காலா திரைப்படத்திற்கும் மலையக மக்களுக்கும் என்ன தொடர்பு என்று சிலர் புருவம் உயர்த்தக்கூடும். எனினும், அத்திரைப்படத்தின் கரு அல்லது பேசுபொருளோடு இச்சமூகம் சம்பந்தப்பட்டிருப்பதால் அது பற்றி பேச விழைந்தேன். குறித்தத் திரைப்படம் நிலம் பற்றிய உரிமையை உரத்துக்கூறுகிறது.
நகரத்தை மையமாகக்கொண்டு அதன் ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து வரும் புறநகர் ஏழை மக்களுக்கு என்றுமே நில உரிமை பற்றிய அச்சம் இருக்கும். நகர அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் புதிய திட்டங்களை முன்வைக்கும் போதெல்லாம் எப்போது தமது நிலம் பறிபோகும் என்ற பதற்றம் இந்த புறநகர் ஏழை மக்களுக்கு இருக்கும்.காரணம் அந்நிலங்கள் அவர்களுக்கு சொந்தமானதாக இருப்பதில்லை.
எனினும், மலையக பெருந்தோட்டங்களை எடுத்துக்கொண்டால் அங்கு அமைந்துள்ள நகரங்களின் வளர்ச்சியும் அபிவிருத்தியும் தொழிலாளர்களின் கைகளிலேயே உள்ளன எனலாம். ஆகையால் தான் அவற்றைப் பெருந்தோட்ட நகரங்கள் என்கிறோம். பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர்கள் தமது அன்றாட தேவைகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய நகரங்களை நோக்கி வருகின்றனர். குறித்த நகர வர்த்தகமும் அவர்களை நம்பியே உள்ளது. ஆனால், எச்சந்தர்ப்பத்திலும் நகர வர்த்தகர்கள் இம்மக்களின் வாழ்வாதாரம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து பேசியதில்லை. இதில் என்ன வேதனையான விடயம் என்றால், குறித்த சமூகத்திலிருந்து வந்த பெருந்தொகையானோர் இன்று நகர மத்தியில் செல்வாக்கோடு இருக்கின்றனர்.
அவர்களும் தொழிலாளர் சமூகத்தைப்பற்றி வாய் திறப்பதில்லை. எல்லாவகையிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு தமது இருப்பு குறித்த அச்சம் அண்மைக்காலமாக நிலவி வருகின்றது. உரிய வேதனம் இன்றி தேயிலை தோட்டங்களிலிருந்து இவர்கள் வெளியேறி வரும் நிலையில் தேயிலை மலைகள் காடுகளாகி வருகின்றன. இந்நிலையில் இத்துறையில் நட்டத்தை எதிர்நோக்கி வரும் அரசாங்கம் மற்றும் கம்பனிகள் தோட்டக்காணிகளை வெளியாருக்கு பகிர்ந்து கொடுக்கும் எண்ணத்தில் இருப்பதாக அண்மைக்காலமாக கதைகள் அடிபடுகின்றன.
இப்படி நடக்கும் பட்சத்தில் தொழிலாளர்களுக்கே காணிகளை பிரித்துக்கொடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. மலையகத்தைப்பொறுத்தவரை மண் மீட்பு போராட்டத்திற்காக தொழிலாளர்கள் உயிரையும் தியாகம் செய்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால், இப்போது போராட்ட உணர்வு மங்கிப் போன நிலையில் நிலத்திற்காக எவர் போராடுவார் என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால், இந்த மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காகப்போராடியே களைத்துப்போய் உள்ளனர். இவர்களின் நில உரிமைப் பற்றி பேசுவதற்கு எவரும் இல்லாத நிலையே உள்ளது.
ஆறு தலைமுறைகளாக ஒரே மண்ணிற்கு தமது உழைப்பை தந்து வரும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு அவர்களது பெயரில் ஒரு அடி நிலம் தானும் சொந்தமில்லாது இருப்பது எவ்வளவு அநீதி? இதே மண்ணில் இவர்களை அமர்த்தி அவர்களிடம் உழைப்பை உறிஞ்சும் அரசாங்கத்திற்கும் , மறுபக்கம் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள வாக்குகளையும் பறித்துக்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கும் பெரிதாக வேறுபாடுகளை காண முடியாதுள்ளது. பிரித்தானியர்களால் அழைத்து வரப்பட்டு பெருந்தோட்டத்தொழிலில் இவர்கள் எவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டார்களோ, என்ன சூழ்நிலை காணப்பட்டதோ அதே நிலைமை இரு சகாப்தங்களை நெருங்கும் தறுவாயிலும் தொடர்கிறது என்றால் இதை ஜீரணிக்க முடியுமா? 1972 இல் பெருந்தோட்டங்கள் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, பின்னர் தற்போது கம்பனிகளுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னரும் இந்தத்தொழிலாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட தொழிலாளர்கள் (Captive labours) என்ற நிலைமையிலேயே தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர்.
அரசாங்கத்தால் பெருந்தோட்ட நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதால் எவ்வகையிலும் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு நிலங்களை வழங்கப்போவதில்லை.
அதேவேளை, இது அவர்களின் நிலஉரிமை என்ற அடிப்படையில் அவர்களுக்கு நிலங்களைப் பிரித்துக்கொடுக்க அரசாங்கமும் சம்மதிக்காது.
ஏனெனில், அது தேயிலைத்தொழில் துறையைப் பாதிக்கும் விடயம் என்ற அச்சமும் காரணம்.வீட்டுத்திட்டங்களுக்காக குறிப்பிட்ட சில காணிகளை தற்போது வழங்கினாலும் அது மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. ஆக இந்த மக்களுக்காக நில உரிமையைப் பெற்றுக்கொடுக்க எந்தக் ‘காலா’ வும் தற்போதைக்கு வரப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.-
நன்றி - வீரகேசரி வாரவெளியீடு 17/06/18
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...