1992 இல் சிட்னியில் நடத்தப்பட்ட 5வது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டின் மலரிலிருந்து நன்றியுடன் பகிர்கிறோம்
கி.மு. 200 - 300 ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் அசோக மன்னர் இந்திய நாட்டில் தென்னகம் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பௌத்த குருமார்களை அனுப்பிப் பௌத்த மதத்தை பரப்பிய காலத்தில், பர்மிய நாட்டிற்கும் ஒரு குழுவினர் வந்தனர். இங்கே வந்த பௌத்த மதத்தோடு காஞ்சிபுரத்திலிருந்து பல்லவ எழுத்து, பண்பாடு, நாகரீகம் ஆகியவைகளும் தற்போது தட்டோன் எனப்படும் "சுவர்ண பூமி" நாட்டில் பரவியதாக "பர்மிய கலாச்சார வரலாறு" என்ற நூல் கூறுகின்றது.
"ரோம் நகரத்தின் தெற்குப் பகுதியான "மோசா" என்ற கிராமத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொன் தகட்டில் காணப்படும் பௌத்த சாசனம் பல்லவலிபியால் எழுதப்பட்டுள்ளது. அக்காலத்தில் பர்மாவை அரசு புரிந்த மன்னர்களின் பெயர்கள் சூரியவிக்ரமன், சிம்ம விக்ரமன் என்றெல்லாம் சூட்டப்பட்டுள்ளன. சிறீகேத்திரம், வைணவ நகரம் என்ற நகரங்கள் புகழ் பெற்று விளங்கியுள்ளன.
பர்மாவின் நாதசுவரமும் தோல் கருவியும் இந்தியாவிலிருந்து கிடைத்ததாகவும் ஆடற்கலையே தென் இந்திய பரத நாட்டியத்தின் அடிப்படையாகக் கொண்டதெனவும் சான்றுடன் விளக்கப்பட்டுள்ளன.
பர்மிய மன்னர் சோழர் தொடர்பு
சான்சீத்தா என்ற பர்மிய மன்னன்'பகான்' நகரத்திற்கு வந்த சோழ வேந்தனுக்கு புத்தம், தர்மம், சங்கம் என்ற முப்பெரும் தத்துவங்களை பொன்னேட்டில் சிவப்பு மையால் எழுதி அறிவித்ததற்கிணங்க சோழ மன்னன் பௌத்த மதத்தை தழுவி ஏற்றுக்கொண்டான் என்பதாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இவைகளினால் பர்மிய நாட்டுடன் தமிழகம் தொன்றுதொட்டே தொடர்பும் நல்லுறவும் கொண்டு வந்துள்ளது என்பது பெறப்படுகிறது.
பர்மிய நாட்டில் தமிழர் குடியேற்றம்
பிற்காலத்தில் கீழ் பர்மா பிரிட்டனின் ஆட்சிப் பிடியில் இருந்தபோது 1852ம் ஆண்டு முதல் இந்தியர்கள் (தமிழர்கள்) பெரும் எண்ணிக்கையில் பர்மாவுக்கு வரத்தொடங்கினர்.
1931ம் ஆண்டின் கணக்கெடுப்பு
இவர்கள் பல வகையான தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனராயினும் விவசாயத் துறையிலேயே பெருமளவில் பங்கேற்றனர். அரிசி ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி பெருமளவில் பெற்று வந்த பர்மா நாட்டின் அப்போதைய விளை நிலத்தின் பரப்பு ஆறு இலட்சம் ஏக்கராக இருந்தது. 1876ம் ஆண்டு முதல் தமிழக விவசாயத் தொழிலாளர்கள் தீவிரமாகத் தொழிலில் ஈடுபட்டதின் காரணமாக விளை நிலத்தின் பரப்பு 9,85,252 ஏக்கராக எல்லாரும் வியக்கத் தக்க அளவு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையே,
"பர்மா நிலத்தில் பச்சைவயல் முகங்காட்ட
பச்சை வயலிடையே பச்சரிசி சிரித்திருக்க
அத்தனையும் பொன்னாக ஆக்கிப் படைத்தவர்கள்
நம்மவரே என்றால் நாட்டோர் மறுப்பதில்லை"
என்றார் கவியரசு கண்ண தாசன் அவர்கள்.
1850ம் ஆண்டு முதல் பர்மா நாட்டில் பொருள்வளம் ஈட்ட நகரத்தார்கள் வரத்தொடங்கினார்கள். ஆரம்ப காலத்தில் மூன் மாநிலம் மொப்மேனில் பரவலாக வாழ்ந்த இவர்கள் 1930ம் ஆண்டுக்குள் பர்மா முழுவதும் நிலை கொண்டுவிட்டார்கள். இந்த நகரத்தார்கள் வசம் மலாயாவில் 700 கடைகளும், இலங்கையில் 450 கடைகளும், இந்தோனேசியாவில் 105 கடைகளும் இருந்த வேளையில் பர்மாவில் மட்டும் 1655 கடைகள் 56, 000, 00 ஸ்டர்லிங் பவுன் மூலதனத்துடன் இயங்கி வந்ததுடன் 1941ம் ஆண்டளவில் மூன்று இலட்சம் ஏக்கர் விளை நிலமும் இவர்கள் கைவசம் இருந்தன. 1931ம் ஆண்டு பர்மாவில் இந்தியரின் எண்ணிக்கை 10 இலட்சமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியர் (தமிழர்) வெளியேற்றம்
1930ல் ஏற்பட்ட இந்தியர் பர்மியர் இனக் கலவரத்தினாலும் பிறகு பர்மியர்களின் தேசிய விடுதலை உணர்ச்சியாலும் அதுவரை இந்தியாவின் ஒரு மாநிலமாக கருதப்பட்ட பர்மா தனி நாடாக பிரிந்ததாலும் 5 லட்சம் இந்தியர்கள இந்நாட்டைவிட்டு அவல நிலையில் வெளியேறி விட்டனர். எஞ்சிய தமிழர்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தார்கள். அதன் பின்னர் 1962ம் ஆண்டில் ஏற்பட்ட அரசு மாற்றத்தினால் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக 2 இலடசம்பேர் தாயகத்திற்கு சென்று விட்டனர்.
இனக்கலவரம், 1962ம் ஆண்டுக்குப்பின் ஏற்பட்ட சோசலிசம் போன்ற கொள்கைகளால் பெருந்தொழில்கள் தேசிய உடமையாக்கப்பட்டு கொடுக்கல் வாங்கல் தொழிலும் தடை செய்யப்பட்டு விட்டதால் நகரத்தார்களும் பெரும்பாலானோர் தாயகம் சென்று விட்டார்கள். இவர்கள் கைவசம் இருந்த நிலங்களும் பொது உடமையாக்கப் பெற்றுவிட்டன.
வதந்தியை நம்பிச் சென்றவர்கள்
நாட்டில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்போது சிக்கலும் சிரமமும் ஏற்படுதல் இயற்கையே. ஆனால் அதை ஒற்றுமையுடன் சமாளித்து வாழ வேண்டும். அதை விடுத்து வதந்திகளையும் ஒரு சில விஷமக்காரர்களின் பேச்சைக் கேட்டும் தங்கள் சொத்து சுகங்களை விட்டுச் சென்றவர்கள் ஏராளம். இப்படிச் சென்றவர்கள் இங்கே நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள். அக்கால கட்டத்தில் இந்தியாவும் நன்றாக ஆராயாமல் கப்பலை அனுப்பி தேவை இல்லாமல் பல இந்தியரை திரும்பவும் அழைத்துக்கொண்டது. தாக்குப்பிடித்துக் கொண்டு இருந்த எஞ்சிய தமிழர்கள் இங்கே நல்லவிதமாக வாழ்க்கை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
1988க்குப் பின் ஏற்பட்ட பொருளாதார மாற்றம்
1988ம் ஆண்டுக்குப்பின் ஆட்சி மாறியது. பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு விட்டன. சோசலிசம் வீழ்ந்தது. முயற்சியும் வல்லமையும் வாய்ப்பும் உள்ள தமிழர்கள் நல்ல நிலையில் உள்ளனர். மளிகைக் கடை, மருந்துக்கடை, பெட்டிக்கடைகள் வைத்துள்ளனர். கூலி வேலை செய்வோரும் அதிகம் உள்ளனர். தமிழரில் பெரும் பகுதியினர் விவசாயிகள், உழைப்பாளிகள் ஆதலால் இவர்கள் இப்போது முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். விலை கட்டுப்பாடு இல்லாததால் நெல்லும் நல்ல விலையில் உயர்ந்துள்ளது. வயல் புறங்களிலேயே ஆடுமாடு கோழிகளை வளர்க்கின்றார்கள். சுருங்கச் சொன்னால் பொருளாதாரத் துறையில் ஒளிமயமான எதிர்க்காலம் உண்டு என நம்பலாம்.
தமிழர் வாழும் பகுதிகள்
மூன்மாநிலம் மொல்மென், தட்டோன், கரீன் மாநிலம் பாங்கோன், பக்கோ, மாந்தலே போன்ற பகுதிகளில் தமிமர் இருக்கலாம். சரியான புள்ளி விவரம் இல்லை.
சைவ வைணவ திருக்கோவில்கள்
தமிழர்களின் சிற்ப எழிலுடன் கூடிய மிகப்பெரிய திருக்கோவில்கள் சமயப் பண்பை வளர்த்து வருகின்றன தமிழர்கள் வாழும் இடமெல்லாம் கோவில்கள் உள்ளன. குறிப்பாக தேன்கருமாபிள்ளை அவர்களின் முயற்சியால் கட்டப்பெற்ற கமாயுட் ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தானம் இராமநாதன் ரெட்டியாரால் கட்டப்பட்ட பெற்ற பெருமாள் கோவில், திருக்கம்பை முருகப் பெருமான் ஆலயம். காமாட்சியம்மன் கோவில், காளியம்மா (காளிபாடி) போன்ற கோவில்கள் எல்லாம் தமிழரின் கலைத் திறனையும் சமயவழி பண்பாட்டையும் பக்தி நெறியையும் பறைசாற்றி வருகின்றன. மேலும் பசுண்டான் நகரத்தெண்டாயுதபாணி தட்டோன் ஸ்ரீ தண்டாயுதபாணி, மோல்மென் சிவஸ்தலம் தெண்டாயுதபாணி கோவில்களில் எல்லாம் தைப்பசம் சித்திராபௌர்ணமி விழாக்கள் இன்றும் மிகவிமரிசையுடன் கொண்டாடப்பெற்று வருகின்றன. இங்கெல்லாம் தமிழர்களை பெரும் திரளாக காணலாம். பீலிக்கான் அங்காள ஈஸ்வரி, முனீஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் அதிகம் கூடுகின்றனர்.
முருகக் கடவுள் இரதத்தில் ஊர்வலம் வரும்போது அர்ச்சனைத் தட்டுகளை கையில் ஏந்திக்கொண்டு காணிக்கை செலுத்தியும், திருநீற்றை இரு கைகளாலும் வணங்கிப் பெற்றுக்கொண்டு நெற்றியில் பக்தி சிரத்தையுடன் இட்டுக்கொள்ளும் ஏராளமான பர்மிய மக்கள் நம்கோவில் உற்சவங்களில் இரண்டறக் கலந்து விடுகின்றனர்.
நம் கோவில் விழாக்களுக்கு தேவையான உதவிகளை பர்மியர்களும் செய்வதுண்டு. கோவில் கட்டும் திருப்பணிகள் இப்போதும் அங்கங்கே சிறப்புற நடந்து வருகின்றன. ஆனால் தற்போதெல்லாம் சிறந்த சிற்பக்கலைஞர்கள் இல்லை இதற்கு பாரத அரசு தங்கள் தூதரகத்தின் மூலம் உதவி செய்ய முன்வரவேண்டும்.
கிறித்துவ தமிழர்களும், சோலியா முஸ்லிம் தமிழர்களும் தங்கள் சமயத்துடன் தமிழ்ப் பண்பைப் பேணி வளர்த்து வருகின்றனர்.
தமிழ்ப் பணிகள்
1965ம் ஆண்டுக்கு முன் அ.ப. தமிழர் சங்கம், ரெட்டியார் உயர்நிலைப்பள்ளி, கம்பை கல்விக் கழகம் மற்றும் பல தமிழ் அமைப்புகள் தமிழையும் பண்பாட்டையும் பேணி வளர்த்து வந்துள்ளன. பிறகு கல்விச் சபைகளை அரசு மேற்கொண்ட பர்மியம் ஆங்கிலம் இரண்டை மட்டுமே போதனா மொழியாக அறிவித்து விட்டதால் தமிழ் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்பட்டன
தற்போது நிலைமைகள் மாறி வருகின்றன. கோவில்களிலும் பொது நிறுவனங்களிலும் தமிழ் சொல்லித் தரப்படுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றும் அமைப்பு "தமிழ் இந்து நிதி சேமிப்பு நிறுவம் யாங்கோன்" ஆகும். இவர்கள் குறுகிய காலத்தில் கணிசமான நிதியை சேர்ந்து 25 ஏழைத் தமிழ்ப் பள்ளிகைகளை தத்து எடுத்து மாதம் கியா 500/= ஐ ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கி தமிழ் வாழ பணி செய்கின்றார்கள். திரு.மணி, திரு.முருகன், திரு.மு. நாராயணன் ஆகியோர் அயராது உழைக்கின்றனர். இவர்களின் பகீரத முயற்சி ஆடம்பரம் ஆரவாரம் இல்லாமல் வெற்றி நடை போடுகின்றது. இவர்களின் தொண்டு பர்மா தமிழ் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
திரு.முனியாண்டியின் தலைமையில் உள்ள தமிழ் இந்து ஐக்கிய நிதி சேமிப்பு நிறுவனம் தாமுவே தமிழ்த் தொண்டு நிதி சேமிப்பு நிறுவனம், திருவி.எஸ்சாமிநாதன் தலைமையில் உள்ள ஸ்ரீ நடராசப் பெருமான் ஆலயம் தமிழ்ப் பாடசாலை, திருவாளர்கள். இரா. அ. தங்கராசன், எஸ்.பி.சேது, சோலை தியாகராஜன் ஆகியோர்களின் முயற்சியால் இயங்கும் யாங்கோன் திருக்குறள் மன்றம், வள்ளல் பெருமானின் நெறி பரப்பும் ச.சு.ச.சங்கம் ஆகியவைகளும் தமிழ்ப் பணியாற்றி வருகின்றன.
மற்றும் மூன்மா நிலத்தில் அறவழி அன்பர் குழு, மெய்வழி அன்பர்கள் ஆகியவை திரு. இரா.கிருட்டினர் பொறுப்பில் செவ்வனே செயல் படுகின்றது.
தட்டோனில் தமிழ் இல்லம், வள்ளுவர் கோட்டம், கலைமகள் தமிழ்க் கல்வி நிறுவனம் மொழியும் குறளும் பரப்புகின்றன. திருவாளர்கள். ரெ.மாரிமுத்து, ப.கோ. இராமசாமி, ரா.முனியப்பன். ந.சேகர், வ.க.வல்லமைச்சன், சி.அங்குச்சாமி, த.ரெகுநாதன், பா.சொக்கலிங்கம், மு.நாராயணன், ந.பாலன், ந.சந்தர் ஆகியோர் நற்பணியாற்றுகின்றனர்
உ.த.ப.இயக்கம் பர்மாகிளை
இது பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை ஒருமைப்பாட்டு விழாவாக சிறப்புடன் கொண்டாடியது. திருக்குறள் வகுப்பு நடத்துகின்றது. அங்கங்கே கிராமங்களில் தமிழ்ப் பள்ளிகள் திறக்க ஊக்கமளித்து வருகின்றது. தமிழர்களிடையே உறவை வளர்க்கின்றது.
தமிழ் வெளியீடுகள்
1965க்கு முன்னர் "ரசிகரஞ்சனி", "தொண்டன்","பால பர்மா" என்ற நாளேடுகளும் "
சினிமா டைம்ஸ்" போன்ற வார ஏடுகளும் வெளியிடப்பட்டன. தமிழக எழுத்தாளர்
களுக்கு இணையாக தமிழ்ப் பணியும் இலக்கியப் பணியும் ஆற்றியுள்ளனர். நாழிதழ்கள் தடை செய்யப் பெற்றுவிட்டதும் தமிழ் உலகம் இருண்டு வரண்டு போய்விட்டது.
அதன் பின்னர் "தமிழ் உள்ளம்" திரு ரெ.மாரிமுத்து முயற்சியாலும் "தமிழ் ஒளி" திரு.பூ.செ.புதியணனை ஆசிரியராகக்கொண்டும் வெளிவந்தன. தற்போது நல்ல காலம் என்ற சமய திங்களிதழ் ஒன்று மட்டும் ஆசிரியர் என்.எம்.நாகரெத்தினம் அவர்களால் வெளியிடப் பெறுகின்றது. இவர் சிறந்த எழுத்தாளர் ஆவார். திரு.பி.சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்ப்பாட நூல்களையும் சில சமய நூல்களையும் வெளியிடுகிறார். இதுவே இன்று தமிழ் மாணவர்கட்கு வரப்பிரசாதம். ஐயா திரு. ரி.எஸ்.மணி அவர்கள் நடமாடும் நூல் நிலையமாக செயல்படுகின்றார். மொல்மேன் திருகி.சுந்தர் அவர்களும் இவ்வகையில் சிறந்த சேவையாற்றி வருகின்றார்.
மியன்மா தமிழர்களின் அடிப்படைத் தேவைகள்
இந்த நாட்டுத்தமிழர்கள் தமிழ்கூறும் நல்லுலகத்துடன் மொழி பண்பாடு ரீதியில் நேரடித் தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளனர். எனவே;
அ) இவர்களின் மொழி வளர்ச்சிக்காக எளிய நடையில் படிப்பதற்கான பாட நூல்கள்
ஆ) படித்த தமிழை அபிவிருத்தி செய்துகொள்வதற்கான அம்புலிமாமா போன்ற வெளியீடுகள்.
இ) ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ் அமைப்புக்களிலும் நூலகங்கள் ஏற்படுத்தி, அதற்குத் தேவையான வார, திங்கள், நாளேடுகள் மற்றும் இலக்கியங்கள் சேர்த்து வைத்தல்.
ஈ) தபால்வழி இலவச பாடம் போதித்தல்.
உ) வீடியோ கெசட்டில் தமிழ் போதிக்கும் புதிய வழி முறைகளை படம்பிடித்து பயன்படுத்தல்.
மேற்கூறியவை அனைத்தும் எங்கள் நாட்டிற்கு அவசிய உடனடித் தேவைகளாகும். இவைகளை தமிழக அரசு சரியாகத் திட்டமிட்டு இந்திய தூதுவரகத்தின் மூலம் கிடைக்குமாறு வழிவகை செய்ய வேண்டும்.
தமிழை உயிரெனப் போற்றும் தமிழக அரசு வெளிநாடுகளில் தமிழ் வளர்க்கும் எமது பணிகளுக்கு இந்த உதவியையாவது செய்யக்கூடாதா?
ரெ.மாரிமுத்து - அமைப்பாளர் - உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மியன்மா கிளை
+ comments + 1 comments
Well sir this is good novel and great thanks
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...