Headlines News :
முகப்பு » , , , , » மகாவம்சம் கூறும் “தமிழரால் உருவான இலங்கையின் முதலாவது பட்டினிச்சாவு!?” - என்.சரவணன் (ஒஸ்லோ)

மகாவம்சம் கூறும் “தமிழரால் உருவான இலங்கையின் முதலாவது பட்டினிச்சாவு!?” - என்.சரவணன் (ஒஸ்லோ)

கொரோனா டயரீஸ் – ஏப்ரல் 5
கொரொனா நோய் வெறும் தொற்று மாதிரமல்ல தற்போது பஞ்சத்தையும் உருவாக்கி வருகிறது. ஏழை நாடுகள் மட்டுமல்ல, உயல்கின் பணக்கார நாடுகளிலும் கூட இந்தப் பஞ்சம், பட்டினி வெவ்வேறு வடிவங்களில் மனிதர்களை உருக்கிக் கொண்டிருக்கிறது.

சாவிலிருந்து தப்ப வேண்டுமா? வீடுகளில் முடங்கிக் கிடவுங்கள் என்பது உயிர்காக்கும் தாரக மந்திரமாக சர்வதேச அளவில் உச்சரிக்கப்படுகின்றன. அப்படி முடங்கும்போது உழைப்பில்லை, அதனால் ஊதியமில்லை, பணம் இருந்தாலும் பொருட்களை உரிய நேரத்தில் கொள்வனவு செய்ய முடிவதில்லை. பணம் இருந்தாலும் இனி பொருட்கள் அனைத்தும் சந்தையில் கிடைக்குமா என்கிற அச்சம் உலக அளவில் நிலவவே செய்கிறது. உலக அளவில் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே உள்ள பொருட்கள் நுகர்வுக்குள்ளாகி முடிந்ததும் அவற்றுக்கு தட்டுப்பாடு நிகழ வாய்ப்புண்டு என்கிற எச்சரிக்கையைக் காண்கின்றோம். இது அத்தியாவசியப் பொருட்களுக்கும் தான். இந்த முடக்கம் நீடித்தால் இந்த நிலமை உருவாவதற்கு வாய்ப்புண்டு என்பதை எந்த சீற்றறிவுக்கும் எட்டும். இந்த முடக்க நிலை நீடித்தால் மூன்றாம் உலக வறுமை நாடுகள் பாரிய பஞ்சத்துக்கு உள்ளாகும் நிலை இருக்கவே செய்கிறது.

உலகில் மோசமான நோய் பாரிய அளவில் பரவிய காலங்களில் எல்லாம் கூடவே பஞ்சமும் பட்டினியும் நிகழ்ந்திருக்கிறது என்பது வரலாற்றில் பல தடவைகள் பதிவாகியிருக்கிறது.

இலங்கையின் வரலாற்றில் கோரமான தொற்றுநோய்களால் ஏற்பட்ட மனிதச்சாவுகளும், பட்டினியால் உருவான மனிதச் சாவுகளும், யுத்தங்களால் உருவான மனிதப் பேரழிவுகளும் பல தடவைகள் பதிவாகியுள்ளன. அந்த வரிசையில் இலங்கையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரிய பட்டினிச்சாவுகள் பற்றி மகாவம்சம் கூறுகிறது.

மகாவம்சத்தில் ஏராளமான கட்டுக்கதைகளும், புனைவுகளும் இருந்தபோதும் அது மட்டுமே எழுத்தில் உள்ள தவிர்க்கமுடியாத வரலாற்று ஆவணமாக சிங்களவர்கள் அல்லாதவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை நிலவவே செய்கிறது. அது சொல்லும் காலம், அது பதிவு செய்துள்ள ஆட்சியாளர்கள், நிகழ்வுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே மேலதிகமான விரிவுபடுத்தல்களும், வியாக்கியானங்களும், தேடல்களும், உறுதிபடுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரும்பியோ விரும்பாமலோ இலங்கை பற்றி ஆய்வு செய்கிற சகல வரலாற்றாசியர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தவிர்க்க முடியாத மூல ஆவணமாக மகாவம்சம் இருக்கிறது. அவரவர் அவரவர்களுக்கு ஏற்றாற் போல அர்த்தப்படுத்தல்களை மேற்கொள்ள அதன் நம்பகத்தன்மையற்ற தகவல்கள் வழிகளை உருவாக்கிவிட்டிருக்கிறது.

“பெமினிதியா”
அந்த வகையில் இலங்கையில் ஏற்பட்ட கொடிய பட்டினிச்சாவு பற்றி மகாவம்சம் தரும் தகவல் மன்னன் வலகம்பா காலத்துக்குரியது. கி.மு 103-89 காலப்பகுதியில் இது உருவானதாக கூறப்படுகிறது. இதனை சிங்களத்தில் “பெமினிதியா” (බැමිණිතියා) என்று அழைக்கிறார்கள். அதாவது பெரும்பஞ்சம் எனலாம். கிட்டத்ததட்ட 12 ஆண்டுகள் நீடித்த பஞ்சம் இது. மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்து மலைநாட்டுப் பகுதிகளுக்குச் சென்று இலைகுழைகளைச் சாப்பிட்டு பசி போக்கினார்கள். பஞ்சம் நீங்கியதும் மீண்டும் பாழடைந்த தமது ஊர்களுக்குதித் திரும்பி தமது வாழ்க்கயைப் புதிதாகத் தொடங்கினர்.

மகாவிகாரையைச் சேர்ந்த இருபத்தி நான்காயிரம் பிக்குமார் பட்டினியாலேயே காடுகளில் சமாதியடைந்தார்களாம். பட்டினியால் பலர் மனித மாமிசத்தை உண்டார்களாம்.

இந்தக் காலப்பகுதி இலங்கையின் இருண்ட காலங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக குறுகிய காலத்துக்குள் ஏற்பட்ட பல தென்னிந்திய ஆக்கிரமிப்புப் போர்களால் விவசாயமும், உற்பத்தியும் பாரிய அளவில் பாதிப்படைந்தது. கடுமையான வறட்சியின் விளைவாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட போது; தென்னிந்திய படையெடுப்பாளர்கள் தாங்கள் ஆக்கிரமித்து ஆண்ட பகுதிகளில் தொட்டிகளையும் நீர்த்தேக்கங்களையும் பழுதுபார்த்து பராமரிக்க தவறியிருந்தனர் என்கிறது இலங்கையின் புராதன வரலாற்று நூல்களில் ஒன்றான “சீஹலவத்துப்பகரணய”  (සීහළවත්ථුප්පකරණය) என்கிற இதிகாசம். தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த ஐந்து தமிழ் மன்னர்களை வலகம்பா மன்னன் முறியடித்து விரட்டியதான் பின்னர் தான் இந்தப் பஞ்சம் கலைந்ததாம்.

“சீஹல வட்டு”
“சீஹலவத்துப்பகரணய” என்பதை “சீஹலவட்டு” (සීහල වත්ථු) என்றும் அழைப்பார்கள். கணிசமாக சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட மிகப் பழமையான ஒரு வரலாற்று இலக்கியமாக கொள்ளப்படுகிறது. “பனகதா” என்று சொல்லப்படுகிற பௌத்த பிரசங்கக் கதை வடிவில் எழுதப்பட்ட ஒன்று அது. அதுமட்டுமன்றி மகாவம்சத்தைவிடப் பழமையானது இது. மகாநாம தேரர் மகாவம்சத்தை வடிப்பதற்கு மூலாதாரமாக பயன்படுத்திய நூல்களில் ஒன்றாக இது இருக்கலாம் என்றும் கலாநிதி தம்மதின்ன உட்பட பல சிங்கள அறிஞர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 1959ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலப்பகுதியில் இது முதற் தடவையாக பாளி மொழியில் இருந்து சிங்கள மொழிக்கு பொல்வத்தே புத்ததத்த தேரரால் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் வேறு சிலரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இந்த நூலில் தான் பஞ்சம் குறித்த முதலாவது இலங்கை வரலாற்று பதிவாகக் கருதப்படுகிறது. அது மட்டுமன்றி இந்த நூலில் தான் துட்டகைமுனுவின் மகன் சாலிய – அசோகமாலா ஆகியோரின் விவாகம் குறித்தும், அதில் துட்டகைமுனுவின் அணுகுமுறை, துட்டகைமுனுவின் மரணம் என பல நிகழ்வுகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

“பெமினிதியா” என இந்தப் பஞ்சத்தை ஏன் அழைத்தார்கள் என்பதற்கு ஒரு சுவாரசியமான விளக்கம் உண்டு. இந்தக் காலப்பகுதியில் தென்னிந்திய ஆக்கிமிப்புகளை நடத்தி தொடர் கிளர்ச்சிகளை செய்துகொண்டிருந்தவர்கள் பிராமணர்கள். அவர்களை “பெமினிட்டிய” என்று அழைப்பார்கள். அதிலிருந்தே “பெமினிதியா” என்கிற பதம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் கி.மு 89 இல் கைப்பற்றப்பட்ட பின்னர் சேதமடைந்த மற்றும் அழிக்கப்பட்ட அனைத்து சிறு குளங்களையும், பாசனக் குளங்களையும் மீளமைக்க நடவடிக்கை எடுத்தான் வலகம்பா.

இதன் மூலம் “பெமினிதியா” என்கிற பெரும் பஞ்சம் மறையத் தொடங்கியது. இந்த பாரிய பணியின் காரணமாக மன்னர் வாலகம்பா ஒரு சிறந்த ஹீரோவாக சிங்களவர்கள் மத்தியில் போற்றப்படுகிறான். அது மட்டுமன்றி

இந்த பஞ்சத்தைப் பற்றிய பல விபரங்களை சீஹலவத்துப்பகரணய” பதிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள்.

“ஆலோகோ உதபாதி” திரைப்படம்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் “ஆலோகோ உதபாதி” என்கிற ஒரு சிங்களத் திரைப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட் படம் அதுதான். இந்தத் திரைப்படம் பல விருதுகளை பெற்றுக்கொண்டது. இதன் முதல் திரையிடலின் போது அதைப் பார்த்துவிட்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த “சகல சிங்களவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது” என்றார்.

2100ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.மு 89இல் மன்னர் வலகம்பா அரசாட்சி செய்த சமயத்தில் தென்னிந்தியாவிலிருந்து “தமிழ் – சைவ” சோழர்கள் படையெடுத்து வந்து நாட்டின் சொத்துக்களையும், ஆட்சியையும் கைப்பற்ற போர் நடத்தியதுடன், பௌத்தத்தை அழித்து தமது சமயத்தை நிறுவுவதற்கும் முயற்சித்தார்கள் என்றும், அப்போது ஏராளமான பிக்குகளை தமிழர்கள் கொன்றார்கள் என்றும், பிக்குமார் பலர் காடுகளிலும், குகைகளிலும் மறைந்து வாழ்ந்ததாகவும், 14 ஆண்டு காலம் சோழர்களை எதிர்த்து போராடிய அரசர் வலகம்பா பிக்குமாரை பாதுகாப்பாக இந்த அலுவிகாரைப் பகுதியில் தலைமறைவாக இருத்தச் செய்து திபிடகவை எழுதச் செய்தார் என்பது தான் கதை. இந்தத் திரைப்படத்தில் மக்கள் பஞ்சத்தால் பட்ட வேதனைகளும், வலகம்பா அரசனின் போர் வீரம், போர் ஞானம் பற்றி மட்டுமல்லாது வென்றதன் பின்னர் செய்த அபிவிருத்திகளும் சொல்லப்பட்டிருக்கிறது.

மகாவம்சம் போற்றும் துட்டகைமுனுவின் மரணத்தின் பின்னர் அவரது மகன் சாலியவுக்கு அரச பதவி கிடைக்கவில்லை. சாலிய "தாழ்த்தப்பட்ட" சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்ததால் தான் சாலியவுக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை என்கிறது சிங்கள வரலாற்று இலக்கியங்கள். ஆகவே துட்டகைமுனுவுக்குப் பின் அரச பதவி அவரின் சகோதரன் சத்தாதிஸ்ஸவுக்கே போனது. சத்தாதிஸ்ஸவின் மரணத்துக்கு பின் அவரது மகன்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் கொலை செய்து மாறி மாறி ஆட்சி செய்தனர். அவர்களில் கடைசி இளைய மகன் தான் வலகம்பா. “வட்டகாமினி” என்கிற பெயராலும் வரலாற்று நூல்களில் அறியப்படுபவர். அதாவது துட்டகைமுனுவின் தம்பியின் மகனே “வலகம்பா”.

பின் வந்த வரலாற்று நூல்கள் எல்லாமே இந்தப் பஞ்சத்தைக் குறிப்பிட்டு இந்தப் பட்டினிச் சாவுக்கு தமிழர்களே காரணம் என்று நிறுவுகிற போக்கைக் காண முடியும். தமிழர்களுக்கு எதிரான கட்டுக்கதை வரிசையில் இந்தச் சம்பவமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுகிறது.
“சீஹல வட்டு” உள்ளிட்ட பல சிங்கள பௌத்த வரலாற்றுக் காவியங்களை இந்த இணைப்பில் இருந்து தரவிறக்கலாம்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates