குமார் ரூபசிங்க ஞாயிறன்று (20) கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் காலமாகிவிட்ட என்கிற செய்தியை அறிந்தேன். SWRD பண்டாரநாயக்கவின் மூத்த மகளான சுனேத்திராவை 1972 இல் மணந்து கொண்டார். சுனேத்திராவின் இளைய தங்கை சந்திரிகா குமாரணதுங்க, இளைய சகோதரன் அனுரா பண்டாரநாயக்க என்பதை நீங்கள் அறிவீர்கள். குமார் ரூபசிங்கவும் சுனேத்திராவும் சில ஆண்டுகளின் பின்னர் விவாகரத்தாகி வேறு திருமணம் செய்துகொண்டனர்.
ஒரு காலத்தில் குமார் தீவிரமான சமூக, அரசியல் செயற்பாட்டாளர்.
அவருக்கு பல தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். 1958 கலவரம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவரின் நெருங்கிய தமிழ் நண்பரும் குடும்பமும் அக்கலவரத்தில் கொல்லப்பட்டார்கள். தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக அவர் அப்போது நிறையவே பேச எழுதத் தொடங்கினார்.
1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட 20,000க்கும் அதிகமானோரின் விடுதலைக்காக போராடினார். இறுதியில் முக்கிய தலைவர்களைத் தலைவர்களைத் தவிர ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டதில் அவரின் பங்கு முக்கியமானது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அவர் இணைந்துகொன்டதன் பின்னர் அதன் “ஜனவேகய” (சிங்களம்), “ஜனவேகம்” (தமிழ்) பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். சிறிமாவின் காலத்தில் இலங்கை இளைஞர் சேவைகள் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதுமட்டுமன்றி யாழ் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திலும் அவரின் வகிபாகம் உண்டு.
1977 சுதந்திரக் கட்சியின் தோல்வியின் பின்னர் அவர் பேராதனைப் பல்கலைகழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றத் தொடங்கினார். இலங்கையின் முக்கிய புத்திஜீவிகளின் நிறுவனமான சமூக விஞ்ஞானிகள் சங்கத்தில் (SSA) இணைந்து பல ஆய்வுப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார்.
பின்னர் நோர்வே அவரை PRIO என்கிற சமாதான ஆய்வு நிறுவனத்தில் ஒரு ஆய்வாளராக பணிபுரிய அழைத்ததன் பேரில் 1982 இல் இருந்து நீண்ட காலம் நோர்வேயில் வசித்தார். நோர்வே சர்வேதேச ரீதியில் முன்னெடுத்த உள்நாட்டு சமாதான முயற்சிகள் பலவற்றில் ரூபசிங்கவும்
ஈடுப்படுத்தப்பட்டார். அதுபோல சர்வதேச அளவில் அவர் அறியப்பட்ட ஒரு சமாதான செயற்பாட்டாளராக பல நாடுகளுடனும், சர்வதேச நிறுவனங்களுடனும் இயங்கினார்.
1992 - 1998 காலப்பகுதியில் International Alert (IA) அமைப்பின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2002 இல் அரசு – புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டபோது அவர் இலங்கை வந்து சேர்ந்தார். இந்தக் காலப்பகுதியில் தேசிய போரெதிர்ப்பு முன்னணி (NAWF) என்கிற இயக்கத்தை ஏற்படுத்தி இயக்கினார். அதற்காக அவர் 203 மில்லியன் ரூபாய் நிதி உதவியைப் பெற்றிருந்தார்.
இந்த காலத்தில் சர்வதேச ரீதியில் அபிவிருத்திகளுக்கான உதவி வழங்கும் பிரதான நோர்வே அரச நிறுவனமான நோராட்டின் உதவியுடன் பல மில்லியன் உதவியைப் பெற்று “சகவாழ்வுக்கான நிலையம்” ("Foundation for Coexistence") என்கிற அமைப்பை நிறுவினார். 2004 – 2009 ஆம் ஆண்டுக்கிடையே அவர் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை (இலங்கைப் பெறுமதியில் சுமார் ஒரு பில்லியன் ரூபாய்) நோர்வேயிடம் இருந்து பெற்றுக்கொண்டார். சமாதான காலத்தில் பல பில்லியன்களை நோர்வே பல நிறுவனங்களுக்கும் நிதியாக வழங்கியது. குமார் ரூபசிங்க தான் அதிகமாக நிதி பெற்றவர். அவருக்கான தனிப்பட்ட சம்பளமாக அவர் மாதாந்தம் ஒரு மில்லியன் இலங்கை ரூபாய்களை பெற்றுக்கொண்டார். அந்த நிறுவனத்தில் 125 பேருக்கும் அதிகமாக பணியாற்றினார்கள். ராவய பத்திரிகை நிறுவனத்துடன் இணைந்து பல வெளியீடுகளையும் அவர் செய்தார். சமாதான முயற்சிகளோடு தொடர்புடைய பல வெளியீடுகளை ஆங்கில, சிங்கள, தமிழ் மொழிகளில் அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது.
ஆனால் அவர் நிதிக்கான திட்டங்களை உரியவகையில் நிறைவேற்றாததாலும், சரியான நிதியறிக்கைகள் காட்டப்படாததாலும் அதன் பின்னர் அந்த நிறுவனத்துக்கு வழங்குவதாக ஒத்துக்கொண்ட நிதியை நோர்வே வெளியுறவு அமைச்சு நிறுத்தி வைத்தது. அதற்கெதிராக குமார் ரூபசிங்க வழக்கு தொடர்ந்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.
நோர்வே ஊடகங்களிலும் இது பற்றிய செய்திகள் வெளிவந்தன. அவருக்கு இந்த விடயத்தில் ஆரம்பத்தில் ஆதரவு வழங்கிய எரிக் சுல்ஹைம், அன்றைய வெளியுறவு அமைச்சர் யொனாஸ் கார் ஸ்தூர (Jonas Gahr Støre) போன்றோரும் இந்த சர்ச்சையில் பேசுபொருளானார்கள். இப்போது யொனாஸ் நோர்வேயின் பிரதமர். பின்னர் “சகவாழ்வுக்கான நிலையம்” என்கிற அமைப்பு இழுத்து மூடப்பட்டுவிட்டது.
குமார் ரூபசிங்க பிற்காலத்தில் ஒரு பண ருசி கண்ட ஒரு என்.ஜீ.ஓ காரராகவே மாறிவிட்டார் என்கிற விமர்சனமே பரவலான அவர் மீதான விமர்சனமாக முன் வைக்கப்படுகிறது.
தோழர் சண்முகதாசனின் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியை பிற்காலத்தில் முன்னெடுத்துச் சென்றவர் அஜித் ரூபசிங்க. அவர் குமார் ரூபசிங்கவின் இளைய சகோதரர். குமார் ரூபசிங்கவின் வழிகாட்டலால் தான் அஜித் இடதுசாரி அரசியலுக்குள் நுழைந்ததாக பிற்காலத்தில் கூறிக்கொண்டார். அந்தளவு இடதுசாரித்தனமுடன் இருந்த குமார் ரூபசிங்க பிற்காலத்தில் இலங்கையில் பிரபல என்.ஜீ.ஓவால் பழுதடைந்த தலைவராக ஆக்கப்பட்டிருந்தார். அஜித் ரூபசிங்கவின் இறுதிக் காலமும் அப்படித்தான் ஆகியிருந்தது. இடதுசாரித் தலைவர்கள் பலரின் பெயர் பட்டியலை இப்படி தொகுக்கவும் முடியும்.
இப்படி குமார் ரூபசிங்க பற்றி ஏராளமான விபரங்களை விரிக்க முடியும் இது ஒரு சாதாரண அறிமுகம் மட்டுமே.
காலமான ஒருவர் பற்றி கொடுக்கக் கூடிய சிறிய அறிமுகம் இது மட்டுமே.
+ comments + 1 comments
Sinhala leaders were mostly not genuine! Selfish & corrupt with empty promises!
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...