விக்கிப்பீடியா, நூலகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மலையகத்தில் 28.08.2017 திங்கட்கிழமையன்று பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தினர். இப்பயிற்சிப்பட்டறை ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் இணைந்து முன்னெடுக்கும் ''இலங்கையின் கிழக்கு – வடக்கு – மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்'' எனும் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே மேற்படி பயிற்சி பட்டறை மலையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், ஆவணப்படுத்துனர்கள், கணிணித்துறை நிபுணர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளடங்களாக பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலிய, காசஸ்றீ, ஹட்டன், கொட்டகலை, லிந்துலை, வட்டகொடை, தலவாக்கலை, பத்தனை, நாவலபிட்டிய, நுரரெலியா, ஆலிஎல, பதுளை, கொழும்பு முதலான இடங்களிலிருந்து 36பேர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
உலகில் பல்வேறு மொழிகளை பேசும் மக்களின் அறிவுத் திரட்சியை ஒன்றிணைக்கும் இலாப நோக்கற்ற கட்டற்ற கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா (www.wikipedia.org) பார்க்கப்படுகின்றது. உலகின் 285 மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாவின் ஓர் அலகே தமிழ் விக்கிப்பீடியா (www.ta.wikipedia.org) ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவை 2003ஆம் ஆண்டு இலங்கை தமிழராகிய மயூரநாதன் என்பவர் தொடங்கினார். ''தமிழ் விக்கிப்பீடியா உலகளாவிய தமிழ்ச் சமூகத்துக்கு தேவையான அறிவை கூட்டாக உருவாக்கிப் பகிர்வதற்கான தளம்'' ஆகும்.
தமிழ் விக்கிப்பீடியாவில் 1,20,000 இற்கு மேற்பட்ட கட்டுரைகளும் 8,000 இற்கு மேற்பட்ட படங்களும் இதுவரை பதிவேற்றப்பட்டுள்ளன. இவற்றுள் மலையக சமூகம் சார்ந்தவை எத்தனை? பதிவு செய்த பயனர்கள் 1,30,000 பேர். இதில் எத்தனைப்பேர் மலையகத்தவர்? நாளொன்றுக்கு தமிழ் விக்கிப்பீடியா 90,000 முறை பார்க்கப்படுகின்றது. இதில் மலையகத்தவர்கள் நாளொன்றுக்கு எத்தனை முறை பார்க்கின்றனர்? இக்கேள்விகளுக்கு விடை தேட முற்படும் போதே மேற்குறித்த பயிற்சிப் பட்டறை முக்கியத்துவம் பெறுகின்றது. மலையக சமூகத்துக்கு இத்துறை தொடர்பில் போதிய விழிப்புணர்வை ஊட்டுவதாகவும் பயிற்சிகளை வழங்குவதுமாகவே இப்பட்டறை அமைந்திருந்தது.
முதலாம் அமர்வில் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகக் குழு உறுப்பினர் சஞ்ஜீவி சிவக்குமார் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய முழுமையான விளக்கங்களை அளித்தார். விக்கியில் பயனர் கணக்கினை தொடங்குதல், (மணல் தொட்டி பகுதியில்) கட்டுரை எழுதி பதிவேற்றிப் பழகுதல், விக்கியில் கட்டுரை ஒன்றினை எழுதுதல், ஏலவே இருக்கும் கட்டுரைகள் தொடர்பான எமது கருத்துக்களை தெரிவிக்கும் முறை, பிழைகளை திருத்தும் முறை, விக்கியில் படம் ஒன்றினை பதிவேற்றுதல், அவற்றின் காப்புரிமைகள் (Creative Commons License) முதலான விடயங்கள் தொடர்பான செயற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. பங்கேற்பாளர்களில் முப்பது பேர் தமிழ் விக்கிப்பீடியாவில் புதிதாக பயனர் கணக்கினை தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆர்வமுள்ளவர்கள் விக்கிப்பீடியாவில் ''மலையக தமிழர் தலைப்புக்கள் பட்டியல்'' எனும் பக்கத்தினை ஆராய்ந்து புதிய கட்டுரைகளை எழுதலாம்.
இரண்டாம் அமர்வில் நூலக நிறுவனம் மற்றும் அதன் ஆவணக செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. விக்கிப்பீடியாவில் முன்மொழியப்பட்டிருக்கும் ''இலங்கையின் கிழக்கு – வடக்கு – மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்'' செயற்திட்டம் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டன. மலையகத்தில் காணப்படும் தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டதோடு, பதுளை ஊவாஹைலன்ஸில் இருந்து வருகை தந்திருந்த மலையக நாட்டாரியல் ஆய்வாளர் விமலநாதனின் வாய்மொழிப்பாடல்கள் பல்லூடக முறையில் பதிவுசெய்யப்பட்டு செயற்பயிற்சி வழங்கப்பட்டது. இத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு ஆவணப்படுத்தலில் ஈடுபடலாம்.
மூன்றாம் அமர்வில் எண்ணிம கற்றல் வளங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதனை SERVE Foundation (www.servelearn.info) நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் செந்தில்குமரன் தொகுத்தளித்தார். மாணவர்களின் கற்றலுக்கு இந்நிறுவனத்தின் உதவிகள், இணையத்தில் - குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் - கற்றலுக்கு கிடைக்கக்கூடிய இலவச மென்பொருட்கள் மற்றும் இணைய வளங்கள் தொடர்பாக விரிவான விளக்கத்தினை வழங்கினார். அதற்கான செயற்பயிற்சியும் வழங்கப்பட்டது. இதன்போது இலங்கையின் கல்வித்திட்டத்திற்கேற்ப கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் கற்பதற்கான எட்டு இருவட்டுக்கள் அடங்கிய 25 இருவட்டுத் தொகுதிகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இவை மென்பொருளாக கணிணியில் நிறுவி பயனபடுத்துவதற்கும் அதேவேளை காணொளியாக மாணவர்கள் பார்த்து கற்பதற்கும், பயிற்சிகளை செய்து பார்ப்பதற்கு ஏற்வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்தன.
மேற்படி பட்டறையானது மலையகத்தில் ஒரு முன்னோடி முயற்சியாகும். இதனை முழு மலையகத்திற்கும் பரவலாக்கம் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. எனவே ஆர்வலர்கள் இதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...