Headlines News :
முகப்பு » , , , , » கே.குணரத்தினம் இலவசமாக அரசுக்கு கொடுத்த டவர் மண்டபம் (கொழும்பின் கதை - 14) - என்.சரவணன்

கே.குணரத்தினம் இலவசமாக அரசுக்கு கொடுத்த டவர் மண்டபம் (கொழும்பின் கதை - 14) - என்.சரவணன்

1880களில் கொழும்பின் பல்வேறு இடங்களில் நாடகங்களை அரங்கேற்றுவதற்காக பல தற்காலிக கொட்டகைகளும் கூடாரங்களும் உருவாகின. கொழும்பு மணற்பாதைகளில் குதிரை வண்டிகள் தான் ஓடிக்கொண்டிருந்தன. அந்தக் காலத்தில் நாடகம் மட்டுமே பொழுதுபோக்கிற்காக கொழும்பு மக்களுக்கு இருந்த ஒரே ஒலி - காட்சி ஊடகம் அவை.

அன்று தற்காலிக கொட்டகைகளும். பெவிலியன் தியேட்டர், பொது மண்டபம் (பப்ளிக் ஹோல்), சரஸ்வதி மண்டபம் போன்ற அரங்குகள் இருந்தன. இவற்றில், கொழும்பு கோட்டையில் உள்ள ராக்கெட் கோர்ட்டில் இருந்த பிளவர் மண்டபம் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் 1886ல் அதுவும் தீயில் அழிந்து போனது. அது நாடகத் துறைக்கும் ஒரு இழப்பாக கருதப்பட்டது.

பழைய நாடகக் கொட்டகை

1888களில் ஓடு வேயப்பட்ட கட்டிடத்துடன் கூடிய புதிய மண்டபம் கட்டப்பட்டு வந்தது. பாஸ்டியனின் நடன நிறுவனத்தின் முகாமையாளர் சைமன் சில்வா இதற்கான முயற்சியை எடுத்திருந்தார். ஆனால் புதிதாக கட்டப்பட்ட மண்டபமும் தற்காலிக கட்டிடமாகவே இருந்தது. இப்பன்வல சந்திக்கு அருகில் மிகவும் வசதியான, முழுமையான பொது மண்டபம் (பின்னர் எம்பயர் மண்டபம்) கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. அதுவும் சிறிது காலத்தில் இடிந்து விழுந்தது. 1900 அளவில் புறக்கோட்டை மல்வத்தை வீதியில் நியூ ஸ்போர்ட்ஸ் போர்ட் ஹோல் என்ற தற்காலிக அரங்கமும் இயங்கி வந்தது.

முதன்முதலில் இவ்வாறு நாடகங்களைக் காண்பித்த இடமாக புறக்கோட்டை தான் திகழ்ந்தது. பின்னர் புறக்கோட்டையிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த மருதானை நாடகங்களை காண்பிக்கும் பிரபலமான இடமாக மாறியது. புறக்கோட்டையைச் சேர்ந்தவர்களும் நள்ளிரவில் நாடகம் பார்க்க மருதானைக்கு வந்தார்கள். “மரதான ப்ரீதி நத்தல் நாட்டிய கந்தாயம”, மருதானை போபஸ் வீதியில் (இப்போது தேவனம்பியாதிஸ்ஸ மாவத்தை) ஓரியண்டல் தியட்டர் நிறுவனம் போன்ற நாடகக் கம்பனிகள் அப்போது பிரபலமாக இயங்கின.

1908 இல் சிங்கள நாடகக் கம்பனி மருதானையில் ஆரம்பமானது. ஜேம்ஸ் பெரேரா என்கிற பிரபல வர்த்தகர் தான் அதன் தலைவர். அவர் முதன் முதலில் 1906 ஆம் ஆண்டு புதிய மண்டபம் ஒன்றில் முதலில் நாடகத்தை மேடையேற்றினார். பிற்காலத்தில் அந்த இடத்தில் தான் இன்றைய எல்பின்ஸ்டன் மண்டபம் நிறுவப்பட்டது.

ஹெந்திரிக் செனவிரத்ன

சண்டை சவாலால் உருவான டவர் மண்டபம்

மருதானையில் யூனியன் பெசேஞ்ஜர் ஹோட்டல் உரிமையாளர் கனேகொட அப்புஹாமிலாகே ஹெந்திரிக் செனவிரத்ன. ஒரு நாள் அவருடைய மகன் எட்மண்ட் புறக்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டருக்கு நாடகம் பார்க்கச் சென்றபோது வம்புச் சண்டையில் அகப்பட்டார். அப்போது மருதானைக் குழுவினர் புறக்கோட்டை கும்பலால் அடிவாங்கி வரவேண்டி ஏற்பட்டது. இந்தக் களங்கத்திலிருந்து விடுபட எட்மண்ட் ஒரு விசித்திரமான யோசனை தென்பட்டது. அதாவது அவரது குடும்பத்தினர் தலைமையில் ஒரு திரையரங்கை கட்டுவது. அதுவே மற்ற திரையரங்குகளை முறியடிக்கும் என்ற எண்ணம் அவருக்கு உருவானது. எட்மண்ட் இந்த யோசனையை தனது தந்தை ஹெந்திரிக்கிடம் தன் யோசனையைச் சொன்னார். மற்ற குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் மருதானையில் நிரந்தர திரையரங்கம் அமைக்கும் திட்டத்தை ஹெந்திரிக் ஏற்றுக்கொண்டார். இப்படித்தான் இலங்கையின் முதலாவது நிரந்தர நாடக சபை மண்டபமான டவர் மண்டபம் கட்டப்பட்டது. 

ஹெந்திரிக் முதலாளி 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி பஞ்சிகாவத்தை வீதியில் குதிரைத் தொழுவத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியை 2000 ரூபாவுக்கு வாங்கினார். அந்த 68 பேர்ச்சஸ் காணி 'மெரக்ஞகே வத்த' என அழைக்கப்பட்டது. 'மெரக்ஞகே வத்த' குதிரை வண்டிகளுக்கான தொழுவமாக அப்போது பயன்படுத்தப்பட்டது வந்தது.

இந்த காலப்பகுதியில் பிரபலமடைந்திருந்த குதிரைப் பந்தயங்களுக்காக; தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகளை பராமரிக்கும் பாரிய லாயமாக நடத்துவதன் மூலம் வணிக ரீதியில் இலாபம் சம்பாதிக்கலாம் என்பதே அவரின் ஆரம்ப எண்ணமாக இருந்தது.

ஜோன் த சில்வா தலைமையிலான நாடகக் குழுவுக்கு மிகப் பிரபலமான வரவேற்பு அப்போது வளர்ச்சியுற்று வந்தது. நாடகம் நாட்டியம் என்பவற்றுக்கான ஜனரஞ்சக எதிர்பார்ப்பும், தேவையும் இருந்ததாலும் அவற்றுக்கான அரங்கங்களின் பற்றாக்குறை இருந்ததால் அதற்கான முயற்சியும் கூட வணிக ரீதியில் இலாபம் தரத்தக்கதே என்பதை அவர் உணர்ந்தார். இறுதியில் இந்த நிலத்தில் ஒரு தேசிய திரையரங்கத்தைக் கட்டுவதென முடிவானது.

இந்தக் காலப்பகுதியில் பௌத்த மறுமலர்ச்சி கால கட்டத்திலிருந்து இலங்கைக்கான சுதேசியத்தைக் கோருகிற இயக்கங்கள் வீரியமாக எழுச்சியடைந்த காலம். மதுவொழிப்பு இயக்கம் இதில் முக்கியமான அங்கத்தை வகித்தது. சுதேசிய பண்பாட்டை வலியுறுத்தும் பல முயற்சிகளை அப்போதைய இலங்கைத் தலைவர்கள் முன்னெடுக்கத் தொடங்கிய காலகட்டம்.

டவர் திரையரங்கை திறந்து வைக்கும் நிகழ்வு சம்பிரதாய முறைப்படி இடம்பெற்றதுடன் அக்கால சுதேசிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சம்பிரதாயபூர்வமாக காலை ஏழு மணிக்கு திறந்துவைத்தவர் அனகாரிக தர்மபால. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அன்றைய கொழும்பு மாநகரசபையின் மேயர் கே.வீ.பீ.மெக்லியட் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் டீ.எஸ்.சேனநாயக்க, எப். ஆர். சேனநாயக்க, சேர்.பொன்னம்பலம் இராமநாதன், டி. பி. ஜயதிலக, வலிசிங்க ஹரிச்சந்திர, பியதாச சிறிசேன, சட்டத்தரணி ஜோன் த சில்வா போன்ற அன்றைய பிரபல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அநகாரிக தர்மபால அதனை திறந்துவைத்து ஆற்றிய உரையில் இப்படிக் குறிப்பிட்டார்.

"நாடகத்துறையை வெறும் பொழுதுபோக்கிற்காக அர்ப்பணிக்கக் கூடாது. இங்கே நடத்தப்போகிற நாடகங்கள் சிங்கள தேசத்தையும் புத்த சாசனத்தையும் புத்துயிர் பெறச் செய்யும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்." என்றார்.

அன்றைய முதல் நாடகம் இரவு 9.30 க்கு ஏற்பாடாகியிருந்தது. 9.30க்கு ஆளுநர் ஹென்றி மெக்கலம்; மகாமுதலி சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுடன் (SWRD பண்டாரநாயக்கவின் தந்தை) வந்திருந்தார்.

மண்டபம் ஒன்றரை ஆண்டுகளில் கட்டப்பட்டது. டிசம்பர்  16, 1911 இல் திறக்கப்பட்டதும் சார்ல்ஸ் டயஸின் "பாண்டுகாபயா" என்கிற நாடகம் முதலில் அரங்கேற்றப்பட்டது. ஹெந்திரிக்கின் மகளை விவாகம் செய்த வழக்கறிஞர் தான் சார்ல்ஸ் டயஸ். அவரின் முதல் நாடகம் தான் “பாண்டுகபாய”. இந்த நாடகத்துக்கான உடைகள் அனைத்தும் பம்பாயில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

“பாண்டுகாபாய” நாடகமானது “நூர்த்தி” என்கிற சிங்கள நாடக வடிவத்தில் தான் நிகழ்த்தப்பட்டது. சிங்கள நாடகக் கலையைப் பொறுத்தளவில் மூன்று விதமான பிரதான நாடக வகைகளைக் கொண்டியங்கி வளர்ச்சியுற்று வந்திருக்கிறது. “நாடகம்”, “நூர்த்தி”, “நவநாடகம்” என்று அம்மூன்றையும் வகைப்படுத்தலாம். நூர்த்தி என்பது இந்தியாவில் பம்பாயில் இருந்து 1800 களில் எல்.வின்ஸ்டன் டிராமடிக் கொம்பனியால் பலிவாளா நூர்த்தி குழுவினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நாடக வடிவம். அது இலங்கையில் சிங்களச் சூழலில் வெகுவாக பரவி அவர்களைப் போலவே  ஹிந்துஸ்தானி ராக, தாள வடிவங்களை சிங்கள நாடகங்களில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இதில் பிரதான தாள வாத்தியமாக தபேலா பயன்படுத்தப்பட்டது. இந்த நாடக வடிவத்தை அதிகம் பின்னர் பரப்பியவர் பிரபல நாடக கர்த்தாவாக போற்றப்படும் ஜோன் த சில்வா. இலங்கையின் நூர்த்தி நாடக வடிவம் பற்றி பல ஆய்வுகளும் உள்ளன. நுண்கலைத்துறை கற்கையில் அது ஒரு விரிவான பாடம்.

சார்ல்ஸ் டயஸ்

மேற்படி டவர் மண்டபத் திறப்பின் பின் டவர் மண்டபம் இலங்கையின் நாடகம் மற்றும் நாடகக் கலை வரலாற்றில் ஒரு தனித்துவமான மையமாக மாறியது.

லண்டன் கோபுரத்தை (Tower of London) மாதிரியாகக் கொண்ட மூன்று முகங்களைக் கொண்ட கடிகாரக் கோபுரத்தின் மாதிரியில் தான் அது கட்டப்பட்டது. பெயரும் கூட அதனை முன்மாதிரியாகக் கொண்டு “டவர் ஹோல்”  பெயரிடப்பட்டது. பம்பாயிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறப்புத் திரையையும், நவீன மேடை உபகரணங்களுடன் கூடிய டவர் தியேட்டரை 1,500 பார்வையாளர்கள் வரை அனுபவிக்கக் கூடிய விதத்தில் அது கட்டி முடிக்கப்பட்டிருந்தது. முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட “பாண்டுகாபய” நாடகம் இலங்கை நாடகக் கலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும் திகழ்கிறது. அன்றைய பாரம்பரிய மரபுகளைத் தாண்டி, சாதாரண கிராமத்து வாழ்க்கையை வியத்தகு முறையில் உள்ளடக்கிய நாடகம் அது.


டவர் மண்டபம் ஒரு தேசிய நாடக அரங்காக நிறுவப்பட்ட நேரத்தில், அது சுமார் 120 நிரந்தர கலைஞர்களைக் கொண்டிருந்தது. டவர் மண்டபம் நினைவு மலரொன்றின் பிரகாரம், டவர் மண்டபத்தின் சிரேஷ்ட நாடக கலைஞர் ஒருவரின் மாதாந்த சம்பளம் 400 ரூபா வரை உயர்ந்த சம்பளமாக இருந்திருக்கிறது. அவர்களின் நாளாந்தப் பணிகள் இவ்வாறு இருந்திருக்கிறது. காலை 9.00 மணி முதல் 12.30 மணி வரை பயிற்சி, மதியம் 12.30 மணி முதல் 4.20 மணி வரை ஓய்வு, மாலை 4.30 மணிக்கு நாடகத்திற்கான ஆடைகளை அணிந்து அரிதாரம் பூசி தயாராதல், மாலை 6.30 மணிக்கு முதல் நாடகம், இரவு 10.30 மணிக்கு இரண்டாவது திரையிடல் என இருந்திருக்கிறது.

டவர் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் “தேவனாம்பியதிஸ்ஸ” நாடகத்தில் உயிருள்ள மான் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறயது. பின்னர் மான் இறந்த போது அதனை மதச் சடங்குகளுடன் கூடிய இறுதி சடங்கு நடத்தப்பட்டதாகவும் அறியக் கிடைக்கிறது. 1915 இல் சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் போது டவர் மண்டப உரிமையாளரும், முக்கிய நாடக ஆசிரியர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம், அக்கால நாடகங்களில் பெரும்பாலானவை தேசாபிமானத்தை தூண்டுகிற நாடகங்கள் என்றும் அவை சிங்களவர்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டின என்றும் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டது. ஜோன் ஆண்டர்சன் ஆளுநராக வந்ததன் பின்னர் 1916 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டவர் மண்டபத்தின் உரிமையாளர்களை விடுவித்ததுடன், டவர் மண்டபம் உள்ளிட்ட மற்ற திரையரங்குகளின் மீது இருந்த தடையை விலக்கி அவற்றை மீண்டும் திறக்க அனுமதித்தார். 1930 இல், தியேட்டர் வெள்ளத்தில் மூழ்கியது.

டவர் மண்டபத்தின் நாடக ஆசிரியர்கள் ஒவ்வொரு பிரதியையும் மனப்பாடம் செய்து ஒவ்வொரு பாடலையும் மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. இதன் விளைவாக, நாட்டின் முதல் தொழில்முறை நாடகக் குழு உருவானதுடன் டவர் மண்டபத்து சுற்றுலா நாடகக் குழு உருவானது. இக்குழுக்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று நாடகங்களை நிகழ்த்தினார்கள்.

ஹெந்திரிக் முதலாளியின் மரணத்தின் பின்னர் அவரின் பிள்ளைகளின் சொத்துச் சண்டைகளால் டவர் மண்டபத்தின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து போனது. இதே காலப் பகுதியில் இலங்கையில் மெளனப்படம் (Silent Film) களத்துக்கு வந்து சேர்ந்தது. இது நாடகத்துறையை மெதுமெதுவாக அரித்து விழுங்கியது. இதன் பின்னர் இலங்கைக்குள் பிரவேசித்த சினிமாத்துறையில் சினிமா நடிகர்களாக ஆனவர்கள் பலர் டவர் மண்டப நாடக சபையில் இருந்து தான் வந்திருந்தார்கள். சிங்கள சினிமாவின் முதலாவது கதாநாயகியான ருக்மணி தேவியும் இந்த நாடகக் கம்பனியில் இருந்து வந்தவர் தான்.

ருக்மணி தேவி  நாடகக் குழுவுடன்

செப்டம்பர் 12, 1931 இல் "சைரன் ஆஃப் பாக்தாத்" (Baghdad Nu Bulbul என்கிற தலைப்பு ஆங்கிலத்தில் Siren of Bagdad) திரைப்படம் வெளியானவுடன், அதுவரை தேசிய நாடக மையமாக இருந்த டவர் மண்டபம்; சினிமா தியேட்டராகவும் வடிவமெடுத்தது. தமது தொழிலை இழந்த நாடகக் கலைஞர்கள் அன்றைய தொழிற்சங்கத் தலைவரான ஏ.ஈ.குனசிங்கவை அணுகி சட்ட உதவி கோரினர். அதன் பிரகாரம் வெள்ளிக் கிழமைகளில் நாடகங்களுக்கு பயன்படுத்துவது என்கிற சமரசத்துக்கு வந்தனர்.

இந்த காலகட்டத்தில் திரைப்படத் திரையிடல்களின் காரணமாக நாடகத்துறை கடும் சவால்களை எதிர்கொண்டது. டவர் மண்டபத்தில் நாடகங்கள் சனிக்கிழமைகளில் மட்டுமே காட்டப்பட்டன. ஆனால் டவர் திரையரங்கம் அதற்குமுன் ஒரு நாடக அரங்கமாகவே இலங்கை பார்வையாளர்களுக்கு நெருக்கமாக இருந்தது. ஒரு சினிமாவாக தியேட்டராக அல்ல. 1935 முதல் 1955 வரை, நாட்டின் பெரிய நாடகக் கலைஞர்களை உருவாக்கி வெளிக்கொணர்ந்ததில் டவர் மண்டப கலைப் பண்பாட்டு முயற்சிகள் தான் காரணமாக இருந்தன. 1927 ஆண்டளவில் கொழும்பில் இயங்கி வந்த ஒரேயொரு நாடக மண்டபம் டவர் தியேட்டர் மட்டும் தான்.

டவர் ஹால் தியேட்டர் 1941 இல் இரண்டாம் உலகப் போரின் நெருக்கடிகள் காரணமாக மூடப்பட்டது. மீண்டும் 1947 ஏப்ரலில் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனம் டவர் மண்டபத்தை 125,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்தது. அதன் பின்னர் சிலோன் தியட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான எம்.செல்லமுத்துவும், சினிமா கம்பனி லிமிட்டட் உரிமையாளர் கே.குனரத்தினத்துடன் இணைந்து டவர் மண்டபத்தை சினிமா தியேட்டராக இயக்குவதற்காக “சினிமா டோக்கீஸ்” என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.   டவர் மண்டபத்தை அரச உடமையாக்கி பழையபடி நாடகங்களை நிகழ்த்தும் மண்டபமாக ஆக்கும்படி 1965 – 1970 காலப்பகுதியில் அன்றைய டட்லி அரசாங்கத்துக்கு டவர் நாடகக் கலைஞர்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்தக் காலப்பகுதியில் டவர் நாடக சபையின் கலைஞர்கள் மிகுந்த வாழ்க்கை நெருக்கடியை அனுபவித்தார்கள். சரளா பாய் என்கிற பெண் கலைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுசிலா ஜயசிங்க தனது வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு அதன் சமையலறையில் வாழ்க்கை நடத்தினார். ஏனையோரின் நிலையும் இது தான்.

சினிமாஸ் நிறுவனத்துக்காக 1968 ஆம் ஆண்டு தயாரித்த திரைப்படமான “அட்டவெனி புதுமைய” ('எட்டாவது அதிசயம்') என்கிற திரைப்படம்  கே.குணரத்னத்தின் தயாரிப்பில் எம்.மஸ்தான் இயக்கிஇருந்தார். அன்றைய முதல் காட்சி தொடக்கவிழாவில் எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் அன்றைய திரைப்பட ஜாம்பவான்களாக இருந்த எண்டன் கிரகெரி, அன்றூ ஜயமான்ன, எம்.மஸ்தான், கே.குணரத்தினம், வீ,வாமதேவன், பீ.கே.பாண்டியன் ஆகியோர் காணப்படுகின்றனர்.

1970 களில் சுதேசியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பலவற்றை தேசியமயமாக்கிய சிறிமா அரசாங்கமும் டவர் மண்டபத்தை அரசுடமையாக்க முடியவில்லை. டவர் ஹால் தியேட்டர் மார்ச் 16, 1973 இல் “பயாஸ்கோப்” சினிமாவாகவே மாறியது. 1977 இல் பிரேமதாச பிரதமராக பதவியேற்றதும் 1978 இல் டவர் மண்டபத்தை இலவசமாக அரசுக்கு அளித்தார் அதன் உரிமையாளர் கே.குணரத்தினம். அரசு அதனை அரசுடைமையாக பொறுப்பேற்றுக்கொண்டது. இலங்கையின் சிங்கள சினிமாத் துறைக்கும், கலைத்துறைக்கும் பெரும் அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் செய்த கே.குணரத்தினம் 09.08.1989 அன்று அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

டவர் மண்டப கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கியதுடன் மாளிகாவத்தையில் அமைத்த தொடர்மாடிக் குடியிருப்புகளில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. அவர்களின் நிகழ்சிகளுக்கு வாய்ப்புகளை வழங்கி கொடுப்பனவுகளுக்கான வழிவகைகளை ஏற்படுத்தினார். அவர் 1978 இல் ஏற்படுத்திய டவர் ஹோல் மண்டப அறக்கட்டளையின் (Tower Hall Theatre Foundation) கீழ் பல பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மருதானை எல்பின்ஸ்டன் மண்டபமும் அதன் ஒரு அங்கமாகத் தான் பிரேமதாசாவால் தொடக்கப்பட்டது. இன்றும் தமிழ், சிங்கள மொழிகளில் நாடக, அரங்கியல் கற்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த உண்மைகளை கனகிற் எடுக்கும்போது பல சுவாரஷ்யமான வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் டவர் மண்டபம் நாட்டு மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அங்கமாகத் திகழ்கிறது.

நன்றி - தினகரன் - 06.02.2022Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates