Headlines News :
முகப்பு » » இந்தியப் பிரதமரின் வருகையை பயன்படுத்திக்கொள்வது எவ்வாறு? - பெ.முத்துலிங்கம்

இந்தியப் பிரதமரின் வருகையை பயன்படுத்திக்கொள்வது எவ்வாறு? - பெ.முத்துலிங்கம்


ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் தனித் தேசியமாக பரிணமித்து வரும் மலையக மக்களின் வாழ்விடத்துக்கு மேற்கொண்ட விஜயமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தியப் பிரதமர் ஒருவர் மலையக தமிழ் மக்களை அங்கீகரித்து விஜயம் செய்தமை இதுவே முதற் சந்தர்ப்பமுமாகும். இன்றைய மலையக மக்கள் தாம் தனித்துவம் மிக்க தமிழர்கள் என்பதை 1930ஆம் ஆண்டுகள் முதலே பதிவு செய்ய ஆரம்பித்தனர். இப்பதிவானது 1939ஆம் ஆண்டு அன்றைய இந்திய தேசிய காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினராகவிருந்து, பின்னாளில் இந்தியாவின் முதற் பிரதமரான ஜவர்லால் நேருவின் விஜயத்துடன் வலுப்பெற்றது. நேருவின் ஆலோசனையின்படி இலங்கை இந்தியக் காங்கிரஸ் உருவாக்கம் பெற்றதுடன், அன்று முதல் தம்மை இந்தியத் தமிழரென இன்றைய மலையக மக்களின் மூதாதையர்கள் இனங்காட்டினர்.

இவ்வாறு இலங்கையின் பூர்வீகத் தமிழர்களிலிருந்து தனித்துவத்தை பேணிவந்த இத்தமிழர்கள் சுதந்திரத்தின் பின்னர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டமையினால் தமக்கான வாழ்வுரிமைகளை இழந்தனர். இவ்வாழ்வுரிமை இழப்பு தேசிய தனித்துவத்தை நோக்கிய நகர்வினை மட்டுப்படுத்தியது. ஜவஹர்லால் நேருவின் மறைவின் பின்னர் இந்திய ஆட்சியாளர்களும் இவர்களது தனித்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்து அங்கீகரிக்கும் நிலைப்பாட்டினை கடைப்பிடிக்கத்தவறினர். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டின் காரணமாக 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு, சுமார் ஐந்து லட்சம் பேர் இலங்கையை விட்டு தமிழ் நாட்டிற்கு செல்ல நேர்ந்தது.

எஞ்சிய நான்கு லட்சம் பேர் தொடர்ந்து இலங்கையின் மலைநாட்டிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் வாழ நேர்ந்தது. இன்று இந்த நான்கு லட்சம் மக்களும் சுமார் பதினாறு லட்சமாக அதிகரித்துள்ளதுடன், வெறுமனே தோட்டத்தொழிலாளர்களை மட்டும் கொண்டிருந்த இம்மக்கள் தற்போது மத்தியதர வர்க்கம் உட்பட பல வர்க்கத்தட்டுக்களைக் கொண்ட தேசிய இனமாக பரிணமித்துள்ளனர். இப்பரிணாம மாற்றம் இன்று தம்மை ஒரு தனி இனமாக புதிய அரசியல் யாப்பில் குறிப்பிடும்படி கோரிக்கையை முன்வைக்கச் செய்துள்ளது. இச்சந்தர்ப்பத்திலேயே இந்தியப்பிரதமர் மோடி மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவ்வகையில் இவ்விஜயமானது இந்திய அரசு மலையக மக்களை தனித்துவமான தமிழ் இனமாக அங்கீகரித்து, அதன் நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்க வழி சமைத்துள்ளது.

1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை தனி இனமாக இந்தியா அங்கீகரித்து, இலங்கை தொடர்பாக மேற்கொள்ளும் உடன்படிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை இம்மக்களின் தொழிற்சங்க மற்றும் அரசியற் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பியபோது, மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமான் நரசிம்மராவை மலையகத்திற்கும் அனுப்பிவைக்கும்படி கோரியபோதிலும் பிரதமர் இந்திராகாந்தி அதற்கு இணங்கவில்லை.

 அவர் நரசிம்மராவை அனுப்பிவைக்கவுமில்லை. 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் இக்கோரிக்கை மேலும் வலுப்பெற்றது. 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தமது பிரதிநிதியாக ஜீ.பார்த்தசாரதியை அனுப்பியவேளை, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களது பிரச்சினைகளுக்கும் செவிசாய்க்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தார். ஆனால் அக்கோரிக்கைக்கு முன்னுரிமையளிக்கப்படவில்லை எனினும் ஜீ. பார்த்தசாரதி சௌமிய மூர்த்தி தொண்டமானை சந்தித்துவிட்டுச் சென்றார்.

அதன் பின்னர் கடந்த முப்பது ஆண்டுகளின்போது இலங்கை வந்த இந்திய பிரதிநிதிகள் போகும் வழியில் மலையகத் தலைமைகளை பேருக்குச் சந்தித்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவுடன் செய்த ஒப்பந்தத்தின்போதும் மலையக மக்களின் பிரச்சினையின்பால் சிறப்புக் கவனம் செலுத்தப்படவில்லை. மாறாக ராஜிவ்  ஜே.ஆர். ஒப்பந்தம் சுமுகமாக அமுல்படுத்துகையில் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களையும் அவர்களது வழித்தோன்றல்களையும் இந்தியாவிற்கு அழைத்துக்கொள்ளும் சரத்தை இவ்வொப்பந்தம் உள்ளடக்கியிருந்தது. இவ்வகையில் இந்தியா இலங்கையின் மலையக மக்கள் தொடர்பாக தொடர்ச்சியாக அதிமுக்கியத்துவம் வழங்காது இருந்தது. ஆயினும் யுத்தம் முடிவடைந்தபின் இலங்கை தொடர்பான இந்திய நிகழ்ச்சி நிரலில் வடகிழக்கு தமிழ் மக்களுடன் மலையக மக்களுக்கும் முன்னுரிமை அளிக்க முனைந்துள்ளது என்பதனை அறிய முடிகின்றது.

இங்கு இன்னுமொரு இந்திய அரசியல் விடயத்தையும் மனதிலிருத்திக் கொள்ளவேண்டும். அதாவது பிரதமர் மோடியின் மலையக மக்கள் மீதான பாசம் திடீரென எழுந்த ஒன்றாக கருதலாகாது. இந்தியாவின் பல மாநிலங்களில் கால் பதித்துள்ள மோடியின் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தமது தடத்தை ஆழமாகப்பதிப்பதில் சவால்களை சந்தித்துள்ளது. தழிழகத்தின் அனைத்து திராவிடக்கட்சிகளும், தமிழ் தேசியக் கட்சிகளும் ஈழத்தமிழர்களின் விடயத்தின்பால் அக்கறை காட்டிவருகின்றமையினால் பா.ஜ.க.விற்கும் இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் நாட்டில் தமது செல்வாக்கை வேரூன்றச் செய்வது பாரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க.விற்கு தமிழ் நாட்டு மக்களின் மனங்களை கவரும் தேவை இருக்கின்றது. இலங்கையின் வடக்கு தமிழ் மக்களுக்கு பல உதவிகளை வழங்கினாலும் திராவிடக் கட்சிகளின்மேல் தமிழக மக்களுக்கு உள்ள ஆகர்சிப்பை உடைப்பது கடினமாகவுள்ளது. இந்நிலையில் தமிழக மக்களில் அண்மைய நேரடி தொப்புள்கொடி உறவான (திராவிடக் கட்சிகளும் தமிழ் தேசியக் கட்சிகளும் இதனைப் பற்றி பெரிதாக கதைக்காவிட்டாலும்) மலையக மக்களின் நலனுக்கு உதவிகள் வழங்குவதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை பதிக்கச் செய்யும் உபாயத்தை மோடி கடைப்பிடிக்கலாம்

இப்பின்புலத்தில் இந்தியாவின் மூலஉபாயத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது மலையக தலைமைகள் முன்னுள்ள சவாலாக உள்ளது. இந்தியாவின்பால் சிங்கள மக்களும் அதன் அனைத்து தலைமைகளும் வரலாறு முழுவதும் சந்தேகத்துடனேயே பார்க்கின்றன. எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டாராநாயக்க, டி.எஸ் சேனாநாயக்க முதல் விஜேவீரவரை இந்தியத் தோட்டத்தொழிலாளர்களை இந்தியாவின் ஐந்தாம் படையாகவே கருதினர். அத்துடன் இம்மக்கள் இந்தியாவிற்கு விசுவாசமானவர்கள் என்ற கருத்தினையே கொண்டிருந்தனர். 2003 ஆம் ஆண்டுக்குப்பின்னரே இந்த மனோநிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டதுடன் மலையக மக்களை இலங்கைத் தமிழர்களாக கருதும் மனோநிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய மலையக மக்கள் மத்தியிலும் நாம் இலங்கையர் என்ற மனோபாவம் ஏற்பட்டுள்ளது. இம்;மனோநிலைகளைக் காப்பாற்றிக்கொண்டே இந்தியாவுடனான உறவுகளை பேணுவதுடன் உதவிகளையும் பெறவேண்டியுள்ளது. எனவே மலையகத் தலைமைகள் இதனைக் கருத்திற் கொண்டு செயற்படுவது மிக அவசியமாகும்.

மலையக மக்களது அனைத்து அடிப்படை தேவைகளையும் இலங்கை அரசாங்கமே வழங்கவேண்டும்;. அதனைப் பெறுவதற்காக மலையக அரசியல் தலைமைகள் செயற்பட வேண்டும். மலையக மக்கள் தொடர்பாகவுள்ள இலங்கை அரசின் கடப்பாட்டை தட்டிக்கழிக்க வாய்ப்பளிக்கலாகாது. எனவே இலங்கை அரசாங்கம் ஊடாக முன்மொழியும் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவி செய்யும் வழிமுறைகளையே உருவாக்க வேண்டும். மாறாக இந்திய உதவிகள் வெறுமனே இந்தியத் திட்டங்களாக வரின் அதன் பேண்தகு நிலைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்காது. இதற்கு மேற்கத்தைய நாடுகளின் உதவிகளுடன் மலையகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் நல்ல உதாரணங்களாகும். மறுபுறம் இவ்வாறு மேற்கொள்கையில் இன எதிர்ப்பு மனோபாவம் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் எழாது அல்லது குறைவடையலாம்.எனவே மலையகத் தலைமைகள் இந்தியாவுடனான உறவினை மிக அவதானமாக முன்னெடுக்க வேண்டும்.

இந்திய பிரதமர் மோடி, பத்தாயிரம் வீடுகளுக்கான உதவியை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார். மறுபுறம் இலங்கைப் பிரதமர் அனைத்து மலையக மக்களுக்கும் ஏழு பேர்ச் காணியை வழங்குவதாக அதேமேடையில் வாக்குறுதியளித்துள்ளார். அத்துடன் எமது ஜனாதிபதி மலையக மக்களின் அபிவிருத்திக்கு தமது அரசாங்கம் முழு ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்துள்ளார்.இம்;மூன்று உறுதி மொழிகளையும் எவ்வாறு நிலையான அபிவிருத்திக்கு வித்திட்டுக்கொள்வது என்பது பற்றி கவனத்திற் கொள்ளவேண்டும். இன்று வாக்குறுதியளித்த மூன்று தலைவர்களும் மூன்று ஆண்டுகள் வரை ஆட்சியில் இருக்கும் வரத்தைக் கொண்டுள்ளனர். அடுத்து யார் வருவார்கள் எனத் தெரியாது.

ஆகையால் பத்தாயிரம் வீட்டுக்காக வழங்கவுள்ள நிதியை ஒரு நிலையான நிதியாக மாற்றிக்கொள்ள வேண்டும். பத்தாயிரம் வீட்டுக்கான நிதியைக்கொண்டு மலையக வீட்டுக்கான வீட்டுக்கடன் வங்கி ஒன்றை உருவாக்க வேண்டும். அந்த நிதி மூலம் குறைந்த வட்டியிலான கடனை வழங்க வேண்டும். நிதியினை மலையக மக்களுக்கானதாகவே உருவாக்கிக் கொள்ளவேண்டும். இந்நிதியினை இலங்கை வங்கி, மக்கள் வங்கி அல்;லது வேறு ஏதேனும் அரச வங்கியின் ஓர் அலகாக உருவாக்க வேண்டும் . இவ்வாறு செய்துக்கொண்டால் பத்தாயிரம் வீட்டுக்கு பதிலாக பல ஆயிரம் வீடுகளை மலையக மக்கள் தொடர்ந்து கட்டிக்கொள்ள வாய்ப்பேற்படும். (உதாரணத்திற்கு அரச உத்தியோகத்தர்களுக்கு மிகக் குறைந்த வட்டியிலேயே வீட்டுக்கடன் வழங்கப்படுகின்றது) மறுபுறம் இலங்கை அரசாங்கத்தையும் இவ்வங்கிக்கு முதலீடு செய்யும்படி கோரமுடியும். இலங்கையிலிருந்தும் பர்மாவிலிருந்தும் இந்தியாவிற்கு சென்ற மக்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டு தற்போது பாரிய வங்கியாக செயற்பட்டு வரும் றேபியா (Repatriate cooperative finance and development bank) வங்கியை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மலையக மக்கள் தொடராக கடன்பெற்று தமது வீடுகளை கட்டிக் கொள்ள வாய்ப்பேற்படும். இவ்வாறு கோரும் வேளையில் இலங்கை அரசாங்கத்தை இவ்வருடத்திற்குள் அனைத்து தோட்டவாழ் மக்களுக்கும் ஏழு பேர்ச் காணியை வழங்கும்படி கோரி அதனை நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக மலையக மக்களின் பிள்ளைகளுக்கு நகர்சார் மலையக தொழிலாளர் பிள்ளைகள் உட்பட இந்தியாவில் கல்வி கற்பதற்கான சிறப்பு ( Special/Affirmative) புலமைபரிசில்களை வழங்கும்படி கோரவேண்டும். குறிப்பாக வைத்தியம், பொறியியல், விஞ்ஞானம் மற்றும் கணனி முதலிய துறைகளில் கற்க வாய்ப்பளிக்கவேண்டும் என்று கோரவேண்டும். இந்தியாவில் தலித் பிள்ளைகளுக்கு வழங்கும் சிறப்பு புலமைபரிசிலுக்கு சமமான திட்டத்தைக் வழங்கக் கோரவேண்டும். மலையக பிள்ளைகள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற்று மருத்துவம், கணிதம், விஞ்ஞானம் முதலிய துறைகளுக்கு போகமுடியாமல்; உள்ளது. இதனால் குறிப்பாக பத்தாம் வகுப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இவ்வாய்ப்பினை வழங்க வேண்டும். அதாவது பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை கல்வி கற்க வாய்ப்பு அளிக்கும்படி கோரவேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மலையக மக்கள் மத்தியில் புலமைசார் கற்றோரை உருவாக்க முடிவதுடன் ஏனைய சமூகத்தினர் அடைந்திருக்கும் எல்லையை எட்டிப்பிடிக்க முடியும். வெறுமனே க.பொ.த உயர்தர பாPட்சையில் கற்றோருக்கு பல்கலைக்கழக புலமைப்பரிசில் வழங்கும் படி கோரினால் இன்னும் பல தசாப்தங்களுக்கு பின்னடைவினையே சந்திக்க நேரிடும்.

அதேவேளை இன்றைய உலகமயமாக்கல் தொழில்வாய்ப்பினைக் கருத்திற் கொண்டு இந்தியா உடனடியாக தொழிலில் அமரக்கூடியவாறான பல தொழில்சார் டிப்ளமோ கல்வி வாய்ப்பினை தமது நாட்டில் ஊக்குவித்து வருகின்றது. எனவே, பத்தாம் வகுப்பு சித்தியடைந்த அதேவேளை மேற்படிப்பை தொடர விரும்பாத மாணவர்களுக்கு தொழில்சார் டிப்ளமோ கல்வியை வழங்கும்படியும் கோரவேண்டும். ஆகக் குறைந்தது ஒரு வருடத்திற்கு 300 புலமைப்பரிசில் வழங்கப்படுமாயின் இதுவே நிலையான அபிவிருத்திக்கு வித்திடுவதுடன் நாட்டின் ஏனைய சமூகங்கள் கொண்டிருக்கும் வளர்ச்சியினை மிக இலகுவில் எட்டிப்பிடிக்க முடியும்.

எமது நாட்டினைப் போல் இந்திய வெளியுறவுக் கொள்கை ஆட்சி மாற்றத்துடன் மாறுபடும் தன்மை கொண்டதல்ல. மாறாக இந்தியாவின் நிர்வாகத்துறையினரே (bureaucracy) அதனைத் தீர்மானிக்கின்றனர். எனவே பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் மலையகத் தலைமைகள் டெல்லியிலுள்ள தென்மண்டலப் (South Block) அதிகாரிகளைச் சந்தித்து இக்கோரிக்கையை ஒரு முன்மொழிவாக முன்வைக்கவேண்டும். இத்தென்மண்டல அதிகாரிகளே வெளியுறவு கொள்கையின் திட்டங்களைத தீட்டுபவர்களாகக் காணப்படுகின்றனர். எனவே உடனடியாக டெல்லிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்வது அவசியமாகும். இவ்வாறு செல்லும் குழுவில் வெறுமனே அரசியல் வாதிகள் மட்டுமல்லாது புலமைசார் பிரிவினரையும் உள்ளடக்கிக் கொள்ளவேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates