செம்பனை: உயிர்க்கொல்லி! உலகக்கொல்லி! -2
செம்பனை உயிர்க்கொல்லி, உலகக்கொல்லி என்கிற தலைப்பிட்டது அது ஏற்படுத்தும் ஆபத்து சகலவகையைச் சார்ந்தது என்பதால் தான்.
இலங்கையில் செம்பனைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் சிங்கள மக்கள் மத்தியில் எப்போதோ ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. சிங்கள மகள் மத்தியில் செம்பனைக்கு எதிரான விழிப்புணர்வும் எப்போதோ ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. பல போராட்டங்களும் கூட தொடர்ந்தவண்ணம் இருகின்றன.
முதற் தடவையாக தமிழ்ச்சூழலில் அப்படியொரு எதிர்ப்பியக்கம் தோற்றுவிக்கவிருப்பதை கடந்தவாரம் வெளியான ஒரு செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. செம்பனையின் ஆபத்து பற்றிய விழிப்புணர்வுக்காக கண்டி மனித அபிவிருத்தி தாபனம் கடந்த ஏப்ரல் 10 அன்று ஒழுங்கு செய்திருந்த ஒரு கூட்டத்தின் இறுதியில் ஒரு எதிர்ப்பியக்கத்திற்கான அத்திவாரம் இடப்பட்டிருக்கிறது. இந்த முயற்சி இனத்துவ அடிப்படையில் சுருங்கி விடாமல், தென்னிலங்கையில் ஏற்கெனவே இயங்கிகிற அமைப்புகளின் வலைப்பின்னலுடன் இணைந்தால் பலமும், பாதுகாப்பும் அதிகம்.
சரி, ஏன் இந்த எதிர்ப்பு. நேரடியாக பாதிக்கப்படும் மக்களே தற்போது களத்தில் இறகியிருக்கிறார்கள் என்பது கவனிக்கப்படவேண்டியது. இதில் ஏனைய சமூக விடுதலை சக்திகளையும் காலப்போக்கில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
ஆக இந்த இதழில் இந்த உலகு இப்போது எதிர்கொண்டிருக்கும் மையப் பிரச்சினை பற்றியும் அந்த ஆபத்தின் பின்னணியில் இயங்கும் சக்திகள் குறித்தும் சுருக்கமாக பார்ப்போம்.
செம்பனையை எதிரான உலகளாவிய எதிர்ப்பே; முதலில் அது ஏற்படுத்தும் சூழலியல் சார் பிரச்சினைகளைப் பற்றித் தான்.
உலகன்றி உயிரேது…?
உலகைக் காப்பாற்றாமல் உயிர்களைக் காத்துவிட முடியாது. பெருகும் ஜனத்தொகையின் உணவு தேவை, உறைவிடத் தேவை இன்னும் பல்வேறு அத்தியாவசித் தேவையின் காரணமாக நுகர்வு பெருகியிருக்கிறது. ஆனால் அதற்காக எஞ்சியிருக்கின்ற வளங்கள் பெருகப் போவதில்லை. மாறாக சுருங்கிக் கொண்டே செல்கின்றன. யுனிசெப் நிறுவனத்தின் கருத்தின்படி நாளொன்றுக்கு சராசரி 353,000 குழந்தைகள் பிறக்கின்றன. ஆக நுகர்வுத் தேவை பல மடங்குகள் நாளாந்தம் பெருகுகின்றன.
செகண்டுக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் உலகில் பசியால் அல்லது பசியோடு தொடர்புபட்ட பிரச்சினைகளாலும் மரணிக்கிறார்கள். இந்த வருடம் 36 மில்லியன் மக்கள் அப்படி இறக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுத்தமான குடிநீரின்றி 10 செகண்டுக்கு ஒருவர் மடிகிறார் என்று உலகக் கணிப்பு குறித்து கணக்கிடும் நிறுவனம் (The world counts) கூறுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 3,575,000 இறப்பதாக அது குறிப்பிடுகிறது. இதில் அதிகமானோர் சிறுவர்களும், குழந்தைகளுமே.
“உலக மாசடைதலும் சுகாதாரமும்” பற்றி ஆராய்ந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ப்ரூஸ் லன்பியர் (professor Bruce Lanphear) சென்ற ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் உலகின் 16% வீத மரணங்கள் சுற்றுச் சூழல் மாசடைவதால் நிகழ்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
இன்றைய நமது உலகம் அழிந்தது போக 30% காடுகளால் ஆனது. ஆண்டுதோறும் 18.7 மில்லியன் ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன. என்றும் “உலக வனஉயிர் நிதியம்” (World Wildlife Fund (WWF) எச்சரித்திருக்கிறது. உலகின் மிகப் பெரும் காடான அமேசன் காடு கடந்த 50 வருடங்களுக்குள் 17% வீத காட்டை இழந்திருக்கிறது.
வன அழிப்பினால் பாரிய அளவில் உயிரினங்கள் அழிந்து போயுள்ளன. எஞ்சிய உயிரினங்களின் இடப்பெயர்வுகளால் வனசமநிலை நாளாந்தம் சீர்குலைந்து வருகிறது.
இந்த அழிவுகளால் பெரிதும் பாதித்துக்கொண்டிருக்கும் நாடுகள் ஏழை – மூன்றால் உலக நாடுகளே. மூன்றாம் உலக நாடுகள் நூற்றாண்டுகளாக காலனித்துவத்தால் சுரண்டப்பட்டு; இன்று நவகாலனித்துவத்தின் சுரண்டலுக்கு ஆளாகி அழிந்து வருகின்றன என்பது கண்கூடு. மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை ஈவீரக்கமின்றி சுரண்டிச் செல்லும் உலக தரகு முதலாளித்துவ கார்ப்பரேட் கம்பனிகள் பாரிய அளவில் இந்த அழிவில் சம்பந்தப்பட்டுள்ளன.
வன அழிப்பு என்பது வெறும் மாரங்களை அழிப்பது மட்டுமல்ல. அது மரங்களுடன் அந்த காடுகளுக்குச் சொந்தக்காரர்களான பாரம்பரிய உயிரினங்களும், அதை நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்வாதார அழிப்பும் தான். கூடவே மண்ணின் வளம் குன்றி, உலக உயிரினங்கள் சுவாசிக்க ஒட்சிசனை உற்பத்தி செய்தவற்றை அழித்து வந்ததினால் நமக்கு கிடைக்கும் ஒட்சிசனின் அளவும் சுருங்கிக் கொண்டு வருகிறது. மாற்றுப் பயிரிடலின் பேரில் நிகழும் செம்பனை போன்றவை வெளியிடும் கரியமில வாயு (CO2 - carbon dioxide) மிகவும் அதிகமானது. இன்று உலகம் வெப்பமடைதலை (Global Warming) வேகப்படுத்துவதில் கரியமில வாயுவின் பங்கு மிகப் பெரியது. உலகம் முழுவதும் இந்தக் கரியமில வாயுவின் உற்பத்தியைக் குறைப்பது பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.
1959ஐ விட 2017ஆம் ஆண்டில் கரியமில வாயு வெளியேற்றம் 28 சதவீதத்தால் உயர்ந்துள்ளது என்று “Union of Concerned Scientists” என்கிற விஞ்ஞானிகள் சங்கம் அறிவித்திருக்கிறது. கரியமிலத்தை வெளியிடும் முதல் இரண்டு நாடுகளாக சீனாவையும், அமெரிக்காவும் விளங்குகிறது.
உலகம் வெப்படைவதால், பனி உருகி, கடல் மட்டம் உயர்ந்து, உலகின் நிலப்பரப்புகள் சுருங்கி வருகிறது. மழையின் அளவு குறைந்து வருகிறது. மனித பயன்பாட்டுக்கான நீரின் அளவு அருகி வருகிறது, வரட்சி அதிகரித்து விவசாயம் அழிந்துவருகிறது. எதிர்கால உணவுத்தேவையை ஈடு செய்ய என்ன செய்யலாம் என்று உலகத் தலைவர்கள் மாநாடு கூடி தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.
இன்று மேற்கொள்ளப்பட்டுவரும் வன அழிவுகளில் பெரும்பங்கை ஆற்றிவருகிறது செம்பனைக்காக மேற்கொள்ளப்படும் அழிப்புகள்.
இயற்கைச் சமநிலையை குழப்பிவிட்டதால் இயற்கைச் சீற்றங்களின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதைக் காண முடிகிறது. இயற்கை நமக்குத் தந்த நிலம், நீர், காற்று, உணவு அனைத்தையும் கெடச்செய்துவிட்டோம். இந்த நாசத்தில் சாதாரணர்களின் பங்கு குறைவே. இன்னும் இந்த ஆபத்தை உணரும் விழிப்புணர்வு அம்மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. ஆனால் நாசத்தில் பெரும்பங்கை உலக முதலாளித்துவ கூட்டு ஆற்றிவருகிறது.
உலகிலுள்ள 70 சதவீதத்துக்கு அதிகமான மக்களிடம் உலகின் 3 வீத செல்வமே இருக்கிறது. உலகின் 8.6. சதவீதமானோரிடம் தான் உலகின் 85.6% சதவீத செல்வங்கள் குவிந்துள்ளது. “சமத்துவமின்மை” (Inequality.org) என்கிற அமைப்பு இது பற்றிய துல்லியமான தரவுகளை வெளியிட்டுள்ளது. இதை உறுதிபடுத்தும் வகையில் ஒக்ஸ்பாம் நிறுவனம் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிட்ட தரவுகளில் உலகின் 82% செல்வம் 1%வீதத்தினரிடம் தான் புழங்குகிறது என்று அறிவித்தது. இந்தக் கொள்ளையர்களே தமது மூலதனத்தை பெருப்பிப்பதற்காகவும், லாபத்தை பன்மடங்கு உயர்த்துவதற்காகவும் எஞ்சிய 99% சதவீத மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறார்கள்.
அவர்களே உலக அழிவுக்கான வழிவகைகளையும் ஈவிரக்கமின்றி மேற்கொண்டு வருகிறார்கள். பெருமளவு அதிகாரத்தையும், நிதி மூலதனத்தையும் கொண்டிருக்கும் இந்த சிறிய சக்திகள் தான் ஏனைய மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பலத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே நுட்பமாக நமது கண்களில் மண்ணைத் தூவி விட்டு நம்மை அதலபாதாளத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
நிதிமூலதனத்தைப் பாதுகாக்க அப்பாவி மக்களின் உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். செம்பனை உற்பத்தி செய்யும் நாடுகள் பலவற்றில் அவை ஆயுத பலம் கொண்ட மாபியாக்களால் தான் நிர்வகிக்கப்படுகின்றன என்கிற உண்மைகளை பின்னர் பார்ப்போம். சென்ற ஆண்டு மாத்திரம் பிரேசில் நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் செம்பனைக்கு எதிரான 70 சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் சூழலியல் திட்டத்தின் தலைவராக இருக்கும் எரிக் சுல்ஹைம் (நமது முன்னாள் சமாதானத் தூதுவரே தான்) இது பற்றி வெளியிட்டுள்ள கண்டனங்களையும் அறிக்கைகளையும் இணையத்தளங்களில் காணலாம். 2015 ஆம் ஆண்டு அங்கு 50 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் பிரேசிலில் செம்பனைக்கு எதிரான முக்கிய போராளியாக கருதப்பட்ட பிரிட்டோ (Nazildo dos Santos Brito) சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலத்தைக் கண்டெடுத்தார்கள். உலகளவில் கண்டனங்கள் வெளிவந்திருந்தன.
இலகு பணம் (easy money) சம்பாதிப்பதற்காக மக்களுக்கு உண்மை நிலை தெரியாதபடி வைத்திருப்பதற்கென நேரெதிரான பிரச்சாரங்களைச் செய்வதற்காகவே பல கோடிகளை செலவிடுகின்றன. மூளைச்சலவை செய்வதற்காகவே பெருமளவு ஊடகங்களை தமது கைப்பிள்ளையாக வைத்திருக்கின்றன. அல்லது தமது மூலதனப் பங்குடன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
உலகில் இன்று எந்த நாட்டை உதாரணத்திற்குக் கொண்டாலும் அங்கெல்லாம் பல்வேறு தொழில்களில் தமது மூலதனத்தைக் கொண்டிப்பவர்களின் கைகளில் தான் ஊடகங்களும் உள்ளன. ஊடகங்களில் அவர்கள் இடும் முதலீடுகவனிக்கப்படவேண்டியது. ஊடகங்கள் அவர்களைப் பாதுகாக்கும் ஆயுதம். சிலவேளை அவர்களுக்கு ஊடகங்கள் சிறு லாபத்தையும் அள்ளித் தரக்கூடும். பெருமுதலாளிகளுக்கு அடுத்ததாக இன்று அதிகாரத்தில் இருப்பவர்களும், அதிகாரத்துக்காக எத்தனிப்பவர்களும் ஊடகங்களை உருவாக்கி, இயக்குவதை காணமுடியும். இந்த உதாரணத்தை இலங்கைப் பின்னணியில் ஆராயும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
அமெரிக்காவில் மாத்திரம் 6 கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் 90% வீதமான ஊடகங்கள் இருக்கின்றன. அதாவது கிட்டத்தட்ட அங்குள்ள மொத்த மக்களின் சிந்தனையை வழிநடத்தும் சக்தி இந்த 6 நிறுவனங்களிடம் தான் இருக்கின்றன. உலக மக்களின் சிந்தனைத் தீர்மானிப்பதில் அமெரிக்காவின் வகிபாகம் என்ன என்பதைப் பற்றி இங்கு நான் புதிதாகச் சொல்லப்போவதில்லை.
இப்பேர்பட்ட நிலையில் அரசாங்க தென்னை ஆராய்ச்சி நிறுவனம் (CRI - Coconut Research Institute) செம்பனை உற்பத்தியை விரிவாக்குவதை வருடாந்தம் ஊக்குவிக்கிறது என்பதை அவர்களின் அறிக்கையிலிருந்து அறிய முடிகிறது.
செம்பனை உற்பத்திக்காக இதுவரை ஏற்படுத்தியிருக்கிற அழிவுகளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...