Headlines News :
முகப்பு » » திசை மாறும் தேயிலை - மல்லியப்பு சந்தி திலகர்

திசை மாறும் தேயிலை - மல்லியப்பு சந்தி திலகர்

(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 16) 

அபிவிருத்தி மதிப்பீடுகளுக்கான சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சர்வதேச சுயாதீன மதிப்பீட்டாளர்களினதும் ஒன்று கூடல் ஒன்றிற்காக அண்மையில் கிரிகிஸ்தான் நாட்டிற்கு செல்லக்கிடைத்தது. முதலில் இந்த கிரிகிஸ்தான் என்கிற நாட்டைப்பற்றி சொல்லிவிடுவோம். இது முன்னைய ஒன்றிணைந்த சோவியத் ரஷ்யாவின் உறுப்பு நாடு. இப்போது தனியான நாடாக இயங்குகிறது. விசாரித்துப்பார்த்ததில் நாங்கள் சேர்ந்தே இருந்திருக்கலாம் என்பதுதான் பலரது அபிப்பிராயமாக இருந்தது. 

அடுத்தது மதிப்பீடு பற்றிய ஒர் அறிமுகம். அரசாங்கம் என்ற வகையில் நாடுகள் என்ற வகையில் ஆண்டுதோறும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய அபிவிருத்திகள் அடையப்படுகின்றனவா? என்பதை திட்டமிட்ட காலம் முடிவடைந்த பின்னர் அளவீடு செய்யாமல் அந்த திட்டம் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதும் நடைபெறும்போது அத்தகைய அபிவிருத்திகளை அளவீடு செய்து சரியான திசையில் பயணிக்கச்செய்வதும் இந்த மதிப்பீட்டு கருதுகோளின் தாற்பரியம்.

 2030 இல் நாம் அடைய வேண்டிய இலக்குகள் பற்றி ஐ.நா ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறது. அது எல்லா நாடுகளிலும் நடைபெறுவதை உறுதி செய்யப்பட வேண்டியது எல்லோரதும் பொறுப்பு. எனவே அத்தகைய அபிவிருத்திகளை மதிப்பீடு செய்யும் குழுக்களை நாடுகள் தோறும் உருவாக்கி நடைமுறைப்படுத்தும் ஒரு சர்வதேசத்திட்டம் இப்போது செயற்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் பாராளுமன்ற உறுபபினர்களையும்; இணைத்துக்கொள்ளும் யோசனையை உலகுக்கு முன்வைத்தவர் நமது அமைச்சர் கபிர் ஹாசிம் என்பது மேலதிக தகவல். இதற்காக இவருக்கு இந்த ஆண்டு சிறப்பு விருது ஒன்றும் அறிவிக்கப்பட்டது. காரணம் அவரது எண்ணம் ஈடேறிஇன்று பல நாடுகளிலும் தாங்கள் அபிவிருத்தி மதிப்பீட்டாளர்களாக செயற்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர். அதில் இலங்கை சார்பாகவே அடியேன் கலந்துகொண்டிருந்தேன். இன்னும் பலர் எம்மோடு இணைந்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு உலகம் முழுவதுமாக அபிவிருத்தி மதிப்பீட்டார்களாக செயற்பட முன்வந்துள்ள சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்று கூடலும் செயலமர்வும் கூட இலங்கையில் நடைபெறவுள்ளது. 

இப்போதைக்கு முள்ளுத்தேங்காய்க்கும் மதிப்பீட்டுக்கும் என்ன தொடர்பு எனும் விஷயத்துக்கு வருவோம். மேற்படி மாநாட்டுக்கு சென்றிருந்த சமயத்தில் கிரிகிஸ்தான் நாட்டில் பாராளுமன்ற அவையில் அமர எங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இலங்கை பாராளுமன்ற மரபில் இது சாத்தியமில்லை. பின்னர் குழு அறையில் எங்களுக்கு உரையாற்றவும் வாயப்பு வழங்கப்பட்டது. எனது உரையின் சுருக்கத்தை சொல்லிவிட்டு நமது விஷயத்துக்கு வருவோம். ஏனெனில் அங்குதான் விஷயமே இருக்கிறது. 

'நான் அதிகாலை ஐந்து மணியளவில் இந்த மத்திய ஆசிய நாட்டுக்கு வந்துசேரந்தேன். என்னை வரவேற்க புன்னகை பூத்த முகத்துடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் காத்திருந்தார். அவரோடு உரையாடிக்கொண்டே தூரத்தே தெரிந்த 'வெள்ளிமலைகளை' ரசித்துக்கொண்டு வந்தேன். ஆம், அந்த அழகிய காலை வெயிலில் தூரத்தே தெரிந்த அந்த பனி படர்ந்த  மலைகள் வெள்ளிமலைகளாக விரிந்து கிடந்தன. என்னை அவதானித்த அழைத்து வந்த உறுப்பினர் அவர்களின் மலைகள் பற்றிய பெருமைகளை சொன்னார். அவற்றை செல்வமாக மதிக்கின்றனர். நானும் எங்கள் மலைகளைப் பற்றி சொன்னேன். அவை பச்சைக் கம்பளம் விரித்த பசுமை மலைகள். தங்கும் விடுதியை அடைந்தோம். என்னை அங்கே இறக்கிவிட்டு உறுப்பினர் விடைபெற்றுக்கொண்டேன். குறித்துத் தயாராகி காலைஉணவு சாலைக்கு சென்றேன். தேநீர் ஒன்றைத் தயாரிக்க தயாரானானேன். ஆஹா.. என்ன ஒரு ஆனந்தம். 'சிலோன் டீ' என என்முன்னே.  எனக்குள் ஒரு பெருமை. மூன்று நாள் செயலமர்வுகள் முடிந்து கிரிகிஸ் பாராளுமன்றம் வந்தால் அங்கும் சிலோன் டீ. அதில் இன்னொரு விஷேசம் இது இலங்கைத் தேயிலை மட்டுமல்ல இந்த தேயிலை உற்பத்தியாகும் மாவட்டத்தில் இருந்துதான் வருகின்றேன். எங்கள் தேயிலைகளை கொள்வனவு செய்யும் உங்களுக்கு நன்றி. அடுத்த வருடம் நீங்கள் எங்கள் நாட்டுக்கு வரப்போகின்றீர்கள். வாருங்கள் உங்கள் எல்லோருக்கும் எங்கள் சிலோன் டீ பரிசளித்து வரவேற்க காத்திருக்கிறேன்'

எல்லோரும் மகிழ்ச்சியுடன் கரகோஷம் செய்தார்கள். நான் பின்னோக்கி சிந்திக்கத் தொடங்கினேன். நான் சென்னதெல்லாம் சரிதான். ஆனால் அந்த தேயிலை எங்கள் நுவரெலியா மாவட்டத்தில் இருந்துதான் சென்றது என என்னால் உறுதிபட சொல்ல முடியுமா?

இந்த ஆண்டு மலையக தமிழ் மக்கள் வாழ்வில் முக்கியமான ஆண்டு. நாம் இந்த நாட்டுக்குள் உழைப்பாளர்களாக வந்து இருநூறு ஆண்டுகள். அப்போது கோப்பிக்காக வந்தோம். கோப்பி நோய்வாய்ப்பட்டது. கோப்பியை கொண்டுவந்த வெள்ளையர்களை கோப்பியை கைவிட்டார்கள். நம்மை வடவில்லை.தேயிலையை அறிமுகப்படுத்தி அதோடு நம்மையும் சேர்த்து விட்டார்கள். இது நடந்து இப்போது 150 ஆண்டுகள். ஆக நாம் வந்து 200 ஆண்டுகள் நம் தேயிலை வந்து 150 ஆண்டுகள். இந்த 150 ஆண்டுகளில் இந்த நாட்டில் தேயிலையின் வகிபாகம் என்பது மிக முக்கியமானது. தேயிலையை மையப்படுத்தியே பல்வேறு பொருளாதார அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன. 

ஏற்றுமதி பொருளாதாரம், பங்குசந்தை, வங்கித்தொழில் ரயில்போக்குவரத்து இவை இந்த தேயிலையின் ஊடாக மேலெழுந்த துறைகள். இன்றும் கூட பயணிகளை ஏற்றிஇறக்க ரயில் நிலையங்களுக்கு பக்கத்தில் மலையகப்பகுதிகளில் ஒரு பெரும் களஞ்சியசாலை இருக்கும். அண்மையில்தான் ஹட்டனில் அது உடைக்கப்பட்டது. ஏனைய ரயில் நிலையங்களில் உண்டு. சில ரயில் நிலையங்கள் தேயலையை ஏற்றிய இறக்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக தலவாக்லையைத் தாண்டி சென்.கிளேயர் சிறு நிலையத்தைக்கொள்ளலாம். 

இந்த நாட்டில் பங்கு சந்தை வர்த்தகத்திற்கு வித்திட்டதே தேயிலை தரகுக் கம்பனிகள் ஊடான ஒரு நிறுவனத்தோற்ற வளர்ச்சிதான். தேயிலைப்போக்குவரத்தை மையப்படுத்தி ரயில் போக்குவரத்து மாத்திரமல்ல தனியார போக்குவரத்து நிறுவனங்கள் கூட வெகு பிரசித்தம். ஹட்டனில் எம்.ஆர்.பெரனான்டோ, தலவாக்கலையில் ஹேமசந்திர பேர்ற நிறுவனங்கள் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த போக்குவரத்து நிறுவனங்கள். 

இன்று அவற்றுக்கு என்ன நேர்ந்தது. 1867 ல் இருந்து பிரத்தானியர் வசமே இருந்த கம்பனிகள் 1972 ஆம் ஆண்டுதான் இலங்கை அர சுக்கு மாறியது. 1972 வரையான அந்த காலப்பகுதயில் நமது மக்கள் நோக்கிய செல்வ செழிப்பான திட்டங்கள் இல்லாதபோதும் உறுதியான ஒரு தொழில்துறையில் வேலை செய்யக்கூடிய நிலைமை நமது மக்களுக்கு இருந்தது. வெள்ளைக்காரன் காலத்து தோட்டப்பராமரிப்புகள் பற்றி இன்றைய தலைமுறை தெரிந்து கொள்வதற்கு நான் அறிந்த வகையில் அல்அஸுமத் எழுதியிருக்கும் 'அறுவடைக்கனவுகள்' நாவல் நல்ல கைநூல்.

1972ல் குடியரசானதும் பிரித்தானியய கம்பனிகள் வெளியேற நேர்ந்தன. காணி உச்சவரம்பு சட்டம் 50 எக்கருக்கு மேல் தனியார் வசம் காணிகள் வைத்திருக்க முடியாத நிலையை தோற்றுவித்தது. தோட்டங்களை அரசு பொறுப்பேற்றது. ஜனவசம, உசவசம, பெருந்தோட்ட யாக்கம் என பெருந்தோட்டங்களை அரசு பொறுப்பேற்றது. இது நடந்தது. உயர்நிலத்தேயிலை உற்பத்திப் பிரதேசத்தில். இலங்கையில் தேயிலை உற்பத்திப் பிரதேசங்கள் மூன்று வகைப்பட்டன. உயர்நிலம் பொதுவாக நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை மாவட்டங்கள் இதற்குள் அடங்கும். அடுத்தது, மத்திய நிலப்பிரதேசம் இதற்குள் இரத்தினபுரி, கோலை, மொராகலை மாவட்ட தேயிலை உற்பத்திகள் அடங்கும், அடுத்தது தாழ்நில தேயிலை உற்பத்தி இதில் பெரும்பாலும் களுத்துறை, காலி மாத்தறை மாவட்டங்கள் அடங்கும். 

உயர்நிலத்தேயிலை உற்பத்திப்பிரதேசங்களில் பெருமளவு அரச வசமாகியது. ஆங்காங்கே ஒன்றிரண்டு சிறுதோட்டங்கள். மத்திய நிலப்பிரதேசித்தில் பாதிக்குப்பாதி அரசும் சிறுதோட்டங்களும் என ஆனது. தாழ் நிலத்தில் பெரும்பகுதி சிறுதோட்டங்கள் ஆகவும் சில அரச நிறுவனங்களாகவும் ஆயின.

1972 முதல் 1992 வரை அரசாங்கம் ஒரு வாறு இழுத்தடித்து இந்த நிறுவனங்களைக்கொண்டு சென்றது. அந்த காலப்பகுதியில் பல்வேறு வேலைநிறுத்தப்போராட்டங்களில் மலையக மக்கள் ஒன்று சேரந்து ஈடுபட்டு வெற்றியும் கணடிருக்கிறார்கள். சம்பள சபையின் ஊடாக சம்பளம் தீர்மானிக்கும் முறை காணப்பட்டது நமது தொழிற்சங்கள் கூட அந்த சம்பள சபையில் அஙகம் வகித்து தெரிலாளர்களின் சமபளத்தை தீர்மானிக்கும் சக்தி இருந்தது.

1992 ல் தனியார் மயம், மக்கள் மயம் என பொருளாதார கொள்கைகளில் மாற்றம் ஏற்றபட்டது. அரச பொறுப்பில் இருந்த பெருந்தோட்டங்கள் தொகுதியாக்கப்பட்டு 22 பிராந்திய கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலம் அரசுடையது முகாமைத்துவம் தனியார் கம்பனிகள் உடையது. அதுநாள் வரை அரச பொறுப்பில் சம்பளசபைச் சட்டத்தின் கீழ் இருந்த தொழிலாளர்களின் வேதன முறைமைய 'கூட்டு ஒப்பந்த முறைக்கு' மாற்றப்பட்டது. இப்போது அந்த வேதன முறை  முற்றாக  மாற்றம பெற்றிருப்பது வேறாக பேசப்படவேண்டியது. ஆனால் 22 பிராந்திய கம்பனிகளும் இப்போது 25 வருடங்களின் பின்னர் தாங்கள் நட்டத்தில் இயங்குகிறோம் ஆகையால்கட்டமைப்பில் மாற்றம் வேண்டும் என 'அவுட்குரோவர்' எனும் முறைமையை முன்வைக்கின்றன.

இந்த கட்டமைப்பு மாற்றத்தளினூடாக நடந்திருப்பது என்ன? நிரந்த தொழிலாளர்களாக இருந்த நமது மக்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். பெரும்பாலான உயர்நிலத்தேயிலை உற்பத்தி பிரதேசங்கள் கைவிடப்பட்டு தாழ்நில உற்பத்த நோக்கி தேயிலை உற்பத்தி கரமாக கைமாற்றப்பட்டுவிட்டது. இலங்கையில் இருந்து ஏற்றுமதி ஆகும் தேயிலையில் 70 சதவீதமதனவை தாழ் நிலத் தேயிலை உற்பத்தி பிரதேசங்களில் இருந்தும் 30 சதவீதமானவை உயர்மற்றும் மத்திய பிரதேசங்களில் இருந்தும் இடம்பெறுவதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. மறுபுறத்தில் 70 சதவீதமான தேயிலை உற்பத்தி சிலப்பரப்பு உயர்நிலத்திற்குரியது. 30 சதவீதமான தேயிலை உற்பத்தி நிலப்பிரதேசங்களே தாழ் நிலத்திற்குரியவை.

இந்தப்பின்னணியில் ஒரு அறிவிப்பு. இலங்கையின் தேயிலை உற்த்தி 150 வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ளதாம். தேயிலை ஆராய்ச்சி நிலையமும் சிறுதோட்ட உடமையாளர்களுக்கான நிறுவனமும் இணைந்து. மாத்தறையில். எனது உரையில் வந்த சந்தேகம் இதுதான். தேயிலை திசை மாறி சென்றுவிட்டது. நாம் இப்போது எந்த திசைநோக்கி நிற்கிறோம். எந்த திசை நோக்கி பயணிக்க வேண்டும்.? கேள்விகளை மாத்திரம்  எழுப்பாமல் விடைதேடி பயணிப்போம். திசை தேடி. நமது திட்டங்கள் குறித்த மதிப்பீடுகளையும் நாமே செய்ய வேண்டியுள்ளது. இந்த அத்தியாயம் கூட இலங்கையின் தேயிலையின் போக்கு பற்றிய ஒரு 'மதிப்பீடு' தான்.

(உருகும்)

நன்றி - சூரியகாந்தி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates