Headlines News :
முகப்பு » , , , , » காலிமுகத்திடலை கொலைக்களமாக ஆக்கிய ஆளுநர் வுய்ஸ்ட்! (கொழும்பின் கதை - 4) - என்.சரவணன்

காலிமுகத்திடலை கொலைக்களமாக ஆக்கிய ஆளுநர் வுய்ஸ்ட்! (கொழும்பின் கதை - 4) - என்.சரவணன்

Johannes Hertenberg இலங்கையின் 19 வது டச்சு ஆளுநர். அவர் 12.01.1725இலிருந்து  19.10.1725 வரை ஆளுநராக இருந்தார். பதவியில் இருக்கும் போதே கொழும்பில் திடீர் மரணமானார். அவரின் கல்வெட்டு இன்னமும் வுல்பெண்டால் தேவாலயத்தில் உள்ளது. அவரின் திடீர் மறைவைத் தொடர்ந்து அவசரமாக ஆளுநராக அனுப்பப்பட்டவர் தான் பேதுருஸ் வுயிஸ்ட் (Petrus Vuyst  1691 -1732).(1) 

தனக்கு ஒரு பெரிய நாட்டை ஆளத்தரவில்லை என்கிற ஏமாற்றத்துடனும், எரிச்சலுடனும் 1726 ஆம் ஆண்டு ஆளுநராக இலங்கை வந்து சேர்ந்தார். ஒரு கையால் தன் ஒரு கண்ணை மறைத்தபடி தான் அவர் எதிரிலுள்ளவர்களை விழிப்பார். இந்த சிறிய நாட்டு முட்டாள்களைப் பார்ப்பதற்கு ஒரு கண்ணே போதும் என்பது தான் அவரின் விளக்கம். மூன்றே மூன்று ஆண்டுகள் தான் அவர் இலங்கையை ஆட்சி செலுத்தினார்.(2)

1729 வரையான அந்த மூன்றாண்டுகளுக்குள் அவர் மேற்கொண்ட அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 

ஒல்லாந்து ஆட்சியை டச்சு ஆட்சி என்றும் அழைப்போம். அன்றைய ஒல்லாந்து காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு அரச ஆக்கிரமிப்பாக நிகழவில்லை. வர்த்தக, வியாபார கம்பனியாகத் தான் நாடுகளைப் பிடிப்பதையும்,  வர்த்தகம் செய்வதையும், ஆட்சி செய்வதையும் புரிந்தனர். குடியேற்றவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக டச்சு அரசாங்கத்தால் அனுமதிபெற்ற அன்றைய பல்தேசிய நிறுவனம் என்று கூறலாம். உலகின் முதலாவதுபல்தேசிய கம்பனியும் (Multi-national company) அதுதான். அக் கம்பனியின் மீது ஒல்லாந்து அரசின் அனுசரணையும், அதிகாரமும் இருந்தது. அரசு அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்தது. அவ்வரசு பெரும்பகுதி வரியைப் பெற்றுக்கொண்டது. 

சுமார் 450 வருடங்களாக இலங்கையை ஆக்கிரமித்து தலா சுமார் ஒன்றரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த மூன்று நாடுகளும் கம்பனிகளின் மூலம் தான் இந்த ஆக்கிரமிப்புகளை நிகழ்த்தின. உதாரணத்துக்கு:

  1. போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி (Portuguese East India Company), போர்த்துக்கீச கம்பனியை ’Vereenigde Oost-Indische Compagnie’ (United East India Company)என்றும் கூறுவார்கள்
  2. டச்சு கிழக்கிந்தியக் கம்பனி (The Dutch East India Company (VOC)),
  3. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி  (British East India Company)

என்கிற நிறுவனங்களை நினைவுக்குக் கொண்டு வரலாம். இலங்கையைப் பொறுத்தளவில் முதலாவது ஆங்கிலேய ஆளுநராக பிரடறிக் நோர்த் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்து முழுமையாகவும், நேரடியாகவும் பிரித்தானிய முடியின் கீழ் இலங்கையைக் கொண்டுவந்தார்.

போர்த்துக்கேயரிடம் இருந்து இலங்கைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் 1640–1796 வரை சுமார் 156 ஆண்டுகள் ஆண்டார்கள். இன்னமும் சொல்லப்போனால் போர்த்துகேயரை விட, ஆங்கிலேயர்களை விட அதிகமான காலம் ஆண்டவர்கள் ஒல்லாந்தர்கள் தான். அவர்களின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் 42 ஆளுநர்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்களில் 24 வது ஆளுநர் தான் இந்த பேத்ருஸ் வுயிஸ்ட்.

1723 இல் ஆளுநர் ரம்ப் (Isaak Augustijn Rumpf) தனது அலுவலகத்தில் திடீர் என்று இறந்து விடுகிறார். அடுத்த மூன்று ஆண்டுகள் ஒவ்வொரு வருடமும் ஆர்னோல்ட் (Arnold Moll -1723 இல்), யோஹன்னஸ் (Johannes Hertenberg -1724இல்)(3), ஜோன் போல் (Joan Paul Schaghen – 1725இல்)(4) மூன்று ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு நிரந்தர ஆளுநரை நியமிப்பதில் இருந்த இழுபறியின் போது தான் அந்த இடத்துக்கு பேத்ருஸ் வுயிஸ்ட் (Petrus Vuyst) விண்ணப்பித்திருந்தார்.

பேத்ருஸ் வுயிஸ்ட் வாழ்க்கைப் பின்னணி

வுயிஸ்ட் பத்தாவியாவில் இருந்து தான் வந்தார். அன்றைய பத்தாவியா (Bataviya என்பது இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள நகரம்) என்பது டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தலைமையகமாக இருந்தது. பல முடிவுகள் அங்கிருந்து தான் எடுக்கப்பட்டன. வுயிஸ்ட்டின் தந்தை Hendrik Vuyst டச்சு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தாய் Maria de Nijs இந்தோனேசிய ஜாவா பின்னணியைச் சேர்ந்தவர். தந்தை ஹென்றிக் வுயிஸ்ட் (Hendrik Vuyst (1656–1705)) கிழக்கிந்திய கம்பனியின் நீண்ட சேவைக்காலத்தைக் கொண்ட ஒரு அதிகாரி.

வுயிஸ்ட் பிறந்ததும் பத்தாவியாவில் தான். 1691 இல் பிறந்த வுயிஸ்ட் தந்தையின் ஒல்லாந்து நாட்டில் தான் கல்வி கற்று தேறினார். கல்வியின் பின் ஒரு வரி வழக்கறிஞராக தொழிலைத் தொடங்கினார். ஒல்லாந்தைச் சேர்ந்த பார்பரா என்கிற பெண்ணை 1714இல் மணம் செய்துகொண்டார்.(5) பின்னர் 1717 இல் பத்தாவியா வந்து சேர்ந்த அவர் அங்கும் ஒரு வரி வழக்கறிஞராக கடமை புரிந்தார். பார்பராவின் குடும்பத்தினர் கிழக்கிந்திய கம்பனியில் செல்வாக்குள்ள குடும்பம் என்பதால் அதன் மூலம் வுயிஸ்ட்டும் பணியில் இணைந்து கொண்டார். 1721 இல் அவர் கிழக்கிந்திய கம்பனியின் கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டார். 1722 இல் அவர் வங்காளத்துக்கு பொறுப்பான இயக்குனராக பொறுப்பேற்று இந்தியாவில் கடமையாற்றினார். இரண்டு ஆண்டுகளில் பத்தாவியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டார். அங்கே அவருக்கு அரசாங்கத்தின் உயர் வழிகாட்டுனராக ஆனார்.(6) 1724 ஆம் ஆண்டு கவுன்சிலுக்கும் தெரிவானார். 1725 ஆம் ஆண்டு மே மாதம் அவர் நகரசபையின் தலைவராகவும் (president van Schepenen) தெரிவானார். சரியாக ஒரு வருடத்தில் அதாவது மே 1726 இல் அவர் இலங்கைக்கான ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை சென்றடைந்து செப்டம்பரில் இருந்து ஆதிகாரம் செலுத்தத் தொடங்கினார். 

அதன் பின் இலங்கையில் 1726 ஆம் ஆண்டு வுயிஸ்ட் இலங்கையின் கவர்னராக நியமிக்கப்படும்போது அவருக்கு முப்பது வயது தான் நிரம்பியிருந்தது. ஆரம்பத்தில் நல்லவராக வளர்ந்தாலும் இந்த பருவத்தின் போது அவர் மிகவும் குரூர குணம் உள்ளவராக மாறியிருந்தார். அவர் காலியை வந்தடைந்த போது ஒரு கண்ணை கறுப்புத்துண்டால் மூடியபடியே இருந்தார். அவரை வரவேற்ற ஒரு உயர் அதிகாரி அவரைப் பார்த்து உங்கள் கண்களுக்கு என்ன நேர்ந்தது என்று விசாரித்தபோது, இலங்கை போன்ற ஒரு சின்ன குட்டிமுட்டை நாட்டை ஆள்வதற்கு இரண்டு கண்கள் தேவையில்லை என்றும் ஒரு கண்ணே தனக்குப் போதும் என்று திமிராக கூறித்திருந்தார்.(7)

அடுத்த வாரம்...

அடிக்குறிப்புகள்

  1. 1727 இல் ஆளுநர் வுயிஸ்ட் வெளியிட்ட ஒரு ஆவணத்தின் அன்றைய தமிழ் கையெழுத்துப் பிரதியில்  (Plakkaat) “பெதுருஸ் பொயிஸ்த்” என்றே குறிப்பிடுவதைப் பார்க்கலாம். இந்த ஆவணத்தின் விரிவான உள்ளடக்கம்; தனிநாயகம் அடிகளார் தொகுத்து, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் 2014 இல் வெளியிடப்பட்ட “Tamil culture Vol.XI – 1964” என்கிற நூலில் எஸ்.தனஞ்சய ராஜசிங்கம் எழுதிய “A Phonological and Morphological Study of a Tamil Plakkaat” என்கிற கட்டுரையில் காணக் இருக்கிறது.
  2. Anczewska, Malgorzata , Sri Lanka, Singapore : APA Publications, 2015
  3. 19.10.1725 அன்று ஆளுநர் யோஹன்னஸ் திடீர் மரணமுற்றார். இன்றும் அவரது கல்லறை கல் வுல்பெண்டால் தேவாலயத்தில் காணலாம்.
  4. ஜோன் போல் 19.10.1725 – 16.09.1726 வரையான ஒரே ஒரு மாதம் மட்டுமே தற்காலிக ஆளுநராக பதவி வகித்தார். 
  5. A.K.A. Gijsberti Hodenpijl, De overgang van het bestuur van Ceylon van gouverneur Stephanus Versluys in handen van mr. diderik van Domburgh; 1732-1733, Nijh VI,, 1919.
  6. https://www.vocsite.nl/
  7. David Hussly, Ceylon and World history II (1505 A.D. TO 1796 A.D), W.M.A.Wahid & bros, Colombo, 1932.
நன்றி - தினகரன் 21.11.2021


Share this post :

+ comments + 2 comments

12:36 PM

அருமை அருமை அருமை.. வாழ்த்துக்கள் சரவணன்..

Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! God is with u my friend!

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates