று கல்வெட்டுண்டு. அது போல சுவரின் மேற்பகுதியில் புத்த வருஷம் 2416 என்று காணப்படுகிறது அதாவது கி.பி 1872 ஆம் ஆண்டு என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

இந்த விகாரைக்கு தீபதுத்தாராமய என்கிற பெயரை சூட்டியவர் குணானந்த தேரர் தான் என்கிறார் குணானந்த தேரரின் சரிதையை எழுதிய விமல் அபயசுந்தர. “தீபதுத்தம” என்பது சில பாளி நூல்களில் கௌத்தம புத்தருக்கு சூட்டப்பட்ட இன்னொரு பெயர். 

உபயகுலதுங்க விஜேசிறிவர்தன மகா முதலி அன்றைய ஒல்லாந்து ஆளுநரிடம் தனிப்பட்ட அனுமதி பெற்று தனது காணியில் இந்த விகாரையைக் கட்டிக்கொண்டார். ஆரம்பத்தில் அவர் சீனிகம தம்மக்கந்த தேரரைக் கொண்டு சமய நடவடிக்கைகளை தொடர்ந்து வந்தார். ஆனால் அது வசதிபடைத்த மேட்டுக்குடி சிங்கள பௌத்தர்கள் மட்டுமே அனுபவிக்கின்ற ஸ்தலமாக இருந்தது. 1806 ஆம் ஆண்டு சீனிகம தீரக்கந்த தேரர் நடத்திய பிரித் நிகழ்வைத் தொடர்ந்து சாதாரணர்களும் இந்த பன்சலைக்கு வந்து வணங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பிரித்தானியரின் கடும் மதத் தலையீடுகளால் ஸ்தம்பித்து போயிருந்த இந்த விகாரைக்கு 1935 இல் மூன்றாவது தலைமை பிக்குவாக குணானந்த தேரர் வந்தடைந்தார்.

தாய்லாந்து இளவரசர்

குணானந்த தேரருக்குப் பின்னர் அவரது சிஷ்யர் ஜினானந்த தேரர் தலைமை பிக்குவாக ஆனார். அவருக்குப் பின் தாய்லாந்து இளவரசர் பிரிஸ்டங் (Prisdang) 1896இல் இலங்கை வந்து பௌத்த மத பிக்குவாக தீட்சை பெற்று “ஜினவரவன்ச” என்கிற பெயரில் தீபதுத்தாராமய விகாரையில் தலைமை பிக்குவாக ஆனார். 1911 இல் தனது தந்தை மன்னர் சூலலோங்கோர்ன் (King Chulalongkorn) மறைந்த போது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக அவர் தாய்லாந்து சென்றிருந்தவேளை அவரது சகோதரரால் வலுகட்டாயமாக மீண்டும் அரச குடும்பத்திற்குள் இருத்தப்பட்டார். அவர் 1935 இல் தனது 85 வது வயதில் இறக்கும் வரை அவரை அவர்கள் பௌத்த துறவியாக வாழவும் விடவில்லை.

பின்னர் பல ஆண்டுகளாக இந்த விகாரை கவனிப்பாரற்று கிடந்தது. அதனை மீண்டும் உயிர்பிப்பதற்காக தாய்லாந்து அரசரின் புதல்விகள் இருவர் 1999, 2013 ஆகிய ஆண்டுகளில் வந்து உதவிகள் செய்து இதனை சீர்திருத்தி மீண்டும் இயக்கினர். அதுபோல தாய்லாந்து இரு பிரதமர்கள் இங்கே வந்து வணங்கி சென்றார்கள். இலங்கைக்கு தூதுவர்களாக வரும் சகல தாய்லாந்து தூதுவர்களும் பதவியேற்றதும் இங்கே வந்து வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கிறிஸ்தவ மிஷனரிகளை எதிர்த்து குணானந்த தேரரால் தொடங்கப்பட்ட “சுதர்ஷன” என்கிற சஞ்சிகை  பௌத்த கண்டன இலக்கியங்களில் முன்னோடியானது. அதை பிரசுரிப்பதற்கான அச்சு இயந்திரம் 1862 இல் தான்  தான் கொண்டு வரப்பட்டு “லங்கோபகார” அச்சகம் ஆரம்பமானது. அந்த அச்சகத்தை நிறுவுவதற்கு நிதிப் பங்களித்தவர்களில் முக்கியமானவர் அன்றைய சியாம் அரசர் நான்காவது ராமா (King Mongkut). 

1835 ஆம் ஆண்டுகளில் குனானந்த தேரரால் இந்த விகாரையின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனாலும் ஒல்லாந்து, ஆங்கிலேய வாஸ்து கட்டட அமைப்பின் செல்வாக்கு இந்த விகாரையின் அமைப்பில் இருப்பதை உணரலாம்.

இலங்கையின் முதலாவது மதக் கலவரம் என்று நாம் அறிகிற கொட்டாஞ்சேனை கலவரம் இந்த விகாரையில் தான் தொடங்கியது.

பௌத்த மறுமலர்ச்சியின் தோற்றம் இங்கிருந்து தான் தொடங்கியது. இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிரதானமனவர்களாக குனானந்த தேரரையும் கேர்னல் ஒல்கொட்டையும் குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் இருவரதும் முதல் சந்திப்பு இந்த விகாரையில் தான் நிகழ்ந்தது. அதுபோல அநகாரிக தர்மபாலவின் வசிப்பிடமும் இந்த விகாரையின் அருகில் தான் இருந்தது. அவர் தீவிர பௌத்தனாக ஆனதும் இங்கே தான். அவரின் பௌத்த ஞானத் தந்தை இதே ஒல்கொட் தான்.

அநகாரிக தர்மபாலவை கவர்ந்த பல நிகழ்வுகள் இங்கு தான் நிகழ்ந்தன. இலங்கையின் பௌத்த கொடி உருவானதும் இங்குதான். அந்த கொடி முதலில் ஏற்றப்பட்டதும் இங்கு தான். வெசாக் தினம் விடுமுறை தினமாக ஆக்குவதற்காக போராடியதும் இங்கிருந்து தான். அதனை முதலில் அறிவித்ததும் இங்கு தான்.

இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பஞ்சமகா விவாதங்களில் பௌத்த தரப்பை பிரதிநிதித்துவம் செய்த பிரதான விவாதியாக இருந்தவர் குணானந்த தேரர். குறிப்பாக இறுதி விவதமான பாணந்துறை விவாதத்தின் கதாநாயகன் அவர். எனவே அவர் நாடறிந்த செல்வாக்குள்ள பிக்குவாக அறியப்பட்டிருந்தார். பாணந்துறை விவாதத்தை ஆங்கிலப் பத்திரிகையில் தொடர்ந்து வாசித்த ஒல்கொட் தான் பௌத்தத்தால் கவர்ந்து அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்து சேர்ந்து பௌத்த மறுமலர்ச்சிக்கு தலைமை தாங்கினார் என்பதை அறிவீர்கள். இந்த விவாதங்களுக்கான கருத்துருவாக்கத் தளமாக இந்த விகாரை திகழ்ந்தது.

1875 ஆம் ஆண்டளவில் கொழும்பு தலைநகரில் சாதாரண மக்களுக்கான சுதேசிய பாடசாலைகள் இருக்கவில்லை. அப்படி பாடசாலை செல்பவர்கள் கொழும்புக்கு வெளியில் களனி பாடசாலைக்கோ அல்லது இரத்மலான பாடசாலைக்கோ தான் செல்லவேண்டும். அப்படி கொழும்பில் முதலாவது சுதேசிய பாடசாலையை இந்த தீபதுத்தாராமாவில் தொடக்கினார் குனானந்த தேரர். கிறிஸ்தவ பாடசாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கொழும்பு நகரில் இப்படியொரு பாடசாலையின் உருவாக்கத்தால் குனானந்த தேரரும், விகாரையும் மேலும் பிரசித்தி பெற்றன. இன்றும் “குமார வித்தியாலய” என்கிற பெயரில் அப்பாடசாலை இயங்கிவருகிறது.

மேலும் இந்த விகாரையில் கணபதி, கந்தன், சரஸ்வது, காளி, லட்சுமி போன்ற இந்துக் கடவுள்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை தேங்காய் உடைத்து, பூக்கள் வைத்து வழிபடும் வழக்கம் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.  விகாரையின் உள்ளே ஏனைய பல விகாரைகளில் உள்ளதைப் போல விஷ்ணுவின் சிலை சுவரில் பெரிதாக உள்ளது.

குணானந்த தேரர் பயன்படுத்திய அறை இன்றும் அப்படியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனைக் கலவரம்

1883 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனையில் கிறிஸ்தவர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் பெரும் கலவரம் உருவானது. அது நாடு பூராவும் பரவியது. மார்ச் 25ஆம் திகதி கிறிஸ்தவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு நாள். அதே நாள் தான் கொட்டாஞ்சேனை தீபதுத்தாராமயவில் உள்ள பௌத்த சிலைக்கு கண்கள் வைப்பதற்கான சடங்கைச் செய்யும் பெரஹரவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பௌத்தர்களின் பெரஹர ஊர்வலத்தில் இயேசுவின் உருவமும், அன்னை மரியாளின் உருவமும் கேலி செய்யப்படும் விதத்தின் கொண்டுவரப்படுவதாக கிளப்பப்பட்ட புரளியால் கலவரம் வெடித்தது. கொட்டாஞ்சேனையில் இரு தரப்பும் கைகளில் கிடைத்தவற்றைக் கொண்டு தாக்கிக் கொண்டதில் பெரும் கலவரம் நடந்து முடிந்தது. ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயமுற்றனர்.


இதனை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டு The Kotahena Riots – Commission report என்கிற ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

1883 கொட்டாஞ்சேனைக் கலவரம் பௌத்த மறுமலர்ச்சியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கொட்டாஞ்சேனைக் கலவரம் பற்றிய ஆணைகுழு அறிக்கை பௌத்தர்களுக்கு சாதகமாக அமையவில்லை. இரண்டு தரப்பிலும் எவருக்கும் தண்டனை விதிக்கப்படவுமில்லை. தீபதுத்தாரம விகாரைக்கு ஏற்பட்ட சேதத்துக்கு நஷ்டஈடு கோரி கத்தோலிக்க தரப்பினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கும் தோல்வியடைந்தது. இந்த பின்னணியில் ஒல்கொட் இலங்கைக்கு மீண்டும் 27.01.1884 இல் வந்து சேர்ந்தார். பௌத்தத் தலைவர்களுடன் ஒன்று சேர்ந்து கலந்துரையாடியதன் விளைவாக ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல தேரரின் தலைமையில் “பௌத்த பாதுகாப்பு சபை” உருவாக்கப்பட்டது. கேணல் ஒல்கொட், குணானந்த தேரர், அநகாரிக தர்மபால உள்ளடங்கிய 10 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழு அமைக்கப்பட்டது.

பௌத்த பாதுகாப்பு சபையின் முக்கிய 6 அம்ச கோரிக்கை உள்ளிட்ட முறைப்பாடுகள் குறித்து காலனித்துவ செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒல்கொட் அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பும் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒல்கொட் 10.02.1884 இல் இங்கிலாந்தை நோக்கி புறப்பட்டார். அந்த 6 முக்கியம்ச கோரிக்கைகள் இவை தான்.

கொட்டாஞ்சேனை கலவரத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

சிங்கள பௌத்தர்களின் மத உரிமைகள், சலுகைகளை உறுதிசெய்ய வேண்டும்.

அரசாட்சி காலத்திலிருந்து புத்தர் பிறந்த வெசாக் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக அனுஷ்டித்து வந்தார்கள். மீண்டும் அந்த நாளை அரச விடுமுறை நாளாக்க வேண்டும்.

மத ஊர்வலத்தின்போது இசைக்குழு வாத்தியமிசைப்பது குறித்த தடையை நீக்கி, பௌத்தர்களின் பெரஹர ஊர்வலங்களுக்கு இடமளிக்கவேண்டும்

பௌத்தர்களின் விவாகப் பதிவுக்காக பௌத்த விவாகப் பதிவாளர்களை நியமிக்க வேண்டும்.

1856ஆம் ஆண்டின் 10 வது இலக்க விகாரைகளை பதிவுசெய்யும் சட்டத்தில் உள்ள இடைஞ்சல்களை நீக்குவதற்கான வழிவகைகள் செய்யப்படவேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்கு நியாயமான பதிலை அளிக்க வேண்டிய இக்கட்டுக்குள் தள்ளப்பட்டார் காலனித்துவ செயலாளர் டேர்பி துரை.

வெசாக் தினத்தின் தோற்றம்

இந்த வெசாக் தினத்தை பொது விடுமுறையாக்குவதற்கான யோசனையை அரசசபையில் ஆளுநர் கோர்டன் முன்வைத்தார். ஆனால் கரையோர சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.எல்.அல்விஸ் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. வெசாக் விடுமுறைக்கு ஆதரவாக உரையாடிவர்களில் பொன்னம்பலம் இராமநாதனும் குறிப்பிடத்தக்கவர். பௌத்தர்களுக்காக மட்டும் இப்படி விடுமுறை அளித்தது நியாயமல்ல என்றும் இந்துக்களுக்கும் விடுமுறை நாளொன்றை வழங்காதது ஒரு குறை என்றும அன்றைய Times of ceylon (11.08.1885) பத்திரிகையில் கட்டுரை வெளியாகியிருந்தது. இந்த விவகாரம் 15.01.1886 அன்று சட்டசபையிலும் ஒலித்தது. அந்த காரசாரமான விவாதத்தின் விளைவாக தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினமும் உருவானது. இந்துக்களுக்கு விடுமுறை வேண்டும் என்று உறுதியாக குரல் கொடுத்தவர்கள் பலர் அன்றைய ஆங்கில பிரதிநிதிகளே.

28.04.1885 அன்றிலிருந்து வெசாக் பௌர்ணமி தினம் அரச பொது விடுமுறையாக ஆனது. அது உத்தியோகபூர்வமான சட்டமாக 1886 ஆம் ஆண்டு 06 ஆம் இலக்க சட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது. வெசாக் தினத்தன்று பௌத்த கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்படவேண்டும் என்றும் அதற்கான ஒரு கொடியை உருவாக்குவது என்றும் பௌத்த பாதுகாப்பு சபை தீர்மானித்தது. பௌத்த கொடியை உருவாக்கும் குழுவில் சுமங்கல தேரர், குணானந்த தேரர், கரோலிஸ் ஹேவவிதாரன (அநகாரிக்க தர்மபால) போன்றோரும் உள்ளடக்கம். ஒல்கொட்டின் வழிகாட்டுதலில் கரோலிஸ் குணவர்தன என்பவரால் பௌத்த கொடி தயாரிக்கப்பட்டது.


தீபதுத்தாராமய விகாரையில் முதலாவது தடவையாக பௌத்த கொடி குணானந்த தேரரால் ஏற்றப்பட்டது. களனி விகாரை உள்ளிட்ட இன்னும் சில பெரிய விகாரைகளில் அன்றைய தினம் இக்கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியே 1952 இலிருந்து “உலக பௌத்த கொடி”யாக அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகது.

இந்த சம்பவத்தின் பின்னர் பௌத்த மறுமலர்ச்சியின் பேரால் பௌத்த தரப்பு பலமடைந்தது. அவர்கள் நடத்திய அணிதிரள்வின் விளைவாக வெசாக் தினத்தை விடுமுறை நாட்களாக 27.03.1887 அன்று அறிவித்தது அரசு. 1770 இல் இருந்து இந்த வெசாக் விடுமுறை ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. முதலாவது தடவையாக தீபதுத்தாமாறாம  விகாரையில் குணானந்த தேரர் தலைமையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு 1885 ஏப்ரல் 28 அன்று கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமவில் முதல் தடவை ஏற்றப்பட்டது. இந்தக் கொடியே 1956ஆண்டிலிருந்து சர்வதேச பௌத்த கொடியானது. 1956இல் இலங்கையில் நடந்த உலக பௌத்த மாநாட்டின் போது உலக பௌத்த கொடியாக ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டது.

இப்படி இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பல பௌத்த வரலாற்று சம்பவங்களுக்கு சொந்தமாகவும், சாட்சியமாகவும் கொட்டாஞ்சேனை தீபதுத்தாராமய விளங்குகிறது.

உசாத்துணை:

  1. 1915: கண்டி கலவரம், 
  2. G.P.V. Somaratna, Kotahena Riot, 1883: A Religious Riot in Sri Lanka, Nugegoda : G.P.V. Somaratna, 1991.
  3. විමල් අභයසුන්දර, මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  (Godage publication, 1994)
  4. Roberts, Michael, Potency. Power & People in Groups, Colombo, Marga Institute, 2011
  5. පන්සලේ විප්ලවය Victor ivan – (Ravaya publication – 2006)


நன்றி - தினகரன் - 01.05.2022

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates