“கோர்டன் கார்டன்” (Gordon Gardens) பகுதிக்குள் தான் டச்சுக் காலத்தில் கொழும்பின் பிரதான தேவாலயம் இருந்தது. “கோர்டன் கார்டன்” என்பது இன்றைய ஜனாதிபதி மாளிகையாக இருக்கின்ற அன்றைய “இராணி மாளிகை” (Queens house)க்குள் தான் இருந்தது. வுல்பெண்டால் தேவாலயம் பிரதான தேவாலயமாக அமையும்வரை இது தான் அன்றைய தேவாலயமாக இருந்தது. பிற்காலத்தில் ஆங்கிலேயர் இலங்கையை தம் வசமாக்கியதன் பின்னர் சிதைவுற்றிருந்த வுல்பெண்டால் தேவாலயத்தை திருத்தி 1813 செப்டம்பர் 4 அன்று விழாக்கோலமாக புறக்கோட்டை மயானத்தில் இருந்த முக்கிய கல்லறைக் கற்களைக் கொண்டு வந்து சேர்த்தனர்.(1)
இன்னும் சில கல்லறைக் கற்கள்; இன்று புறக்கோட்டை பிரின்ஸ் வீதியில் அமைந்துள்ள டச்சு மியூசியத்திலும் காட்சிக்காக வைக்கப்பட்டன. 1662 – 1736 க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த முக்கிய பதினான்கு கற்கள் தேவாலயத்தின் உள்ளேயும், ஐந்து கற்கள் தேவாலயத்துக்கு வெளியேயும் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருக்கும் மிகப் பழைய கல்லறைக் கல் 1662 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றால் உங்களால் அதன் பழைமையை விளங்கிக்கொள்ள முடியும்.(2)
இவரின் நினைவாகத் தான் அப்போது டச்சுத் தலைமையகம் இயங்கிய பகுதிக்கு அல்ஃப்ட்'ஸ் டோர்ப்" (Hulft's Dorp, அல்ஃப்ட்டின் கிராமம்) என்று பெயரிடப்பட்டது. இன்று இலங்கையின் உயர்நீதிமன்ற வளாகம் அமைந்திருக்கும் பகுதி தான் அது.
அதுமட்டுமன்றி கத்தோலிக்க மதத்துக்கு மாறிய கோட்டை மன்னன் தொன் யுவான் தர்மபாலாவின் கல்லறையும் இங்கே தான் வைக்கப்பட்டு பின்னர் அது மாயமானதாக குறிப்புகள் கூறுகின்றன. (Lewis, J. Penry). அவர் இலங்கையின் முதலாவது கிறிஸ்தவ அரசன். 1580 ஆம் ஆண்டு போர்த்துக்கேயருக்கு கோட்டை ராஜ்யத்தை ஒப்பமிட்டு எழுதிக்கொடுத்தவர் அவர் தான்.
அதுமட்டுமன்றி நான்கு டச்சு ஆளுநர்களும் இந்த வுல்பெண்டாலில் தான் அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் பாதுகாக்கப்பட்டன. இலங்கையை இறுதியாக ஆண்ட இரு டச்சு ஆளுநர்களுமான வில்லெம் யாகோப் (Willem Jacob van de Graaf) யொஹான் வான் அங்கெல்பீக் (Johan van Angelbeek) ஆகியோரின் கல்லறைகளும் பிற்காலத்தில் வுல்பெண்டலுக்கு இடம்மாற்றப்பட்டது.
புறக்கோட்டை மயானத்தை (Colombo Pettah Burial Ground) முதலில் மயானமாக பயன்படுத்தத் தொடங்கியவர்கள் ஒல்லாந்தர்கள் தான் அதன் பின் ஆங்கிலேயர்களும் அதனைப் பயன்படுத்தினர். ஒரு கட்டத்தில் இடமில்லாமல் போன போது தான் ஒல்லாந்தர்கள் இன்றைய காலிமுகத் திடலையும் ஆரம்பத்தில் மயானமாகப் பயன்படுத்தத் தொடங்கி பின்னர் காலக் கிராமத்தில் புறக்கோட்டை மயானத்தை மெதுமெதுவாகக் கைவிட்டனர். அதையே ஆங்கிலேயர்கள் இன்னும் விஸ்தீரணப்படுத்திய மயானமாகப் முழுமையாகப் பயன்படுத்தினார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இன்று புறக்கோட்டை பொலிஸ் நிலையம் உள்ள பகுதி அந்த புறக்கோட்டை மயானத்தின் மீது தான் இருக்கிறது. இன்று பரபரப்பான, சனநெருக்கடிமிக்க அந்த “பஜார்” பகுதியின் நிலத்தினடியில் பலர் ஏராளமானோர் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கண்டியில், மன்னாரில், யாழ்ப்பாணத்தில், திருகோணமலையில் நிகழ்ந்த போரில் கொல்லப்பட்ட அன்றைய காலனித்துவ இராணுவ அதிகாரிகளின் உடல்களும், அன்றைய அரச அதிகாரிகள், அவர்களின் மனைவி, பிள்ளைகள், சகோதர்கள் என பலரும் இந்த புறக்கோட்டை மயானத்தில் புதைக்கப்பட்டார்கள்.
காலிமுகத்திடலில் உள்ள கோல் பேஸ் ஹோட்டல் ஒரு காலத்தில் கொழும்பின் குறியீடாக இருந்த காலமொன்று இருந்தது. காலிமுகத்திடலை எல்லைப்படுத்தும் ஒரு கட்டிடமாக அது இருந்தது. 250 அறைகளைக் கொண்ட அந்தக் காலத்து சொகுசு ஹோட்டல். அன்று இலங்கை வரும் பிரபுக்களையும், ஆங்கிலேய கனவான்களையும் வரவேற்று உபசரிக்கும் ஹோட்டலாக நெடுங்காலம் அமைந்திருந்தது. 1862 ஆம் ஆண்டளவில் காலிமுகத்திடல் மயானத்தின் பாவனையை மட்டுப்படுத்தத் தொடங்கி, அதனை பொதுப் பொழுதுபோக்குப் பாவனைக்கு பயன்படுத்தத தொடங்கியதும் அடுத்த இரண்டாவது வருடம் 1864 இல் இந்த ஹோட்டல் கட்டப்பட்டது. அதற்கடுத்த இரண்டே ஆண்டுகளில் இலங்கையில் ரயில் போக்குவரத்தும் 1866 இல் அறிமுகப்படுத்தப்பட்டபின் இந்த ஹோட்டலின் முக்கியத்துவமும் பெருகியது. இலங்கையில் முதன்முதலில் மின்சாரத்தைப் பயன்படுத்திய முதற் கட்டிடங்களில் ஒன்று. அங்கே தான் முதற்தடவை உயர்த்தி (Elevator / Lift) பயன்படுத்தப்பட்டது.
காலிமுகத்திடல் பன்முகப்படுத்தப்பட்ட தேவைகளுக்கு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாக அது முக்கிய பல பெரும் அரசியல் கூட்டங்கள் நடத்தப்பட்ட இடம். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதும் முதற்தடவை அங்கு தான் கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர் பல ஆண்டுகள் சுதந்திர தின நினைவின் பிரதான நிகழ்வுகள் அங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. பெரிய இராணுவ மரியாதை , ஊர்வலங்கள், விமான வீரர்களின் சாகசங்கள் எல்லாமே இங்கு நிகழ்த்திக் காட்டப்பட்டு வந்திருக்கின்றன. ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதற்தடவையாக ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதும் இங்கு தான்.
முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஏராளமானவர்கள் சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்யும் இடமாக இது இருந்து வருகிறது. 1929 ஆம் ஆண்டு ரல்ப் ஹென்றி (Ralph Henry Bassett) வெளியிட்ட Romantic Ceylon என்கிற நூலில் காலிமுகத்திடலில் ஆப்கான் முஸ்லிம்கள் பலர் ஹஜ்ஜுபெருநாள் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டதைப் பற்றி குறிப்பிடுகிறார். அப்படியென்றால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்த வழக்கம் இருந்து வருவதை அறிய முடிகிறது.
1939இல் ஜவஹர்லால் நேரு வந்திருந்தபோது காலிமுகத்திடலில் அவரின் மாபெரும் கூட்டம் நடந்தது. அன்று அதை எதிர்த்து அன்றைய சிங்கள மகா சபையின் சார்பில் பிரபல தொழிற்சங்கவாதியான ஏ.ஈ.குணசிங்க இலங்கை இந்தியர் காங்கிரசை நேரு உருவாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
அதுபோல பாராளுமன்றம் அருகில் இருந்ததால் பல அரசியல் வாதிகளின் ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் நிகழ்ந்தபடி இருந்திருக்கின்றன. தமிழரசுக் கட்சியின் பல அகிம்சைவழி சத்தியாக்கிரகப் போராட்டங்கள் காலிமுகத்திடலில் தான் நிகழ்ந்திருக்கின்றன.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குள் இலங்கையைப் பற்றிய பயணக் கட்டுரை எழுதிய எவரும் காலிமுகத்திடலைப் பற்றி எழுதாமல் விட்டதில்லை என்றே கூற முடியும். Ali Foad Toulba 1926 இல் வெளியிட்ட “Ceylon : The land of eternal charm” என்கிற நூலில் காலிமுகத்திடலின் அழகிய அனுபவங்களை தனி அத்தியாயமாக தொகுத்திருக்கிறார். காளிமுகத்திடலைப் பற்றிய அனுபவங்களை விலாவாரியாக எழுதியவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
முதலாம் உலகப் போர் முடிந்ததும் அதன் நினைவாக 120 அடிகள் உயரமுள்ள வெற்றிக் கோபுரம் ஒன்று 1923ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் நிறுவப்பட்டது. அதை ஆங்கிலத்தில் Cenotaph War Memorial என்று அழைப்பார்கள். இரண்டாம் உலகப் போரின்போது கொழும்பின் மையம்; ஜப்பானின் குண்டுத்தாக்குதலுக்கு இலகுவாக ஜப்பானியர்களால் அடையாளம் காணப்படக்கூடும் என்கிற பீதியால் அந்தக் கோபுரம் அங்கிருந்து அது கழற்றப்பட்டு விகாரமகாதேவி பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்பட்டது. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களும் அதில் பொறிக்கப்பட்டுள்ளன. இன்றும் அது விகாரமகாதேவிப் பூங்காவின் பின்னால் அமைந்துள்ள கொழும்பு பொதுநூலக நுழைவாயின் அருகில் காணலாம். அது அப்போது எங்கு இருந்தது என்பதை சரியாகச் சொல்வதானால்; இன்று பண்டாரநாயக்கவின் பெரிய சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் தான் அந்த நினைவுக் கோபுரம் இருந்தது.
காலிமுகத் திடல் ஒரு மயானமாக மட்டுமல்ல அதற்கு முன் அது ஒரு கொலைக்களமாகவும் இருந்திருக்கிறது. ஒல்லாந்தர் காலத்தில் பலர் தூக்கிட்டும், சுடப்பட்டும், கழுவில் ஏற்றியும் கொலை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டார்கள். அப்படி இலங்கையில் செய்த கொலைகளுக்காக பாதக ஆளுநர் ஒருவர் ஒல்லாந்து அரசால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவமும் நிறைவேறியது. அதை அடுத்த வாரம் பார்ப்போம்.
- Lewis, J. Penry, List of inscriptions on tombstones and monuments in Ceylon, of historical or local interest, with an obituary of persons uncommemorated (1854-1923), Colombo, H.C.Cottle, Government printer, Ceylon, 1913.
- Dr. K.D. Paranavitana, That church in the Valley of Wolves, Sundaytimes, 24.10.1999
+ comments + 1 comments
அருமை
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...