Headlines News :
முகப்பு » , , , , » அலரி மாளிகை : சாராயக் களஞ்சியம் அரச தலைவர்களின் இருப்பிடமான கதை - (கொழும்பின் கதை – 27) - என்.சரவணன்

அலரி மாளிகை : சாராயக் களஞ்சியம் அரச தலைவர்களின் இருப்பிடமான கதை - (கொழும்பின் கதை – 27) - என்.சரவணன்

கொழும்பு 3இல் கொள்ளுப்பிட்டியில் காலி வீதியில், அமெரிக்க தூதுவராலயத்துக்கு முன்னால் கடும் பாதுகாப்புடன் இருக்கிறது இந்த மாளிகை. இலங்கையில் அதிக பாதுகாப்புடன் இருக்கும் இல்லம் இது தான் என்றும் கூற முடியும்.

ஆயிரக்கணக்கானோர் கூடக்கூடிய மண்டபமும், பல சந்திப்பு அறைகளையும், அமைச்சரவைக் கூட்ட அறை, வசிப்பிடத்தையும், மேலும் பல நிலக்கீழ் அலுவலகங்களையும் கொண்ட மாளிகை அது.

இன்றைய அலரி மாளிகை பிரதமரின் உத்தியோகபூர்வமான வாசஸ்தலமாக இருக்கிறது. ஜே.ஆர்.ஜெயவர்தனாவைத் தவிர; சுதந்திரத்திற்குப் பின்னர் பிரதமர்களாக பதவி வகித்த அனைத்து தலைவர்களும் தமது பதவிக் காலத்தில் இங்கே வசித்திருக்கிறார்கள்.


அதுமட்டுமன்றி பல அரசாங்க கவிழ்ப்புக் கதைகளின் புகலிடமாக இது இருக்கிறது. பல கிளர்ச்சிகளின் கதைகளையும் பரகசியமாகக் கொண்டிருக்கும் மாளிகை. ஒன்பது பிரதமர்களின் கீழ் செயலாளராக பணியாற்றிய பிரபல சிவில் அதிகாரியான பிரட்மன் வீரக்கோன் பிற்காலத்தில் தனது அனுபவங்களை “Rendering Unto Caesar” என்கிற பெயரில் இந்த அலரிமாளிகை தலைவர்களைப் பற்றி எழுதினார். மிகவும் சுவாரசியம் நிறைந்த அலரி மாளிகை அரசியல் சம்பவங்களின் தொகுப்பு அது.

“அலரி மாளிகை” என்கிற அதே அர்த்தத்தில் தான் சிங்களத்திலும் “அரலிய கஹா மந்திரய” (அலரி மர மாளிகை) என்று  அழைக்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் இதனை “டெம்பில் ட்ரீ” (Temple Trees) என்கிற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இலங்கையில் அலரி மரம் எங்கெங்கும் காணப்படும் மரம். எப்போதும் பூத்துக் குலுங்கும் மரமாக இருப்பதால் அதனை பௌத்த விகாரைகளில் வணங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே பல பௌத்த விகாரைகளில் நிச்சயம் காணப்படும் மரமாகப் பேர் பெற்றது. அதற்கு ஒரு தெய்வீக மரியாதை இலங்கையில் இருக்கிறது. எனவே ஆங்கிலத்தில் இதனை ஒரு “கோவில் மரங்கள்” (Temple Trees) என்கிற பெயர் கொண்டு அழைப்பதில் ஆச்சரியமில்லை. (1)

ஒல்லாந்தர் காலத்தில் கறுவா உற்பத்திக்கு அடுத்ததாக வருமானம் ஈட்டக்கூடிய பெரிய லாபகர தொழிலாக இருந்தது சாராய உற்பத்தித் தொழிலே. இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சாராயத்துக்கு பெரும் மவுசு இருந்தது. 

கிழக்கத்தேய நாடுகளில் பரவிய மலேரியா மற்றும் தொற்று போன்ற தொற்று நோய்களுக்கு தெய்வீக மருந்தாக அதனைப் பயன்படுத்த முயன்றனர். அவர்களின் படையெடுப்பு ராணுவத்தின் நாளாந்த பாவனைக்காக அனுப்பிவைத்தார்கள்.

இந்த சாராய உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட தென்னை நிறைந்த கடற்கரை பிரதேசங்களில் பதப்படுத்தும் குளிர் களஞ்சியங்களையும் (De Brandery) கட்டினார்கள். எனவே அலரி மாளிகைப் பகுதியை “De Brandery” என்றும் அழைத்தார்கள். அவ்வாறு கொழும்பு நகரில் பிரதான “பிறன்டரி” அலரி மாளிகைக்கு சொந்தமான கட்டிடத் தொகுதியில் தான் இருந்தது. 

ஆம்! இலங்கையின் அரச தலைவர்களின் வாசஸ்தலம் அன்றைய சாராய பதப்படுத்தி பேணும் களஞ்சியம். கொள்ளுபிட்டியில் இருந்த விசாலமான தென்னந்தோப்புக்கு அருகாமையில் இப்படி சாராயம் வடிகட்டுவதற்கு இலகுவாக இந்த “பிறன்டரி” இருந்தது. அதற்கும் முன்னர் அங்கே ஒரு சிறுவர்களுக்கான அநாதை இல்லமும், இராணுவ அலுவலகமும் இருந்ததாக அறியப்படுகிறது.

ஒல்லாந்தர் காலத்தில் கொள்ளுப்பிட்டி குடியிருப்புகள் உள்ள பகுதியாக காணப்படவில்லை. கொழும்பு கோட்டைக்கு அப்பாலுள்ள ஹல்ஸ்டாப், புளுமெண்டல், வுல்பெண்டல், புனித செபஸ்தியன் போன்ற தேவாலயங்களை அமைத்து அதை அண்டிய குடியிருப்புகளை பேணி வந்தார்கள். இன்றைய கொழும்பு 7 கூட கறுவாத் தோட்டப் பகுதியாகத் தான் இருந்தது.

“பிறன்டரி” மாளிகையின் முதலாவது உரிமையாளர் யார் என்கிற தகவலை உறுதியாக அறிய முடியாவிட்டாலும் 1796 இல் இலங்கை ஆங்கிலேயர்கள் வசம் ஆகும் போது இந்த மாளிகை அப்போதைய டச்சு தலைமை களஞ்சிய ஆதிகாரியான டேனியல் தித்லொப் (Daniel Ditloff von Railzow) என்பவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் இலங்கையில் பிறந்தவர் அதேவேளை ஆங்கிலேய அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த பிரமுகராக இருந்தார். அவரின் காலத்துக்குப் பின் இக்கட்டிடத்தில் சாராயப் பதப்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அன்று கொழும்பில் இருந்த இரண்டு மாடிகளைக் கொண்ட ஒரே கட்டிடமாக இது தான் இருந்தது.

ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் அவர்களுக்கு முன்னர் ஆட்சியாளர்களாக வாழ்ந்த ஒல்லாந்தர்களில் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக ஆகியிருந்த ஒல்லாந்தர்களை தமது நிர்வாகத்தில் இணைத்துக் கொண்டார்கள். அப்படி இணைக்கப்பட்ட ஒருவர் தான் பிரெடிரிக் பெரன் மைலியஸ் (Frederick Baron Mylius). அவர் ஜெர்மனில் ஸ்டுட்கார்ட் நகரில் 1762இல்  பிறந்தவர். அவர் காலி மாத்தறை மாவட்டத்தின் நீதவானாக கடமையாற்றினார். அவர் இராணுவத்தில் கடமையாற்றிய அதிகாரியும் கூட. இந்த மாளிகையை அவர் தான் முதற் தடைவையாக (1805) வாசஸ்தலமாக ஆக்கிக்கொண்டவர். அதுவரை அங்கு இயங்கிய சாராய “பிறன்டரி” யையும் அவர் அகற்றினார். முன்னாள் ஒல்லாந்து ஆளுநரான வில்லம் வண்டர் கிராப்பின் (Willem Vander Graaf) புதல்வியான அக்னஸ் கிளாராவைத் (Agnes Clara) தான் மைலியஸ் திருமணம் முடித்திருந்தார். அதனால் தனது புதல்வியின் திருமணத்தை இந்த மாளிகையில் தான் நடத்தினார் வில்லம் யாகோப். அந்த திருமண வைபவத்துக்கு இலங்கையின் முதலாவது ஆங்கிலேய தேசாதிபதியான பிரெடெரிக் நோர்த்தும் (Frederick North) கலந்து கொண்டார். வில்லம் யாகோப்பின் மனைவியின் தந்தை தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனின் ஆளுநராக இருந்த கொர்னேலியஸ் யாகோப் (Cornelius Jacob Vander Graff).

டச்சுக்காரராக இருந்தும் அவர் ஆங்கிலேயர்களின் கீழ் அதிகாரியாக பணிபுரிய முன்வந்ததால் அவருக்கு இந்த மாளிகை உரிமையானது.

மைலியஸ் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இயங்கி வந்தார். இலங்கையில் அப்போது நிலவிய அடிமைமுறையை ஒழிப்பதற்காக தொடர்ந்து அவர் குரல் கொடுத்தார். இது பிரித்தானிய அரசாங்கத்துக்கு நெருக்கடியாக இருந்தது. இறுதியில் 14 ஓகஸ்ட் 1807 ஆம் ஆண்டு தனது 45வது வயதில் 1807ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனால் அவர் திடீர் சுகவீனத்தால் மரணமுற்றார் என்று 21.08.1807 வர்த்தமானி பத்திரிகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.(2)  ஆனால் மைலியஸ் மீதான ஊழலை விசாரிப்பதற்கு முயற்சித்தவேளை தற்கொலை செய்துகொண்டார் என ஆளுநர் சேர் தோமஸ் மெயிற்லான்ட் (Sir Thomas Maitland) பற்றிய நூலில் வில்சன் (H.F.Wilson) குறிப்பிடுகிறார்.(3) மைலியஸ் பணிபுரிந்தது ஆளுநர் மெயிற்லான்ட்டின் கீழ் தான். மைலியஸ் இந்த மாளிகையில் இரண்டு ஆண்டுகள் தான் வாழ்ந்தார். (4)

அவருக்குப் பின்னர் இந்த மாளிகையின் உரிமை; சிவில் உத்தியோகத்தர்களான லெயார்ட் சகோதர்களிடம் இருந்தது. சுமார் 30 ஆண்டுகளாக மேல்மாகாண அரசாங்க அதிபராக பிரபலமாக இருந்த இருந்த பீட்டர் லெயர்ட் (Henry Peter John Layard) அவர்களில் ஒருவர். கொழும்பு கிராண்ட் பாஸ்ஸிலுள்ள லெயார்ட் ப்ரோட்வே வீதி அவரின் நினைவாக வைக்கப்பட்ட பெயர்.

அவருக்குப் பின்னர்; ஜோன் வால்பேப் (John Walbeoff) என்கிற கறுவா திணைக்களத்தின் தலைவர் 1830குப் பின் இதனை சொந்தமாக்கி இருந்தார். எப்போதும் நண்பர்களைக் கூட்டி களியாட்டம் செய்யும் வழக்கமுள்ளவராக இருந்தார் அவர். அப்படி வருகை தந்த ஒரு இளைஞர்; ஜோன் வால்பேப்பின் மனைவியுடன் காதல் கொண்டுவிட்டார். இது சர்ச்சையாகிவிட்டது. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வால்பேப் தனது நண்பரை வாள் சண்டைக்கு அழைத்தார். அலரி மாளிகையின் தோட்டத்தில் சண்டை ஏற்பாடானது. இருவரும் கடுமையாக மோதிக்கொண்டதில்  வால்பேப் கொல்லப்பட்டார்.

வால்பேப்புக்குப் பின்னர் மேல் மாகாண அரசாங்க அதிபராக இருந்த சீ.ஆர். புல்லர் (C.R. Buller) 1840 இல் இருந்து வாழ்ந்து வந்தார். இன்றும் பொரல்லையிலிருந்து பம்பலப்பிட்டி வரையான வீதிக்கு வைக்கப்பட்டிருக்கிற “புல்லர் வீதி” இவரின் நினைவாக வைக்கப்பட்டது தான். 

அதன் பின்னர் இலங்கையின் முதலாவது சுதந்திரப் பத்திரிகையான “சிலோன் ஒப்சேர்வர்” (1835 இல் இது Colombo Observer ஆனது) பத்திரிகையின் ஆசிரியரும், இலங்கை பிரதான மருத்துவ அதிகாரியுமான ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தோப்பர் எலியட் (Dr, Christopher Elliot) 1848 ஆம் ஆண்டு இதனை வாங்கினார். தனது பத்திரிகையின் மூலம் ஆங்கிலேய அரசை கடுமையாக விமர்சித்தவர் அவர். 1848 இல் மாத்தளை கிளர்ச்சியை ஆங்கிலேய அரசு அடக்கிய விதத்தை எதிர்த்து கடுமையாக சாடியது இந்த அலரி மாளிகையில் வசித்து வந்த போது தான். இந்த கிளர்ச்சிக்கு எலியட் பக்கபலமாக இருந்து ஆதரவு வழங்கியதாகவும், அலரி மாளிகையில் அக்கிளர்ச்சிக்கான இரகசிய கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் கூட கதைகள் உண்டு. அன்றைய ஆளுநர் டொரிங்டனுக்கு எதிராக இதே அலரி மாளிகையில் பெரும் எதிர்ப்புக் கூட்டத்தை ஒழுங்கு செய்தார் எலியட். ஆளுநர் பொலிசாரை அலரி மாளிகைக்கு அனுப்பி கூட்டத்தைக் கலைத்தார். இறுதியில் எலியட் வென்றார். ஆளுநர் டொரிங்டனும் காலனித்துவ செயலாளர் எமர்சன் டெனண்டும் பதவி விலக்கப்பட்டு இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்டார்கள்.

காலி வீதி அமைக்கப்படுவதற்கு முன்னர் விசாலமான நிலமாக இருந்த இந்த காணி பின்னர் பாதைக்காகவும், கொள்ளுப்பிட்டி பொலிஸ் போன்றவற்றுக்காகவும் குறுகி சிறியதாக ஆனாலும் இன்றும் அது ஒரு அழகான பசுமைப் பகுதி தான்.

1856 ஆம் ஆண்டு ஜோன் பிலிப் கிரீன் (John Philip Green) இதனை 2300 பவுண்களுக்கு வாங்கினார். சூழலியலாளரான அவருக்கு கோப்பித் தோட்டங்கள் உரிமையாக இருந்தன. தாவரவியல் அறிவியலில் நிபுணராக இருந்தார். அவர் தான் இந்தக் காணியை பசுமையாக மாற்றியவர். அவர் வைத்த மரங்கள் தான் அலரி மரங்கள். அவர் சூட்டிய பெயர் தான் “Temple Tree”. அங்கே அவர் மயில்களையும், பல்வேறு பறவை, விலங்குகளையும் வளர்த்தார். 1881ல் பிரபல தாவரவியலாளர் ஏர்னஸ்ட் ஹெக்கில் (Ernst Haeckel) அப்போது இலங்கை வந்திருந்த போது அலரி மாளிகையில் அவர் கண்ட இத்தகைய காட்சிகளைப் பற்றி தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தன்னை அம்மாளிகையின் உரிமையாளர் ஸ்டேனிஸ்போத்தின் (Stanisforth Green) அழைப்பின் பேரில் அங்கே விஜயம் செய்ததாக அவர் குறிப்பிடுகிறார்.(5)  

ஜோன் பிலிப்புக்குப் பின்னர் இதனை அவரின் சகோதரர் ஸ்டேனிஸ்போத்துக்கு (Stanisforth Green) சொந்தமானது. அவர் தான் இலங்கையின் ஐஸ் தொழிற்துறையின் முன்னோடியாக கருதப்படுபவர். அவர் அலரி மாளிகைக்குப் பின்னால் ஒரு ஐஸ் உற்பத்திச்சாலையை உருவாக்கினார். பேரை வாவி அதன் எல்லையாக இருந்தது. அவரின் மரணத்துக்குப் பின்னர் அலரி மாளிகை 1899 இல் ஏலத்துக்கு விடப்பட்டது. ஏலத்துக்கான அன்றைய விளம்பரத்தில் “இந்த கட்டிடத்தை வாங்குபவர் கொல்லுபிட்டியில் உள்ள மிக இனிமையான நிலத்தின் உரிமையாளராக மட்டுமன்றி நகரத்தில் உள்ள பல வரலாற்று நிரூபணங்களின் உரிமையாளராகவும் ஆவார்". என்று குறிப்படப்பட்டிருந்தது. இறுதியில் டெரன்ட் அண்ட் ஹென்டர்சன் (Tarrant Henderson & Co) கம்பனி இதனைக் கொள்வனவு செய்ய முன்வந்தது. 140,000 ரூபாவுக்கு அதன் உரிமையாளர் J.A.Henderson அதனைக் கொள்வனவு செய்தார். ஆனால் குறுகிய காலம் தான் அவரும் அங்கே வாழ்ந்தார்.

1903 ஆம் ஆண்டு இந்தக் காணி முழுமையாக பிரித்தானிய அரசர் எட்வர்ட்டுக்கு சொந்தமானது. அதிலிருந்து பிரித்தானிய பிரபுக்களின் வாசஸ்தலமானது. அரசாங்கம் 1903 ஆம் ஆண்டு இதனை 99,000 ரூபாவுக்கு கொள்வனது செய்தபோது இந்த காணி ஏக்கர்களையும், 8 பேச்சர்ஸ்களையும் மட்டுமே கொண்டிருந்தது. அதன் பிரகாரம் அங்கே முதலாவது குடியேறிய ஆளுநர் ஹியூஜ் கிலிபோர்ட் (Hugh Clifford 1907-13). அதன் பின்னர் ஆளுநர் எட்வர்ட் ஸ்றப்ஸ் (Edward Stubbs) போன்றோரும் இங்கே வசித்தார்கள். ஆளுநருக்கு தனி குடியிருப்பு ஒதுக்கப்பட்ட நிலையில், பிரித்தானிய காலனித்துவ செயலாளரின் வசிப்பிடமாக இது ஆக்கப்பட்டது. சர் சார்ல்ஸ் கொலின்ஸ் அப்படி அங்கே குடியேறினார்.

டொனமூர் அரசியல் திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட நான்கு பிரதான செயலாளர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக மாறியது. 


1948 பிப்ரவரி இல் ஆங்கிலேயர்கள் சுதந்திரம் வழங்கியதும் “சுதந்திர” இலங்கையின் பிரதமரின் வாசஸ்தலமாக ஆக்கப்பட்டது. அதன்படி இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க இங்கே  1948ஆம் ஆண்டு  19ஆம் திகதி குடியேறினார். அதே ஆண்டு இந்த மாளிகையை புதுபிப்பதற்காக அரசு 50,000 ரூபாவை ஒதுக்கியது. அதன் மூலம் இந்த மாளிகையின் வசதிகள் பெருப்பிக்கப்பட்டது. பெரிய மண்டபம், விசாலமான உணவு அறை என்பன பெருப்பிக்கப்பட்டன. அவருக்குப் பின்னர் எஸ்.டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்க இங்கு வசிக்க வரவில்லை. அதற்குப் பதிலாக அவரின் ரோஸ்மீட் பிளேஸ் இல்லத்திலேயே வசித்தார். அவர் கொல்லப்பட்டதும்  அவரது அந்த இல்லத்தில் வைத்துத் தான். அலரி மாளிகையை அவர் சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளுக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டார். பண்டாரநாயக்கவின் காலத்தில் வாராந்தம் திங்கள் தோறும் நடத்தும் ஊடக மாநாட்டை “கிரிபத்” (பாற்சோறு) ஊடக சந்திப்பு என்றே அழைத்தார்கள். பத்திரிகையாளர்களுக்கு அங்கே பாற்சோறு வழங்கப்பட்டது.

பல ராஜதந்திரிகளுக்கு தமது சந்திப்புகளையும், வரவேற்பு நிகழ்வுகளையும் செய்த ஒரு நினைவு இடமாக இது இருக்கிறது.

1978 ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட போது அதுவரை ஆளுநரின் வாசஸ்தலமாக இருந்த இராணி மாளிகை ஜனாதிபதி இல்லமாக ஆனது. ஆனால் அதை சம்பிரதாய நிகழ்வுக்கு மட்டும் தான் ஜே.ஆர். பயன்படுத்தினார். வாசஸ்தலமாக அலரி மாளிகையைத் தான் பயன்படுத்தினார். எனவே பிரதமரின் இருப்பிடத்துக்கு வேறு இடத்தை ஒழுங்கு செய்ய நேரிட்டது.

ஜே.ஆர்.ஜெயவர்தன ஒரு சில நாட்களே இங்கு வாழ்ந்தார். அவரின் சொந்த சொகுசு பங்களாவிலேயே (Braemar) அவர் 1977 இல் பிரதமராக பதவியேற்ற சில நாட்களின் பின்னர் வாழ்ந்தார். 1978இல் 2வது குடியரசு அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு பிரதமரின் உரிமைகள் குறைக்கப்பட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை கொண்டு வரப்பட்ட பின்னர் பிரேமதாச அலரி மாளிகையை உத்தியோகபூர்வமான இல்லமாக ஆக்கிக்கொண்டபோதும், அதிகமான காலத்தை அவர் தனது சொந்த இல்லமான வாழைத்தோட்டத்தில் இருந்த “சுச்சரித்த” இல்லத்தை பயன்படுத்தினார். ஜனாதிபதியான பின்னரும் பிரேமதாச அதே சுச்சரித்த இல்லத்தைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தினார்.

பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த அனைவரும் அப்படித்தான் பயன்படுத்தினார்கள். சந்திரிகாவின் ஆட்சியின் போது இது ஜனாதிபதியின் வாசஸ்தலமாக ஆனது. அப்போதைய யுத்தம் காரணமாக இது தாக்கப்படலாம் என்கிற ஐயத்தில் இந்த மாளிகையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அதிபாதுகாப்பு வலயமாக ஆக்கப்பட்டதுடன், இங்கே விமான எதிர்ப்பு பீரங்கிகளும் பொருத்தப்பட்டன.மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இந்த மாளிகையில் பாதுகாப்பு பங்கர்கள், சுரங்க வழிகள் என்பனவும் அமைக்கப்பட்டன. கூடவே நீச்சல் தடாகம் போன்றவையும் அமைக்கப்பட்டு அது மேலதிக சொகுசு நிலைக்கு உயர்த்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் போது சில அரச தலைவர்களின் பிள்ளைகளின் திருமண வைபவங்களுக்காக வாடகைக்கும் விடப்பட்டன. உதாரணத்துக்கு 2018 செப்டம்பரில் ராஜித்த சேனாரத்னவின் புதல்வனும் பாராளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்னவின் திருமண வைபவம் இங்கே நடத்தப்பட்டது. அதற்காக 2,180,000 ரூபா கட்டணம் கட்டியிருந்த ரசீதும் அப்போது பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.  அந்த திருமண நிகழ்வின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க "இனிமேல் திருமண வைபவங்கள் இங்கு நடத்த இடமளிக்கப்படாது என்று அறிவித்தார்.(6) ஆனால் 2019 ஆம் ஆண்டு அமைச்சர் விஜேமுனி சொய்சாவின் புதல்வன் கஜிடு சொய்சாவின் திருமணமும் இங்கே நடத்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையை வாசஸ்தலமாக அல்லாமல் அலுவலகமாக மட்டும் பயன்படுத்தினார். ஆனால் மீண்டும் மகிந்த ராஜபக்ச 2019 இல் பிரதமராக ஆனதும் தனது வாசஸ்தலமாக பயன்படுத்தத் தொடங்கினார். 2022 யூனில் ரணில் பிரதமராக 6 வது தடவை தெரிவு செய்யப்பட்டபோது மீண்டும் தனது கடமைகளை இங்கே இருந்து ஆரம்பித்தார்.

மூன்று நூற்றாண்டுகளாக வரலாற்று முக்கியத்துவமுள்ள கதைகளை தேக்கி வைத்திருகிறது அலரி மாளிகை.

அலரி மாளிகையில் வசித்த தலைவர்கள்:

 • 1948 -1952 டி.எஸ்.சேனநாயக்க
 • 1952 -1956 டட்லி சேனநாயக்க
 • 1956 -1959 எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா
 • 1959 -1960 விஜேயானந்த தஹநாயக்க
 • 1960 -1960 டட்லி சேனநாயக்க
 • 1960 -1965 சிறிமாவோ பண்டாரநாயக்கா
 • 1965 -1970 டட்லி சேனநாயக்க
 • 1970 -1977 சிறிமாவோ பண்டாரநாயக்கா
 • 1977 -1978 ஜே. ஆர். ஜெயவர்த்தனே (அவரது தனிப்பட்ட இல்லமான பிரேமரில் வசித்தார்)
 • 1978 -1989 ரணசிங்க பிரேமதாச
 • 1989 -1993 டிங்கிரி பண்டா விஜேதுங்க
 • 1993 -1994 ரணில் விக்கிரமசிங்க
 • 1994 - 2001 சந்திரிகா குமாரதுங்க (ஜனாதிபதியாக வாழ்ந்தார்), பிரதமர் ஹொரகொல்ல வளவ்வயில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்தார்.
 • 2001-2004 ரணில் விக்கிரமசிங்க
 • 2004-2015 மகிந்த ராஜபக்ச (ஜனாதிபதியாக வாழ்ந்தவர்), பிரதமர் விசும்பயாவைப் பயன்படுத்தினார்
 • 2015-2019 ரணில் விக்கிரமசிங்க
 • 2019-2022 மகிந்த ராஜபக்ச
 • 2022 ... ரணில் விக்கிரமசிங்க

நன்றி - தினகரன் - 15.05.2022

அடிக்குறிப்புகள் :
 1. Ernst Haeckel, A Visit to Ceylon, Boston, S.E.Cassono and company 1883.
 2. J.Penry Lewis C.M.G, Tombstones and Monuments in Ceylon, H, C, cottle, Government Printer Ceylon, Colombo, 1913
 3. Walter Frewen Lord, Lord, W: Sir Thomas Maitland, the Mastery of the Mediterrane, T.Fisher Unwin, Paternoster Square, London, 1898
 4. மைலியசின் புதல்வர்களின் ஒருவரான அல்பிரட் (Alfred Mylius) 1815 ஆம் ஆண்டு கண்டியைக் கைப்பற்றிய யுத்தத்தில் பிரதான படையாக இருந்த 8 வது படையணியின் கப்டன்களில் ஒருவராக கடமையாற்றியவர். அதுமட்டுமன்றி கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை மெதமானுவரவில் சுற்றிவளைத்து பிடித்த போது அந்த மலே துருப்புகளுக்கு தளபதியாக தலைமை தாங்கியவர் அல்பிரட் மைலியஸ். இந்தத் தகவல்களை Tombstones and Monuments in Ceylon என்கிற நூல் பதிவு செய்திருக்கிறது. மேலும் ஜோன் டொயிலியின் நாட்குறிப்பிலும் கண்டியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் பற்றிய விபரங்களில் எட்டு இடங்களில் அல்பிரட் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 
 5. Ernst Haeckel, A Visit to Ceylon, S.E Cassino, and Company, 1883
 6. “No more wedding receptions at Temple Trees: PM” (News), 07.09.2018 (Daily Mirror)


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates