உலகில் அன்றாடம் இயற்கை செயற்கை அனர்த்தங்கள் எத்தனையோ நடைபெறுகின்றன. இந்த அனர்த்தங்களில் உயிர்ச்சேதமும் சொத்துக்கள் அழிவும் ஏற்பட்டு க்கொண்டுதான் இருக்கின்றன. எமது இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலையில் பாரியதொரு அழிவுகளை கடற்கரையோரங்களில் வாழ்ந்த மக்கள் அனுபவித்தனர். இரண்டாவது பெரிய அனர்த்தமாக ஒக்டோபர் 29ம் திகதி பதுளை கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவை எடுத்துக்கொள்ளலாம். 150 வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லாது வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தோட்டப்புற மக்களே இந்த அனர்த்தத்தில் சிக்கி தங்கள் உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து துடித்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த மண்சரிவில் எத்தனை உயிர்கள் காவப்பட்டன என்ற விபரம் சரியாகத் தெரியாமல் மீட்பு பணிகள் முடிந்து விட்டன. மண்சரிவில் காணாமல் போனவர்களில் 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்படாத சடலங்கள் அம்மக்கள் வாழ்ந்த அந்த மண்ணுக்கு உரமாக போடப்பட்டுவிட்டதாகத்தான் எண்ணத் தோன்றுகின்றது. கடந்த 30 வருடங்களாக யுத்தத்திலும், 1983ம் ஆண்டு ஆடிக் கலவரத்திலும் செயற்கையான முறையில் தோற்றம் பெற்ற அனர்த்தத்தில் எத்தனையோ உயிர்களும் சொத்துக்களும் அழிவடைந்தன. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறதென்று எம்மை படைத்த கடவுளிடம் முறையிடலாம் என்று நினைத்தால் அவரும் மண்ணில் புதையுண்டு எமக்கெல்லாம் வேடிக்கை காட்டுகின்றார். இந்த 21ஆம் நூற்றாண்டில் நவீன விஞ்ஞானம் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் தொழில்நுட்பங்கள் மூலம் இப்படியான அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் அவை குறித்து அறிந்து முன்னேற்பாடுகளை மேற்கொண்டு அனர்த்தத்தினால் ஏற்படக்கூடிய சேதங்களை தடுக்கலாம். தேசிய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாயமுள்ள பிரதேசமாக 2005ஆம் ஆண்டிலும் 2011ஆம் ஆண்டிலும் இப்பிரதேசம் மக்கள் குடியிருப்புக்கு பொருத்தமற்றது என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த மக்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு எந்தவொரு முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. தோட்டப்புற மக்களை பெரும்பான்மையான அங்கத்தவர்களைக் கொண்ட தொழிற்சங்கத் தலைவர் இந்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
பி.பி.சி. தமிழ் ஓசைக்கு இவர் கொடுத்த பேட்டியை பார்க்கும் போது எந்தளவுக்கு இம்மக்களுக்கு இவர் சேவை செய்திருக்கின்றார் என்று புரிகின்றது.
தனித்தனி வீடுகளாக இருந்திருந்தால் இந்த அனர்த்தத்தல் இப்படியானதொரு பாரிய அழிவினை தவிர்த்திருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. 1980ஆம் ஆண்டிலே மலையக மக்களுக்கு தனி வீடுகள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் தொடங்கின. 2014ஆம் ஆண்டுடன் 34 வருடங்கள் முடிவடையும் நிலையிலும், கட்டப்படவேண்டிய வீடுகளில் 1/4 வாசியை கூட எட்டமுடியாத நிலைமையே காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டரை இலட்சம் வீடுகள் தேவைப்படும் நிலையில் சுமார் 23 ஆயிரம் தனி வீடுகளே கட்டிக்கொடுக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் இம்மக்கள் காத்திருக்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு சேவை செய்கின்றோம். என்று கூறிக்கொண்டு காளான்கள் முளைத்தது போல மலையகம் எங்கும் ஒவ்வொரு பெயரிலும் தொழிற்சங்கங்கள் முளைத்திருக்கின்றன. இவர்கள் இந்த மக்களுக்கு சேவைசெய்வதை விட கிடைக்கும் சந்தா பணம் தான் இவர்களின் பிரதான குறிக்கோளாகும். இவர்களின் சுயநலத்திற்காக தோட்டபுற மக்களை பிரித்துவைத்து வேடிக்கை பார்க்கின்றார்கள். புத்தகங்கள் வழங்குவதும், கோயிலுக்கு மணி கொடுப்பதும், பாதைகள் அமைப்பதிலும் இம்மக்களை உயர்த்த முடியாது. தோட்டப்புற மக்களின் பிரதான அடிப்படை வசதிகளை முதலில் செய்து கொடுக்க வேண்டும். இதில் பிரதானமானது காணியுடன் சேர்ந்த வீடு. மலையக வாக்குகளை பெற்று இவர்களின் பிரதிநிதிகளாக செயற்படும் மலையக தொழிற்சங்கவாதிகளே இம்மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்ய வேண்டும்.
சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றவர்கள் எப்படி மலையக மக்களுக்காக பேசுவார்கள்.? செயற்படுவார்கள்? முக்கியமாக அரசாங்க பங்காளியாக இருக்கும் தொழிற்சங்கங்களும் அதன் தலைவர்களும் இந்த வீடு, காணி விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தி இதற்கு தீர்வினை பெற்றுகொடுக்க வேண்டும். அரசாங்கம் நினைத்தால் கம்பனிகளிடம் காணிகளை சுவீகரித்து தனித்தனியாக வீடுகளை கட்டிக்கொடுக்கலாம். அந்நிய செலாவணியை அள்ளிக்கொடுக்கும் எமது இந்த மலையகமக்களை அரசாங்கமும் கவனிப்பதில்லை என்பதும் மனவேதனைக்குரிய விடயமாகும். காலம் காலமாக இம்மக்கள் எல்லாவகையிலும் ஏமாற்றப்படுகின்றார்கள். தோட்டப்புற மக்களின் வாக்குகளை பெற்று சுகபோகங்களை அனுபவிக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் இம்மக்களின் நலன்கள் மேன்மையடைந்தால் (வீடு, காணி) தம் இருப்புக்கு ஆபத்து வந்து விடும் என்று நினைப்பதும் ஒரு காரணமாகும். லயன் அறைகளில் பிறந்து வளர்ந்த தலைவன் ஒருவனுக்குத்தான் இம்மக்களுக்கு உண்மையான சேவைசெய்ய முடியும். மலையக இன்றைய தலைமைகள் நன்கு சிந்தித்து அம்மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்து செயற்பட வேண்டும். பதுளை கொஸ்வத்தை மீரிய பெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுக்குப் பிறகு தோட்டப்புற எமது மக்களுக்கிடையே பாரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. மலையக மக்களுக்கு பொருத்தமான காணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உடனடியாக அவசரகால அடிப்படையில் பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக் கொடுக்காவிடின் கொஸ்லந்தை போன்ற பல அனர்த்தங்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். அதே நேரத்தில் எமது இந்த மலையக மக்களும் தொழிற்சங்க கட்சிகளில் நம்பிக்கை இழந்து தேசியக் கட்சிகளில் இணையக்கூடும். எல்லா மலையக தொழிற்சங்கங்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதனையும் எதிர்காலத்தில் சாதிக்கலாம். அப்படி செயற்படாவிட்டால் தோட்டப்புற மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் உங்களுக்கு நல்ல பாடங்களை கற்பிப்பார்கள். இது நிச்சயம் நடக்கும்.
எம்.பாலகிருஷ்ணன், களுபோவில.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...