- இது தான் 2500வது சம் புத்த ஜயந்தி கண்ட புனித ஆண்டு!
- திருப்பூர் குமரன் தீரபரம்பரையிலே..
- திருமலை தந்த தியாகி நடராஜன் துப்பாக்கிகுண்டுக்கு விழியைப் பலியாக்கி மொழியைக் காக்க முன்வந்த முதியவர்
உயிர் ஈந்து, செங்குருதி வழிந்தோட திருகோணமலையில் துக்கதின அனுஷ்டானம்
இந்திய சுதந்திரப் போராட்டத்திலே பொலிஸாரின் குண்டாந்தடிப் பிரயோகம் மண்டையைப் பிளக்க, தியாகத்தின் பிரவாகமாக பச்சை இரத்தம் பீறிட்டு வழிந்தோட, இறுதி மூச்சுவரை சாத்வீகப் போராடி உயிர் நீத்து மூவர்ணக் கொடியின் புனிதத்தைப் பாதுகாத்தான் தீரன் திருப் பூர்க் குமரன்.
அந்த வீர பரம்பரையிலே திருமலை ஒரு தியாகி நடராஜனைத் தந்துவிட்டது. எந்த இன எழுச்சியிலும் முன்னணி வகிக்கும் திரு மலைக்கு இது தீராப் பெரும் புகழைத் தேடித் தந்து விட்டது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே, அன்னைத் தமிழ் மொழியின் உரிமை காக்க அறப்போரிட்டு ஆருயிரை ஈந்தார்கள். தாளமுத்து தடராஜன் என்ற திராவிட வீரர்கள். அந்த வீரர்களுக்கு ஈடும் எடுப்புமான ஒரு ஜோடி நடராஜன், திருமலையில் தியாகக் கோபுரத்தின் உச்சிக்கே உயர்ந்து விட்டான்.
முது பெரும் கிழவர் ஒருவர் தன் விழியைத் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகக் கொடுத்து மொழியைக் காப்பதில் தன் கடமையைப் புரிந்துவிட்டார். இன்னும் எத்தனையோ இளைஞர்கள் இரத்தம் சிந்தி இன உரிமைப் போருக்கு இளைத்தவர் அல்ல நாம் என்பதை நிருபித்து விட்டார்கள் இவ்வாரம் தமிழ் பேசும் மக்கள் அனுஷ்டித்த துக்க தினத்திலே.
உயிரிழந்த நடராஜனைத் தேசியத் தியாகியாக வைத்து வணங்குவோம். அவன் நாமத்தைத் தமிழரசின் சரித்திரத்தில் பொன் எழுத்தில் பொறிப்போம். இரத்தம் சிந்தியவர்களை தேசிய வீரர்களாகக் கொணடாடுவோம்.
தமிழ் பேசும் மக்களின் தியாக வரலாறு கொழும்பு சத்தியாக்கிரகத்தையும், கல்லோயா கலவரத்தையும் தொடர்ந்து திருமலையிலும் வளர்ந்து வருகிறது. வளரட்டும், வளரட்டும் இந்த தியாகத் தீயிலே அக்கிரமக்காரர்கள் பொசுங்கும் புண்ணிய தினம் அதிக தூரத்திலில்லை.
-ஆசிரியர்
திருகோணமலையிலுள்ள தமிழ்ப் பேசும் மக்கள் பெப்ரவரி 4-ந் திகதி சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்தார்கள். அங்கு வாழும் சிங்கள மக்கள் சுதந்திர தினத்தைக்கொண்டாட விரும்பினார்கள் எனவே இருசாராருக்கும் தகராறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாகாண அதிபர் திரு மக்கேஷருக்கும் பொலிசாருக்கும் ஏற்பட்டது.
சமரச முடிவு
அரசாங்க ஏஜண்ட் திரு மக்கேஷர் 3- திகதி ஞாயிற்றுக்கிழமை ஒரு மகாநாடு கூட்டி தமிழ் மக்கள் துக்கம் அனுஷ்டிக்கவும் சிங்கள மக்கள் சுதந்திரதினம் கொண் டாடவும் எப்படி வசதி செய்யலாம் என்றும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் பிரகாரம் காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை தமிழ்ப்பேசும் மக்கள் துக்கதின ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென்றும் பிற்பகல் 2மணிமுதல் மாலை 6 மணிவரை சிங்கள மக்கள் சுதந்திர தினத்தைக் கொண் டாடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. தமிழர்கள் தங்கள் இல்லங்களிலும் ஸ்தாபனங்களிலும் கறுப்புக் கொடி உயர்த்துவதென்றும் சிங்களவர்கள் தங்கள் தங்கள் இடங்களில் சிங்கக் கொடி உயர்த்துவதென்றும் ஒருவரையொருவர் எந்த வகையிலும் நிர்ப்பந்திப்பதில்லையென்றும் முடிவு செய்யப்பட்டது
மார்க்கட் விவகாரம்
ஆனால் திருமலை மார்க்கட்டைப் பற்றி ஒரு பிரச்னை கிளம்பிற்று திருமலை மார்க்கட் நகரசபைக்குச் சொந்தமான கட்டடமாகும். திருமலை நகரசபைக் கட்டடத்திலும் அதற்கு சொந்தமான இடங்களிலும் கறுப்புக்கொடி உயர்த்துவதென முடிவு செய்திருந்தது. இதன் படி மார்க்கட்டிலும் கறுப்புக்கொடி உயர்த்த நகர சபைக்கு உரிமையுண்டு. ஆயினும் மார்க்கட் முழுவதிலும் சிங்கள வியாபாரிகளே இடம் பிடித்திருந்ததால் அங்கு கறுப்புக்கொடி ஏற்றுவது அவர்களைப் புண்படுத்தும் என்று வாதிக்கப்பட்டது. முடிவில் மார்க்கட் கட்டடத்தில் சிங்கக்கொடியும் ஏற்றக் கூடாது கறுத்தக் கொடியும் ஏற்றுவதில்லை, அதை ஒரு பொது இடமாகப்பாவிக்க வேண்டும் என்று சுமுகமான முடிவு செய்யப்பட்டது. இந்த அளவிற்கு திருமலையில் வாழும் தமிழ்ப்பேசும் மக்களும், நகர சபையினரும் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தனர். மரக்கறி மார்க்கட்டிலும் மீன் விற்பனவுச்சந்தையிலும் எந்தவிதமான கொடியும் ஏற்றுவதில்லையென்ற முடிவை தமிழரும் சிங்களவரும் ஒப்புகொண்டிருந்தனர்.
ஊர்வலம்
4-ம் திகதிகாயில் பல்லாயிக்கணக்கான தமிழ்ப் பேசும் மக்கள் கருப்புக் கொடிகளப் பிடித்துக் கொண்டும், கறுப்பு சின்னங்களை அணிந்து கொண்டும் மடத்தடிச் சந்தியிலிருந்து நகரசபை காரியாலயத்தை நாடி அமைதியுடன் ஊர்வலமாகச் சென்றனர். இவ்வூர் வலத்தை திருமலைப் ப்பிரதிநிதி திரு என், ஆர். இராஜவரோதயம், ஊர்காவற்றுறைப் பிரதிநிதி திரு வி. ஏ. கந்தை யா, கப்டன் ஏ, ஸி கனகசிங்கம், புரக்டர் துரைநாயகம் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
ஊர்வலம் நகர சபைக்காரியாலயத்தை அடைந்ததும் நகரசபைத் தலைவர் திரு த. ஏகாம்பரம் அங்கு ஒரு கறுப்புக் கொடியை ஏற்றிவைத்து உணர்ச்சிகரமான ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். பின்னர் மக்கள் திரளாகச் சென்று மணிக்கூண்டுக் கோபுரத்தின் மீதும் கறுப்புக்கொடி உயர்த்தினர்.
இதைத் தொடர்ந்து திருமலை காலி கோயில் முன்றிலில் ஒரு பிரமாண்டமான பொதுக் கூட்டம் நடை பெற்றது. அக்கூட்டத்தில் திரு. இராஜவரோதயம் தலைமை தாங்கி சுமார் மூன்று நிமிடங்கள் பேசியிருக்கலாம். அப்போது கூட்டத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. வீர இளைஞர்கள் மரக்கறி மீன் மார்க்கட்டுகளை நாடி ஓட்டம் பிடித்தனர். என்ன காரணம் என்று பார்த்த போது, கண்ணியமாகச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறி வெறி பிடித்த சிங்களவர் சிலர் மீன் சந்தையிலும், மரக்கறி சந்தையிலும், தனிச்சிங்கக் கொடிகளை ஏற்றிவைத்து விட்டனர் என்று தெரிய வந்தது.
பொலீஸ் இராணுவம்
உடனே தலைவர்களும் அந்த இடத்திக்குச் சென்றனர் மாகாண அதிபருக்கும், டிஸ்ரிக் நீதிபதிக்கும், பொலீஸுக்கும் டெலிபோன் செய்யப்பட்டது அவரும் அங்கு வந்து சேர்ந்தனர். இராணுவமும் பொலிஸ்படையும் கூட துப்பாக்கிகள் சகிதம் அங்கு வந்து வட்டமிட்டு அணிவகுத்து நின்றன.
முடிவை மீறுவதா
மாகாண அதிபர் மக்கேஷரும் தலைவர்களும் மார்க்கட் கட்டடங்களிலிருந்து சிங்கக் கொடிகள் இறக்கி சமாதானத்தைக் காக்குமாறு அன்பாக வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் சிங்களவர்கள் முரட்டுத்தனமாக மணிக்கூண்டுக் கோபுரத்தின் மீது உயர்த்திய கறுப்புக் கொடியை இறக்க வேண்டும் என்று அடம் பிடித்தனர். அவர்கள் கோரிக்கை நியாயமற் றது என்றும் மணிக்கூண்டுக் கோபுரம் நகரசபையின் உடைமை என்றும் முதல் நாள் மகாநாட்டில் மார்க்கட் மட்டுமே பொது இடமாக ஒப்பு கொள்ளப்பட்டதென்றும், மணிக்கூண்டுக் கோபுரம் பொது இடமாகாது என்றும் வாதிக்கப்பட்டது.
தமிழ் பேசும் மக்கள் அந்த இடத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டார்கள். சிங்களவர்கள் எல்லோரும் கூட்டமாகத் திரண்டு இரு மார்க்கட தலைவாசல்களையும் அடைத்துக் கொண்டு நின்றார்கள்.
துப்பாக்கி முழங்கிற்று
இந்த நேரத்தில் டும், டும் என்று இரு வெடியோசைகள் கிளம்பின. எங்கோ பட்டாஸ் கொளுத்தப்படுகிறதென்று ஆரம்பத்தில் மக்கள் எண்ணினார்கள், ஆனால் அந்தோ பரிதாபம்! கூட்டத்தில் கூக்குரல் கிளம்பிற்று நடராஜா என்ற இளைஞரின் மார்பில் துண்டு பாய்ந்ததில் அவர் பதறிக் கதறிக் கொண்டு அடி சாய்ந்தார் துடிக்கத் துடிக்க அவர் உயிர் பறந்தது. திரு.வ.நடராஜா என்ற மற்றொரு இளைஞர் படுகாயப்பட்டார். ஒரு முதியவரின் கண்களிலினூடாக குண்டு பாய்ந்து விட்டது. இன்னொரு இளைஞருக்கு நெற்றியில் காயம்பட்டது. மற்றும் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டன. ஜன சமுத்திரம் அல்லோல கல்லோலப்பட்டது. எங்கும் குழப்பம். எங்கும் கலவரம், எங்கும் பயங்கர தத்தளிப்பு நிலவியது.
கூட்டத்தை களைந்து போகுமாறு டிஸ்ட்ரிக் நீதிபதி திரு. கந்தசாமி கட்டளையிட்டார். கூட்டம் கலைந்தது துப்பாக்கியினால் தாக்குண்டவர்கள் ஆஸ்பத்திரி நோக்கி விரைந்தெடுத்துச் செல்லப்பட்டனர்.
சிங்களக் கோழை
நடந்தது இது தான் வெளியில் தலைவர்களும் மக்களும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கையில், சிங்களவர்கள் திரண்டு மார்க்கட் வாயில்களை மறைந்து நிற்க ஒரு வெறி பிடித்த சிங்களவன் மார்க்கட்டுக்குள் கோழையைப் போல் மறைந்து நின்று, மார்க்கட் சுவரிலிருந்த கிராதித் துவாரத்தின் மூலம் இரட்டைக் குழல் துப்பாக்கியினால் குருட்டுவாக்கில் கூட்டத்தை நோக்கி இரண்டுமுறை சுட்டிருக்கிறான் ரவைகள் நாலா திசைகளிலும் பாய்ந்து தமிழ்மக்களைப் பலி கொண்டன, கொடிகாக்கும் பணியில் தியாகி நடராசா தம் இன்னுயிரைப் பணையம் வைத்தார்.
ஒருவர் கைது
மேற்படி துப்பாக்கி சம்பவம் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் எல். ஜி. மனுவல் சில்வா என்றசிங்களவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் கோட்டில் ஆஜர் செய்த போது இம்மாதம் 15-ந் திகதிவரை அவரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதி பதி உத்தரவிட்டிருக்கிறார்.
திருகோணமலை துப்பாக்கி சம்பவத்தை தொடர்ந்து நகரத்தின் பல பகுதிகளிலும் ஆங்காங்கு சில சிறு சிறு கலவரங்கள் ஏற்படடன, சிங்களவர்கள் தெருக்களில் தாக்கப்பட்டனர் என்றும், சிங்களவர்களுக்குச் சொந்தமான சில கடைகள் தீயிடப்பட்டனவென்றும் தெரிகிறது.
சிங்களவர் வெளியேற்றம்
திருமலையில் இருந்த பல சிங்கள முதலாளிகளும், மற்றையோரும் குடும்ப சகிதம் திருமலையைவிட்டு வெளியூர்களுக்கு ஓடிவிட்டார்கள் என்று தெரிகிறது. இப்போது திருமலையில் அமைதி நிலவுகிறது இராணுவமும் போலிசும் நகர் காவல் புரிகின்றன. ஆயினும் எந்த நிமிஷமும் மீண்டும் வகுப்புக் கலவரம் ஏற்படலாம் என்ற நிலை இன்னும் தணிந்துவிட்தாகத் தெரியவில்லை.
நன்றி - சுதந்திரன் (10.02.1957)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...