வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை அன்று லண்டனில் மலையக இலக்கிய மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மலையகத் தமிழர்களின் வாழ்வு, கலாசாரம், கலைகள் சார்ந்து பல நிகழ்ச்சிகள் இதில் அரங்கேறவிருக்கின்றன.
இம்மாநாட்டின் ஒரு பகுதியாக கோகிலம் சுப்பையா அரங்கு, இர.சிவலிங்கம் அரங்கு, சோ.சந்திரசேகரம் அரங்கு, சி.வி.வேலுப்பிள்ளை அரங்கு, தமிழோவியன் அரங்கு, சாரல்நாடன் அரங்கு, காத்தாயி அரங்கு என ஏழு அரங்குகளில் 23 மலையக நூல்கள் அறிமுகமாக இருக்கின்றன.
புனைவு இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் அல்-அஸுமத், மாத்தளை சோமு, மலரன்பன் ஆகியோரின் நாவல்களும் மு.சிவலிங்கம், பிரமீளா பிரதீபன், பதுளை சேனாதிராஜா, தங்கவேல் ஆகியோரின் சிறுகதைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அமரர் உபாலி லீலாரட்னா எழுதிய சிங்கள நாவலின் தமிழாக்கமான இரா.சடகோபனின் 'தேத்தண்ணி' முக்கிய மொழிபெயர்ப்பு நாவலாக ஆய்விற்குத் தேர்வு பெற்றிருக்கிறது. எஸ்தர், வண்ணச்சிறகு (அரு.சிவானந்தன்) ஆகியோரின் கவிதைத் தொகுப்புகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
பி.ஆர்.பெரியசாமி, ச.கீதப்பொன்கலம், ந.சரவணன், மல்லியப்புசந்தி திலகர், வரதன் கிருஷ்ணா, எம்.வாமதேவன், கந்தப்பளை தாமரை யு.யோகா ஆகியோரின் சமூக, அரசியல் நூல்களும் இம்மாநாட்டில் முக்கிய கவனம் பெறவிருக்கின்றன. சோ.சந்திரசேகரம் , மு.நித்தியானந்தன், பொன். பிரபாகரன் ஆகியோரின் ஆய்வுநூல்கள் மீதான விமர்சனங்களும் உள்ளன.
மைத்ரி ஜெகதீசனின் தேநீரும் புரிந்துணர்வும் (Tea and Solidarity), யோகேஸ்வரி விஜயபாலனின் முடிவில்லா சமத்துவமின்மை (Endless Inequality) ஆகிய இரு ஆங்கில ஆய்வு நூல்கள் மீதான விமர்சனங்களும் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளன. மெய்வெளி நாடக அரங்கிற்காக சாம் பிரதீபன் தயாரித்தளிக்கும் 'காத்தாயி காதை' என்ற நாடகம் இம்மாநாட்டில் அரங்கேறுகிறது.
முக்கிய நிகழ்வாக மு.நித்தியானந்தன், ஹெச்.ஹெச்.விக்ரமசிங்க தொகுத்து வழங்கும் சி.வி.வேலுப்பிள்ளையின் 'மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்' என்ற நூல் இம்மாநாட்டில் வெளியிடப்படவிருக்கிறது. பிரிட்டன், ஜெர்மனி, நோர்வே, டென்மார்க்,பிரான்சு ஆகிய நாடுகளிலிருந்து 25 உரைஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
விம்பம் அமைப்பின் சார்பில், ஓவியர் கே.கிருஷ்ணராஜா மலையக இலக்கிய மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பை மேற்கொள்கிறார்.
Hendry Wickramasinghe அவர்களின் முகநூல் பதிவிலிருந்து.நன்றியுடன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...