Headlines News :
முகப்பு » , , , , » விக்டோரியா பூங்காவின் 150 வருட வரலாறு (கொழும்பின் கதை – 26) - என்.சரவணன்

விக்டோரியா பூங்காவின் 150 வருட வரலாறு (கொழும்பின் கதை – 26) - என்.சரவணன்

கொழும்பு 7இல் பிரமாண்டமான கொழும்பு மாநகரசபைக் கட்டிடத்தின் முன்னால் அமைந்துள்ள அழகிய விகாரமகா தேவி பூங்கா; கொழும்பு நகரின் மிகவும் பெரிய பூங்கா. மிகப் பழமையான வரலாற்றையும் கொண்டது. சகல வயதினரும் வந்து அமர்ந்து, விளையாடி, ஆறுதல் பெறுவதற்கும், ஒன்று கூடுவதற்கும், இளைப்பாறுவதற்கும் பயன்பட்டு வருகிற இந்த பசுமைப் பூங்காவை தரிசிக்காத இலங்கையர்கள் குறைவென்றே கூறவேண்டும்.

இப்போது கறுவாத் தோட்டம் என்று அழைக்கப்படும் பகுதியும் விஹார மகாதேவி பூங்கா, கேம்பல் பூங்கா, காலிமுகத்திடலை அண்டிய பகுதிகள் எல்லாமே முன்னர் கறுவா பயிச்செய்கை நடந்த காடுகளாகத் தான் இருந்தன.

இலங்கையில் பூங்காவை முதன்முதலில் 1810 இல் ஆங்கிலேயர் அமைத்தபோது அதை ஸ்லேவ் ஐலன்ட், கொம்பனி வீதி பகுதியில் ஏழு ஏக்கர் நிலத்தில் “கியூ பூங்கா” என்கிற பெயரில் அமைத்தார்கள். அதன் அருகே செல்லும் வீதிக்கும் கியூ வீதி என்று பெயரிட்டார்கள். இன்று அந்த வீதியைக் காணலாம். ஆனால் அங்கே அப்படியொரு பூங்கா இன்றில்லை. அது ஒரு தாவரவியல் பூங்காவாக அப்போது இருந்தது. ஆனால் அப்பூங்காவை அங்கிருந்து அகற்றி களுத்துறையில் உக்கல்கொடவில் அமைத்தார்கள். பின்னர் அது பொருத்தமற்ற பகுதி என அறிந்ததும் இலங்கையில் அப்படியொரு பூங்காவை அமைக்க இடத்தைத் தேடினார்கள். அதன் விளைவாகத் தான் பேராதனையில் ரோயல் கார்டனில் மிகப் பெரிய பூங்காவை அமைத்தார்கள். பின்னர் தான் கொழும்பில் பூங்கா உருவாக்கப்பட்டது.


1865 ஆம் ஆண்டு கொழும்பில் 120 ஏக்கரில் தொடக்கப்பட்டது செர்கியூலர் பார்க் (Circular Park - வட்டப் பூங்கா). வட்ட வடிவில் அது அமைக்கப்பட்டிருந்ததால் அது ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் “வட்டப் பூங்கா” என்று அழைக்கப்பட்டது. 1887 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராணியின் பொன் விழா கொண்டாட்டங்கள் காலனித்துவ நாடுகளில் விமரிசையாக நடந்தன. அதை நினைவுகூரும் வகையில் விக்டோரியா பூங்கா என்று மறுபெயரிடப்பட்டது.

1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஆட்சியமைத்தபோது அதே ஆண்டு புத்த ஜயந்தி கொண்டாடப்பட்டது. அதனோடு இணைந்த பல சிங்கள பௌத்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் ஒரு அங்கமாக 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இலங்கையின் மகாவம்ச நாயகனான துட்டகைமுனுவின் தாயார் விஹார மகா தேவியின் நினைவாக விஹார மகாதேவி பூங்கா என்று பெயரை மாற்றவேண்டும் என்று விமாகரமகாதேவி நினைவேந்தல் குழு கோரிக்கை விடுத்தது. அதன் விளைவாக இப்பூங்காவின் பெயர் “விகாரமகாதேவி பூங்கா” என்று 1958 ஆம் ஆண்டு யூலை 18 ஆம் திகதி மாற்றப்பட்டது. ஆனாலும் இன்றும் பலர் “விக்டோரியா பார்க்” என்று அழைப்பதையும் நாம் காண முடியும். 

இந்த பூங்காவின் இன்னொரு எல்லையில் கொழும்பு நூதனசாலை, புதிய நகர மண்டபம், கலாபவனம், ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கம் மற்றும் மாநகர விளையாட்டுக் கழகம், இப்போதைய நெலும் பொக்குன மண்டப வளாகம் ஆகியவையும் இந்த வட்டத்துக்குள் அடங்கியுள்ளன. இவை எல்லாமே இந்தப் பூங்காவின் காநியாகத் தான் முன்னர் இருந்தது. இன்று நடுவில் அதன் குறுக்காக வீதி அமைத்து பூங்கா இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அப்படி குறுக்காக பிரிக்கப்பட்ட வீதியின் இன்றைய பெயர் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை. வட்டமாக அப்பகுதி அன்று இருந்ததற்கான ஆதாரத்தை வரைபடத்தின் உதவியுடன் இப்போதும் நீங்கள் காணலாம்.

பூங்காவின் இன்னொரு மூலையில் கொழும்பு பெரிய பொது நூலகமும், அதனருகில் உலகபோரின் நினைவிடமும் அமைந்துள்ளது.

1900 களின் முற்பகுதியில் விக்டோரியா பூங்கா, நூறு ஏக்கர் பரப்பளவில் புல்வெளிகள், தோட்டங்கள், பனைகள், மூங்கில் மரங்கள் பல வண்ண மலர்களைக் கொண்ட ஒரு பூங்காவாக இருந்தது. தாமரை மலர்களால் மூடப்பட்ட ஒரு குளமும் இருந்தது. கொழும்பின் மேற்தட்டு மக்களால் அப்போது அதிகம் பயன்படுத்தப்பட்ட இடம்.

ஆர்னோல்ட் ரைட் Twentieth century impressions of Ceylon (1907) இல் கூறுகிறார்: "விக்டோரியா பூங்கா என்பது 100 ஏக்கர் பரப்பளவில், நீள்வட்ட வடிவத்தில், திறந்த, பரந்த நிலையில், ஆனால் மரங்கள் தனியாகவும், தொகுதிகளாகவும் பரவிக் கிடைக்கின்றன. அதே நேரத்தில் அது கறுவா தோட்டம் என்று நெடுங்காலமாக அழைக்கப்படுகிற குடியிருப்புப் பகுதியால் சூழப்பட்டுள்ளது, இப்போது ஒரு சில கறுவாப்பட்டை புதர்கள் மட்டுமே அக்கம்பக்கத்தில் காணப்படுகின்றன... மேலும் இலங்கை விவசாய சங்கத்தின் வருடாந்த நிகழ்ச்சிகள் விக்டோரியா பூங்காவில், நூதனசாலையின் பின்புறத்தில் நடத்தப்பட்டு வருகின்றன."

விக்டோரியா பூங்காவைப் பற்றிய பல விபரங்களை எழுதிய பழைய முக்கிய நூல்களில் ஒன்றாக ஹென்றி கேவ் (Henry Cave) எழுதிய நூலைக் குறிப்பிடமுடியும். 

"விக்டோரியா பூங்கா என்று இப்போது அறியப்படும் பகுதியில் பனை மரங்கள் மற்றும் அத்திப்பழங்களின் நிழலில் அலைந்து திரியலாம், அல்லது மிகவும் வசீகரிக்கும் வகையிலான மலர்களாலும் வாசனை திரவியங்களாலும் சூழப்பட்ட அழகிய மூங்கில் குவியல்களுக்கு அடியில் ஓய்வெடுக்கலாம். மேலும் புத்துணர்ச்சியைத் தரும் அழகான மலர்கள், ஆர்க்கிட்கள், பிரகாசமான இலைகளைக் கொண்ட கலாடியம்களும், பிற வெப்பமண்டல தாவரங்களின் கூட்டமும் இங்கே எங்கும் செழித்து பெருகுகின்றன ".

1901 ஆம் ஆண்டின் இலங்கை நிர்வாக அறிக்கையின்படி இப்பூங்காவின் மரநடுகைகளுக்காக 3584 ரூபா செலவிடப்பட்டிருக்கிறது. அதே ஆண்டு அதன் நிலத்தை மேலும் விச்தீரப்படுத்துவதர்காக 329 ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. அன்றைய காலத்தில் இது ஒரு பெருந்தொகை. அப்படிப்பார்க்கையில் இப்பூங்காவின் இருப்புக்காக அரசு மிகக் கவனம் செலுத்தி வந்திருப்பதைக் உணர்ந்துகொள்ள முடியும்

1900களின் ஆரம்பம் வரை பொலிஸ் இசைக்குழு மாலை நேரங்களில் வட்டமாக இருந்து கருவிகளை இசைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இந்த இசைக் கச்சேரிகளைப் பற்றிய குறிப்புகள் பல நூல்களிலும் காணக் கிடைக்கின்றன, அதைக் கேட்பதற்காக அங்கே பலர் கூடுவார்கள். ஆனால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் அந்தப் பார்மபரியம் நின்று போனது. போர் நடவடிக்கை திணைக்களத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இப்பூங்கா இராணுவ முகமாக இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது.


இரண்டாம் உலகப் போரின் பின்னர் இலங்கையும் 1948இல் சுதந்திரமடைந்தது. ஆனாலும் இப்பூங்கா பொதுமக்களுக்காக திறக்கப்படவில்லை. சுதந்திர இலங்கையின் அப்போதைய கொழும்பு மாநரசபை மேயராக இருந்த எஸ்.செல்லமுத்து 1951 இல் மீண்டும் இதை புனருத்தாபனம் செய்து திருந்து வைத்தார்.  இப்பூங்காவின் இயக்கம் களைகட்டியது. அதன் பின்னர் பல சர்வதேச கண்காட்சிகள் கூட இங்கே நடத்தப்பட்டன.

முதலாம் உலகப் போரில் மாண்டவர்களுக்காக காலிமுகத்திடலில் எழுப்பப்பட்ட நினைவுத் தூபி அங்கிருந்து அகற்றப்பட்டு இப்பூங்காவின் மேற்கு மூலையில் நிறுவப்பட்டிருக்கிறது.

1920இல் வெளியான The handbook Colombo என்கிற நூல் இப்பூங்காவைப் பற்றிக் இப்படிக் குறிப்பிடுகிறது

"விக்டோரியா பூங்காவானது, இசைக்கும் பொழுதுபோக்குக்கும் பேர்பெற்றமையமாகும், இது கொழும்பிற்கு தெற்கே சிறிது தூரத்தில் உள்ளது. இசைக்குழு கச்சேரிகள், நடைபாதைகள், பெண்களுக்கான கோல்ஃப் திடல், டென்னிஸ் மைதானங்கள் என்பன இங்கே வரும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை வழங்குகின்றன. விக்டோரியா பூங்காவில் உள்ள ஈர்ப்புகளில் ஒன்றான கொழும்பு நூதனசாலை அரிய சேகரிப்புகளைக் கொண்டிருக்கிறது. ஆலமரம் பூங்காவில் உள்ள இயற்கையாக வசீகரிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஆலமரம் அத்தி மரத்தின் ஒரு இனமாகும்; அதன் கிளைகள் தொங்கி, மண்ணில் வேரூன்றி, ஒரு புதிய மரமாக வளர்கின்றன, இந்த செயல்முறை ஒற்றை மரம் ஒரு தோப்பாக மாறும் வரை பெருகிக்கொண்டே இருக்கும்".

உண்மையில், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆலமரம் அருங்காட்சியக வளாகத்தில் இன்றும் காணப்படும் மிகப் பெரிய மரமா என்று எண்ணத் தோன்றுகிறது.

விக்டோரியா பூங்கா கண்காட்சிகள் மற்றும் கண்காட்சிகளுக்கான இடமாகவும் செயல்பட்டது. இலங்கை மற்றும் கொழும்புக் கண்காட்சி, ஆளுநர் நாயகம் சோல்பரி பிரபுவினால் திறந்து வைக்கப்பட்டது.

1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மார்ச் மாதங்களில் பிரித்தானிய பொதுநலவாய நாடுகளின் வர்த்தகக் கண்காட்சி இங்கே தான் பெரும் திருவிழாவைப் போல நடத்தப்பட்டது. அதை அப்போதைய ஆளுநர் சோல்பரி பிரபு திறந்து வைத்தார்.

1980 களில் ஆங்காங்கு ஊஞ்சல்கள் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.  ஒரு உயரமான கோபுரம் போன்ற கான்கிரீட் பாய்மரம் இருந்தது. கான்கிரீட்டால் செய்யப்பட்ட ஒரு பிரம்மாண்டமான ஆமை இருந்தது, அதன் முதுகில் சிறுவர்கள் ஏறி விளையாடுவார்கள். மரத்தால் கட்டப்பட்ட ஒரு மர வீடு இருந்தது. ஒரு கயிற்றுப் பாலம் இருந்தது. இப்போது அதன் தோற்றம் வேறு வடிவம் பெற்றுவிட்டது. இப் பூங்காவில் உள்ள பெரிய மரங்களிலிருந்து தொங்கிக்கொண்டு இருக்கும் வவ்வால்களைக் காண முடியும். காதலர்கள் உல்லாசமாக சந்தித்துக் கொள்கின்ற பிரபலமான பூங்காவாக இது இருந்த காலமும் இருந்தது. அவர்களைக் கண்காணிக்கவே காவலர்களை கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்த காலமும் இருந்தது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து இயற்கைக் காற்றை ஆசுவாசமாக சுவாசித்து ஓய்வாக மரநிழலில் அமர்ந்து  சிற்றுண்டியும் கொறித்து இன்புற்றுச் செல்கிறார்கள்.

தர்மபால மாவத்தை அமைந்துள்ள பூங்காவின் மேற்குத்திசையில் “சத்துட்டு உயன” (மகிழ்ச்சிப் பூங்கா) என்கிற சிறுவர் பூங்கா நிரந்தரமான ஒன்றாக இயங்கி வருகிறது. 70 களில் இந்தப் பூங்காவுக்குள்  அழகான சிறிய விளையாட்டு இரயில் சேவை தொடக்கப்பட்டது. வர்ணங்களில் சிறிய அழகிய அந்த இரயிலில் பயணிப்பதற்கு பல சிறுவர்கள் ஆர்வம் கொள்வார்கள். இரண்டு தசாப்தங்களாக அது இயங்கியது.  இப்போது இயந்திரக் கார்களும் வேறு விளையாட்டுக்களும் அங்கே உள்ளன. குதிரைச் சவாரியும் செய்யலாம். பூங்காவின் உள்ளே ஒரு தண்ணீர்க் குளமும் உண்டு.

இப்பூங்காவின் பிரதான வாயிலில் காணப்படும் பெரிய புத்தர் சிலையானது கொழும்பு மாநகர சபையின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் போது அதன் நினைவாக அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் அது ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவவால் திறக்கப்பட்டது.

இலங்கையில் சிவில் யுத்தம் முடிந்ததும் கோத்தபாய ராஜபக்ஸ கொழும்பு நகர அபிவிருத்திச் சபையை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததும் இந்தப் பூங்காவை அந்த சபையின் அனுசரணையுடன் பல மாற்றங்களை செய்து மறு சீரமைத்தார்.


100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்த  அந்த பூங்கா இன்று 40 எக்கர்களுக்குள் சுருங்கிவிட்டாலும் இன்றும் அது பரபரப்பான கொழும்பில் பலராலும் அனுபவிக்கப்படும் ஒரு மகிழ்ச்சிப் பசுமைப் பூங்கா என்றே கூற வேண்டும். பல திரைப்படங்களின் பாடல் காட்சிகள் இங்கே ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. புகைப்படங்களை எடுப்பதற்கும் இங்கே வருபவர்கள் தொகை அதிகம். பல பள்ளிச் சிறுவர்களை நாடெங்கிலும் இருந்து அழைத்து வருவார்கள். ஒன்றரை நூற்றாண்டு பழமையை தாங்கி நிற்கும் பூங்கா அது.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates