Headlines News :
முகப்பு » , , » மலையகத் தலித்துகள், சில புரிதல்கள் - என்.சரவணன்

மலையகத் தலித்துகள், சில புரிதல்கள் - என்.சரவணன்

மலையகத் தலித்துகள், சில புரிதல்கள், விடுதலை நேசிகளின் கடமைகள்.
(ஒட்டுமொத்த சமூக அக்கறையிலிருந்தும் தூக்கியெறியப்பட்டுள்ள மலையக தலித்துகள்.)
(2000 செப். தமிழகத்தில் நடந்த “தமிழ் இனி” மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

இன்றைய முதலாளித்துவ சமூக உருவாக்கத்தின் நவவடிவங்கள் (உலகக் கிராமங்கள் அல்லது Information Highway போன்ற சொற்றடர்களைப் பயன்படுத்தலாம்) எத்தனைதான் அரசியல், பொருளியல், பண்பாட்டு ரீதியான மாற்றங்களைக் ஏற்படுத்திக் கொண்டுவருகின்ற போதும் உலகின் இனக்குழுமங்களுக்கு இடையிலான உறவுகள், நெருக்கங்கள் (அல்லது நலன்கள்) என்பன மேலும் துருவமயமாகிக்கொண்டுபோகும் நிலைமையும், அதிகாரத்துவம், அசமத்துவம் என்பன மேலும் இறுகும் நிலைமையும் அதிகரித்து வரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்று "தமிழ் இனி 2000" மாநாட்டில் குறித்து கூடியிருக்கின்றோம். இலங்கை மலையகத் தமிழர்களின் உள்ளடக்காத ஒரு தமிழ் இனியை நாம் கற்பனை செய்ய முடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்வோம்.. அந்தளவுக்கு நாம் இந்த நிகழ்வுப் போக்கில் தாக்கம் செலுத்தும் வீரியமிக்க சக்தியாக வளர்ந்து விட்டோம். மலையகத் தமிழர்களில் அடக்கப்படும் சாதிய சமூகத்தின் எண்ணிக்கை ரீதியாக அதிகளவில் கொண்டிருக்கின்ற அதேநேரம் அவர் தம்மை ஒரு தேசமாக, மலையகத் தமிழ்த் தேசமாக தம்மை உருவாக்கிக் கொண்டுமுள்ளார்கள்.


வல்லாதிக்க சக்திகள் இந்த யுகத்தை தகவல் தொழில்நுட்ப யுகமாக பிரகடனப்படுத்துகின்றன. இதன் அடிப்படை நோக்கமே உலகை தனது நலனுக்காக, ஆதிக்க சித்தாந்தமயப்படுத்துவதுதான். புதிய உலக ஒழுங்குக்கு ஏனைய குறைவிருத்தி தேசங்களையும் தகவமைக்குமாறு நிர்ப்பந்திக்கின்றன. ஆதிக்க சித்தாந்த கருத்தேற்றம் செய்து உலகை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன. இதற்காக, அவை திட்டமிட்டே பல்வேறு திட்டங்களை நிகழ்ச்சிநிரல்களையும் பன்முக தளங்களில் மிகவும் நுட்பத்துடன் செயற்பட்டு வருவதை, அதன் விளைவுகளை நாம் உணர்ந்துள்ளோம் என்றால் அது மிகையில்லை.

எனினும், இந்த நிலையிலிருந்து தான் ஆதிக்க உலக ஒழுங்குமயப்படுவதிலிருந்து அடக்கப்படும் தேசங்களாக உள்ள நாம் அவர்களின் நிகழ்ச்சி நிரலிலிருந்து தொடங்காது அவை குறித்த தேடல், புரிதல் நிலைகளிலிருந்து எமக்கேயுரிய நிகழ்ச்சிநிரலை நாமே நமக்கேயுரிய நமது தேவைகளின் அடிப்படையிலிருந்து தயாரித்தாக வேண்டியுள்ளது. தகவல் தொழில்நுட்ப யுகம் என அவர்கள் முன்வைத்துள்ள அவர்களது திட்டத்தில் நமக்கு ஏதும் உரிமைகள் உண்டா இல்லையா என ஆராய்வதில் நமது காலத்தையும், வளங்களையும் செலவிடுவது கூட அவர்களது பொறிக்குள் நாம் காலைக் கொண்டுபோய் வைப்பதாகவே இருக்கும். எனவே தான் இந்த கருத்தாக்கங்களை நிராகரிப்போம். எமது சொந்தத் தேவைகளிலிருந்தும், நலன்களிலிருந்தும் இந்நிகழ்ச்சி நிரல்கள் அமையப்பெறுவதும் எமது பன்முகத் தன்மைகளையும் மேலும் வளப்படுத்துவதாக பலப்படுத்துவதாக அவை அமைவதும் மிகவும் இன்றியமையததாகும்.

ஏலவே எமது நிகழ்ச்சி நிரலையும், திசைவழியையும் தீர்மானிக்கின்ற பாத்திரத்தை எமது தேசத்தினதும் சமூகங்களினதும் ஆளுங்குழுமங்கள் உலக வல்லாதிக்க சக்திகளுக்கு தாரைவார்த்து கொடுத்தாகிவிட்டன. எனவே இன்று நமக்கு எமது இறைமை, என்று கூறுவதற்கு ஒன்றும் இல்லாகிவிட்டது. விரும்பியோ விரும்பாமலோ எமது இறைமை எமது கைகளில் இல்லை என்ற யதார்த்தம் எம்மனைவரையுமே அழுத்துகின்றது. எமது இறைமை வெளி வல்லாதிக்க சக்திகளிடம் இருக்கின்றது என்பதை பல்வேறு நேரங்களில் உணர்ந்தாலும் அது அநேகமாக ஒரு சூட்சுமத் தன்மையையும் கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, எமது இறைமை எமக்கு வெளியில் இருந்து கட்டுப்படுத்தப்படுவதாக அமைகின்றது. எமது இறைமை வெளியாரால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்நிலையை மாற்றியமைக்க, பல்வேறு தேசங்களில் பல்வேறு தளங்களில் அடக்கப்பட்ட மக்கள் தமது விடுதலைக்காகவும், சுய இருப்புக்காகவும் இறைமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆதிக்க உலகிற்கெதிரான அடக்கப்பட்ட உலகின் பொது நிகழ்வுப் போக்காயுள்ள தேசங்களின் விடுதலை, சுய அடையாளம், இறைமை என்பன இந்த நூற்றாண்டின் பிரதான போக்காகவும் உலகை மாற்றியமைக்கப் போகும் காரணிகளாகவும் எழுச்சி பெற்றுவருகின்றது. எமக்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்க வேண்டியிருப்பதன் முன்நிபந்தனையாக இந்த அடிப்படைகளைப் புரிந்துகொள்வோம். அந்த அடிப்படையில், பரஸ்பர உரையடால்கள் மற்றும் மாற்றங்கள் ஊடாக, எமக்கான நிகழ்ச்சி நிரலை நாமே தயாரிப்போம்.

இந்த நிலைமைகளிலிருந்து மலையகத் தேசத்தின் பிரச்சினையை அணுகுவோம். அனேகமான தேசங்களில் அத்தேசத்தின் இயக்கப்போக்கை அடையாளப்படுத்துபவர்களாக இருப்பவர்கள் அத்தேசிய சமூகத்தின் அதிகாரம் படைத்த கல்விகற்ற தரப்பினராவர்.

எனினும் மலையகத் தமிழ்த் தேசத்தின் சமூகப் பண்பைப் பார்ப்போமாக இருந்தால், இங்கு அடிப்படையானது உடலுழைப்பில் ஈடுபடும் உழைக்கும் மக்கள் பிரிவினராலானதாக உள்ளது. இத்தேசத்தின் அதிக பெரும்பான்மை மக்கள் பிரிவினர் பெருந்தோட்டத்துறை எனும் குறிப்பிட்ட உற்பத்தி நடவடிக்கையுடன் தம்மை பிணைத்துக்கொண்ட கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.

ஆக, இந்த விதத்தில், மலையகத் தமிழர் என்ற அடையாளத்தின் பிரதான பண்பைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இத்தொழிலாளர்கள் அமைகின்றனர் என்பதோடு அதுவே, பிரதானமான அடையாளமாகவும் அமைந்து விடுகின்றது.

அதே போல் சாதிய அடிப்படையில் மலையகத் தமிழ்த்தேசத்தை அணுகுவோமாயின் தேசத்தின் 81 சதவீதத்தினர் தலித்துகளாவர். இது மலையகத் தேசத்தை தலித் தேசமாக அடையாளப்படுத்துகிறது.

அவ்வாறே உழைக்கும் மக்களால் அடையாளப்படுத்தப்படும் மலையகத் தேசத்தின் அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களாவர்.

அவ்வகையில் மலையகத் தேசத்தின் அடையாளமானது உழைக்கும், வர்க்க, தலித்திய மற்றும் பெண்களின் நேரடி பங்கேற்பின் உருவாக்கத்திலானதாகவுள்ளது. மலையகத் தேசத்தின் இப்பண்பானது, தேச உருவாக்கங்களில், மிகவும் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றே எனக் கூறலாம்.

இவ்வாறான பண்பைக் கொண்ட மலையகத் தேசம் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட பெரும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த அதே நேரம், கடந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலிருந்தே பேரினவாதத்தின் அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. இலங்கையின் பேரினவாத வரலாற்றில் குறிப்பாக காலனித்துவ காலப்பகுதியில் மலையக மக்களுக்கு எதிராகத் தான் பேரினவாதம் முதலில் கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒப்பீட்டளவில், பலவீனமாக இருந்த ஒரு சமூகத்தின் மீது தனது பேரினவாத அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு பல “பரிசோதனை”களை மேற்கொண்டது என்றால் அது மிகையாகாது. அது நடைமுறையாயினும் சரி, சித்தாந்தமாக இருந்தாலும் சரி. இதனுடைய பலாபலன்களை எமது தேசம் இன்றும் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றது. 

பிரஜாவுரிமைப் பறிப்பு, கட்டாயமாக நாடுகடத்தப்படல், அடிப்படை உரிமை பறிப்பு என ஒரு தேசம் எந்தளவுக்கெல்லாம் அடக்குமுறைக்குள்ளாக முடியுமோ அந்தளவு அடக்குமுறைகளை மலையகத் தேசம் எதிர்கொண்டு வருகிறது.

இதன் மறுபுறம் வெளியுலகிற்கு ஏதோ ஒரு அடிமைக் கூட்டம் போல தென்படும் இம்மக்கள் சமூகம் தனது ஒவ்வொரு காலகட்ட உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியாக போராடி வருகிறது. போராட்டம் என்பது மலையக தேசத்தின் வாழ்வுடன் பிணைந்த ஒன்றாக உள்ளது. போர்க்குணமும் ஆளுமையும் கொண்ட ஒரு பிரிவினரே மலையகத் தமிழர்கள். இவர்களது வாக்குரிமைகளையும் பிராஜாவுரிமைகளையும் பறிக்க வேண்டியளவுக்கு சிங்களப் பேரினவாதம் இருந்தது என்றால் அவர்களின் போர்க்குணாம்சத்தை அவர்களின் பலத்தையும் நீங்கள் இங்கு கற்பனை பண்ணிப் பாருங்கள்.

எனினும் தம்மை ஏனைய சமூகங்களுக்கு நிகராக வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் குறைந்தபட்சம் தம்மைப் பற்றி வெளியுலகுக்கு அறிவிக்க தகவல்களை பரிமாறிக்கொள்ளக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இன்றைய உலகின், அதுவும் நவீன தொழில்நுட்பத் தகவல் பரிமாற்ற உலகில், தம்மை இணைத்துக் கொள்வதற்கு முன்னான பல்வேறு கட்டங்களைத் தாண்டுவதற்கே அவர்கள் போராடியாக வேண்டியுள்ளது.

தோழமையுடன் தோட்டப்புற சிறுவர் பாடசாலைகளிலிருந்தே அவர்களுக்கு இன்று சிங்களம் மட்டும் ஊட்டப்படுகிறது. இந்த வருட (2000ஆம் ஆண்டு) போர்ச்செலவுக்கு மாத்திரம் பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்படும் அதே நேரம் அங்கு வருடக்கணக்காக ஒரு ரூபா கூலி உயர்வுக்காக பல நாள் பட்டினி கிடந்து போராட வேண்டியநிலை. 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த அதே சிறிய காம்பராக்களில் தான் இன்னமும் வாழ்கின்றனர்.

மலையக மக்கள் தமக்காக தாமே போராடிக்கொள்வார்கள். ஆனால் தமிழ் பேசும் ஒட்டுமொத்த மக்கள் சமூகத்தின் தார்மீகமான ஆதரவுகள் ஒத்துழைப்புகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதையே இங்கு கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.
தமக்கு அயலில் சகதேசமொன்று சிங்கள அரசுக்கெதிராக போராடி வரும் வேளை பரஸ்பரம் இந்த இரு சமூகங்களுக்கிடையிலான உறவுகள், மற்றும் எதிர்கொள்ளும் அடக்குமுறை காரணமாக ஒன்றை ஒன்று ஊடறுக்கின்ற பாதிக்கின்ற போக்குகளையும் நாம் இங்கு குறித்துக் கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் போராட்டங்கள் அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் குறித்து பதிவாவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. இன்று இலங்கையில் வெளிவரும் ஒரு சில பத்திரிகையின் வாயிலாகக் கிடைக்கின்ற செய்திகளைத் தவிர வேறு வழியில் மலையகத் தேசத்தின் பிரச்சினைகள் வெளிவருவதில்லை. இலங்கைக்கு வெளியில் சொல்லவே வேண்டாம். இந்த மாநாட்டுக்கு இலங்கைக்கு வெளியிலிருந்து வந்திருக்கும் உங்களில் எத்தனை பேருக்கு ஈழப்பிரச்சினை குறித்து தெரிந்திருக்க அளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது?

அரசு, நவபாசிச வடிவமெடுத்திருக்கிற சிங்களப் பேரினவாதம், அவர்களை கடுமையாக சுரண்டி கொழுக்கும் வர்த்தக சமூகத்தினர் அவர்களின் பிரச்சினைகளை வெறும் தமது பிழைப்பு அரசியலாக்கி வரும் அரசியல் சக்திகள், சாதியக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் போட்டியிட்டு வரும் ஆதிக்க சாதிக் குழுமங்கள் மற்றும் பேரினவாதமயப்பட்டுள்ள சிங்கள சிவில் சமூகத்தவர்களால் எதிர்கொண்டுவரும் வன்முறைகள் என எத்தனை எத்தனையோ கொடுமைகள் தினந்தோறும் நடக்குகையில் அவர்களுக்காக போராடுவதையோ அல்லது தார்மீக ஆதரவைத்தான் தரவேண்டாம். அவர்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொணர்வதில் எமது பங்களிப்பு என்ன?

இந்த சைபர் ஸ்பேஸ் என்று நாம் கூறுகின்ற வெட்டவெளிக்குள் சகல கொடுக்கள் வாங்கல்களையும் செய்து இன்று ஒரு பெரும் மாநாட்டையே நடத்துகிறோம். பெரும்பாலும் இதற்கான நிர்வாக ஏற்பாடுகள், பேச்சாளர்களுடனான உறவுகள் மற்றும் நிதி ஒழுங்குகள் என சகலதுமே தகவல்தொழில்நுட்பத்தின் வாயிலாக மேற்கொண்டு வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறோம். நாளை இவ்வாறான மாநாடொன்றை கஸ்டப்பட்டு ஒன்றுகூடி நடத்தவும் வேண்டியேற்படாத அந்தளவுக்கு தகவல் தொழில்நுட்பம் எங்களை இறுக இணைத்துவிடும்.


ஆனால் இன்று மின்சாரம் வசதிகளைக் கூட அடையாமல், கல்வி ரீதியில் வளர்ச்சியடைய விடாமல், வெறும் ஒரு ரூபா சம்பள உயர்வுக்காக போராடிக்கொண்டிருக்கும் மலையக மக்கள் குறித்து எந்தவித விபரங்களையும் உலகம் அறியாத வண்ணமுள்ளன. இன்று ஈழப்பிரச்சினை காரணமாக வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையின் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து வாழ்வது உங்களுக்குத் தெரியும். நண்பர் சேரன் கூறுகின்ற ஆறாம்திணையான புலம்பெயர்ந்தவர்களுக்கூடாக ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து பெருமளவு செய்திகள், விபரங்கள் வெளிவருகின்ற போதும், மலையக மக்கள் பற்றி வெளித்தெரியாத வண்ணம் இன்றைய சூழல் இருக்கிறது. இது தற்செயலானததல்ல.

ஈழத்தமிழர்கள் கொண்டுள்ள வளங்கள், ஆற்றல்கள், வாய்ப்புகள் கூட மலையக மக்களுக்கு இல்லை. சக தேசத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்கின்ற போக்கை ஈழப்போராட்ட சார்பு தகவல் தொடர்பூடகங்களில் கூட காணமுடிவதில்லை. அப்படியும் வெளிவந்துவிட்டால் அவை எதிரியை அம்பலப்படுத்துவதற்கான வழிமுறையாகத்தான் இருக்கிறதே ஒழிய, மலையகத் தேசத்தின் பிரச்சினையில் கொண்டுள்ள பிரக்ஞையால் அல்லவென்றே கூறலாம். தமிழகத்தை மையமாகக்கொண்டும், சிங்கப்பூர், மலேசியா மற்றும் வேறு புகலிட நாடுகளிலிருந்துமாக பல இணையத்தளங்கள் கூட அதிகரித்தவண்ணமுள்ளன. ஆனால் இதில் எத்தனைதூரம் மலையகத்தவர் பற்றிய குறைந்தபட்ச போராட்டங்கள், கோரிக்கைகள் கூட பதிவாகின்றன.

நிச்சயமாக மலையகத்தவர் பற்றிய எமது அக்கறையின்மையும், அசட்டையையும் நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

வடக்கு கிழக்குக்கு வெளியில் ஏறத்தாழ 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். காலனித்துவ சக்திகளால் இவர்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட போது பெரும்பாலும் அடக்கப்பட்ட சாதியப்பிரிவினரே அதிகளவு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தனர்.

மலையகத் தேசத்தை ஒரு தலித் தேசமாகவும் நோக்கும் போது இலங்கையில் நிலவுகின்ற மூன்றுவித சாதியக் கட்டமைப்புகளான வடக்கு கிழக்கு, மலையக, சிங்கள சாதியமைப்புகளின் தன்மையை இங்கு நோக்குவது அவசியம். பொதுவாக சாதிய அதிகாரத்துவ படிநிலை நிரலொழுங்கு தலைகீழ் கூம்புவடிவத்தில் ஆதிக்க சாதி மேலும், அடக்கப்படும் சாதிகள் கீழுமாக கட்டமைக்கப்பட்டுள்ளதை நாமறிவோம். இந்திய சாதிய கட்டமைப்பை அப்படியே கொண்டுள்ள ஆனால் பிராமணரை ஆதிக்க சாதியாக கொள்ளாத சாதியமைப்பைக் கொண்டதுமான மலையக சாதியமைப்பில் அளவு ரீதியாக தலித்துகள் பெரும்பான்மையினராகவும் ஆதிக்க சாதிகள் சிறுபான்மையினராகவும் உள்ளனர். அதாவது தலைகீழ் கூம்பு வடிவமாக மேலே தலித்துகளும் கீழே உயர்த்தப்பட்ட சாதியினரும் அளவு ரீதியில் இருப்பதைக் காணலாம். ஆனால் இலங்கையில் சிங்கள சாதியமைப்பும், வடக்கு கிழக்கு சாதியமைப்பும் அளவு ரீதியில் உயர்த்தப்பட்ட சாதிகளின் எண்ணிக்கையை அதிகமாகவும் அடக்கப்படும் சாதிகளின் எண்ணிக்கை அளவில் குறைந்ததாகவும் இருக்கிறது.

வடக்கு கிழக்கில் ஆதிக்க சாதியான வெள்ளாளர் சனத்தொகையில் 50 வீத்துக்கும், அதிகமாக இருப்பதைப் போல, சிங்கள சாதியமைப்பிலும் 50 வீதத்துக்கும் அதிகமாக வெள்ளாளருக்கு ஒப்பான சிங்கள ஆதிக்க சாதியான கொவிகமசாதியினர் 50 வீதத்துக்கும் அதிகமுள்ளனர். பொதுவாகவே இந்தியாவிலிருந்து காலனித்துவ சக்திகளால் வேறுநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மக்கள் பெரும்பாலும் அடக்கப்படும் சாதிகளைச் சேர்ந்தவர்களாதலால், அவர்கள் இன்றளவிலும் வாழும் நாடுகளில் பெரிய எண்ணிக்கையைக் கொண்ட அடக்கப்படும் சாதிகளைக் கொண்டுள்ளவர்களாகவே உள்ளனர். எனவே தான் மலையக மக்களை நாங்கள் தலித்திய சமூகப் பார்வையிலிருந்து தவிர்த்துவிட்டுப் போக முடியாத கட்டாயத்தில் இருக்கிறோம்.


மலையக சமூக அமைப்பில் இருக்கின்ற குறைந்தளவு எண்ணிக்கையையே உடைய உயர்த்தப்பட்ட (ஆதிக்கச்) சாதியினர்,- மேலாதிக்கம் செலுத்துகின்ற அரசியல், பொருளாதார மற்றும் ஏனைய ஆதிக்க பண்புகளையும், வளங்களையும் வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறனர். இவர்கள் நாளுக்குநாள் நிறுவனமயப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவைப் போல நேரடியான தீண்டாமைக் கொடுமை இல்லாவிட்டாலும் ஏனைய அனைத்து சாதிக் கொடுமைகளுக்கும் உள்ளாவதும், ஆதிக்க சாதிகள் மேலும் தமது அதிகாரத்துவ நலன்களுக்காக நிறுவனமயப்படுவதுமான போக்கு அதிகரித்துவருகிறது. மேலும் பறையர் மற்றும் அருந்ததியர் ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் நூறாண்டுகளாக அதே நிலைமையில் இருத்தப்பட்டுள்ளமை போன்ற நிலைமையை நாங்கள் கருத்திற்கொள்ள வேண்டும். இன்றைய சாதிய கட்டமைப்பை பழைய அதன் வடிவத்தைப் போலப் பார்க்க முடியாது. அது இன்று நவீன சமூக உருவாக்கங்களின் பண்புகளை உள்நுழைத்த புதிய அதற்கேற்ற சாதிய வடிவங்கள் புதுப்பித்துக்கொண்ட வேறுவடிவங்களைத் தாங்கிய ஒன்றையே நாம் காணலாம்.

எப்படி சிங்களத் தேச அரச கட்டமைப்பு தமிழர்களின் பிரச்சினையை விளங்கிக் கொள்ளவில்லையோ, சிங்களத் தேச அரச கட்டமைப்பு மற்றும் தமிழீழ போராட்ட சக்திகள் இரண்டுமே மலையகத் தமிழர்களின் பிரச்சினையை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. இந்த மூன்று அரசியல் சக்திகளும் வடக்கு கிழக்குக்கும், மலையகத்திற்கும் வெளியில் தமிழர்களின் பிரச்சினையை விளங்கிக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதியில் வாழும் தமிழர்கள் ஒருவகையில் புவியியல் ரீதியிலான அடையாளங்களையும் அதற்கான கோரிக்கைகளையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டிற்கும் வெளியில் வாழும் தமிழர்களுக்கு எந்த வித அரசியற் தலைமையோ அல்லது பொதுவான கோரிக்கையையோ கொண்டிராத நிலைமை நீடித்துவருகிறது. எந்த அரசியற் சக்திகளின் பின்னாலும் போகக் கூடிய தன்மையையும், சில பகுதிகளில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதையும் காணமுடியும். பொதுவாக வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவழியினரையும் சேர்த்து மொத்தமாக மலையகத் தேசத்தவர்கள் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள வரையறைகளில் சில சிக்கல்கள் இருக்கின்ற போதும் இங்கு ஒட்டுமொத்த பிரச்சினையின் கவனக் குவிப்புக்காக இப்பதத்தையே நானும் இங்கு கையாள்கிறேன்.

இவர்களில் அருந்ததியர்கள் நாடளாவிய ரீதியில் நகர சுத்தித் தொழிலாளர்களாக நகர சுத்தி குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் வட மத்திய, வட மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் சிங்களவர்களாகவே மாறிவிட்ட போக்கையும் மாறிவரும் போக்கையும் காணமுடியும்.

சாதியால் ஒடுக்கப்பட்டவர்களாகவும், கூலியுயர்வுக்காகப் போராடும் உழைக்கும் வர்க்கத்தினரைக் கொண்ட பெரும் தொழிற்படையாகவும், நாட்டின் மொத்த வருமானத்தில் பெருமளவை பெற்றுத்தரும் வர்க்கமாகவும், நவ பாசிச வடிமெடுத்துவரும் சிங்களப் பேரினவாதத்துக்கும், பேரினவாதமயப்படுத்தப்பட்டு வரும் சிங்கள சிவில் சமூகத்தின் வன்முறைகளை நேரடியாக அனுபவித்துவரும் கூட்டமாகவும் இவர்கள் உள்ளனர். 150 வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் குடியுரிமை அற்றவர்களாகவும், அரசியல் அனாதைகளாக ஒரு கூட்டம் இருக்கிறதென்றால் அது மலையகத் தேசத்தவர்கள் தான்.

இதில் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளிகளில் ஒன்று என்னவென்றால், இவர்கள் பற்றிய எதுவும் வெளித்தெரியாத புறநிலைமைகள் இயங்குகின்றன என்பதே!

இன்று தமிழர்களுக்கான பல ஆயிரக்கணக்கான இணையத்தளங்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. இன்று ஆங்கிலம் மூலமாக இணையத்தினூடாகப் பரப்பப்படும் புனையப்பட்ட கருத்துகள், தகவல்கள், கதையாடல்களுக்கு தமிழர்கள் முழுவதுமாக ஆட்படுவதற்கு முன்னம் தமிழர்கள் இந்த தகவல் தொழில்நுட்பத்தை இலகுவாக அடைந்துவிட்டார்கள் தான். ஆனால் இந்த தகவல் என்ற விடயத்தில் தகவல் தொழில்நுட்பம் மீளவும் யாருக்கு எந்த சக்திகளுக்கு, எந்த கருத்தாக்கங்களுக்கு சேவை செய்கின்றன என்பது குறித்து நாம் அக்கறையற்று இருக்க முடியாது. தகவல் தொழில்நுட்ப நூற்றாண்டு இது என்று கூறப்படும் நிலையில் தகவல்களுக்கு வறுமை பெருமளவு இருக்காது என்கிற நம்பிக்கை ஆரம்பத்தில் எனக்கு இருந்தது. ஆனால் அது தவறென நான் உணர்ந்தேன். தகவல்கள் குவிந்து கொண்டிருக்கும். ஆனால் அவை ஆதிக்க கருத்தேற்றம் செய்யப்பட்டதாக இருக்கும் என்று நம்பினேன். ஆனால்  தகவல்களுக்கே எந்தளவு பஞ்சமிருப்பதை இப்போது ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றைய பெரும்போக்கு எது என்பதை தீர்மானிக்கின்ற முக்கியமான கருவியாக தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. ஆதிக்க சக்திகள், தமது பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களை பெரும்போக்காக நிலைநிறுத்துவதில் இந்த தகவல் தொழில் நுட்பத்தைக் கொண்டுதான் துரிதமாக வெற்றி கண்டு வருகின்றன.

இன்று தமிழில் கணிய மற்றும் இணையத் தொழில்நுட்பங்கள் குறித்த உட்கட்டமைப்பு மற்றும் மென்பொருள் பற்றிய அக்கறையும், ஆய்வுகளும் தான் மெற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அதன் புறநிலைச் செயற்பாடுகள், அதிலும் குறிப்பாக அதன் அரசியல் விளைவுகள், புரட்சிகர சமூக மாற்றத்துக்கான அரசியல் அடைவுகள் குறித்து வெறும் தனிநபர்கள் மற்றும் சிறு குழு அளவில் தான் அக்கறை கொள்ளப்படுகிறதே ஒழிய அதனை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தோடு இணைத்து ஆராயப்படுவதை காண முடிவதில்லை.


இத்தகைய பின்னணியிலிருந்து மலையக மக்களின் இன்றைய நிலைமைகள் பதிவாகாததையும், நோக்க வேண்டும். இன்று தமிழ்த்தேசப் பிரச்சினை சர்வதேச அளவில் கரிசனைக்குரியதாக ஆக்கியதில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கை நோக்க வேண்டும். இன்று தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இனஅழிப்பு குறித்த செய்திகள் வேகமாக உலகெங்கும் சென்றடைகின்றன. உலகின் பலமான நாடுகளின் உதவியுடனும், ஒரு அரசையும் கொண்டிருக்கிற சிங்களப் பேரினவாதம் தகவல் தொழில்நுட்ப ஆற்றல் வளங்கள் என்பனவற்றை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு தடுமாறி நிலைகுலைந்து போகுமளவுக்கு தமிழர்கள் தகவல் தொழில்நுட்பத்தை அடைந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசப் போராட்டத்தின் இன்றைய வளர்ச்சிக்கு தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு முக்கியமானது. ஆனால் இன்றளவிலும் தமிழ்த்தேசப் போராட்ட சக்திகளால் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்ற ஆயிரக்கணக்கான இணையத்தளங்களிலும் மலையக மக்கள் குறித்த எந்தவித பதிவுகளும் இடம்பெறாதது மிகவும் கவலையைத் தரும் விடயம். சக தேசமொன்று தமது எதிரிகளாலேயே ஒடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதையிட்டு கரிசனை கொள்ளாததை நாம் குறித்துக்கொள்வது அவசியம்.

மலையகத் தேசத்தவர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஏலவே எதிர்கொள்ளும் அடிமை வாழ்க்கையை விட தமிழ்த்தேசப் போராட்டத்தின் விளைவான ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்திற்கும் பலியாகிவரும் தேசமாக மலையகத் தேசம் உள்ளதை கவனித்தாக வேண்டும். இந்தியாவின் மீது நம்பிக்கையிழந்து பல வருடங்களாகிவிட்டது. ஏலவே இலங்கையில் யாழ் மைய வாதத்துக்கு வடக்குகிழக்கின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமல்ல வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்களும் அந்த சிக்கல்களை அனுபவித்து வந்தவர்கள். இலங்கையில் செயற்படும் தமிழ் தொடர்பு ஊடகங்கள் அனைத்திலும் மலையக மக்களுக்கெதிரான பாரபட்சங்கள் நிலவுவதை காணமுடியும். மலையக மக்களின் பிரச்சினை குறித்த விடயங்கள் வெளியிடப்பட்டால் கூட அது அப்பிரச்சினை குறித்த பிரக்ஞை என்பதை விட மலையக சந்தையை இலக்காகக் கொண்டு தான் இருக்கும்.

எப்படியோ மலையகத் தேசத்தின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் பொறுப்பாக்கிவிடுவது அல்ல இதன் அர்த்தம். மலையகத் தேசம் தனக்கான போராட்ட வடிவங்களையும் எதிர்காலத்தையும் தானே வடிவமைத்துக்கொள்ளும். ஆனால் கவனிப்பாரற்று கிடக்கும் போக்கை மாற்றியமைப்பதில் எம்மெல்லோரது பங்கையும், தார்மீக ஆதரவையுமே இங்கு நாம் கோரவேண்டியுள்ளது. மலையகத் தேசத்தின் அரசியல், பொருளாதார, கலாசார, பண்பாட்டு அம்சங்களைக் கணக்கிற்கெடுக்கின்ற தமிழ் சூழலயே வேண்டிநிற்கிறோம்.

கலாநிதி வீ.ரி.தமிழ்மாறன், ரவிக்குமார், என்.சரவணன்

கலாநிதி வீ.ரி.தமிழ்மாறன், ரவிக்குமார், என்.சரவணன்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates