கொஸ்லாந்தை, மீரியபெத்தை யில் பாரிய மண்சரிவு இடம்பெற்று 06 மாதங்களாகின்றன. ஆயினும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை நிலையிலும் நடைமுறை வாழ்வியல் முறையிலும் எந்தவிதமான முன்னேற்றங்களோ அபிவிருத்திகளோ இதுவரை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பலரின் உயிர்களை காவு கொண்டும் மக்களின் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியும் பல்வேறு தொடர்ச்சியான இன்னல்களையும் சொல்லொணா துன்பங்களையும் பூனாகலை மாக்கந்தை தொழிற்சாலை முகாமிலுள்ள மக்கள் அணுதினமும் அனுபவித்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய சுப்பிரமணியம் கலைமகள், நான் கடந்த 5 மாதங்களாக பூனாகலை மாக்கந்தை பழைய தொழிற்சாலையில் வசித்து வருகின்றேன். மீரியபெத்தை மண்சரிவால் முற்று முழுதாக பாதிக்கப்பட்ட 63 குடும்பங்களுடன் 10 பாதிக்கப்பட்ட குடும்பங்களுமாக மொத்தமாக 73 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம்.
அப்பா மொறட்டுவை சுப்பிரமணியம் 58, அம்மா, பெரியண்ணன் ரஞ்சிதம் 53, தங்கை சுப்பிரமணியம் பவானி 31, மூவருமே மண்சரிவில் உயிரிழந்து விட்டனர். எஞ்சியது நானும் எனது மகளான தர்ஷிகா வயது 7. மண்சரிவு நேரத்தில் நான் டோஹா கட்டார் நாட்டுக்கு தொழிலுக்கு சென்றிருந்தேன். அங்கு சென்று 20 நாட்களே தொழில் புரிந்தேன். அந்நேரத்திலேயே இந்தப் பாரிய அனர்த்தம் ஏற்பட்டது.
மேலும் இதற்குப் புறம்பாக பாதிப்புறு நிலையிருக்கும் பல குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன. ஆயினும் எந்தவிதமான உலர் உணவுப் பொருட்களும் தற்போது கிடைப்பதில்லை. பெப்ரவரி மாதம் இறுதிப் பகுதி வரை ஹல்தும்முல்லை உதவி அரசாங்க அதிபர் ஊடாக சமைத்த உணவு கிடைக்கப் பெற்றது. முகாமிலுள்ளவர்களைக் கொண்டே சமையல் வேலைகள் யாவும் இடம்பெற்றன. பெப்ரவரி மாதம் வரை அரசினாலும் அரச சார்பற்ற அமைப்புக்களினாலும் பல்வேறு உதவிகள் கிடைக்கப்பெற்றன. அது போல் ஏனைய பிரதேசத்திலுள்ள மக்கள் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்கள்.
ஆயினும் தற்போது சகல நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கிழமைக்கு ஒரு நாள் நூடில்ஸ், பிஸ்கட் என்பன தற்போது வழங்கப்படுகின்றன.
மேலும் ரூபா 700 தொடக்கம் ரூபாய் 500 வரைக்கும் உட்பட்ட குடும்பங்களிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு முத்திரை வழங்கப்படுகின்றது. இம்முத்திரையினால் பூனாகலை கூட்டுறவுச் சங்கம் கடையில் மாத்திரமே பொருட்களை வாங்க முடியும். அத்தோடு குடும்பங்களுக்கு மேலதிகமாக பல்வேறு செலவுகள் இருப்பதால் வழங்கப்படும் உணவு முத்திரையின் பெறுமானம் போதியதாக காணப்படவில்லை.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் இருவருடங்களுக்கு கொடுக்கக்கூடிய பல்வேறு விதமான பொருட்கள் உதவியாக கிடைக்கப் பெற்றன. ஆயினும் அப்பொருட்களுக்கு என்ன நடந்ததென்பது கேள்விக்குறியாகவுள்ளது. உலர் உணவுப் பொருட்களுக்கு புறம்பாக வீட்டுக்குத் தேவையான மனையியற் பொருட்கள் பொதுமக்களினால் முகாமுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டன. ஆயினும் முகாமில் வதியும் மக்களுக்கு இவ்வாறான பொருட்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை.
ஆனால், பண்டாரவளை கிறிஸ்தவ ஆலயத்தின் அருட்சகோதரி மூலம் வழங்கப்பட்ட சமைக்கக்கூடிய உபகரணங்கள் மூலம் இன்று வரை மக்கள் தமதுணவை சமைத்து வருகின்றனர் என்பது இங்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
ஆயினும் தற்போது காடுகள் அழிக்கப்பட்டு 4 வீடுகளுக்கு அத்திவாரமிடப்பட்டு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. ஏனைய சகல வீடுகளும் இவ்வாறே நிர்மாணிக்கப்படும் என மக்கள் நம்பி வருகின்றனர். மக்களின் நம்பிக்கை வீணடிக்கப்படலாகாது. மிகக் கூடிய காலகெதியில் இவ்வீடுகள் அமைக்கப்படுவது அவசியமானதாகும்.
மேலும் முகாமில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மலசல கூட சுத்திகரிப்புகள் கிழமைக்கு ஒரு தடவை ஏற்படுத்தப்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதேவேளை, களஞ்சிய அறையில் வைக்கப்பட்டு காலாவதியான உணவுப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டுமென மக் கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் மக்கள் பொருளாதார கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதால் காலாவதியாவதற்கு முன்பே பைக்கற்றுகளில் அடைக்கப்பட்ட பொருட்களை குறிப்பிட்ட திகதிகளுக்கு முன்பதாக மக்களுக்கு வழங்கி வைத்தால் அது மிகவும் பிரயோசனமானதாக அமையும் என்பது அனைவரது எண்ணமாகும்.
அத்தோடு கடும்மழை காலங்களில் முகாமினுள் தண்ணீர் பாய்வதால் இங்கு வாழும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். எனவே இதற்கு முறையான முன்னேற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை, இந்த முகாமில் பல பிள்ளைகள் பக்கத்திலிருக்கும் பாடசாலைகளுக்கு கல்வி கற்பதற்காக செல்வதாலும் மாலை நேரங்களில் அவர்கள் முகாமுக்கு வந்து உரிய முறையில் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான சூழலை இங்கு வாழும் மக்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு சூழல் அமையாதவிடத்து கல்வி கற்கும் பிள்ளைகளை ஒரு சில பெற்றோர்கள் வேறு இடங்களுக்கு மாற்றி பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதை தவிர்க்க முடியாததாகிவிடும்.
எனவே கொஸ்லாந்தை மீரியபெத்தை மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக அரசு உரிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்க வேண்டுமென்பதே எனது மாத்திரமல்ல அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...