Headlines News :
முகப்பு » » தொழிலாளர்களின் சம்பள உயர்வு நெருக்கடி -கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு நெருக்கடி -கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்வதாகக் கூறப்படுகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள நாளாந்தம் 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாளாந்தம் 770 ரூபா என்ற சம்பளத்துடன் சமரசத்திற்கு வரலாம் என்ற செய்தியிலும் இதுவரை எவ்வித திருப்பமும் இல்லை.

இது ஒருபுறம் இருக்க, தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எவ்வகையிலும் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்ற நிலையிலேயே உள்ளது. முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது துரைமார் சம்மேளனம் சம்பளம் தொடர்பாக மாற்று யோசனையை முன்வைத்தது. இம்மாற்று யோசனைகள் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்ட அதேவேளை, பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பாக ஆங்கிலப் பத்திரிகைகளில் பல செய்திகளும் கட்டுரைகளும் எழுதப்பட்ட வண்ணம் உள்ளன.

சில தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு காணிகள் பிரித்து வழங்கப்பட்டு அதில் கொழுந்து பறித்து தருமாறும், அதற்குரிய பணத்தை தோட்ட நிர்வாகம் வழங்குவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் பெருந்தோட்டங்கள் பற்றி கம்பனிகளின் எண்ணங்கள் என்ன? பெருந்தோட்டங்கள் எதனை நோக்கி நகர்கின்றன என்பன பற்றி சுருக்கமாக அவதானிக்கலாம்.

இன்று தேயிலையை பெருமளவில் உற்பத்தி செய்வது பெருந்தோட்டக் கம்பனிகள் அல்ல. கம்பனிகளின் உற்பத்தியானது மொத்த தேயிலை உற்பத்தியில் (324 மில். கி.கி.) சுமார் 30 வீதமாக, அதாவது, சுமார் 110 மி. கி.கி மட்டுமே உற்பத்தி செய்கின்றனர். மொத்தமாக தேயிலை பயிரிடப்படும் பரப்பில் (2,22,000 ஹெக்டேயர்) சுமார் 85,000 ஹெக்டேயர்களில் மட்டுமே அதாவது, சுமார் 40 வீதமான நிலப்பரப்பிலேயே பெருந்தோட்டக் கம்பனிகளின் பராமரிப்பில் உள்ள தேயிலை நிலங்களாக இருக்கின்றதையும் யாவரும் அறிவோம். பெருந்தோட்டக் கம்பனிகளிடம் உள்ள நிலங்களில் சுமார் 35,000 ஹெக்டேயர் காணிகள் தேயிலை பராமரிப்பில் இருந்து ஒதுக்கிவிடப்பட்ட பயிர் நிலங்களாக காணப்படுகின்றன. இவ் விபரங்கள் வருடாந்தம் பெருந்தோட்ட அமைச்சினால் வெளியிடப்படும். Statistical Information on Plantation Crops இல் காணலாம்.

மேற்குறிப்பிட்ட தகவல்களின்படி இன்று சிறு தோட்டங்களே இலங்கையில் மொத்த தேயிலை உற்பத்தியில் 70 வீதமானவற்றை (225 மி.கி) உற்பத்தி செய்வதாக இருப்பதுடன், சுமார் 4,00,000 பேர் சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்ளனர் . இவர்கள் பெரும்பாலும் இரத்தினபுரி, காலி, மாத்தறை , கேகாலை மாவட்டங்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சிறு தோட்ட உரிமையாளர்களிடம் காணப்படும் தேயிலை செடியில் 95 வீதமானவை உயர் விளைவு தரும் தேயிலைச் செடிகளாகும். இவை யாவும் 197080 களின் பின்னர் நடப்பட்ட புதிய இன தேயிலையாகக் காணப்படுவதுடன், வருடாந்தம் சுமார் 3,000 கிலோகிராம் வரையிலான உற்பத்தியை ஒரு ஹெக்டேயரில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக காணப்படுகின்றது. ஆனால் கம்பனிகளின் தேயிலையோ மிகவும் பழைமையானதாகும். கம்பனிகளின் கீழ் உள்ள தேயிலையில் சுமார் 60 வீதமானவை 1930 களில் நடப்பட்ட தேயிலையாகும். அதன் உற்பத்தி திறன் வீழ்ச்சியடைந்து, இப்போது சுமார் 900 கிலோகிராம் உற்பத்தியை மட்டுமே ஒரு ஹெக்டேயரில் ஒரு வருடத்தில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட தகவல்களிலிருந்து கம்பனிகள் தேயிலை நிலத்தை பாதுகாப்பதிலோ அல்லது உற்பத்தி திறனை பெருமளவு பெற்றுக் கொள்ளக் கூடியவகையில் அதிக விளைவு தரும் தேயிலையை உற்பத்தி செய்யவில்லை என்பதும் தெளிவாக புலப்படுகின்றது.

இந்தநிலையில் கம்பனிகளின் கீழ் உள்ள தோட்டங்களில் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சுமார் 100 வருடங்கள் பழைமையான தேயிலை செடிகளிலிருந்து அதிக விளைவு தரும் சிறு தோட்ட உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளும் உற்பத்தியை எப்படி எதிர்பார்ப்பது? தோட்டங்களில் அதிக விளைவு தரும் தேயிலையை பயிரிடத் தவறியமை தோட்ட கம்பனிகள் தவறாகும். அதேபோல பழைய தேயிலையை வைத்துக் கொண்டு தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறிப்பதில்லை, சோம்பேறிகள் வேலைக்கு வருவதில்லை என்று அவர்களை குற்றம் சாட்டுவதை எவரும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

இது ஒருபுறம் இருக்க நட்டம்” , “நட்டம்என்று எப்போதும் கூறுகின்றனர். தேயிலைக்கான மொத்த உற்பத்தியில் 60 முதல் 70 வீதமானவை தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளமாக காணப்படுகின்றது என்கின்றனர். ஆனால் தொழிலாளர்கள் ஒரு நாளில் எடுக்கும் சுமார் 20 கிலோ கிராம் தேயிலையில் இருந்து ஏறக்குறைய 4½ கிலோ கிராம் அளவில் சந்தைப்படுத்தக் கூடிய தேயிலை தயாரிக்கலாம். இந்த 4½ கிலோ கிராம் தேயிலை ஏல விற்பனையின்போது 4½ x 500 ரூபா  2250 ரூபாவாக விற்பனை செய்கின்றனர்.

இதில் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 450 ரூபா மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் வீடு, மருத்துவ வசதிகள் EPF கொடுப்பனவு மற்றும் இதர செலவுகள் என்று மொத்தமாக 1500 ரூபா செலவானாலும் தொழிலாளியின் ஒவ்வொருநாள் உழைப்பிலும் சுமார் (1,2501,500) 750 ரூபா வருவாய் இல்லை என்று கம்பனிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

மேற்படி கணிப்பீட்டை கம்பனிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் கணிப்பீட்டில் நாளாந்தம் தயாரிக்கும் ஒவ்வொரு கிலோ கிராம் தேயிலையிலும்; சுமார் 100 ரூபா நட்டம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். உண்மையில் தேயிலையின் உற்பத்தி செலவு என்று கம்பனிகள் கூறுகின்ற கணக்கே காணப்படுகின்றது. தனிப்பட்ட முறையில் நிறுவனங்களோ அல்லது அது பற்றிய கல்வித் தகைமையுள்ளவர்களால் கணிப்பிடப்பட்ட மதிப்பீடுகள் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந் நிலையில் கம்பனிகள் கூறும் நட்டக் கணக்கு விவாதத்திற்குரியதாகும்

இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கூட்டு உடன்படிக்கையின்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட மாதம் 25 நாள் வேலை என்றவாறு வருடம் 300 நாள் வேலை வழங்க வேண்டும் என்ற ஏற்பாட்டில் கம்பனிகள் இப்போது இல்லை என்பது தெளிவாகின்றது. இதைவிட மாதம் வழங்கும் 25 நாள் வேலையில் 75 வீதம் வேலைக்கு வருவதால் 620 ரூபா தரப்பட்டாலும் அதற்கு குறைவாக வருகை தந்தால் குறைந்த பட்சம் சம்பளமாக 450 ரூபா வழங்கப்படும் என்ற ஏற்பாடுகளும் இப்போது இல்லை. கம்பனிகள் வாரத்தில் இரண்டு நாள் மட்டும் வேலை வழங்குவதாகவும் அதற்கு 500 ரூபா தருவதாகவும் ஏனைய நாட்களில் கொழுந்து காசுகொடுப்பதுபோல பறிக்கும் ஒவ்வொரு கிலோ கிராம் தேயிலைக்கு 40 ரூபா தருவதாகவும் தமது முன்மொழிவை வைத்துள்ளன.

இந்நிலமையானது தோட்டத் தொழிலை கம்பனிகள் முழுமையாகக் கைவிடும் நிலைமைக்கு சமனானதாகும். இந்த முன்மொழிவை அவர்கள் மாற்றிக் கொள்பவர்களாக இல்லை என்பது தெளிவாகின்றது.

நிகழ்வுகளை பார்க்கும்போது பெருந்தோட்டக் கட்டமைப்பில் விரைவாக மாற்றங்கள் ஏற்படலாம். கம்பனிகள் தேயிலைத் தொழிலைத் தொடர்ந்து பாரம்பரிய முறையில் நடத்தப் போவதில்லை. அவர்கள் மாற்று உபாயங்களை முன்வைக்கலாம். அதில் தொழிலாளர் தாம் தொடர்ந்து பெருந்தோட்டங்களில் தங்கியிருப்பதற்கு பெருந்தோட்ட தொழில்கள்போல வேறு தொழில்களை செய்து தமது வாழ்வாதாரத்தை பராமரிக்க முடியுமா என்பதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஒன்றிணைந்து பொருத்தமான வேலைத் திட்டங்களை முன்வைப்பது மிக அவசியமாகும். எத்தகைய வேலைத் திட்டங்களும் கம்பனிகளும் ஏற்றுக்கொள்ளத் தக்கவாறு அமைய வேண்டியிருப்பதுடன் மக்கள் தொடர்ந்தும் தேயிலைத் தொழிலில் இலங்கையில் உள்ள சராசரி மனிதனது வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியவாறு மாற்றி அமைத்தல் அவசியமாகும்.


நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates