Headlines News :
முகப்பு » , , , , , » “பமுனு குலய” சிங்களத்தின் பார்ப்பனியமா? (1956-(5)) - என்.சரவணன்

“பமுனு குலய” சிங்களத்தின் பார்ப்பனியமா? (1956-(5)) - என்.சரவணன்


1956 அரசியல் மாற்றத்தோடு “பமுனு குலம்” வீழ்ந்தது என்று மார்ட்டின் விக்கிரமசிங்க கூறுவார். பமுனு குலம் என்றால் யாரைக் குறிக்கிறது என்பது பற்றியது இக்கட்டுரை.

“பமுனு குலய” என்கிற பதம் சிங்கள பண்பாட்டுத் தளத்திலும், ஏன் அரசியல் தளத்திலும் கூட முக்கிய பேசுபொருளாக குறிப்பிட்ட காலம் இருந்தது. பிராமணர்களைக் குறிக்கவே அதிகம் இந்தச் சொல் புராதன இலக்கியங்களிலும், ஓலைச்சுவடிகள், செப்போலைகள், கல்வெட்டுகளில் காணப்பட்டாலும் பிந்திய காலத்தில் இதற்கு வேறொரு அரசியல் அர்த்தம் கொடுக்கப்பட்டது. இந்திய சாதிய அமைப்பில்  முதன்மை ஸ்தானத்தைச் சேர்ந்த பிராமணம் இலங்கைக்குள் நுழைந்த வரலாறு நெடியது. ஆனால் இந்தியாவைப் போல பார்ப்பனியம் கோலோச்ச பௌத்த பண்பாட்டு அரசியல் விடவில்லை என்றும் ஒரு வகையில் கூற முடியும். ஆனால் இலங்கையின் ஆன்மீகத்திலும், இலக்கியங்களிலும் அது கணிசமான தாக்கத்தை எற்படுத்தியிருந்திருக்கிறது என்பதை வரலாற்றறிஞர்கள் பலரும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

சிங்களவர்கள் மத்தியில் பார்ப்பனர்கள்
பௌத்தம் வருணாச்சிரம தர்மத்தை ஆதரிக்காதபோதும் பௌத்த புராணக் கதைகளின் மூலம் இலங்கையின் சிங்கள பண்பாட்டிலும் இலக்கியங்களிலும் வருணாச்சிரம தர்மம் ஒட்டிக்கொண்டது. நால் வருணங்களான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவற்றின் செல்வாக்கு சிங்கள பண்பாட்டின் அம்சமாக ஒட்டிக்கொண்டது. பிராமணர்களின் இடத்தில் பௌத்த பிக்குகள் பிரதீயீடு செய்யப்பட்டார்கள். அதாவது அரசரை வழிநடத்துபவர்களாகவும், ஆலோசனை வழங்குபவர்களாகவும், ஆசார வழிகாட்டல்களை செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்திய பார்ப்பணியத்தின் அதே அளவு செல்வாக்கு இல்லாவிட்டாலும் இலங்கையின் வரலாற்றில் பல இடங்களில் சிங்கள மன்னர்களை வழிநடத்தியிருக்கிறார்கள் என்பதை மகாவம்சம், தீபவம்சம் போன்றவற்றில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.

இலங்கையில் தென்னிந்திய தமிழ் ஆக்கிரமிப்புகளின் போது அவர்களால் அழைத்துவரப்பட்ட பிராமணர்கள் குறிப்பிடத்தக்க அளவு இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரிய செல்வாக்கில் இருந்திருக்கவில்லை.
இலங்கையில் “பமுனுகுலய” வின் ஆரம்பம் மகா விஜயபாகுவுக்கு (1055 - 1110) முடிசூட்டுவதற்காக வட இந்தியாவிலிருந்து சாலையா கிராமத்தைச் (ஷாலி கிராமம்) சேர்ந்த உயர் பிராமணர்களை இலங்கைக்கு வரவழைக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் இலங்கையிலேயே தங்கிவிட்டார்கள் என்றும் வரலாற்றாய்வாளர் மிராண்டோ ஒபேசேகர குறிப்பிடுகிறார். அவர் அதற்கு ஆதாரமாக “ஹெலதிவ பமுனுவத” ஓலைச்சுவடியை குறிப்பிடுகிறார். (1)

தேவநம்பியதீசன் ஆட்சியின் போது அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்தை தலைமையில் இலங்கைக்கு வெள்ளரசு மரம் கொண்டுவரப்பட்டபோது அவர்களுடன் பிராமணர்களும் (பமுனு) வந்தார்கள் என்கிறது “பமுனுவத” எனப்படுகிற ஓலைச்சுவடி. அவர்களில் இசுருமுனி என்கிற பிராமணர் பலபிட்டிய (அனுராதபுர இராஜ்ஜிய காலத்தில் இதன் பெயர் வாலுக்க தித்த) என்கிற பிரதேசத்திலேயே தங்கிவிட்டவர் அவர் என்கிறது.  (2)

சிங்கள பௌத்த புராண ஜாதகக் கதைகளில் மிகவும் பிரல்யமானது “பன்சியபனஸ் ஜாதக கதா” (ஐந்நூற்றைம்பது ஜாதகக் கதைகள்) அதில் குருநாகல் ராஜ்ஜிய காலகட்டத்தில் பமுனு குலம் எழுச்சியடைந்தது குறித்தும் அதற்கு எதிராக நிகழ்ந்திருக்கிற கிளர்ச்சிகள் குறித்தும் இலக்கிய நயத்தோடு விபரிக்கிறது.

காலத்துக்கு காலம் பிராமணர்களுக்கு எதிரான கருத்து நிலையும், அவர்களுக்கு எதிரான எதிர்ப்பு வடிவங்களும் ஆச்சரியம் தருகின்றன. கொட்டகம சாவிச்சர தேரர் எழுதிய “சரணங்கர சங்கராஜா காலம்” என்கிற நூலில் 
“கோட்டை ராஜ்ஜிய காலப்பகுதியில் அடிக்கடி இங்கு வந்து சென்ற பிராமணர்கள் பிணி, கவலை என்பவற்றைத் தீர்ப்பதாகக் கூறி ஹோமம், யாகம் என்பவற்றை செய்து பெருமளவு பொருள் தேடிக்கொண்டார்கள். அவ்வாறு தேடிக்கொண்ட செல்வத்தையெல்லாம் தமது நாட்டுக்கே கொண்டு சென்றார்கள். இதை தடுப்பதற்காக வீதாகம என்கிற ஒரு பௌத்த பிக்கு பிராமணர்களை விரட்டுவதற்காக அவர்களை முதலில் இழிவு செய்யும்வகையில் பிராமணர்கள் அப்போது செய்து வந்த சடங்குகளை பௌத்த வடிவத்தில் இஷ்டப்படி மாற்றி தம்மிடம் வருவோருக்கு இந்து-பௌத்தத் தனமான பூசாரியாக செயற்ப்பட்டிருக்கிறார். அதையே உள்ளூர் பௌத்தர்களுக்கு கற்றுக்கொடுத்து பிராமணர்களை விரட்டியடித்தார்கள்.”
இது போன்ற இன்னொரு கதையை ஸ்ரீ ராஹுல சங்கராஜ தேரரின் சரிதையை எழுதிய எம்.மேலியஸ் சில்வா இப்படிக் குறிப்பிடுகிறார்.
“கபட இந்திய ‘பமுனோ” (பிராமணர்கள்) தாம் எதிர்கொண்ட வறுமையின் காரணமாக இலங்கைக்கு வந்து உள்ளூர் கிராமங்கள் வழியே திரிந்து வைதீக ஓமம் செய்வதாகக் கூறி சடங்குகளை நடத்தி தேவையான சொத்துக்களை சேர்த்துக்கொண்டு தமது நாட்டுக்கு கொண்டோடி விட்டனர். நாட்டின் பெருமளவு வளங்கள் இப்படி சுரண்டப்பட்டன. ஆனால் நம் நாட்டவர்களோ யாகம், ஹோமம் போன்ற சடங்குகளில் ஏற்பட்டுப்போன நம்பிக்கையை நீக்குவது அவ்வளவு அளிமையான காரியமில்லை. இதற்குத் தான் வீதாகம மைத்திரி தேரர்(3)  தந்திரத்தைக் கையாண்டார். எந்த சாதிக்கு இந்த சடங்குகள் செய்வது மறுக்கப்பட்டிருந்ததோ அதே சாதியினருக்கு தானே புனைந்த மந்திரங்களையும், பலி, யாகம், பூசை என்பவற்றை கற்பித்து அவர்களைக் கொண்டு சடங்குகளை நடத்தினார்.” (4)
பமுனு குலய என்பதை சிங்களவர்களைப் பொறுத்தளவில் பிராமண சாதிக்கு ஒப்பானவர்களாகத் தான் கருதுகிறார்கள். 1892 ஆம் ஆண்டு பி.கிளோக் பாதிரியாரால் வெளியிடப்பட்ட சிங்கள ஆங்கில அகராதியிலும் பமுனு என்பதற்கு “பிராமணர்” என்று தான் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (5)

இலங்கையின் கல்வெட்டுகளைப் பற்றி ஆராய்ந்த டொக்டர் எட்வர்ட் முல்லர் இலங்கையில் “மஹான பமுனு” (துறவறம் பூண்ட பிராமணர்) என்கிற வரிகளைக் கொண்ட கல்வெட்டு பற்றி தனது நூலில் விபரித்திருக்கிறார். (6)

1911 ஆம் ஆண்டு வெளியான இலங்கையின் தொகைமதிப்பு புள்ளிவிபர வெளியீட்டில் உள்ள ஊர்களின் பெயர் பட்டியலில் இப்படி இருக்கிறது. (7)

பமுனுமுல்ல, பமுனுபொல, பமுனுகம, பமுனுகெதர, பமுனுதுன்பெல, பமுனுஸ்ஸ

நளின் த சில்வாவின் புதிய வரைவிலக்கணம்
பிரபல பேரினவாத சித்தாந்தவாதியாக அறியப்பட்ட பேராசிரியர் நளின் த சில்வா “பமுனு குலய” என்பதற்கு வேறொரு வரைவிலக்கணத்தைக் கொடுத்து கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இலங்கையின் அரசியல் களத்தில் பரப்பியிருக்கிறார். பல கட்டுரைகளை இது பற்றி அவர் எழுதியிருக்கிறார்.

மேற்கில் கல்வி கற்று’ மேற்கின் சலுகை பெற்ற; மேற்கத்தேயவர்களை பின்பற்றுகின்ற, மேற்கத்தேய செல்வாக்கால் பொருளாதார மேனிலையடைந்த, கல்வியால் பெரிய அரச உத்தியோகங்களை அடைந்தவர்களையும், இவற்றின் செல்வாக்கால் “தீர்மானம் மேற்கொள்ளுபவர்களாக” ஆனவர்களையுமே பிற்காலத்தில்  பமுனு குலய என பொருள் கொள்ளத் தொடங்கினார்கள் என்கிறார் நளின். இந்தியாவில் தேசிய அளவில் நெடுங்காலமாக இப்படிப்பட்ட இடத்தில் இருப்பவர்கள் பிராமணர்கள் தான் என்பதை அறிவீர்கள்.

2019 ஆம் ஆண்டு மீண்டும் “பமுனு குலம்” பற்றிய கருத்தாடல் அரசியல் களத்தில் சூடுபிடித்தது. அது மத்திரிபாலவுக்கு எதிராக “பமுனு குலம்” அணிதிரண்டிருக்கிறது என்கிற கருத்தின் அடியில் இருந்து தொடங்கப்பட்ட விவாதம். மேற்படி “பமுனு குலம்” பற்றிய வரைவிலக்கணத்தின்படி பார்த்தால் இலங்கையில் அப்பேர்பட்ட “பமுனு குல”த்தைச் சேராதவர்களாக அரச தலைவர்களாக வந்தவர்கள் பிரேமதாசவும், மைத்திரிபாலவும் தான். அதைத் தவிர இன்றும் அரசியல் களத்தில் முக்கிய இடத்தில் இருக்கிற ஜே.வி.பி தலைவர் அனுரா குமார திசாநாயக்க, சம்பிக்க ரணவக்க போன்றோர் அரசியல் சூழ்ச்சிக்குப் பலியாவதும் அவர்கள் இந்த “பமுனு குல”த்தைச் சேராதவர்களாக இருப்பதால் தான். ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க தலைமையில் இருந்து நீங்க வேண்டும் என்கிற யோசனை புறந்தள்ளப்பட்டுக்கொண்டே இருப்பதற்கும் காரணம் “பமுனு குல”வின் கடைசி ஐ.தே.க வாரிசாக இருப்பதால் தான்.

நளின் த சில்வா இப்படியானவர்களை “ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சாதி” என்கிறார். சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு ஆதரவில்லாத; மேற்கத்தேய கண்ணோட்டத்தைக் கொண்ட ஒரு வித லிபரல்காரர்கள் என அவர்களை சாடுகிறார் நளின் த சில்வா. அவர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் அந்த சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். “பமுனு குலய” கருத்தாக்கத்தை அதிகமாக அரசியல் தளத்தில் சொல்லாடலாக சமீபகாலமாக பயன்படுத்திவருபவர் நளின் தான். “நந்திக்கடல் வெற்றியின் பின்னர் மகிழ்ந்த ராஜபக்சவை தேர்தலால தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்துவைத்திருக்கிற மேற்கு சக்திகள் இந்த “பமுனு சாதி” யைக் கொண்டு தான் தமது நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்து வருகின்றன” என்கிறார் அவர். (8)

அவர்கள் பௌத்தத்துக்கு எதிராகவும், பௌத்த கலாசாரத்துக்கு எதிராகவும் செயற்படுபவர்கள் என்கிறார் நளின். திவயின பத்திரிகைக்கு எழுதிய இன்னொரு கட்டுரையில் “பமுனு குல”த்தை வீழ்த்துவது அவ்வளவு எளிமையான காரியமல்ல என்றும் இன்றுல்ல அதிகளவான பிரச்சினைகளுக்கு காரணமே அவர்கள் தான் என்றும் கூறுகிறார். (9)

1956 ஆம் ஆண்டு தேர்தலில் பண்டாரநாயக்க ஏற்படுத்திய அரசியல் மாற்றம் முக்கியமானது. அத்தேர்தல் முடிந்து பண்டாரநாயக்க ஆட்சியமைத்ததும் இலங்கையில் இலக்கிய முன்னோடியாக நாம் அறிந்த மார்ட்டின் விக்கிரமசிங்க “பமுனு குலயே பிந்த வெட்டீம” (பமுனு சாதியின் வீழ்ச்சி) என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை அன்று வெளியான பிரபல சஞ்சிகையான “ரசவாகினி” பத்திரிகைக்கு எழுதினார். சிறந்த கட்டுரைக்கான பரிசாக அவருக்கு 1956 இல் 5000 ரூபா பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையை இன்றும் அரசியல், வரலாற்று ஆய்வாளர்கள். கட்டுரையாளர்களால் சுட்டிக்காட்டப்படுவதுண்டு. நளின் த சில்வாவைப் பொறுத்தளவில் மார்ட்டின் விக்கிரமசிங்கவும் அந்த பமுனு சாதியைச் சேர்ந்த மேட்டுக்குடி தான். (10)

1956இல் தேசியவாதத்தின் எழுச்சியைத் தான் மார்டின் விக்கிரமசிங்க அவ்வாறு வியாக்கியானப்படுத்தியிருந்தார் என்று கூறுபவர்களும் உள்ளார்கள். (11)

மார்ட்டின் விக்கிரமசிங்கவை பல இடங்களில் சாடும் நளின்
“மார்ட்டின் விக்கிரம சிங்க “பமுனு குலய” என்று அறிவுச் சமூகத்தைக் குறிப்பிடவில்லை, மாறாக ஆளும் வர்க்கத்தையே குறிப்பிட்டார். ஆனால் இந்தியாவில் “பமுனு” (பிராமணர்) என்பவர்கள் அரசனுக்கு அனுசரணையாக இருப்பவர்கள். அது நேரடியாக சாதியோடு தொடர்புபட்டதும் கூட. 1956 இல் இருந்த சாதியத்தை விட இன்று சாதியம் மேலதிகமாகவே செல்வாக்கு செலுத்தி வருகிறது...”  (12) என்கிறார்.

அரசியல் களத்தில் ஒரு குறிப்பிட்ட தனித்துவமான அதிகாரத்து பிரிவினரை (Bureaucracy) சுட்டுவதற்காக இன்று "பமுனு குலய" என்கிற பதம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதி, வர்க்கம், போன்ற அடையாளங்களுக்குள் உள்ளடங்காத தனித்த உள்ளீடுகளைக் கொண்ட அதிகாரத்துவ குழாமினரை இலகுவாக அடையாளம் காட்டி அரசியல் திறனாய்வுகளை செய்வதற்கு இந்த பதம் சிங்களச் சூழ்நிலையில் இன்று பயன்படுத்தப்பட்டுவருகிறது.

உசாத்துணை :
  1. Obeysekara, Thilak R. Mirando. - කන්ද උඩරට සමාජ සංවිධානය සහ ප්‍රභූවරු - Madipola : Sinhalese Cultural Development Society, 1993
  2. “ஹெலதிவ பமுனுவத” என்கிற மிகப் பழமையான ஓலைச்சுவடி இன்றுவரை பதிக்கப்ப்படாதது என்றும் நாட்டில் இருந்து எப்போதோ அது இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது என்றும், ஆனால் அதை பல இலக்கியங்களில் ஆதாரமாக காட்டியிருக்கிறார்கள் என்றும் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளும் குறிப்பிடப்படுகின்றன. (W.Lakmali - සලාගම කුල වැසියන් - Thesis - Media communication - University of Kelaniya 2010/2011)
  3. கோட்டை ராஜதானியில் வீதாகம விகாரையின் விகாராதிபதியாக இருந்த மைத்திரி தேரர் ஸ்ரீ பெரகும்பா (1412-1467)  6வது புவனேகபாகு (1467-1476) ஆகியோரின் ஆட்சிகாலப்பகுதியில் வாழ்ந்து பௌத்த இலக்கியங்களைப் படைத்தவர்.
  4. டீ.ஏ.டீ.பீ.தேவசிங்க - நன்மைக்கும் தீமைக்கும் இரண்டுக்கும் இருந்த பமுனு குலம்”  (හොඳටම නරකට දෙකටම සිටි බමුණු කුලය) புதுமக – “திவயின” சகோதர பத்திரிகை
  5. Sinhalese - English Dictionary - by The Rev. B.Clough Wesliyan Mission Press Colombo 1892. p.8
  6. Dr. Edward Muller - Ancient Inscription Ceylon - London Trubner & Co Ludgate Hill - 1883
  7. THE CENSUS OF CEYLON, 1911. TOWN AND VILLAGE STATISTICS - Goverment Printer Ceylon, Colombo - 1912
  8. நளின் த சில்வா “பமுனு சாதிக்கு இடமளிப்பதா?” – திவயின – 09.12.2012
  9. நளின் த சில்வா “பதின்மூன்றை இல்லாதொழிப்போம்!” – திவயின – 21.10.2012
  10. நளின் த சில்வா “தவறான நீதிமன்றத் தீர்ப்பு” – திவயின – 19.01.2013
  11. நிரோஷா பீரிஸ் - “பமுனு குலம் வீழ்ச்சியுற்றது” லங்காதீப – 25.01.2018
  12. நளின் த சில்வா “அரேபியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் புறப்படும் பமுனு குலம்” – திவயின – 14.10.2012


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates