Headlines News :
முகப்பு » , , , » நோர்வே பொதுத்தேர்தல்! பாடங்கள்? - என்.சரவணன்

நோர்வே பொதுத்தேர்தல்! பாடங்கள்? - என்.சரவணன்

நோர்வேயில் பொதுத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. முக்கியமான வரலாற்றுத் திருப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தேர்தலில் 169 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் AP (48), SP(28) ஆகிய கட்சிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன. இவற்றுடன் SP யின் எதிர்ப்பின் காரணமாக SV(13) கட்சியும் கூட்டணியில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன. சிகப்பு கட்சி (8), பசுமைக் கட்சி (3) என்பனவும் இணைந்து ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அவ்விரு கட்சிகளும் ஆட்சியில் பங்கெடுக்க சம்மதமளிக்கவில்லை. அதேவேளை அவர்களின் தயவும் இன்றைய தொழிற்கட்சி ஆட்சியமைப்பதற்கு அவசியப்படவில்லை. 

நான்காண்டுகளுக்கு ஒரு முறை 169 பேரைத் தெரிவு செய்யும் பொதுத்தேர்தல். விகிதாசாரத் தேர்தல் முறையைக் கொண்டது இத் தேர்தல் முறை. நம் நாட்டைப் போல ஒரே நாளில் நடந்து முடிவதில்லை. தேர்தல் ஒரு மாதமாக நடத்தப்படும். ஆங்காங்கு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். காலையிலிருந்து பின்னேரம் வரை விரும்பிய நாளில், விரும்பிய நேரத்தில் வாக்களிக்க முடியும். வாக்களிப்பு நிலையங்களில் பெரும்பாலும் வரிசையில் காத்திருந்து செல்ல நேரிடாது. பெரும்பாலும் வாக்காளர்களுக்காக காத்திருக்கும் காய்ந்துபோன நிலையங்களாக அவை காட்சியளிக்கும். வருபவர்களை அன்பாக வரவேற்று, வழிகாட்டும் ஓரிரு ஊழியர்கள் மட்டுமே அங்கிருப்பார்கள்.

ஒவ்வொரு கட்சிக்குமான தனித்தனி வாக்குச் சீட்டுகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொரு வாக்குச் சீட்டிலும் பெயர் பட்டியல் காணப்படும், நம் நாட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் அகர வரிசையில் பட்டியலிடப்பட்டிருக்கும். இங்கே கட்சியானது யாரை அதிகம் முக்கியத்துவப்படுத்துகிறார்களோ அந்த வரிசையில் அப்பெயர்கள் இருக்கும். உதாரணத்திற்கு இம்முறை வெற்றி பெற்ற பிரதான கட்சியான தொழிற்கட்சியின் ஒஸ்லோ வேட்பாளர் பட்டியலில் பிரதான பெயராக யூனாஸ் கார் ஸ்தூற (Jonas Gahr Store)வின் பெயர் இடப்பட்டிருந்தது. அவர் தான் கட்சியின் தலைவர் அதுபோல அவர் தான் பிரதமராக தெரிவானவர்.

கம்சாயணி

அதே வேளை அவருக்கு அடுத்ததாக இடப்பட்டிருந்த பெயர் இலங்கையில் பிறந்து மூன்று வயதில் குடியேறி வளர்ந்த பெண்ணான முப்பத்துமூன்று வயதுடைய கம்சாயணி. கம்சாயணி அக்கட்சியில் இப்போது முக்கிய செயற்பாட்டாளர். 21 அக்டோபர் 2015 ஒஸ்லோவின் துணை மேயராக மாநகர சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கம்சாயணி பின்னர் மீண்டும் கடந்த ஆண்டு 23 அக்டோபர் 2019 அன்று மீண்டும் அதே சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இப்போது நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் அதன் பிரதமராக போட்டியிட்ட (பின்னர் பிரதமராக ஆன) யூனாஸ் அவர்களுக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தைக் கொண்டுத்திருந்தது. அவரது வெற்றி ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்ட வெற்றிதான். இப்போது ஐரோப்பாவிலேயே முதன் முதலாக பாராளுமன்றம் சென்ற முதல் இலங்கை வம்சாவளிப் பெண் அவர்.

நோர்வே ஒரு மன்னராட்சி நாடாக இருந்தாலும் மன்னருக்கு கையெழுத்து வைக்கும் அதிகாரத்தைத் தவிர வேறுதுவும் முக்கிய அதிகாரங்கள் இல்லை. அதன் மரபு காரணமாக மன்னர் மக்கள் பிரதிநிதிகள் சபையான பாராளுமன்றத்தின் தீர்மானங்கள் எதையும் மறுக்காமல் கையெழுத்திடுவது மரபு.

இம்முறை வாக்களிப்பும் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அதிகரித்திருக்கிறது. வாக்களிப்பில் எப்போதும் அதிக அக்கறை காட்டாத ஒரு சமூகமாகவே கருதப்பட்ட நோர்வே சமூகத்தினர் இம்முறை 77.2% வீதமானோர் வாக்களித்து சாதனை செய்துள்ளனர்.

இப்போதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் மொத்தம் 9 கட்சிகள் பிரதிதிநிதிகளைப் பெற்றுள்ளன. இவ் ஒன்பது கட்சிகளும் வலது, இடது என்கிற இரு போக்குகளில் ஒன்றாகத் தான் பெரும்பாலும் உள்ளன.
இம்முறை இடதுசாரிக் கட்சிகளுக்கு கிடைத்திருக்கிற ஆசனங்கள் வலதுசாரிகள் இழந்த ஆசனங்கள் தான். இடதுசாரிக் கட்சிகள் ஏற்கெனவே கொண்டிருந்த ஆசனங்களில் எதுவும் குறைய இல்லை. எனவே வலதுசாரிப் போக்குக்கு கிடைத்த அடியாகவும் இதனைக் கொள்ள முடியும்.

தற்போதைய தேர்தல் புள்ளிவிபரங்களின்படி 3.88 மில்லியன் வாக்காளர்களைக் கொண்டுள்ள நோர்வேயில் 3.2 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்கள்.

இம்முறை வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட 11 பேர் தெரிவாகியுள்ளனர். இதற்கு முன்னர் இத்தனை பேர் தெரிவாகியதில்லை. அவர்களில் 7 பேர் ஐரோப்பியர் அல்லாதவர்கள். அந்த ஏழு பேரில் நால்வர் பெண்கள்.

தேர்தல் போக்கை வைத்து இன்னொரு விடயத்தையும் நாம் கூற முடியும். அதாவது ஸ்கண்டிநேவிய நாடுகளின் ஆட்சிப் போக்கை உன்னிப்பாக கவனித்தால் அது சமீபகாலமாக அதிகமாக “மத்தி - இடது” (Centre-Left Coalition) கூட்டின் ஆட்சிகளாக அதிகமாக அமைந்து வருவதை சர்வதேச அவதானிகள் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். அயல் நாடுகளான டென்மார்க், ஐஸ்லாண்ட், பின்லான்ட், சுவீடன் ஆகிய நாடுகளிலும் இத்தகையப் போக்கை காண முடிகிறது.

சிகப்பு (R)

இதுவரை ஒரே ஒரு ஆசனத்தைக்கொண்டிருந்த “சிகப்பு” கட்சி இம்முறை 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது. தற்போது பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளிலேயே இடதுசாரித்தனம் அதிகமாக இருக்கிற கட்சியாக இதைத் தான் குறிப்பிடமுடியும். வலதுசாரித்தனத்தை நேரடியாக தீவிரமாகவும், தத்துவார்த்த ரீதியிலும் எதிர்க்கக் கூடிய கட்சி இது தான். அதிலும் அதிக இளம் தலைமுறையினரைக் கொண்ட கட்சி இது. நோர்வேயில் உள்ள கட்சிகளிலேயே தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகும், குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் கட்சியும் இது தான்.

தொழிற்கட்சி (AP)

நோர்வேயின் செல்வாக்கு பெற்ற பெரிய கட்சி எனலாம். கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தலில் கூட அத்தேர்தலில் ஆட்சியமைத்த வளதுசாரிக்கூட்டின் பிரதான கட்சி பெற்ற ஆசனங்களை விட அதிகமான ஆசனங்களைப் பெற்றிருந்தது. இம்முறை 48 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலை விட வாக்குகள் சற்று குறைந்திருந்த போதும் தன் கூட்டுக்கட்சிகள் அதிக ஆசனங்களைப் பெற்று தொழிற்கட்சி தலைமையில் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஒஸ்லோ போன்ற தொழிலாளர் வர்க்கம் அதிகமாக வாழும், வெளிநாட்டுப் பல்லின மக்கள் வாழும் இடமாகவும் இருக்கிற ஒஸ்லோவில் அதன் ஐந்து வீதத்துக்கும் அதிகமான சரிவு சிந்திக்கப்படவேண்டியது. அதை ஏனைய இடதுசாரிக் கட்சிகள் கைப்பற்றியிருப்பது தெரிகிறது.


இம்முறை நூறு நாள் வேலைத்திட்டம் என்கிற பிரச்சாரம் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது உண்மை தான். அதில் உள்ள திட்டங்கள் வெகுஜன மக்கள் மத்தியில் அதிகம் கவர்ந்ததாக இருந்தது.

சோஷலிச இடதுசாரிக் கட்சி (SV)

சோஷலிச கட்சியாக அறியப்பட்டாலும் சொல்லுமளவுக்கு அப்படியொரு தொழிலாளர் வர்க்க கட்சியாக அது இல்லை. ஆனால் தொழிலாளர்வர்க்கத்துக்கு சார்பான கட்சியென கூறலாம். தொழிற்கட்சியை விட ஒருபடிமேல் சோசலிச சார்பு எனலாம். ஒருபோதும் வலதுசாரிகளுடன் கைகோர்த்ததில்லை. இக்கட்சியின் தலைவராக எரிக் சுல்ஹைம் 1987–1997  காலப்பகுதியில் இருந்தார். 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி இதற்கு முன் இரு தடவைகள் மாத்திரம்  2005, 2009 ஆம் ஆண்டு அரசாங்கங்களில் தொழிற்கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கத்தில் அங்கம் வகித்தது. இம்முறை இக்கட்சியுடன் கூட்டு வைத்தால் தாம் அதிலிருந்து விலகிவிடுவதாக மத்திய கட்சி (SP) அறிவித்ததைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்து SV தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் ஒரு சிறந்த அழுத்தக் குழுவாக அது பாராளுமன்றத்தில் இருக்கிறது..

பசுமைக் கட்சி (MDG)

கடந்த தடவை ஒரே ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டிருந்த இக்கட்சி இம்முறை மூன்று ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. பெரும்பாலும் வளதுசாரித்தனத்தைக் கொண்டிருந்த கட்சியாக இருந்தபோதும் அதன் பசுமைக் கொள்கைகளுக்கு வலதுசாரிக் கட்சிகளுடன் கொள்கை ரீதியில் கூட்டமைக்க முடிவதில்லை. எனவே அது இடதுசாரிக் கட்சிகளுடன் தான் கொள்கை ரீதியில் கூட்டமைக்க முடியும்.

வலது கட்சி (H)

வலது கட்சி கடந்த 2013 இலிருந்து இரண்டு தடவைகள் ஆட்சியைத் தொடர்ந்திருக்கிறது. இம்முறைத் தேர்தலில் 9 ஆசனங்களை இழந்து சுமார் 5வீத வாக்குகளை இழந்ததன் மூலம் அதிகமாக தோல்வியுற்ற கட்சியாக ஆகியிருக்கிறது. இம்முறை கொரோனா காலத்தை மிகவும் நேர்த்தியாகக் கையாண்டதற்காக இவர்களே வெற்றிபெற்று ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தபோதும் அதையெல்லாம் முடிவுகள் பொய்யாக்கின.

கிறிஸ்தவ கட்சி (KRF)

1933 ஆம் ஆண்டு தொடங்கிய இக்கட்சி 1936 ஆம் ஆண்டு தேர்தலில் 2 ஆசனங்களைப் பெற்றது. வரலாற்றில் 25 ஆசனங்களைக் கூட பெற்றிருக்கிறது. ஆனால் அதன் பின்னர் முதற் தடவை வெறும் மூன்றே ஆசனங்களைப் பெற்று மோசமான தோல்வியை அடைந்தது இம்முறை தான். பெரும்பாலும் வலதுசாரிகளுடனேயே கூட்டமைத்த வரலாறைக் கொண்டது.

இடது (V)

இக்கட்சி பெயரளவில் இடது என்கிற பெயரைக் கொண்டிருந்தாலும் சுத்த வலதுசாரிக் கட்சி தான். பெரும்பாலும் வலதுசாரிகளுடன் தான் கூட்டு வைத்துக்கொள்ளும் வழக்கமுடைய இக்கட்சி ஒரு தாராளவாத கட்சியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் கட்சியாகும். 1884இல் தொடங்கப்பட்ட இக்கட்சி நோர்வேயின் மிகப் பழமையான கட்சி. 

மத்திய கட்சி (SP)

இம்முறை அதிக வளர்ச்சியைக் கொண்ட கட்சியாக இது தான் இருக்கிறது. கடந்த தேர்தலில் 19 ஆசனங்களைக் கொண்ட இந்தக் கட்சி இம்முறை 28 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இக்கட்சி ஆரம்பித்து நூராண்டுகளைக் கடந்தும் இது தான் இவ்வளவு ஆசனங்களைக் கொண்ட முதற் தடவை. அது மட்டுமன்றி மூன்றாவது பெரிய கட்சியாக அது ஆகியிருக்கிறது. நடுக்கட்சியாக இருந்துகொண்டு காலத்துக்கு காலம் வலதுசாரிகளோடும், சில தடவைகள் இடதுசாரிகலோடும் சேர்ந்து கூட்டரசாங்கத்துடன் இருந்திருக்கிறது. இக்கட்சி வலதுசாரி, இடதுசாரி தத்துவார்த்தத்துக்குள் தன்னை உட்படுத்தாது அவ்வப்போது எழும் முக்கிய விடயதானங்களை முன்வைத்து பேரம்பேசி அத்தரப்புடன் இணைந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இம்முறை இக்கட்சி வலதுசாரித் தரப்போடு கைகோர்த்தால் வலதுசாரிகளே ஆட்சியமைத்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது. எனவே. இக்கட்சி இம்முறை அரசாங்கத்தில் பேரம் பேசும் ஆற்றலை அதிகம் பெற்ற கட்சி எனலாம்.

முன்னிலைக் கட்சி (FRP)

நோர்வேயில் மிகப்பெரிய வலதுசாரி, தேசியவாதக் கட்சியாக இதனைக் கொள்ளலாம். வெளிநாட்டு குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடும்போக்கைக் கொண்ட கட்சியும் கூட.

நோயாளர் அக்கறைக் கட்சி (PF)

வட நோர்வேயில் இருக்கிற அல்டா என்கிற ஆஸ்பத்திரியை விஸ்தரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த Patient Focus  இயக்கம் இவ்வருடம் ஏப்ரலில் தன்னை ஒரு கட்சியாக பதிவுசெய்துகொண்டு அல்டா தொகுதியில் போட்டியிட்டது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அந்த மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை வென்றுவிட்டது அந்த அமைப்பு. தனியொரு கோரிக்கையை முன்வைத்து ஒரு ஆசனத்தை வென்ற இக்கட்சியை ஆச்சரியமாகப் பார்கின்றனர்.

யூனாஸ் கார் ஸ்தூற (Jonas Gahr Store)

யூனாஸ் 2005 – 2012 ஆம் ஆண்டுவரை நோர்வேயின் வெளிவிவகார அமைச்சராக இருந்தவர். எரிக் சுல்ஹைமோடு இணைந்து சமாதான பேச்சுவார்த்தை ஒழுங்குகளை மேற்கொண்டவர் யூனாஸ். அதாவது இவரது காலத்தில் தான் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவு ஏற்பட்டது. நான்காவது ஈழப்போரும் இலங்கையில் தொடங்கப்பட்டு 2009 இல் யுத்தத்தின் மூலம் மோசமான  அழித்தொழிப்பும் நிகழ்ந்து முடிந்தது. இலங்கையை போர்குற்ற நாடாக அறிவித்துக்கொண்டிருந்தவர்களில் யூனாஸ் முக்கியமானவர். அதுபோல தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்றும் குரல் கொடுத்துக்கொண்டிருந்தவர். ஆனால் அவருக்கு அழுத்தம் கொடுத்து வேலைவாங்கக்கூடிய அளவுக்கு ன்று ஈழத்து அல்லது, புகலிட, அல்லது நோர்வே தமிழ் தரப்பு பலமாக இருந்ததில்லை.

பெண்கள்

கடந்த தேர்தலில் பிரதமர் ஒரு பெண். அக்கூட்டரசாங்கத்தின் பிரதான மூன்று கட்சிகளின் தலைவர்களும் பெண்களே. 22 அமைச்சர்களில் 10 அமைச்சர்கள் பெண்கள்.  நிதி அமைச்சு, வெளியுறவு அமைச்சு, கல்வி அமைச்சு, கலாசார அமைச்சு ஆகிய முக்கிய அமைச்சுகள் பெண்களின் கைகளில். கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சும் பெண்ணின் கையில் தான் இருந்தது. ஆனால் புதிய அரசாங்கத்தில் 19 அமைச்சர்களில் 10 அமைச்சர்கள் பெண்கள் உள்ளனர். அதாவது 53 வீத பெண் அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கம் இது.

Kirsten Hansteen

நோர்வேயில் முதன் முதலாக 1945 இல் தான் ஒரு பெண் அமைச்சர் தெரிவானார். அவர் கிர்ஸ்டன் ஹன்ச்டீன் (Kirsten Hansteen). நோர்வேயின் நோபல் பரிசு கமிட்டியில் அங்கம் வகித்த முதல் பெண்ணும் அவர் தான்.

கடந்த பாராளுமன்றத்தில் 41.1% வீதம் (69/169)பெண்கள் அங்கம் வகித்தனர். இம்முறை மொத்தம் 169 உறுப்பினர்களின் 93 ஆண்களும் 76 பெண்களும் (45 வீதம்) தெரிவாகியுள்ளனர். இது ஒரு வரலாற்று வெற்றி என்றே கூற வேண்டும். கடந்த தேர்தலில் 41 வீத பெண்கள் தெரிவாகியிருந்தனர்.

Gro Harlem Brundtland

1981ஆம் ஆண்டு தொழிற்கட்சியைச் சேர்ந்த குரோ ஹார்லம் (Gro Harlem Brundtland) நோர்வேயின் முதலாவது பெண் பிரதம மந்திரியாக தெரிவானார்.  அவர் அதன் பின்னர் மூன்று முறை (1981,1986,1990) பிரதம மந்திரியாக தெரிவானார். அவருக்குப் பின்னர் 2013ஆம் ஆண்டு தெரிவான ஆர்ன சூல்பேர்க் தொடர்ந்து இரண்டு தடவைகள் பிரதமராக பதவி வகித்து தற்போது 2021இல் நடந்து முடிந்த தேர்தலில் தான் அவர் மாற்றப்பட்டார்.

இம்முறை சிகப்பு கட்சியைச் (Red Party) சேர்ந்த எட்டு பேரில் ஐந்து பேர் (62.5%) பெண்கள். அதுபோல சோஷலிச இடதுசாரிக் கட்சியின் 13 பிரதிநிதிகளில் 8 பேர் (61,5%) பெண்கள். பசுமைக் கட்சியின் மூன்று பேரில் இருவர் (66%)  பெண்கள். மத்தியக் கட்சியின் 28 பேரில் 14 பேர் (50%)  பெண்கள். இவை இக்கட்சிகள் எல்லாமே இடதுசாரிப் போக்கைக் கொண்டவை. அதேவேளை தீவிர வலதுசாரி தேசியவாதக் கட்சியான முன்னிலைக் கட்சியின் (FRP) 21 பேரில் இருவர் மாத்திரமே பெண்கள். ஆக பெண்களின் சுதந்திர, சுயாதீன, அரசியல் செயற்பாடுகளுக்கு முழு வாய்ப்பையும் உடைய சக்திகள் இடதுசாரிக் கொள்கையைக் கொண்டவர்களே என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும். மேலும் பிரதான 9 காட்சிகளில் நான்கு கட்சிகளுக்குத் தலைமை தாங்குபவர்கள் பெண்கள்.

Erna Solberg

நோர்வேயில் பெண்களின் வாக்களிப்பு வீதம் ஆண்களை விட அதிகம் என்பதை SSB என்கிற நோர்வே புள்ளிவிபரவியல் திணைக்களம் 2019 இல் வெளியிட்ட  அறிக்கையும் உறுதிபடுத்துகிறது.

நோர்வேயில் 1913 வரை பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. 1901ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைகளில் வாக்கிடும் உரிமையைப் பெண்கள் பெற்றார்கள். 1907 இல் வரி செலுத்தும் பெண்களுக்கும், வரிசெலுத்தும் ஆணை திருமணம் புரிந்தவருக்கும் மட்டுமே வாக்களிப்பதற்கும், வேட்பாளராக போட்டியிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தார்கள். நோர்வேஜிய பாராளுமன்றத்தின் முதலாவது பெண் பிரதிநிதியாக அன்னா ரோக்ஸ்தாட் (Anna Rogstad.) 1911இல் தெரிவானார். ஆனால் அவர் வாக்களிப்பின் மூலம் அன்று தெரிவாகவில்லை. பிராட்லி (Bratlie) என்பவரின் இடம் காலியானதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாகத்தான் தேரிவானார். 

Karen Platou

1915 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தான் சகல பெண்களும் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள். ஆனால் அந்தத் தேர்தலில் எந்தப் பெண்ணும் தெரிவாகவில்லை. 1921 ஆண்டு தேர்தலில் தான் முதலாவது தடவை தேர்தலில் போட்டியிட்டு காரின் பிளடாவு (Karen Platou) என்கிற பெண் தெரிவானார். அவர் 11.01.1922 அன்று தொடங்கிய அன்று தான் பாராளுமன்ற ஆசனத்தில் அமர்ந்தார். அவர் அன்று கட்டிட வடிவமைப்பாளராகம் தொழிலதிபருமாக இருந்தவர். அத்தோடு சமூக விவாதங்களில் தீவிரமாக இயங்கிவந்ததோடு சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்தவர். அதாவது இந்த வருடம் முதலாவது பெண் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாகி ஒரு நூற்றாண்டு கொண்டாடும் வேளை பெண்களின் அரசியல் பங்களிப்பு வெற்றிகரமான மாற்றங்களைக் கண்டுள்ளது. 

நன்றி தினக்குரல் - 19.09.2021
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates