இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் பிக்குமாரின் வகிபாகம், வளர்ச்சி, நீட்சி, வீழ்ச்சி எத்தகையது என்பது பற்றி விரிவாக ஆராயப்படவேண்டும். இடதுசாரித்துவத்திலிருந்து அவர்கள் பேரினவாத தலைமைகளாக பரிமாற்றமடைந்ததை தனியாக ஆராய்வதைத் தூண்டும் ஒரு கட்டுரையாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.
பிரதான வலதுசாரி தேசியவாத கட்சிகள் தமது கட்சிகளில் பிக்குமார் முன்னணியையும் ஆரம்பித்து பேணி வருவதில் நமக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால் இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள் பல; நெடுங்காலமாகவெ தமது இயக்கத்துக்குள் பிக்கு முன்னணியை அமைத்து பேணி வந்துள்ளன. அவை அக்கட்சிகளுக்குள் பெரும் செல்வாக்கையும் செலுத்தி வந்துள்ளன. ஜே.வி.பி.யும் அதில் விவிலக்கில்லை.
பிரதான வலதுசாரி தேசியவாத கட்சிகள் தமது கட்சிகளில் பிக்குமார் முன்னணியையும் ஆரம்பித்து பேணி வருவதில் நமக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால் இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள் பல; நெடுங்காலமாகவெ தமது இயக்கத்துக்குள் பிக்கு முன்னணியை அமைத்து பேணி வந்துள்ளன. அவை அக்கட்சிகளுக்குள் பெரும் செல்வாக்கையும் செலுத்தி வந்துள்ளன. ஜே.வி.பி.யும் அதில் விவிலக்கில்லை.
ஜே.வி.பியின் இனத்துவ அரசியல் அணுகுமுறை இன்று நிறைய மாற்றம் கண்டிருந்தாலும் கூட அதை அவர்கள் உரிய முறையில் சுயவிமர்சனத்துடன் அரசியல் களத்தில் உரையாட முன்வருதல் அவசியம். அப்படிப்பட்ட ஒரு சுயவிமரசனத்தைக் கோருவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்குமான தகவல்களை உள்ளடக்கியது இக்கட்டுரை.
1940கள், 1950களில் பௌத்த தேசியவாதத்தின் முக்கிய கருத்துருவாக்கவாதியாக திகழ்ந்தவர் “வல்பொல ராஹுல தேரர்”. வித்தியாலங்கார பிரிவென்னின் உபவேந்தராக அவர் இருந்தார். பின்னர் அதுவே களனி பல்கலைக்கழகமாக மாறியபோது அதன் உபவேந்தராக இருந்தார். இலங்கையின் பௌத்த வரலாற்றில் மிகவும் விவாதப்பொருளாக ஆகிய நூலான 1946 இல் வெளியான “பிக்குமாரின் பாரம்பரியம்” (பிட்சுவகே உறுமய) என்கிற நூலை எழுதியவர் அவர். அதுமட்டுமன்றி ஏராளமான பிரபல சிங்கள வரலாற்று நூல்களை எழுதியவர். தீவிர பிக்குமாரை அவர் “அரசியல் பிக்குகள்” என்று அழைத்தார்.
“பிக்குமாரின் பாரம்பரிம்” என்கிற அவரின் நூல் பல விவாதங்களைத் தோற்றுவித்ததோடு இன்றளவிலும் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. பிக்குமாரின் பாரம்பரியக் கடமை அரசியல் செய்வதல்ல அதை விட அவர்களுக்கு சமூகப் பொறுப்பு, சமூகவேலைகள் அதைவிட முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.
இலங்கையின் வரலாற்றில் பலமான மாணவர் அமைப்பை பல்கலைகழகங்களில் வார்த்தெடுத்து அதனை அரசியல் சமூக செயற்பாடுகளோடு இணைத்தெடுத்தது ஜே.வி.பி தான். ஜே.வி.பியில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை பிக்குமார் ஜே.வி.பி.க்குள் நுழைவதற்கான நுழைவாயிலாக இந்த மாணவர் இயக்கம் தான் இருந்தது. சகல பல்கலைகழகங்களிலும் இருந்த அவர்களின் மாணவர் அமைப்புகளை ஒரு குடையின் கீழ் இணைக்கும் வகையின் அதன் பெயர் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்றே பெயரிட்டிருக்கிறார்கள். ஜே.வி.பியின் அமைப்புத்துறையானது பல முன்னணி அமைப்புகளை கட்டி அதன் கீழ் ஒன்றிணைத்திருக்கிறது. மாணவர், விவசாயிகள், வைத்தியர்கள், பெண்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் என பல சமூக சக்திகளையும் தனித்தனியாக இயக்கக் கூடியவகையிலும் தேவையான வேளை அனைத்தையும் ஒரே போராட்டத்தில் இணைக்கக் கூடிய வகையிலும் தான் அவர்களின் அமைத்துறை வியூகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு மார்க்சிய புரட்சிகர இயக்கம் மதத்தையும், மத நிறுவனங்களையும், மதத் தலைவர்களையும் எப்படி கையாண்டிருக்கவேண்டும் என்பதற்கு புரட்சிகர வழிமுறைகள் உண்டு. பொருள்முதல்வாத தத்துவத்தை ஏற்றுக்கொள்பவர்கள் மதங்களைக் கையாளும் நாத்திக வழிமுறையே மாக்சிய வழிமுறையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இலங்கையின் அரசியலிலும், பெரிய அரசியல் கட்சிகளிலும் பௌத்தம் தவிர்க்கமுடியாததாக ஆக்கப்பட்டிருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. 1935இல் முதலாவது இடதுசாரிக் கட்சி லங்கா சமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியும் அதுதான். அக்கட்சியின் மூலம் தான் பிக்குமாரும் கட்சி அரசியல் செயற்பாடுகளில் நேரடியாக இறங்கினர் என்று கூறலாம்.
ஸ்ரீ சரணங்கர தேரர்
லங்கா சமசாமஜக் கட்சியில் பிரதான செயற்பாடுகளில் உடுகெந்தவல சரணங்கர தேரர் முக்கிய பாத்திரத்தை ஆற்றினார். 1932ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்துவதற்காக மேற்கு வங்காளம் சென்று செயற்பட்ட போது பிரிட்டிஷ் அரசு அவரை 1932 இல் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் நோயுற்றிருந்தபோது அவரை ஜவஹர்லால் நேரு சிறையில் சென்று பார்வையிட்டு ஒரு அறிக்கையை அரசிடம் கையளித்ததன் விளைவாக் அவர் 1936இல் விடுதலையானார். அவர் இலங்கை வந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடுவதற்காக லங்கா சமசமாஜக் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டார். 1937 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இலங்கைக்கு சோசலிசம் ஏன் அவசியம்?” என்கிற நூல் பரபரப்பை ஏற்படுத்திய நூல். அந்த நூலுக்கு எதிராக அன்றைய சிங்கள-பௌத்த தேசியவாத பத்திரிகையான “சிங்கள பௌத்தயா” பத்திரிகையில் பியதாச சிறிசேன தொடர் கட்டுரைகளை எழுதினார்.
1939ஆம் ஆண்டு சமசமாஜ கட்சி பிளவடைந்தபோது அதிலிருந்து வெளியேறியவர்களில் ஸ்ரீ சரணங்கர தேரரும் ஒருவர். பிரிந்தவர்கள் 3.07.1943 அன்று “கொம்யூனிஸ்ட் கட்சி”யை உருவாக்கியபோது, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது தலைவராக தெரிவாவனவர் ஸ்ரீ சரணங்கர தேரர். இந்த இடைக்காலத்துக்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பின் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
வியட்நாம் யுத்தக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அவர் இலங்கையில் “வியட்நாம் சகோரத்துவ இயக்கம்” என்கிற அமைப்பைத் தொடங்கினார். 1957இல் அவருக்கு ரஷ்யாவில் லெனின் சமாதான விருது வழங்கப்பட்டது.
இவரின் காலத்தில் தான் பிக்குமார் அரசியல் பணிகளுக்குள் இழுக்கப்பட்டார்கள். 1950கள் பண்டாரநாயக்க சகாப்தத்தில் (தசாப்தத்தில்) நேரடியாக சிங்கள பௌத்த தேசியவாதிகளாக பிக்குமார் பலர் கட்சி அரசியலுக்குள் அதிகளவு இறங்கினார்கள்.
ஜே.வி.பி.யின் நுழைவு
அதன் பின்னர் வந்த அடுத்த சில தசாப்தங்களுக்குக் கூட மதத்தை அதிகளவு இடதுசாரிக்க்கட்சிகள் இழுத்துப் போட்டுக்கொண்டதில்லை. ஆனால் 1956 க்குப் பின்னர் இடதுசாரிகளாக இருந்த முக்கிய தலைவர்கள் சிலர் சிங்கள பௌத்த தேசியவாத நிகழ்ச்சிரலுக்குள் உள்ளிழுக்கப்பட்டார்கள்.
ஜே.வி.பியின் ஆரம்பமும் கூட சிங்கள பௌத்த தேசியவாத எச்சசொச்சனங்களுடன் தான் தொடங்கப்பட்டது என்பதற்கு ஏராளமான கதைகளைக் கூறமுடியும். தோழர் சண்முகதாசன் அது குறித்த பதிவுகளைக் கூட செய்துமிருக்கிறார்.
1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது நூற்றுக்கணக்கான பிக்குமார் அதில் பங்கெடுத்திருந்தார்கள். அக்கிளர்ச்சியின் போது அரச படைகளால் கொல்லப்பட்ட பிக்குமாரின் எண்ணிக்கை 50க்கு கிட்டியது. நூற்றுக்கணக்கான பிக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
கொல்லப்பட்ட 681 பிக்குமாருக்காக ஊர்வலம் செல்லும் ஜேவிபியின் அனைத்துப் பல்கலைக்கழக பிக்கு ஒன்றிய பிக்குமார் |
1987-1989 காலகட்ட இரண்டாவது கிளர்ச்சி காலத்தில் ஜே.வி.பி.யில் ஏராளமான பௌத்த பிக்குமார் தலைமறைவுப் பணிகளில் ஈடுபட்டார்கள். 1987இல் நேரடியாக ஜே.வி.பியின் இரகசிய செயற்பாடுகளில் 525 பேர் இருக்கும் என்கிறார் ஜே.வி.பியைப் பற்றிய வரலாற்று ஆய்வு நூலை எழுதிய மேற்கொண்ட “தர்மன் விக்கிரமரத்ன”. கட்சிக்கு வெளியில் பல நூற்றுக்கணக்கான பிக்குமார் ஆதரவாளர்களாக இருந்தார்கள். ஜே.வி.பி தடை செய்யப்படுவதற்கு முன்னர் இறுதியாக 1983ஆம் ஆண்டு ஜே.வி.பியின் மே தின ஊர்வலத்தில் போது சோசலிச பிக்குகள் சங்கத்தைச் சேர்ந்த 550 பிக்குமார் கலந்து கொண்டிருந்தனர்.
ஜே.வி.பி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் ஜே.வி.பியின் பல பகிரங்க செயற்பாடுகளை முன்னெடுக்க இப்படி அமைக்கப்பட்ட “மனிதாபிமான பிக்குகள் சங்கம்”, “அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியம்” போன்ற முன்னணி அமைப்புகளின் மூலம் தான் மேற்கொள்ளப்பட்டன.
பிக்குமாரை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர் டீ.எம்.ஆனந்த. மேலும் விஜேவீர, கமநாயக்க ஆகியோருக்கு அடுத்ததாக மூன்றாவது தலைவர் என்று கூறக்கூடியவராக இருந்தார் அவர். அவர் ஒரு பிக்குவாக இருந்தவர். அவரே ஜே.வி.பி.க்குள் ஏராளமான பிக்குமாரை இணைக்கக் காரணமாக இருந்தவர்.
1986ஆம் ஆண்டு தாய் “நாட்டைப் பாதுகாப்பதற்கான இயக்கம்” (மவ்பிம சுரகீமே வியாபாரய) என்கிற பெயரில் தெமட்டகொட பதானசர விகாரையில் ஜே.வி.பி ஒரு முன்னணியைத் தொடங்கியது. ஜே.வி.பி.யின் சோஷலிச பிக்கு முன்னணியினர் இதனை ஒழுங்கு செய்வதில் பிரதான இடம் வகித்தார்கள். இதில்தான் ஏராளமான பிக்குமார் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இலங்கையை பாரிய அளவில் உலுக்கிக் கொண்டிருந்த இயக்கம் அது.
களனி பல்கலைக்ககத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர்களான கடுகண்ணாவ சீவலி, பதுளை குணசிறி போன்றவர்களுக்கு இந்த இயக்கத்தால் மரணதண்டனை அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் படையினர் மீது அந்த பழி போடப்பட்டது. ஆனால் அன்றைய ஐ.தே.க ஆட்சியின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட பலர் ரயர்களில் எரிக்கப்பட்டார்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படையினர் ஒருபுறம் சந்தகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை கொன்று குவித்த அதே வேளை ஜே.வி.பி.யின் முன்னணி இயக்கங்களும் தமது எதிரிகளாக கருதப்பட்ட அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களையும், சாதாரண பொதுமக்கள் பலரையும் கொன்றனர். அப்படி ஜே.வி.பி.யால் கொல்லப்பட்டவர்களில் பிக்குமாரும் அடங்குவர். அப்படிக் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை இப்போது பல நூல்கள் வெளியிட்டிருக்கின்றன.
1987 ஆம் ஆண்டு ஜே.ஆருக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து நாட்டையே ஸ்தம்பிக்க வைத்து முழு ஊரடங்கு சட்டத்துக்குள் பல நாட்கள் வைத்திருந்தது ஜே.வி.பி. அந்த ஒப்பந்தத்தையும், 13வது திருத்தச் சட்டத்தையும், மாகாணசபை முறையையும் எதிர்த்து பிக்குமார்கள் தான் முன்னணியில் களத்தில் இறக்கப்பட்டார்கள்.
கோட்டை அரசமர சந்தியில் 20,000 பேருக்கும் மேல் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரினால் அடிவாங்கும் கேகாலை விமல சாமநேர தேரர். |
28.07.1987 அன்று கொழுப்பு புறக்கோட்டை போதிமரத்திர்கருகில் இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களவர்களை ஒன்றுதிரட்டி நடத்திய போராட்டம் வரலாற்றில் முக்கியமான ஒன்று. பல பிக்குமார் களத்தில் இறக்கப்பட்டார்கள் அப்படியிருந்தும் அரச படை அவர்களை மோசமாக ஒடுக்கியது. இந்த ஏற்பாட்டுக்கு டீ.எம்.ஆனந்த தான் தலைமை கொடுத்தார். படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளிபர்ட் என்கிற மாணவன் ஸ்தலத்திலேயே பலியானார்.
ஜே.வி.பியின் இரண்டாம் கிளர்ச்சிக் காலத்தில் 724 பிக்குமார் கொல்லப்பட்டனர்.
ஜே.வி.பி.யின் ஆரம்பம் தொட்டு இலங்கையின் இனப்பிரச்சினையை ஒரு வர்க்கப் பிரச்சினையாக வியாக்கியானப்படுத்தினாலும் இனவாதப் பார்வை கொண்டதாகவே அவை இருந்தன என்பதை பல இடதுசாரி முற்போக்கு சக்திகளும் தெளிவுபடுத்திவிட்டார்கள். அவர்கள் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறைகளை இனங்கண்டுகொள்ளவில்லை. மாறாக அவர்களின் அபிலாஷைகளை இனவாத முனைப்பாகவே கருதியதுடன், பிரிவினைவாதம் என்றும், ஏகாதிபத்தியத்தின் வேலைத்திட்டம் என்றும் வியாக்கியானப்படுத்தினர். இனப்பிரச்சினை குறித்த அவர்களின் கருத்துக்களும் செயலும் இனவாத நடவடிக்கைகளாகவே அமைந்தன. 1960களின் இறுதியில் இந்தியாவை ஐந்தாம்படை என்கிற முழக்கத்துடன் மலையக மக்களை எதிரிகளாக சித்திரித்தது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெளிக்கிளம்பியபோது லெனினையும், மார்க்சையும், ரோசா லக்சம்பேர்க்கையும் பிழையாக வியாக்கியானப்படுத்தி, திரிபுபடுத்தி அப்போராட்டத்துக்கு எதிராக சிங்கள பௌத்தர்களை ஒன்றிணைக்கச் செய்தது எல்லாமே இதன் நீட்சி தான்.
80களில் ஜே.வி.பியிள் இயங்கியவர்கள் தான் 90 களில் நேரடியான சிங்கள இனவாத அமைப்புகளுக்கு தலைமை கொடுத்தனர். அவர்களின் சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனைக்கான பாசறையாக ஜே.வி.பி இருந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக 2000களில் “ஜாதிக ஹெல உறுமய” கட்சியாக பரிணமித்தவர்கள் 90களில் சிங்கள வீர விதான இயக்கமாக இருந்தவர்கள். 80களின் இறுதியில் “ஜனதா மித்துரோ” என்கிற பெயரில் இருந்தவர்கள். 80 களில் ஜே.வி.பியில் இருந்தவர்கள். சம்பிக்க ரணவக்க 80களில் ஜே.வி.பி.யின் இரானுவப்பிரிவில் இருந்தவர். அத்துரலிய ரதன தேரர் சோஷலிச பிக்கு முன்னணியில் இருந்தவர்.
அத்துரலியே ரதன தேரரும் 71 கிளர்ச்சியில் பதுளை மாவட்ட உபதலைவர் ஜயந்த ஜயமுனி , களனி கழுபான பியரதன தேரர் - 1991ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தின் பின்னர். |
இலங்கையின் வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பௌத்த பிக்கு பத்தேகம சமித தேரர். அவர் 2001ஆம் ஆண்டு லங்கா சம சமாஜ கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டார். ஆரம்பத்தில் நவ சம சமாஜ கட்சியிலிருந்த அவர் அக்கட்சியிலிருந்து வாசுதேவ நாணயக்கார பிரிந்து சென்ற போது அவரோடு சமித்த தேரோவும் வெளியேறினார். இன்றும் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளில் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த பிக்குமார் அங்கம் வகிக்கவே செய்கிறார்கள்.
இன்றைய அரசியலில் பிரபல ஜனநாயக செயற்பாட்டாளராக அறியப்பட்ட தம்பர அமில தேரர் ஒரு காலத்தில் ஜே.வி.பி.யின் சோஷலிச பிக்கு சங்கத்திற்கு தலைமை தாங்கியவர் தான். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக ஜே.வி.பியால் முன்மொழியப்பட்டவர் தம்பர அமில தேரர்.
1987 தொடங்கி 2009 யுத்தம் முடியும் வரை ஒப்பந்தங்களை முறியடிக்கவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டவர்களில் முதன்மையானவர்கள் காவியணிந்த ஜே.வி.பி. பிக்குமாரே.
இந்த இடைக்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலைமை தாங்கியவர்கள் பிக்குமார். காவியுடையை களைந்து புலிகளுடன். யுத்தத்துக்கு சென்ற பிக்குமார் இருக்கிறார்கள். யுத்த காலத்தில் படையணிகளுக்கு பௌத்த அனுட்டானம் வழங்கி ஆசீர்வாதத்துடன் வழியனுப்பினார்கள். யுத்தத்துக்கு நிதி சேகரித்து கொடுத்தார்கள். யுத்தத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள். சமாதான முயற்சிகள் அனைத்தையும் எதிர்த்து மூர்க்கத்தனமாக களத்தில் இறங்கினார்கள். இதில் பெரும்பங்கு ஜே.வி.பியைச் சேரும்.
ஜே.வி.பி.யின் அரசியல் போக்கில் இன்று நிறைய மாற்றம் கண்டிருக்கிறது. ஆனால் அதை மக்கள் நம்பவேண்டுமென்றால் அதற்கு முன்நிபந்தனையாக தவறுகளை ஏற்று சுயவிமர்சனம் செய்ய வேண்டும். தமிழ் மக்களிடம் வந்து சொல்வதை சிங்கள மக்களிடமும் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் சுயநிர்ணய உரிமை, அரசியல் தீர்வு விடயத்தில் சுற்றி வளைக்காமல் நேரடியாக கொள்கைகளை வெளிப்படுத்த வேண்டும்.
பௌத்த மதத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை பகிரங்கமாக விமர்சிக்க முன்வரவேண்டும். அந்த முன்னுரிமையை நீக்கி மதச்சார்பற்ற நாடாக ஆக்குவோம் என்கிற கொள்கையை பகிரங்கமாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கூறவேண்டும், அதற்கான விழிப்புணர்ச்சியையும், அரசியல் வழிநடத்தலையும் அங்கு செய்ய வேண்டும்.
பிக்குமார்களின் இனவாத அட்டூழியங்களை உரிய நேரங்களில் தட்டிக் கேட்காமல் இருப்பதன் காரணம் இனவாதமா? அல்லது அவர்களை பகைக்கக் கூடாது என்கிற கொள்கையா? அல்லது வாக்கு வங்கி பற்றிய பயமா? இதில் எது காரணமாக இருந்தாலும் ஒரு புரட்சிகர கட்சி என்கிற தகுதியை ஜே.வி.பி. இழந்துவிடும். ஜே.வி.பி சிங்கள பௌத்த தொழிலாளர்களுக்கான கட்சியா அல்லது அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்குமான கட்சியா என்பதை இனியாவது தாமதமின்றி வெளிப்படுத்தியா
கவேண்டும். பிக்குமார்களைக் கண்டித்திருக்கிறோம் என்று எங்கேயோ ஓரிரு சிறு உதாரணங்களைக் கொண்டுவந்து காட்டும் சாக்குபோக்கு வேண்டாம்.
அடிக்குறிப்பு
டீ.எம்.ஆனந்தவறுமை காரணமாக தனது குடும்பத்தவர்களால் பௌத்த பிக்குவாக மாற்றப்பட்டிருந்தவர் டீ.எம்.ஆனந்த. நாரத பியனந்த ஹிமி என்கிற பெயரில் பௌத்த பிக்குவாக இருந்த அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் ஜே.வி.பி.யின் மாணவர் அமைப்பில் இணைந்து ஜே.வி.பியின் மேல்மாகாணம் சப்பிரகமுவா மாகாணத்துக்கு பொறுப்பாளராக செயற்பட்டார். மாணவர் அமைப்பு, பெண்கள் அமைப்பு, பிக்கு அமைப்பு என்பவற்றுக்கும் தலைமை தாங்கினார். பின்னர் ஜே.வி.பியின் அரசியல் குழுவில் இருவராக இருந்தார்.
ஜே.வி.பியின் பிக்கு முன்னணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர் தான் ஆனந்த. 1981 இல் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு ஜே.வி.பி.யின் முழுநேர ஊழியராக ஆனார்.
1988-1989 காலப்பகுதியில் ஜே.வி.பியின் அதிகமான பணிகளை மேற்கொண்டவர்களாக ஜே.வி.பி.யின் இராணுவப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த ஜயசிறி பெர்ணான்டோவும், முன்னணி அமைப்புகளை டீ.எம்.ஆனந்தவும் தான் ஒருங்கிணைத்தார்கள். டீ.எம்.ஆனந்தவும், ஜயசிறியும் அரசியல் குழுவில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்ததால் அவர்கள் தம் செயற்பாடுகள் குறித்து கொண்டிருந்த அதீத நம்பிக்கை ஜே.வி.பி யை மேலும் குரூரமான இடத்துக்கு எடுத்துச் சென்றது. விஜேவீரவுக்கு சிறுபான்மை ஆதரவே இருந்தது. இயக்கத்தின் பிளவைத் தடுப்பதற்காக அவரால் டீ.எம்.ஆனந்த ஜயசிறி போன்றோரின் முடிவுகளுக்கு இணங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
குறிப்பாக 1988 யூலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐ.தே.க எதிர்ப்பு சக்திகளை இணைத்து தேசபக்த ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. விஜெவீரவைப் பொறுத்தளவில் ஐ.தே.க வை வீழ்த்துவதே முதல் இலக்காக இருந்தாலும். டீ.எம்.ஆனந்த, ஜயசிறி போன்றவர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் இலக்கை வைத்தே தந்திரோபாயங்களை வகுத்தார்கள். 1989 பெப்ரவரியிலிருந்து ஜே.வி.பி.யின் உள்ளக செயலாளராக நியமிக்கப்பட்டார் டீ.எம்.ஆனந்த.
டீ.எம்.ஆனந்தாவின் ஜே.வி.பியின் மாணவர் பிரிவின் கீழ், சோஷலிச மாணவர் சங்கம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தேசபக்த மாணவர் இயக்கம், தேசிய மாணவர் மையம் என்பனவும், இளைஞர் அமைப்பின் கீழ் சோஷலிச மாணவர் சங்கம், சோசலிச பெண்கள் சங்கம் என்பனவும், பிக்கு பிரிவின் கீழ் சோஷலிச பிக்குகள் சங்கம், அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியம், மற்றும் கலாசார பிரிவுகளும் நிர்வகிக்கப்பட்டன.
1989இல் இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் சமரச பேச்சுவார்த்தைக்கு ஜே.வி.பியின் சார்பில் இயலை 13ஆம் திகதி ஜனாதிபதி பிரேமதாசவை சந்திக்க சென்றவர் டீ.எம்.ஜயரத்ன. ஆனால் அவர் எப்பேர்பட்ட பதவிகளில் இருந்தார் என்பதை அரசு அன்று அறியாதிருந்தது.
டீ.எம்.ஆனந்த ஒக்டோபர் 28ஆம் திகதி இரத்தினபுரியில் வைத்து ஒரு ஆட்காட்டியால் காட்டிக்கொடுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் தான் விஜேவீரவும் பிடிப்பட்டார். விஜேவீரவையும், உபதிஸ்ஸ கமநாயக்கவையும் காட்டிக்கொடுத்தது டீ.எம்.ஆனந்த தான் என்கிற ஒரு பொய்யை அன்றைய அரசு பரப்பியது. அதன் மூலம் ஏனையோரை சரணடயைச் செய்யலாம் என்று நம்பியது அரசு.
ஜே.வி.பி.யின் அரசியல் குழுவைச் சேர்ந்த எச்.பி.ஹேரத் அன்றைய முக்கிய அமைச்சராக இருந்த தொண்டமானை 08.11.1989 அன்று சந்தித்து பிரேமதாசவிடம் ஆனந்தவை விடுவிக்கக் கோரினார். ஆனால் பிரேமதாசா அதற்கு எந்த பதிலையும் வழங்காத நிலையில் நவம்பர் 15ஆம் திகதி டீ.எம்.ஆனந்தவை கொன்று வீசியது அரசாங்கம்.
உசாத்துணை:
- 71 කැරැල්ල (ආරම්භයේ සිට අවසානය දක්වා පූර්ණ සමාලෝචනයක් ) By: Jayatunga, Ruwan M රාජගිරිය : අගහස් ප්රකාශකයෝ, 2011
- 71 අප්රේල් නඩු විභාගය විජේවීරගේ හෘදය සාක්ෂිය, උදේනි සමන් කුමාර, Niyamuwa Publishers, 2016
- “භික්ෂූන්ගේ ලේ සොලවා දේශපාලනය කල ජවිපෙ-ජවිපෙ දෙවැනි කැරැල්ලේදී භික්ෂූහු 724 කැළෑ නීතියෙන් මරුට” - ධර්මන් වික්රමරත්න - (http://lankanewsweb.org/archives/4527)
- ලෝක සාමය වෙනුවෙන් ජීවිතය පූජා කළ උඩකැන්දවල ශ්රී සරණංකර හාමුදුරුවෝ - එස්. සුදසිංහ - திவயின - 2009/12/14
- හැට දහසකට දිවි අහිමිවූ ‘‘දේශප්රේමී’’ කැරැල්ල - ධර්මන් වික්රමරත්න - லங்கா தீப – 11.11.2018
- 1986-90 භීෂණ යුගයේ සත්ය කථා - ධර්මන් වික්රමරත්න - http://lnwtoday.blogspot.com/2015/05/1986-90.html
- http://www.lankaweb.com/news/items/2016/03/27/%E0%B6%BD%E0%B7%99%E0%B6%BA%E0%B7%92%E0%B6%B1%E0%B7%8A-%E0%B6%BA%E0%B6%9A%E0%B6%A9%E0%B7%92%E0%B6%B1%E0%B7%8A-%E0%B7%83%E0%B7%84-%E0%B6%9C%E0%B7%92%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%AF%E0%B6%BB%E0%B7%92-2/
- ජවිපෙ පාලනය විජේවීරගෙන් ගිලිහෙයි - ධර්මන් වික්රමරත්න (http://www.lankaweb.com/news/items/2016/07/02/%E0%B6%A2%E0%B7%80%E0%B7%92%E0%B6%B4%E0%B7%99-%E0%B6%B4%E0%B7%8F%E0%B6%BD%E0%B6%B1%E0%B6%BA-%E0%B7%80%E0%B7%92%E0%B6%A2%E0%B7%9A%E0%B7%80%E0%B7%93%E0%B6%BB%E0%B6%9C%E0%B7%99%E0%B6%B1%E0%B7%8A/)
- ජවිපෙ 2 වැනි කැරැල්ලේදී භික්ෂූහු 724ක් කැලෑ නීතියෙන් මරුට... ධර්මන් වික්රමරත්න - திவயின (03.09.2017)
- 1986-90 භීෂණ යුගයේ සත්ය කථා (http://lnwtoday.blogspot.com/2015/05/1986-90.html)
- විජේවීර පාවාදුන්නේ ඩී.එම්. ආනන්දද ? - ධර්මන් වික්රමරත්න http://www.lankadeepa.lk/thaksalawa/%E0%B7%80%E0%B7%92%E0%B6%A2%E0%B7%9A%E0%B7%80%E0%B7%93%E0%B6%BB-%E0%B6%B4%E0%B7%8F%E0%B7%80%E0%B7%8F%E0%B6%AF%E0%B7%94%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%B1%E0%B7%9A-%E0%B6%A9%E0%B7%93-%E0%B6%91%E0%B6%B8%E0%B7%8A--%E0%B6%86%E0%B6%B1%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%AF%E0%B6%AF--/55-544974
- භීෂණයට ගොදුරු වුණු යතිවරු - පුෂ්පනාත් ජයසිරි මල්ලිකාරච්චි http://www.lankadeepa.lk/diyatha_news/%E0%B6%B7%E0%B7%93%E0%B7%82%E0%B6%AB%E0%B6%BA%E0%B6%A7-%E0%B6%9C%E0%B7%9C%E0%B6%AF%E0%B7%94%E0%B6%BB%E0%B7%94-%E0%B7%80%E0%B7%94%E0%B6%AB%E0%B7%94-%E0%B6%BA%E0%B6%AD%E0%B7%92%E0%B7%80%E0%B6%BB%E0%B7%94/48-535999
நன்றி - அரங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...