Headlines News :
முகப்பு » , » அறிவும், செயன்முறை விரிவும், அதிகாரமும் - ஜெ.சற்குருநாதன்

அறிவும், செயன்முறை விரிவும், அதிகாரமும் - ஜெ.சற்குருநாதன்

அறிவு என்புது புலன்களின் அனுபவங்களால் ஏற்படுகின்ற நடத்தை மாற்றமாகும். அறிவு வானத்திலிருந்தோ அல்லது கடலிலிருந்தோ வருவதில்லை. அது சமூக அனுட்டானங்களிலிருந்து வருகின்றதென மாசேதுங் கூறுகின்றார். காட்சிநிலைப்பட்ட அனுபவமானது கருத்து நிலைப்பட்ட அறிவாக மனித மூளை மற்றும் செயன்முறையே அறிவின் வளர்ச்சி முறையாக மாறுகின்றது. சூழலிலுள்ள இயற்கையில் தோன்றும் பல்வேறு மாறுதல்கள், ஏற்ற இறக்கங்கள், மனிதர்கள், இனக்குழுக்கள், விலங்குகள் என்பவற்றின் நிகழ்ச்சி காண் பொருள் முன்மயப்படுத்தப்பட்ட அறிவானது சமுதாய நிலைகள், சமூக பெறுமானம் உள்ள அறிவாக மாறுகின்றது.

குரங்கிலிருந்து இடைநிலைபாத்திர வடிவ நிலைக்கு மனிதன் முன்னேறியபோது சிந்தனை திறனும் மொழியும் விருத்தியாயின என்பார் பிரடிக் எங்கல்ஸ். மோழி சிந்தனையுடைய மனித குலம் பெற்றுள்ள அறிவானது மனித சக்திமூலம் ஆழமும் அகலமும் பெற்று வளர்ந்து வருகின்றது. அறிவின் மையமே மனிதன். உலகின் மிகச் சிறந்த படைப்பு மனிதன் என மாக்சிம் கோர்க்கி தெளிவாக்கியுள்ளார். மனிதனது படைப்பாற்றலுக்கு முன் எந்த சக்தியும் இல்லை. அறிவின் எல்லைகளை விரிவாக்கி மனிதகுலம் மேன்மையுற அவனாலே அதிக படைப்பாக்கத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். 

இத்தகைய அறிவானது எப்போது வர்க்கதன்மையுடையதாக மாறியது. மனிதன் ஓரிடத்திலிருந்து தங்கியிருந்து விவசாயத்தில் ஈடுபட்டப்போது அறிவானது அதிகார சக்தியாக மாறியது. குறிப்பாக உலோகம் கண்டுபிடிக்கப்பட்டப்போது உற்பத்தி, உழைப்பு என்பன வேறுபடுத்தி பார்க்கப்பட்டன. தனது அறிவுக்கு புலப்படாத அம்சங்களுக்கு புதிய கற்பிதங்களை வழங்கிர். இதனுள் புதிய சடங்குமுறைகளை கட்டியெழுப்பினர். ஆண் - பெண் அடியொற்றி நிகழவுகளை கூர்மையாக்கி ஆணாதிக்க வடிவ நோக்கில் அறிவின் எல்லை சுருங்கியது. அறிவு அதிகாரத்தின் குரலாகவும் ஆளும் வர்க்கம் சார்பாகவும் விரிவாக்கப்பட்டது. நிலமானிய அமைப்பில் அறிவானது புனிதமாக்கப்பட்டது. கருத்தியல் ரீதியில் அறிவு கட்டியெழுப்பப்பட்டது. அறிவு தூய்மையானது, உயர்வானது, புனிதமானது என அர்த்தம் கற்பிக்ப்பட்டது. கற்புலனுடன் தொடர்புடையதாக அறிவு கற்பிதம் செய்யப்பட்டது. நிலமானி சமூக அமைப்பில் அறிவினை களஞ்சியப்படுத்தல், ஆணவப்படுத்தல் என்பன விரிவாக செய்யப்பட்டபோதிலும் உழைப்பாளர்களை அந்நியப்படுத்தியே அறிவு செயன்முறை இயங்கியது.

ஐரோப்பிய சமூகத்தில் கடவுளுக்கு சார்பான அறிவு விரிவாக்கப்பட்டது. இந்திய சமூக அமைப்பில் வேதங்களின் புனிதம் பேசப்பட்டது. சமூக அடித்தளத்திற்கு ஒருவன் வேதத்தை கற்றால் அவனது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. வர்ண பாகுபாட்டு அடிப்படையில் அறிவு பிரிக்கப்பட்டது. உயர்ந்த பிராமனர் சமூகத்தால் படைக்கப்பட்ட படைப்புகளில் அரக்கர்குலம் என அடையாளப்படுத்தவும் உழைப்பு இழிவுப்படுத்தவும் பட்டன. வேதாந்த மரபு என்ற தொன்மத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்கள் அறிவை தேடுவதும் திரட்டுவதும் சமூக மாற்றங்களுக்கு ஏற்புடையதல்ல என்ற கருத்தியல் வன்மை கட்டியெழுப்பப்பட்டது. அறிவு, இங்கு புனிதமாக்கி ஏற்றத்தாழ்வா சமூக அமைப்பை உருவாக்க வர்க்க நிலையாக மாறியது.

மத்திய கால ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியானது அறிவு தேடலுக்கான புதிய பாதைகளை திறந்துவிட்டன. நாடுகான் பயணங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் போன்றன தொடர்பான புதிய விளக்கத்திற்கான தேவையினை தோற்றுவித்தன. தொடர்ந்து ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியானது அறிவுத்துறையில் புதிய வெடிப்புக்களை ஏற்படுத்தின. பின்வந்த பிரான்சிய புரட்சியானது அறிவின் மேன்மையினை, மக்களுக்கான பாதையினை திறந்து விட்டன. அறிவின் ஏகபோக உரிமைகளை ஏற்றுக்கொண்டு அதை வளர்த்தெடுக்கும் ஒரு பக்கமும் பொது அறிவு துறையிலான மக்களின் நிலையும் உயர்வாயின. வெகுசன தொடர்புசாதனங்களின் கண்டுபிடிப்புக்கள் அதன் வளர்ச்சி என்பன அறிவானது மக்களுக்கானது என்ற சிந்தனை நோக்கிய பயணமாக அமைந்தது. 

நிலமானிய அமைப்பில் அறிவு புனிதமாக்கி மக்களை சென்றடையாத நிலையினை உருவாக்கியது. முதலாளித்துவ சமுதாயத்தில் அறிவானது ஏகபோகமானதாகியது. இந்நிலையில் தான் கார்ல் மார்க்ஸ் தனது பொதுவுடைமை கட்சி அறிக்கையிலும் மூலதனம் என்ற மகத்தான படைப்பின் மூலமும் உலக தொழிலாளர்களை அறிவுபாய்ச்சலை தமது கைகளில் எடுக்க வேண்டும் என பிரகடனப்படுத்தினார். அறிவின் புனிதத்தன்மையினை கட்டுடைத்த அதேவேளை அறிவின் விஞ்ஞானப்பூர்வமான பொருள்முதல்வாத நோக்கில் மக்கள்மயப்படுத்தினார். மாற்றம் ஒன்றே மாறாதது எனற் முன்வைப்பினை அடிப்படையாகக் கொண்டு அறிவு தொழிலாளர் வர்க்கம் சார்பாக அமையவேண்டும் என புதிய விளக்கத்தினை முன்வைத்தார்.

இதனை மறுதலித்து அதிகார இருப்பிடத்திற்கு அறிவினை கொண்டுசெல்வதற்காக வழிமுறைகளை மக்ஸ்வெபர் போன்றவர்கள் முன்மொழிந்தனர். அதிகார வர்க்கம் சார்ந்த அறிவுத் தொகுதியினை கட்டியெழுப்பினர். வர்க்க சமுதாயத்தில் அறிவானது வர்க்க சார்புடையதாக இருக்கும், இருக்க வேண்டும் என்ற கருத்தியல் தனிப்பட்ட ரீதியிலும் பல்கலைக்கழக மட்டத்திலும் கட்டியெழுப்பப்பட்டது. கனவான்களின் சமூகம், அதிகாரவர்க்க சமூகம், புத்திஜீவிகளின் சமூகம் என அறிவு எல்லைக்குள் மூல்கிவிடுவதற்கு முதலாளித்துவம் சமூகம் முயற்சிகள் மேற்கொண்டது. வர்த்தக நோக்குடையதான அறிவியல், விஞ்ஞானம், சமூகவியல் ஆய்வுகள் போன்ற அறிவுத்துறைகள் கட்டியெழுப்பப்பட்டன. பல்கலைக்கழகம் என்ற மரபு கட்டிவளர்க்கப்பட்டது. பல்கலைக்கழகங்களில் சாதாரண உழைப்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதிருக்க முதலாளித்துவம் பார்த்துக்கொண்டது. 

பழைய சோவியத் ரஷ்யாவின் எழுச்சியானது அறிவுத்துறையினை மக்கள்மயப்படுத்தியது. இதன் பின்னணியில் உலகலாவிய ரீதியில் ஏற்பட்ட மார்க்சிய இயக்கங்களின் எழுச்சி, மக்கள் விடுதலை போராட்டங்கள், சமூக மாற்றங்கள் தொடர்பான அறிவியல் விஞ்ஞானமயப்படுத்தப்பட்டு அதனை மக்களுக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மூன்றாம் உலக நாடுகளில் காலனித்துவ நவக்காலனித்துவ ஆட்சிகளுக்கெதிராக தேசிய விடுதலை போராட்டங்களை முன்னகர்த்திய அறிவியல்; பாய்ச்சல் அர்த்தப்படுத்தும் முயற்சிகளும் நீட்சியடையத்தொடங்கின. அறிவு தொடர்பான கருத்தோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. ஊயர்ந்தோருக்கு இருக்கவேண்டிய அறிவு ஏன் எங்களுக்கு வரக்கூடாது என்ற சமூகத்துடன் கூடிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் சமூக பண்பாட்டுப் புரட்சியினை ஒரு சோசலிச நாட்டுக்குள் மாவோசேதுங் நிகழ்த்திக் காட்டினார். 'நூறு பூக்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்' என்ற சிந்தனையில் இவை முன்னெடுக்கப்பட்டன. பல்கலைக்கழகங்களுக்குள் அறிவின் அதிகாரத்துக்குள் அமர்த்துவதற்கு பேராசியர்களே ஒழிக!, அறிவை புனிதமாக்கியிருக்கும் நிறுவனங்கள் ஒழிக! என்ற முழக்கம் அறிவினை மக்கள்மயப்படுத்தும் மகத்தான ஒரு பண்பாட்டு புரட்சியினை மாவோசேதுங் நிகழ்த்திக்காட்டினார். இப்புரட்சி பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும் அறிவின் வர்க்கத்தன்மையினை இல்லாதெழித்து அதனை மக்கள் கையகப்படுத்தும் செயன்முறைக்கு இப்புரட்சி வழிகாட்டியது. இதன் நீட்சியா கியுபாவில் பிடல்காஸ்ட்ரோ, சேகுவேரா போன்றவர்கள் அறிவினை மக்களுக்கு கொண்டுசெல்லும் முயற்சியினை மேற்கொண்டனர்.

பவ்லோ பிறேரி (1921 – 1997), ஜுலியஸ் நியாராரே இவர்கள் கவனிக்கத்தக்கவர்கள். தென்னாபிரிக்க நாடான பிரேசிலில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் எழுத வாசிக்க சிந்திக்க முடியாத மக்கள் கூட்டம் காணப்பட்டதை சிந்தித்தனர். இது ஏன் எதற்கு? என்ற கேள்வியை கேட்டனர். நடைமுறையிலுள்ள அறிவு யாருக்காகப் பயன்படுகின்றது என இவர்கள்  சிந்தித்தப் போது மீண்டும் மீண்டும் அறிவானது வாழக்கைக்கு சம்மந்தமில்லாத வகையில் காணப்பட்டதை ஆய்வு செய்தனர். நடைமுறையிலுள்ள கல்வியானது வங்கி முறை அடிப்படையான கல்வி. அது சேமிப்பதற்கு மட்டுமே பயன்படுமே தவிர யதார்த்த வாழ்க்கைக்கு பயன்படாது என வாதிட்டனர். இத்தகைய கல்வி முறையினை நிராகரித்த இவர்கள் மக்கள் சூழ்நிலை சார்ந்த அறிவு எழுச்சியினை தோற்றுவிக்க முயற்சித்தனர். வயது வந்தோருக்கான கல்வி, மக்கள் விடுதலைக்கான கல்வி, மக்கள் கலாசார எழுச்சிக்கான கல்வி என பிரகடனப்படுத்தி மக்கள் தன்னைப்பற்றி உணர சிந்திக்க செயற்படக்கூடிய அறிவுத்துறையினை கட்டியெழுப்பினர். இரண்டு இலட்சம் மக்களை எழுத, வாசிக்க, சிந்திக்க அறிவினை பயன்பட வைத்ததால் பிரேசில் அரசாங்கமானது இவரை 'கல்வி வன்முறையாளர்' என கூறி சிறையில் அடைத்தது. பின் மக்கள் எழுச்சி நிறைந்த போராட்டங்களால் சிறையிலிருந்து வெளியில் வந்த இவர் மக்கள் விடுதலைக்கல்விப் பற்றி விவாதங்களை முன்னிருத்தி அறிவுத்தொகுதியினை அடித்தட்டு உழைக்கும் மக்களை சென்றடைவதற்கான மார்க்கத்தினை முன்வைத்தார்.

ஜுலியஸ் நியாரேரேயின் அறிவுத் தேடலானது மக்கள்மயப்படுத்தும் முயற்சியாக அமைந்தது. பின்தங்கிய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தன்சானியாவின் ஜனாதிபதியாக இருந்தவர் பின்தங்கியிருந்த தன்சானியா நாட்டினை உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்தவர். அறிவு என்பது 'தனது சுயத்தில் தங்கியிருத்தல்' என்ற சிந்தனைகளை நடைமுறையில் ஏழை விவசாய மக்களின் அறிவினை பயன்படுத்தினார். உழைக்கும் ஏழை கிராமிய மக்களை முன்னிலைப்படுத்திய இவர் அறிவினை வர்த்தக போட்டிமுறையினை நிராகரித்து சுயதேவை பொருளாதார மக்கள் வளர்ச்சிக்கு அறிவு துனையாக வரவேண்டும் என வாதிட்டார். அதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தார். நடைமுறையில் காணப்படுகின்ற பாடசாலைகள் நிலமானிய சமூகத்திற்குரிய அறிவினையும் அதிகார படிமுறைகளையும் உருவாக்கும் அறிவுத்தொகுதிகளாக காணப்படுவதை விமர்சனம் செய்தார். ஏட்டுக்கல்வியில் பயன்படாத தன்மையினை எடுத்துக்காட்டி கல்வி மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும் என எடுத்துரைத்தார். வர்க்க கட்டமைப்பை உறுதிப்படுத்தும் ஏற்றத்தாழ்வான பாடசாhலையின் கல்விக்கு பதிலாக சுய முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவு நீட்சியினை வளர்த்தெடுத்தார். 

இவர்களின் கருத்துக்களை அடியொட்டி அறிவினை மக்கள் கையகப்படுத்தும் முயற்சிகளை மூன்றாம் உலக நாடுகள் முயன்றபோதிலும் நவகாலனித்துவ செயற்பாடுகள் பழைய நிலமானிய கருத்தியல்கள் நவீன மயப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி என்பன அறிவின் வர்க்க தன்மையினை உறுதிசெய்துக் கொண்டிருக்கின்றது. உலகமயம், தாராளமயம், நுகர்வு கலாசாரம் என்பனவற்றினை அளவுகோளாகக் கொண்டு அறிவினை மதிப்பீடு, அளவீடு செய்ய முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் பின்னணியில் தான் அறிவுப் பொருளாதாரம் என்ற சிந்தனை நடைமுறை வடிவமெடுத்தது. அறிவினை கையேந்தி அறிவின் ஊடாக மூலதனப் பாய்ச்சலை ஏற்படுத்தி அதனை ஒரு வலைப்பின்னலாக வடிவமைத்து ஏற்றுமதி செய்வதும் இறக்குமதி செய்வதுமான செயன்முறையினை உலகமயம் முன்மொழிந்தது. உழைப்பு – உற்பத்தி – நுகர்வு போன்ற அம்சங்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் முயற்சியில் தற்காலிக வெற்றியினை உலகமயம் பதிவு செய்துக் கொண்டது. பெரும்பான்மையான உழைப்பாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வர்க்க அறிவினை மூலதனமாக பெற்றவர்களின் சிலரது அதிகாரக் கட்டமைப்பாக அறிவுத்துறை மாற்றப்பட்டது. 

இந்நிலையில் தான் மிக்கையில் பூக்கோ அறிவினை கட்டுடைப்பு செய்தார். எதனையும் முழுமையாககப் பார்க்காமல் பகுதி பகுதிகளாக பார்க்க வேண்டும் என கூறிய மிக்கையில் பூக்கோ, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறம் ஒன்றும் இல்லை என வாதிட்டார். அதிகாரம் நடுநிலைப்படுத்தப்பட்டு அறிவு மையப்புள்ளியினை சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருப்பதாகவும் பெரும் கதையாடலுக்குள் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அறிவு நசுக்கப்படுவதாகவும் எடுத்துக்கூறினார். பிச்சைக்காரர்கள், பழங்குடியினர், சாதிய அடிப்படையிலான அடித்தட்டு மக்கள், தன்னின சேர்க்கையாளர்கள், பெண்கள் போன்றோர் விளிம்பு நிலை மக்கள் கூட்டம் என அடையாளப்படுத்தி இவர்களை நோக்கிய அறிவுப் புரட்சியினை நகர்த்த வேண்டும் என முன்மொழிந்தார். எவையெவை தமக்கு தேவை என்பதை அறிவினை மையப்படுத்திய அதிகார மையம் தீர்மானிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் விளிம்பு நிலை மக்களின் தாழ்வான கருத்தியல்களின் மதிப்பீடுகளை நிராகரித்து தனது தேவைக்கான அறிவினை முன்மொழிந்துக் கொள்ள வேண்டும் என வாதிட்டார். இவ்வாறு அறிவை கட்டுடைப்பு செய்த மிக்கையில் பூக்கோ பின் நவீனத்துவ சிந்தனைக்குள் தனது எல்லைகளை சுருக்கிக்கொண்டு அறிவுத்துறைக்கு பாதகமான வெடிப்புக்களை ஏற்படுத்தியுள்ளுத என்பதையும் கவனிக்க வேண்டும். 

இந்திய சிந்தனை மரபில் தொல்லியல் கலைகள், செவ்வியல் கலைகள், வேதங்கள், காவியத்தலைவர்கள் போன்ற அனைவரும் மைய அரசியல் அதிகாரத்தை கொண்டிருப்பவர்கள். அந்த மைய அதிகார அரசியலில் இலக்கியப் பண்பாட்டை விளிம்பு நிலை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விளிம்பு நிலை மக்கள் உருவாக்கிய பழமொழிகள், நாட்டார் பாடல்கள், சிந்தனைகள், பேச்சுவழக்குகள், கூத்துக்கள், கிராமியக் கலைகள் என்பன மைய அதிகார வர்க்கத்தால் ஓரங்கட்டப்பட்டு அவை ஏற்றுக்கொள்ளப்படாத சிறு கதையாடல்கள் என கூறப்பட்ட அதிகார மையத்தினை கேள்விக்கு உட்படுத்திய மிக்கையில் பூக்கோ அறிவியலில் பின்நவீனத்துவ சிந்தனையை முன்மொழிந்தார்.

பௌலே பிரேரேயின் சிந்தனைகளை மிக்கேயில் பூச்சோவிடமும் காணமுடியும். அறிவினை கட்டுடைத்து மைய அதிகாரத்தினை கேள்விக்குட்படுத்தி அதனை நிராகரிக்கும் அறிவின் தேடலை கீழ்மட்ட மக்களுக்கு கொண்டு செல்ல பகிரத பிரயத்தனத்தை மேற்கொண்டார். இன்னொரு வகையில் அறிவினை கட்டுடைத்து சென்ற இவர் கீழ்மட்ட மக்கள் விளிம்பு நிலை மக்களின் அறிவின் பால் கவனம் செலுத்துகின்ற அதேவேளை தொழிலளார், விவசாய வர்க்க அரசியலை அமைப்பு ரீதியில் முன்னெடுத்து சமூக மாற்ற அறிவினை பயன்படுத்தும் மக்கள் அமைப்பினை நிராகரிக்கின்றார். இது இன்னொரு வகையில் முதலாளித்துவத்தை புனர்தானம் செய்யும் அல்லது மீள் கட்டுமானம் செய்யும் முயற்சிக்கு வலு சேர்ப்பதாக அமைந்து விடுகின்றது. 

இன்று உலகமயமானது அறிவுப் பொருளாதாரம் என்ற கோட்பாட்டு தொனியில் அறிவினை வியாபாரமாக்கி அதனை வெறும் நுகர்வு கலாசாரமாக மாற்றி வருகின்றது. அறிவின் சுயத்தை இழந்து ஏகபோக நிறுவனங்களுக்குள் முடங்கிக் கொண்டிருக்கும் செயன்முறையாக மாற்றியமைத்துவிடுகின்றது. தேசிய உற்பத்தி, தேசிய பொருளாதாரம், சுதேசிய பண்பாடு என்பன பற்றிய சிந்தனைகளை, திறன்களை முடக்கி வெறும் எந்திரங்களுடன் அறிவினை பிரயோகிக்கும் நிலையினை உலகமயம் உருவாக்கியுள்ளது. பல்கலைக்கழகங்கள், ஏனைய உயர்கல்வி நிலையங்கள், கனனி இணையவழி தொழில்நுட்பத்துடன் பின்னிப்பினைந்து உடல் உழைப்பிலிருந்து அந்நியப்படுத்தி மூளை சார்ந்த உழைப்பாளர்களை உற்பத்தி செய்துக்கொண்டிருக்கின்றது. இன்னும் இந்நிறுவனங்கள் அறிவில் வர்க்கத்தன்மையினை ஆழப்படுத்தி – அகலப்படுத்தி வருவதை அவதானிக்க முடியும். ஏற்றத்தாழ்வான கல்வி முறை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதையும் அவதானிக்க முடியும். 

இவ்வாறு இன்று அறிவானது வர்க்கத்தன்மையுடன் உலகமயமாதல் நிகழ்ச்சிநிரலுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மறுபுறத்தில் இந்த அறிவினை மக்கள் கையகப்படுத்தும் சமூக மாற்ற போராட்டங்கள் நடந்துவருகின்றது. கார்ல்மார்க்ஸ் 'உலகை எல்லோரும் வியாக்கியானம் செய்கின்றார்கள். எமது பணி அதனை மாற்றுவதே' என்ற சிந்தனைக்கு ஏற்ப அதிகார அரசியலின் மையப்புள்ளியிலிருந்து அறிவினை தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோர் அமைப்பு ரீதியாக போராடி மீட்டெடுப்பதே ஒரே வழியாக இருக்க முடியும்.

ஜெ.சற்குருநாதன்
விரிவுரையாளர்
ஆசிரியர் கலாசாலை
கொட்டகலை
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates