2019 ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சமாக உயர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி ஜூன் மாதம் 15 ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் 23306 பேருக்கு சமுர்த்தி உரித்துப் படிவம் வழங்கும் நிகழ்வில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் சமுர்த்தி உரித்துப் படிவம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போதைய நிலையில் பெருவாரியான தோட்டத் தொழிலாளர்களை சமுர்த்தி கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
சமுர்த்தி கொடுப்பனவு என்றாலே கிராமப்புறங்களுக்கு மாத்திரமே என்ற மாயை பெரும்பாலானோரிடத்தில் இருந்தது. அதற்கேற்றாற் போலவே பெருந்தோட்டத் தொழிலாளர்களை சமுர்த்தி கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டமோ அல்லது தெளிவுப்படுத்தல் நிகழ்ச்சிகளோ அமைச்சினாலும் சமுர்த்தி உத்தியோகத்தர்களாலும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சமுர்த்தி இல்லாமலேயே காலத்தைக் கடத்தினர்.
தற்போது அரசாங்கத்தின் ஆறு இலட்சம் சமுர்த்திப் பயனாளிகளின் சேர்க்கையிலும் பெருவாரியாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்பட்டதாக தெரியவில்லை. அவற்றை விளங்கிக் கொள்ளுமளவுக்கு அவர்களிடம் தெளிவும் இல்லை. இந்நிலையில் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய பெருந்தோட்ட மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் காணப்படும் சமுர்த்திப் பயனாளிகள் தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலமாக (RTI/2018/020) தகவல் கோரியிருந்த நிலையில் சில விடயங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.
அட்டவணை 01 இல் (2019/04/30 ஆம் திகதி வரையில்) சமுர்த்திப் பயனாளிகள் தொடர்பிலான விபரங்கள் கூறப்பட்டிருந்தாலும் பெருந்தோட்டப்பகுதி பயனாளிகள் எனத் தனியாக இனங்காணமுடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. சமுர்த்தி நிவாரணத்திற்காக விண்ணப்பிக்கின்ற குடும்பம், பொருளாதார ரீதியில் பலம்பெறச்செய்யும் திறனும் இருத்தல் வேண்டும் என்பதோடு அந்த திட்டத்துக்காக செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்யும் திறனும் இருத்தல் வேண்டும் என்பதோடு விண்ணப்பதாரர்/ குடும்ப உறுப்பினர்கள், சமுர்த்தித் திட்டத்தில் செயற்படுகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்வதன் மூலம் தமது குடும்பத்தின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக ஈடுபாடு மற்றும் திறனும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
18 வயதுக்கும் மேற்பட்ட தனியாக குடித்தனம் நடத்தும் பிரதான குடியிருப்பாளர்கள் பட்டியலின் கீழ் வாழும் ஆட்கள் சமுர்த்தி முத்திரையைப் பெற்றுக்கொள்ள தகுதியான வயதெல்லை கொண்டவர்கள். இதற்கும் மேலதிகமாக மதகுருமார், சிறுவர் இல்ல, மாற்றுத்திறனாளிகள் காப்பகங்களில் உள்ள 18 வயதிற்குக் குறைந்த தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளவர்களுக்கு ரூபா 1500 இற்கான சமுர்த்தி நிவாராண கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. 2019/04/05 ஆம் திகதியிடப்பட்ட 2077/55 என்ற இலக்கத்தினுடைய விசேட வர்த்தமானியின் மூலம் வெளியிடப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் பிரகாரம் கல்வி, சுகாதாரம், பொருளாதார நிலை, சொத்துக்கள், வீட்டின் நிலை, குடும்ப கட்டமைப்பு போன்ற சுட்டிகளை பகுப்பாய்வு செய்து சமுர்த்தி நிவாரண உதவிகளை வழங்குவதற்குப் பொருத்தமான ஆட்களை தெரிவு செய்து கொள்ளல் வேண்டும்.
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழுகின்ற பெரும்பாலான மக்கள் மேற்குறிப்பிட்ட பல சுட்டிகளில் பலவீனமான முறையில் இருக்கின்ற நிலையிலும் அவர்கள் எந்தவொரு நிவாரணக் கொடுப்பனவு முறையிலும் உள்வாங்கப்படாத நிலையிலேயே இருக்கின்றனர். சமுர்த்தி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது தகைமையுடைய குடும்பங்களை அறிவூட்டி அதற்காக அவர்களை ஈடுபடுத்துவதற்கு குறித்த பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு தகைமை இருப்பதாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்திருந்த நிலையிலும் எந்தவொரு அரசியல் தலைமைகளும் இவற்றை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.
மேடைகள் ஏறினாலும், மக்கள் கூட்டங்களை கூட்டினாலும் எதிர்த்தரப்பின் குறைகளைக் கூறுவதற்கும் அவர்களை மோத அழைப்பதற்குமே அவைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்களே தவிர மக்களை தெளிவுப்படுத்தவோ, விழிப்புணர்வூட்டவோ முன்வருவதில்லை. சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இவ்விடயத்தில் திருப்திகரமான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் 756 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பதுளையில் 976 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கண்டியில் 1940, மாத்தளையில் 861, இரத்தினபுரியில் 992, கேகாலையில் 926 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் காணப்படுகின்ற நிலையிலும் சமுர்த்தி பயனாளிகளின் தொகை பெருந்தோட்டப்பகுதிகளில் கடந்த 2015 - 2019 வரையான காலப்பகுதிகளில் பாரிய மாற்றமில்லாமலேயே பயணித்திருக்கின்றது.
அரச ஊழியர் அல்லாத குடும்பமொன்றின் மாத வருமானம் 4 உறுப்பினர்கள் அல்லது அதற்கும் மேற்பட்டதாயின் 24000 ரூபாவுக்கும் குறைவாகவும் 3 உறுப்பினர்களெனில் 18000 ரூபாவை விட குறைவாகவும் 2 உறுப்பினர்களெனில் 12000 ரூபாவுக்கும் குறைவாகவும் 1 உறுப்பினரெனில் 6000 ரூபா அளவில் இருப்பதாயின் அக்குடும்பம் சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதியுள்ளதாகக் கருதப்படும். இவ்வாறான குடும்பங்கள் 2019 ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்கள். ஆனால் எத்தனை பேர் முறையாக அதனை நிறைவேற்றியிருந்தார்கள் என்பது தெரியவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் தலவாக்கலை சமுர்த்தி வங்கிக் கிளை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 15 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான சமுர்த்தி உதவித்தொகை பெறும் குடும்பங்களுக்கான கூப்பன் விநியோகத்திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2033 பேர் சமுர்த்தி கூப்பன் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த போதிலும் அவர்களில் 353 பேருக்கு மாத்திரமே கூப்பன்கள் வழங்குவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எஞ்சிய 1680 பேரின் நிலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம், 1120 பேர் சமுர்த்திக் கூப்பன்களுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அக்குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவர் சமுர்த்திப் பயனாளியாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் பின்வரும் தொகையிகை நிவாரணமாகப் பெற்றுக்கொள்ள முடியும். 4 அல்லது அதிலும் மேற்பட்ட அங்கத்தவரை கொண்ட குடும்பத்துக்கு 3500 ரூபாவும் 3 அங்கத்தவரை கொண்ட குடும்பத்துக்கு 1500 ரூபாவும் வலுவூட்டப்பட்ட குடும்பங்களுக்கு 420 ரூபாவும் மாதாந்தம் வழங்கப்படும்.
அதேவேளை சமுர்த்திப் பயனாளிகளுக்கு அவர்களுக்கு வழங்கப்படும் முழுத்தொகையும் கிடைக்கப்பெறுவதில்லையென்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. (உதாரணமாக 2000 ரூபா அரசாங்கத்தால் வழங்கப்பட்டாலும் பயனாளிகளுக்கு 1900 ரூபாவே சென்றடையும் நிலை காணப்படல்.) ஆனால் நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் முறையில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டே கொடுப்பனவு வழங்கப்படுகிறது. நிவாரணக் கொடுப்பனவு பிரிந்து செல்கின்ற விதத்தினை அட்டவணை 02 இன் மூலம் அறிந்து கொள்ளமுடியும். நிவாரணம் கிடைக்கப்பெறாத ஆட்கள் பொதுவாக கவனத்தில் கொள்ளப்படுவதுடன் பெருந்தோட்டப்பிரதேச மக்கள் அல்லது அவ்வாறானல்லாதவர்கள் எனக் குழுக்களாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தால் பிரிக்கப்படுவதில்லையெனவும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
2016 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இலங்கையின் வறுமைச்சுட்டெண் 4இ1 வீதமாக காணப்படுகையில் நகர்புறங்களில் 1.9 வீதமாகவும் கிராமப்புறங்களில் 4.3 வீதமாகவும் தோட்டப்புறங்களில் 8.8 வீதமாகவும் காணப்படுகிறது. நாட்டில் அதிகமான வறுமையாளர்கள் தோட்டப்புறங்களில் இருப்பதாகக் கூறப்படுவதற்கு அவர்களின் வருமானம் பிரதான காரணமாக இருக்கலாம். எனவே வருமானப்பற்றாக்குறையை ஓரளவுக்கு குறைக்கும் வகையிலாவது சமுர்த்திக் கொடுப்பனவுகள் தகுதியானவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும்.
ஏதேனும் சமுர்த்தி நிவாரணம் ஒன்றினைக் கோருவதாயின் அக்கோரிக்கைகளுக்குரிய பிரிவுப் பொறுப்புக்களில் செயற்படும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகத்திற்கு, மாவட்ட செயலகத்திற்கு இல்லது திணைக்களத் தலைமை காரியாலயத்திற்கு சமர்ப்பிக்க முடியும். அதற்கமைய அந்த விண்ணப்பம் தொடர்பில் கவனத்திற்கொண்டு பிரதேச செயலாளரின் சிபாரிசின் பிரகாரம் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையதிபதியின் அங்கீகாரத்தின்படி சமுர்த்தி நிவாரணத்தினை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...