மக்களின் சிந்தனையைத் தீர்மானிக்கின்ற அதிகாரமும், ஆற்றலும் இன்று அடக்கப்படும் மக்களின் கைகளை விட்டு நழுவியுள்ளது. அவர்களால் சிந்தனைத் தீர்மானிக்க முடிவது போல், சிந்தனையை மறக்கடிக்கவும் திசைதிருப்பவும் பொறிமுறையைக் கொண்டுள்ளார்கள். நமக்கு வெளியில் நமக்கான நிகழ்ச்சிநிரல் தீர்மானிக்கப்படுகிறது.
வேகமாக மாறிவரும் உலகில் நினைவுகளும் கூட ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வேகமாக தாவி விடுகிறது.
யுத்த காலத்தில் நிகழ்ந்த ஒன்றை இங்கு நினைவூட்டவேண்டும்.
முன்னை நாள் இறந்தவருக்காக அழுது ஆறுவதற்கு முன், நேற்றைய சாவு அந்த நினைவை மூடி விடுகிறது. நேற்றைய இழப்பை இன்று நிகழ்ந்த அவலம் மறைத்து விடுகிறது. நாளை வரப்போகும் அழிவை இன்றைய துயரமும் அடித்துச் செல்லக் கூடும் என்கிற நிலை இருந்தது.
இதையே அதிகார வர்க்கம் செயற்கையாகவும் நிகழ்த்தலாம். ஒன்றை மறக்கடிக்க இன்னொன்றை அந்த இடத்துக்கு நிறுவும் கைங்கரியம் அது.
ஆக... ஒன்றை மேவும் இன்னொன்று தொடர்ச்சியாகவும், இயற்கையாகவும், செயற்கையாகவும் நிகழ்ந்துகொண்டு தானிருக்கிறது. சமகாலத்தில் முனைப்பு பெரும் பேசுபொருளை அதிகார சக்திகளால் செயற்கையாகவும் திட்டமிட்டும் திசைதிருப்பிவிட முடியும். அது எங்கெங்கும் நிகழ்கிறது.
அரசியல் வாதிகள், வியாபாரிகள், பெருமுதலாளிகள், கார்ப்பரேட் கம்பனிகள், மாபியாக்கள், இன்னும் சமூக விரோத சக்திகள் இதனை தமது தந்திரோபாய வழிமுறையாகவே நுட்பமாகக் கையாண்டு வருகின்றன.
நினைவில் உள்ளவற்றை மறக்கடிப்பது என்பது இந்த நுட்பத்தின் அங்கம் தான். ஆதிக்க இனம், மதம், சாதி, நிறம், வர்க்கம் என இன்ன பிற சக்திகளும் “இவை அடக்கப்படும் சக்திகளை பலப்படுத்தும்” என்று நம்புகிற அடையாளங்களையும், நினைவுச் சின்னங்களை இல்லாது ஒழிக்கும் பணி வரலாறு நெடுகிலும் உலகம் முழுவதும் நிகழ்கிற ஒன்று தான். தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பௌத்த தொல்பொருள்களை அழித்தது, இந்துத்துவத்தின் பேரால் இந்தியாவில் முஸ்லிம் சின்னங்களை இந்துத்துவ தீவிரவாதக் கும்பல்கள் அழித்து வருவது, பிரபாகரன் பிறந்த வீடு கூட இருக்கக் கூடாது, போராளிகளை நினைத்து அழுவதற்கு கூட எச்சம் இருக்கக் கூடாது என்று மாவீரர் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கியது என்பன இந்த நினைவழித்தல் செயற்பாட்டின் அங்கம் தான். இன்றும் இலங்கையின் தொல்பொருள் துறை தமிழ் இன அடையாளங்களைத் திட்டமிட்டு அழித்து வருகின்ற பல செய்திகளை நாம் அறிந்துள்ளோம்.
மறக்கடிக்கச் செய்வது என்பது ஒரு அரசியல் தந்திரோபாயமாகவும், அரசியற் செயற்பாட்டாகவும் காலங்காலமாக நிகழ்ந்துவரும் ஒரு செயன்முறை. காலத்துக்கு காலம் அது வெவ்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது. வெவ்வேறு அளவுகளில் இயக்கப்பட்டுவருகிறது.
போராட்டங்களில் போர்த்தந்திரமாகவும் “மறக்கப்பண்ணுவது”, “நினைவுகளை அகற்றுவது”, “புதிய நினைவுகளை அந்த இடத்துக்கு பிரதியீடு செய்வது” என்கிற உபாயம் கைக்கொள்ளப்படுகின்றன.
ஒரு நினைவை மறக்கடிக்கச் செய்வது என்பது இலகுவானதல்ல. அதற்கான பிரதான வழிமுறையாக ஏற்கெனவே “நினைவு” இருந்த இடத்துக்கு இன்னொன்றை பிரதியீடு செய்தாக வேண்டும்.
சமீபத்தேயே நமக்குத் தெரிந்த உதாரணமாகக் கொண்டால்; தமிழ் நாட்டில் மே 22 நிகழ்ந்த தூத்துக்குடி படுகொலைச் சொல்லலாம். தமிழகத்தில் வரலாறு காணாத மோசமான அரச பயங்கரவாத சம்பவமாக கருதப்பட்டது அது. அது பற்றிய விவாதங்களும், உரையாடலும் நடந்துகொண்டு இருக்கும் போதே ரஜினி நடித்து ஜூன் 6 அன்று வெளியான “காலா” திரைப்படம் மொத்த உரையாடலையும் விழுங்கி ஏப்பமிட்டு திசைதிருப்பிவிட்டது. அது எப்படி ஒரு சமூகம் இத்தனை வேகமாக ஒரு பெரும்சோகத்தை பகிர்வதையும், பேசுவதையும் மறந்து ஒரு பொழுதுபோக்கு சினிமா ரசனைக்குள் வீழ்ந்தது என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஒன்றை நினைவுக்கு கொண்டுவரவும், அதனை மறக்கச் செய்வதற்கும், அதற்குப் பதிலாக வேறொன்றை பிரதியீடு செய்வதற்கும் இன்று பேராயுதமாக பயன்படுத்தப்படுவது ஊடகங்களும், பொழுதுபோக்குச் சாதனங்களும் தான்.
முக்கியத்துவமில்லாத ஒன்றை முக்கியத்துவப்படுத்தி வைரலாக்கி பிரதான பேசுபோருளாக்குகின்ற பணியை ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்கூடாக கச்சிதமாக மேற்கொள்வதற்கான முறையியலை நுட்பமாக ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்துகின்றன. ஊடகங்களை, ஊடகவியலாளர்களை அதிகாரத்தாலும், பணத்தாலும் ஆட்டுவிக்கின்றன. இதனால் இந்த “மறக்கடித்தல்” செயல்பாடு அவர்களுக்கு இலகுவாகக் கைகூடுகிறது.
இன்றைய ஊடகச் சந்தையில் தம்மீது கவனத்தை ஈர்க்கச் செய்வதற்கு வாரத்திற்கொரு செய்தியை உற்பத்தி செய்து, வைரலாக்குவதை ஒரு வியாபார தந்திரமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் செய்தி உற்பத்தியாளர்கள். கதை உருவாக்கிகள். பரபரப்பு ஆக்கிகள்.
சமீபத்தில் முகநூலைப் பயன்படுத்தி கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா திரிபுபடுத்துதலையும், திசைதிருப்புதலையும் எப்படி செய்தது என்பது அம்பலத்துக்கு வந்தது. முகநூலுக்கு அடிமையாகி இருக்கின்ற ஒரு பெரும் சமூகம் ஏற்கெனவே உருவாக்கப்ப்ட்டிருகிறது. அவர்களின் சிந்தனையை வழிநடத்தும் ரிமொட்கொன்ரோல் யாரிடமெல்லாம் இருக்கிறது பாருங்கள். எப்படி குறிப்பிட்ட செய்திகளை வைரலாக்கி, எதை கொடுக்க வேண்டும், எதைத் தடுக்க வேண்டும், யாருக்கு சேரவேண்டும், யாருக்கு தடுக்க வேண்டும் என்பவற்றை அவர்கள் தீர்மானித்தது எப்படி என்பது அம்பலத்துக்கு வந்தல்லவா?
இந்தப் போக்கைப் பற்றி ஆழமாக விளக்குகின்ற ஒரு ஆங்கில நூல் சென்ற ஆண்டு வெளியானது. (Hit Makers: The Science of Popularity in an Age of Distraction – Derek Thompson). சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு மிகவும் பிரயோசனப்படகூடிய நூல் அது.
நீளமான ஒரு குச்சியின் அருகில் அதைவிட நீளமான குச்சியை வைப்பதன் மூலம்; முன்னைய குச்சி அதன் “அதிக நீளம்” என்கிற தகுதியை இழக்கிறது. அதே பொறிமுறை தான் இங்கும். ஒன்றுக்கு இன்னொன்றை பிரதியீடு செய்வது.
பல வருடங்களுக்கு முன் ஜே.வி.பி யின் சிங்களப் பத்திரிகையொன்றில் வெளியான கட்டுரையொன்றில் ஒரு அட்டவணையை வெளியிட்டிருந்தார்கள். அதாவது இலங்கையில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிரிக்கெட் போட்டி நடந்த நாட்களெல்லாம் பாண் விலையேற்றம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றியது அது.
பெருவாரி மத்தியதர வர்க்க மக்கள் கிரிக்கெட் போதையேறி, கவனம் முழுவதும் ஒன்றில் குவிக்கப்பட்டிருக்கும் போது அரசாங்கம் நுட்பமாக விலையை ஏற்றியிருக்கிறது.
அரசு குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில், அந்த அரசு இன்னொரு விடயத்தை பேசுபொருளாக்கி செயற்கையாக கவனத்தை திசைதிருப்பிவிடுகிறது. அல்லது இன்னொரு பரபரப்பான விடயத்தில் மக்கள் மூழ்கியிருக்கையில் திரைமறைவில் தமது மக்கள்விரோத பணியை கச்சிதமாக முடித்து விடுகிறது.
பெருவாரி மக்களை ஓரிடத்தில் இருந்து ஒரு விடயத்தை வைரலாக்கி தொலையியக்க இன்றைய ஸ்மார்ட் போன்களின் வலைபின்னல் போதும். இதே வலைப்பின்னலை அடக்கப்படும் மக்களும் தமக்கான போராட்டத்துக்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டாலும் கூட; அந்த இணையத்தை தடுத்து வைக்கும் பலம் அதிகார வர்க்கத்திடம் தான் இருக்கிறது என்பதை மறந்துவிடமுடியாது.
ஒரு பிரச்சினை தீர்க்கப்படாமலே மறு பிரச்சினை வந்து அதை பின்னே தள்ளி விடுகிறது. அளவில் சிறிய பிரச்சினையை புதிய - பெரிய பிரசினையொன்று பின் தள்ளினாலும் பரவாயில்லை. ஆனால் சிறிய பிரச்சினைகள் கூட பெரும்பிரச்சினைகளை பின் தள்ளுமளவுக்கு சில நேரங்களில் நிகழ்கின்றன.
அடக்கப்படும் சக்திகள் எப்போதும் இந்த போக்குக்குப் (Tendency) பலியாகாமல் தாக்குப்பிடிப்பது இன்றைய நவீன உலகத்தில் அவ்வளவும் எளிதான காரியமில்லை. ஏனென்றால் இவற்றை இயக்கும் சக்தி அதிகார வர்க்கத்திடமே இருக்கிறது. இவற்றை உணர்ந்துகொண்டு விழிப்புணர்வுடன் பயணிப்பதே அடக்கப்படும் மக்களின் முதல் கட்டப் பணியாக இருக்கிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...