மலையக மக்களின் பிரச்சினைகளை பதிவு செய்ய ‘ஜனாதிபதி ஆணைக்குழு’ ஒன்று அமைக்கப்படல் வேண்டும் என்பது எனது அண்மைக்கால கோரிக்கைகளில் ஒன்று. உண்மையில் இது அண்மைக்கால கோரிக்கை என்று கூட சொல்ல முடியாது. 2016 ஆண்டிலேயே இந்த கோரிக்கையை விடுத்திருந்தேன்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரின் போது இலங்கை அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் சேர்ந்து விடும் ஒன்று. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்ததும், ‘இந்த முறை சர்வதேச நீதி விசாரணையும் வந்தே தீரும்’ என்ற நம்பிக்கையும் பலருக்கு இருந்தது.
அந்த எதிர்பார்ப்பைப் போலவே 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதியும் சின்னதாக ஒரு சர்வகட்சி மாநாடு போன்ற ஒன்றை நடாத்தி சர்வதேச நீதிமன்ற விசாரணை அல்லது அப்போது பேசப்பட்ட ‘ஹைபிரிட்’ நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில் ஒவ்வொரு கட்சியினதும் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்தார். வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், தென்னிலங்கை சிங்கள கட்சிகள், பெருந்தேசிய கட்சிகள் என்பவற்றோடு மலையகக் கட்சிகளும் பிரசன்னமாகி கருத்துக்களைத் தெரிவித்தன.
சிங்கள கட்சிகள் சர்வதேச நீதிமன்ற விசாரணையை அனுமதிக்க முடியாது என்ற கருத்தையே பரவலாக தெரிவித்த நிலையில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் விசாரணை வேண்டும் என்ற தோரணையில் கருத்துக்களைப் பகிர்ந்தன.
குறிப்பாக வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ்க் கட்சிகள் 2009 இறுதி யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை வேண்டும் என்ற கருத்தை பரவலாக முன்வைத்தன. அப்போது முஸ்லிம் கட்சிகள் அத்தகைய விசாரணையானது 1990 களில் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் இருந்தே நடாத்தப்படல் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தின.
மலையக அரசியல் கட்சியொன்றின் செயலாளர் என்ற வகையில் நானும் எனது கருத்துக்களைப்பதிவு செய்தேன். அப்போது நான் முன்வைதத கோரிக்கைதான் இந்த ‘ஜனாதிபதி ஆணைக்குழு’.
இலங்கையில் மலையகத் தமிழ் மக்கள் என அழைக்கப்படுவோர் இன்னும் இந்திய தமிழர் என்றே சட்ட ரீதியாக பதிவு செய்யப்படுகின்றனர். அதாவது சனத்தொகை கணக்கெடுப்பின்போது, இலங்கையில் வாழும் சனத்தொகையை இன அடிப்படையில் மத அடிப்படையில் கணக்கெடுப்பு செய்கிறார்கள். அப்போது மலையகப் பெருந்தோட்டத் தொழில் துறையை மையப்படுத்திய தமிழ் மக்களை இந்தியத் தமிழர் (இந்தியானு தெமல) என்ற வகையறாவில் கணக்கெடுக்கிறார்கள்.
அவர்களைப் (அரசை) பொறுத்தவரையில் ‘இலங்கைத் தமிழர்’ என்போர் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி வாழும் பூர்விகத் தமிழர்கள். இந்திய தமிழர் என்போர் இந்தியாவில் இருந்து பெருந்தோட்டக் கைத்தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள். மற்றப்படி இலங்கைத தமிழர்கள் தங்களை ‘ஈழத் தமிழர்கள்’ என அழைத்துக்கொள்வதோ, இந்தியத் தமிழர்கள் தங்களை ‘மலையகத் தமிழர்கள்’ என அழைத்துக்கொள்வதோ அரசியல், பண்பாட்டு நிலையிலானது. சட்ட பதிவுகளுடனானது அல்ல. மலையகத் தமிழரை ‘இந்திய வம்சாவளி தமிழர்’ என்பதும் கூட ஒரு சமூகச் சொல்லாடல் மட்டுமே.
இனி இவர்களை மலையகத் தமிழர் என்றே இந்தப் பத்தியில் விளித்துக் கொள்வோம். இந்த மலையகத் தமிழர்களுக்கு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் வழங்கியிருந்த இலங்கைக் குடியுரிமையை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதும் சுதேச அரசாங்கம் பறித்தது முதலே இவர்களின் அடையாளம் மாத்திரமல்ல அரசியல் இருப்பே கேள்விக்குரியானது. அப்படியே ஒரு 15 வருடங்கள் கழிந்து 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்த நாடற்ற மக்களை அவர்களின் பூர்விக நாடான இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என தீர்மானம் போட்டதும், ஒரு பகுதி அனுப்பப்பட்டதும் மலையகத் தமிழ் மக்களுக்கு இலங்கையில் இழைக்கப்பட்ட பெரு அநீதி.
இந்த அநீதிகளின் விளைவாக இடம்பெற்றதெல்லாம் அவர்கள் இந்த நாட்டுக்கு உரியவர்கள் அல்லாது போனார்கள். இந்த நாட்டின் நிர்வாக முறைமையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த மக்களின் சரிபாதி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் இலங்கை சனத்தொகையில் இரண்டாம் நிலையில் இருந்தவர்கள் நான்காம் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள், அதனால் இன்றைய நிiலையில் இவர்களின் அரசியல் பலம் குறைக்கப்பட்டுள்ளது. இனி, இவற்றைப் பேசுவதனால், திருப்பி அனுப்பப்பட்ட மக்களை மீள அழைக்கப்போதில்லை. அவர்கள் இப்போதும் ‘தமிழ்நாட்டின் சிலோன்காரர்களாக’ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருப்போர் இலங்கையில் ‘இந்திய தமிழர்களாக’ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் மலையகத் தமிழர் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை என்பது அவர்கள் வாழ்ந்திருக்கவேண்டிய வாழ்க்கை அல்ல. இவ்வாறு இந்த வாழ்க்கை ஏனைய மக்களிடம் இருந்து திரிபுபட்டிருப்பதற்கு, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நிறைவேற்றப்பட்ட மேற்படி அரசியல் தீர்மானங்களே காரணம் என்பதுதான் உண்மை. இதற்கிடையில் இலங்கையில் அவ்வப்போது இடம்பெறும் இனவன்முறைகளில் இவர்கள் தாக்கப்படுவதும் இந்த நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த்தில் குறிப்பாக இறுதி யுத்தத்தில் இந்த மலையக மக்கள் பாதிப்படைநதுள்ளார்கள் என்பதனால் அது சர்வதேச நீதிமன்றமாக இருந்தால் என்ன? ஹைபிரிட் நீதிமன்றமாக இருந்தால் என்ன அங்கே பேசப்படல் வேண்டும் என்பது எனது வாதமாக அமைந்தது. அமைகிறது.
திம்பு பேச்சுவாரத்தை முதல் 2002 சமாதான பேச்சுவார்த்தை வரை இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாடுகளுக்கு (நோர்வே, ஜப்பான், இப்படி..பல) தூக்கிக்கொண்டுபோன வரலாறு நம்முடையது. அதில் இலங்கை அரசும், தமிழர் தரப்பும் இணைந்தே செயற்பட்டு இருக்கிறது. எனவே, இலங்கை நீதிமன்ற முறைமையும் சர்வதேச நீதி விசாரணையும் அல்லது மேற்பார்வையும் இணைந்த ‘ஹைபிரிட்’ முறைமை ஒன்றும் ஆச்சரியமான ஒன்று அல்ல. அதற்கு நாம் போகலாம் என்றே அன்று என் கருத்தைச் சொன்னேன். மேலதிகமாக, இந்த ஹைபிரிட் அமையுதோ இல்லையோ எங்கள் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசியே ஆக வேண்டும். அதற்கு உள்ளுரில் ஒரு ஆணைக்குழு அமைத்தல் அவசியம் அது ஜனாதிபதி ஆணைக்குழுவாக இருப்பது சிறப்பு எனவும் வேண்டுகோளை முன்வைத்தேன்.அந்த ஜனாதிபதி ஆணைக்குழு சுதந்திர இலங்கையான 1948 ல் இருந்தே ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்றேன்.
1990, 2009 கோரிக்கை வைத்த தலைவர்கள் என்னைக் கொஞ்சமாக எட்டிப்பார்த்தார்கள். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டம் நிறைவடைந்ததும் என்னைப் பார்த்த பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் ‘தம்பி’ என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் நுவரெலியா ‘எம்பி’யாக இருக்கிறேன் என்றேன். ஓ.. அப்படியா என்றார்கள் அந்த இந்நாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
எனது கோரிக்கை ஒரு வாய்மொழி மூலமானது என்கின்றதன் அடிப்படையில் உடனே அதனை எழுத்துமூல கோரிக்கையாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு அவரும் உங்கள் கோரிக்கை கவனத்pல் எடுக்கப்பட்டுள்ளது என பதில் அனுப்பியிருந்தார். இவரது இரண்டாவது கொள்கை விளக்கவுரையில் அவரது கவனம் ஏதும் சென்றிருக்கிறதா என்ற எதிர்பார்ப்பில் அதனை வாசித்தபோது அது பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தல் என்ற ஒற்றை வரிக்குள் சுருங்கியிருந்தது.
எனவே விவாதத்தில் கலந்துகொண்டு ஹன்சாட் பதிவுகளுக்காக முன்னைய ‘மலையக மக்களின் பிரச்சினைகளைப் பதிவு செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம்’ என்ற கருத்தை வலியுறுத்தினேன். அதில் ஒரு வரி இப்படி வந்து விழுந்தது…. மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி பின்னர் யோசிக்கலாம். இப்போதைக்கு அவர்களின் பிரச்சினைகளை உத்தியோகபூர்வமாக பதிவு செய்ய ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமியுங்கள் என்பதுதான் அந்த கோரிக்கை.
ஏனெனில் மலையக மக்களின் பேசப்படாத பிரச்சினைகள் பல பேச வேண்டியுள்ளது. அதனை அந்த மக்களே பேச அனுமதி வழங்கப்படல் வேண்டும். மலைகளின் மௌனத்துக்கு கீழே பல குமுறல்கள் புதைந்து கிடக்கின்றன. மலைகளைப் பேசவிடுங்கள்.
நன்றி அரங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...