Headlines News :
முகப்பு » , » கரும்புத் தோட்டத்திலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே - பயணி

கரும்புத் தோட்டத்திலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே - பயணி

கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே

ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் - அந்தக்
கரும்புத் தோட்டத்திலே.

                                                - பாரதியார்

கடந்த பொங்கல் நாளில் தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன சென்னை நண்பர் கேட்டார்: “கரும்பு கிடைக்குமா, ஃபிஜியிலே?”

அவரிடம் பேசி முடித்துத் தொலைபேசியை வைத்த பிறகு, மீண்டும் பாரதியின் “கரும்புத் தோட்டத்திலே” பாட்டை எடுத்துப் படித்தேன். சிறுவயதில் படித்த ‘பாரதியார் பாடல்கள்’ புத்தகங்களிலே, இந்தப் பாடல் ‘பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்’ என்றும் ‘பிஜித் தீவினிலே’ என்றும் தலைப்பிடப்பட்டிருந்தது என் நினைவில் ஆடியது. ‘ஃபிஜி’ என்று இருந்த மாதிரியும் நினைவு. ஆனால் பாரதியின் கவிதையின் உள்ளே ஃபிஜி/பிஜி என்னும் சொல் கிடையாது. ‘தெற்கு மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர் கண்ணற்ற தீவினிலே’ என்று ஃபிஜித் தீவைக் குறிப்பிடுவது மட்டுமே தொடர்பு. என் பள்ளி நாட்களிலே, தமிழ்ப் பேச்சுப் போட்டிகளுக்குப் பரிசு தருவது என்றால் திருக்குறள், பாரதியார் பாடல்களின் கையடக்கப் பதிப்புகள் தருவது வழக்கம். கிடைத்த நூல்களில் ஒன்றை வாசித்தபோது, ‘பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து’, ‘பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்’ போன்றவை மனத்தில் ஒட்டாமல் போயின. பாரதியின் உயரத்திலிருந்து தெரிந்தவை, என் பள்ளத்தில் எப்படிப் பார்வையில் படும்? புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’யின் தலைப்பு இந்தப் பாடலிலிருந்து தான் பெற்றது. கதைக்களமும் தொடர்புடையதுதான். ஆனால் தேயிலைத் தோட்டக் கூலிகளைப் பற்றியது. ஃபிஜிக்கு வந்த பிறகு, கரும்புத் தோட்டங்களினூடாகப் பயணிக்கும்போதெல்லாம் பாரதியின் பாடல் வரிகள் மனத்தில் ஓடும்.

o

நாட்டை நினைப்பாரோ? - எந்த / நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை / வீட்டை நினைப்பாரோ?

காலனி ஆதிக்கத்தின்போது ‘ஒப்பந்தத்தின் படி’ வேலைசெய்ய வந்தவர்களை, ‘கிர்மித்தியர்கள்’ என்கிறார்கள். கிரீக்ஷீமீமீனீமீஸீt என்னும் சொல் நிக்ஷீமீமீனீமீஸீt ஆகி, நிவீக்ஷீனீவீt ஆகி, அதிலிருந்து வந்த மருவு. ஒப்பந்தம் என்னும் பம்மாத்துக்குப் பின்னால் இருப்பது வெறும் அடிமைத்தனம் தான். 1834இல் இங்கிலாந்தில் ‘அடிமை ஒழிப்புச் சட்டம்’ - காலனியாதிக்கத்தில் எங்கும் அடிமை முறை ஒழிக்கப்படுவதாகச் சொன்னது - கொண்டுவரப்படுகின்றன. அதே ஆண்டில், முதன்முறையாக ‘ஒப்பந்தம்’ என்னும் முறையில் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் கப்பல் மொரிஷியஸ் தீவுக்குக் கிளம்பியது. நீ என்னை நாயே என அடித்தாலும் நண்பா என அடித்தாலும் வலி எனக்குத்தானே? மேலும், வலிதானே எனக்கு?

மொரிஷியஸில் கவர்னராக இருந்த சர். ஆதர் கோர்டன் ஃபிஜியின் முதல் கவர்னராக வந்து விவசாயத் தோட்டங்களை உருப்படச் செய்ய முனைந்ததும் செய்த முதல் வேலை, இந்தியத் தொழிலாளர்களை ஃபிஜிக்கு வரவழைத்ததுதான். 1879ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் வந்திறங்கிய லியோனிதாஸ் கப்பலில் தொடங்கி, 1916ஆம் ஆண்டுவரை கப்பல் கப்பலாகக் கொண்டுவரப்பட்டு ஃபிஜியில் குவிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 60,537. அதாவது, கப்பலில் காலரா, அம்மை, வாந்திபேதியால் போய்விடாமல், கரைசேர்ந்தவர்கள். யார் இந்த இந்தியர்கள்? எதற்கு ஃபிஜிக்கு வர ஒப்பினார்கள்? சுமார் 45,000 பேர் வட இந்தியத் துறைமுகங்களிலிருந்து வந்திருக்கிறார்கள். மற்ற 15,000 பேர் தென்னிந்தியாவிலிருந்து. 1903ஆம் ஆண்டிலிருந்துதான் தென்னிந்தியர்கள் வருகை தொடங்குகிறது. தென்னிந்தியர்கள் மலேயா, சிலோன் போன்ற இடங்களுக்கு அதிகம் போனதால், ஃபிஜிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விசாகப்பட்டினம், ஆற்காடு, சித்தூர், திருச்சினாப்போலி, சிங்கில்பட், கிஸ்ட்னா (கிருஷ்ணா) மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

எங்கெங்கிருந்தோ முகவர்களின் மூலம் துறைமுகங்களுக்குக் கொண்டு வரப்பட்டு, ‘உடல் நோயோ மன நோயோ இல்லை’ என்று சான்றிதழ் அளிக்கப்பட்டு, ஒப்பந்தத்தில் கைநாட்டு/கையெழுத்து வாங்கப்பட்டு, கழுத்தில் எண் எழுதிய வட்டத் தகரம் கட்டப்பட்டு, கப்பலில் ஏற்றப்பட்டவர்கள் இவர்கள். போகுமிடம் பற்றியோ வேலை பற்றியோ தெளிவில்லாதவர்கள். (2010இல் ஏதோ ஒரு முகவரிடம் ‘ஆஸ்திரேலியா வேலை’க்காகப் பல லட்சங்களைக் கொடுத்து, இதுதான் ஆஸ்திரேலியா என்று ஃபிஜியில் இறக்கிவிடப்பட்டு, விசா பிரச்சினையால் கைதான, கல்லூரியில் படித்த 12 இந்திய இளைஞர்களை இங்கே சந்திக்க நேர்ந்தது.)

o

. . . அவர் / கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி / வருந்துகின்றனரே! . . . செக்கு / மாடுகள் போலுழைத் தேங்குகின்றார்.

நாமெல்லாம் பாழாய்ப்போன கையொப்பத்திற்கு அபரிதமான மரியாதை தரும் அவல சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கல்யாணம் முதல் கருமாதிவரை கையொப்பம் என்னும் எச்சம் மூலம், மனமொப்பம் என்னும் உயிர்ப்புள்ளப் பறவையைக் கூண்டில் அடைத்துவிட்டதான போலித் தோற்றத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்த அபத்தம் இன்றைக்கே கண்ணில் படுவது கடினம் என்றால், அந்தக் காலத்தில் என்ன நிலை? ‘ஒப்பந்தம்’ ஒன்றில் அவர்கள் கைநாட்டோ கையெழுத்தோ இட்டாலும் அது பெயரளவில்கூட அடிமைச்சாசனம்தான். வேலை, கூலி, இருப்பிடம், உணவு, உடைமைகள் போன்ற பட்டியல்: ஒவ்வொரு நாளைக்கும் எவ்வளவு அரிசி, பருப்பு, எண்ணை, உப்பு; வருடத்திற்கு ஒரு போர்வை, இரண்டு வேட்டி/புடவை, ஒரு தொப்பி; ஒருவருக்கு ஒரு தட்டு/கிண்ணம், மூன்று/நான்கு பேருக்குத் தண்ணீர் குடிக்க ஒரு லோட்டா; கண்டிப்பாக ஐந்தாண்டுகள் வேலைசெய்ய வேண்டும். பிறகு திரும்பிவரும் கப்பல் செலவு அவரவர் பொறுப்பு. பத்தாண்டுகள் வேலைசெய்தால், கப்பல் செலவு கம்பெனியினுடையது. அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த சூழலின் கொடுமை, இந்த ‘ஒப்பந்த’த்தை இனிமையாக்கி இருந்திருக்கும். ஆனால் ஒப்பந்தக் கூலிகளின் சொல்லொணாக் கொடுமைகள் ஒப்பந்தத்தில் இல்லாத நடைமுறையில் இருந்த பல விஷயங்களாலும் வந்தது.



குடும்பமாய் வந்தவர்கள் போக, ஓரிடத்திலிருந்து வந்தவர்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டார்கள் - கோஷ்டி சேர்ந்துவிடக் கூடாது என்று. வயற்காட்டை ஒட்டிய நசநசப்பான, வரிசை வரிசையான வாழிடங்களில் அறை ஒன்றுக்கு முறையே மூன்று ஆட்கள் அடைக்கப்பட்டார்கள். சுகாதாரம் என்பது தனிமனிதர் அளவிலும் அமைப்பு அளவிலும் பின் தள்ளப்பட்டு, வாந்திபேதியும் கொடுஞ்சுரமும் கொண்டு இறந்தவர்கள் மிகப் பலர். பிறந்த பிள்ளைகள் பிழைத்திருப்பது அரிது. விடிந்தது முதல் இருட்டும் வரைக்கும் தோட்டத்தில் உழுவதும் வாய்க்கால் வெட்டுவதும் விலங்குகளுக்கு உணவளிப்பதும் கரும்பு தூக்கிச் செல்லுவதும் என கங்காணிகளின் சவுக்குக் கீழே வாழ்க்கை - ஓய்வு ஒழிசலில்லாமல் ஒவ்வொரு நாளும், ஆண்டுக்கணக்காக. (‘கிர்மித்தியர்களின் நினைவு நாள்’ கொண்டாட ஃபிஜியில் உருவாக்கிய சின்னத்தில் ஒரு சவுக்கு இருக்கிறது.) ‘உடல்நலக்குறைவால் சரியாக வேலைசெய்ய முடியாததால், தண்டிக்கப்பட்டதால், உணவு போதாததால், வேலைக்குப் போகாததால், கூலி கிடைக்காததால், உடல்நலக்குறைவு இன்னும் அதிகமாவதால்’ என்று துன்பக்கேணியின் ஆழத்துக்குச் செல்லப் பலவழிகள் இருந்தன. ஆரம்பக் காலத்தில் ஓரிரு முறை இந்தக் கொடுமைகளுக்கு எதிராகப் ‘போராட்டங்கள்’ நடத்தி அதன் ‘பலன்’களை அனுபவித்த பின், அதைப் பற்றியெல்லாம் யாரும் பேசிக்கொள்வதில்லை. கோரமான மனவலிக்கு, கொடுமைகள் பெரும்பாலும் வெறும் தொடக்கமாக மட்டுமே இருக்கின்றன - அவற்றைப் பற்றிப் பேசக்கூட முடியாத சூழல் வலியை உக்கிரப்படுத்திவிடுகிறது.

o

அவர் / விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல் / கேட்டிருப்பாய் காற்றே! - துன்பக் / கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் / மீட்டும் உரையாயோ?

நாராயணி என்னும் பெண்னொருத்தியின் கதை ஃபிஜியின் தோட்டக் கூலிக் குடும்பக் கதைகளில் பிரசித்தமானது. கர்ப்பிணி நாராயணி பிரசவக் காலம்வரை தோட்டத்திலே உழைத்தாள். பிரசவத்தின்போது, பிறந்த குழந்தை உடனே செத்தது. பிள்ளை பெற்ற உடம்பும் பெற்றதை உடனே பாடையில் வைத்த மனமுமாய் இருந்தாள் அவள். பிரசவம் முடிந்த நான்காவது நாளிலேயே, ஏன் இன்னும் வேலைக்கு வரவில்லை என்று கங்காணியால் நாராயணி விசாரிக்கப்பட்டாள். தோட்டத்தின் ஓரத்தில் பிள்ளையைப் புதைத்த மண்ணும்கூட இன்னும் காயாத வலியில் அவள் பதில் பேச, சவுக்கால் அடிக்கப்பட்டாள். ரத்தம் வடிந்து நினைவிழந்த நாராயணியைக் கயிற்றுக் கட்டிலில் கிடத்தித்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. வெளியே தெரிந்ததால், கங்காணியை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோனார்கள். ஆனால் அரசாட்சி பேய்களின் கையில் இருந்தால், சாத்திரங்கள் எல்லாம் பிணத்தைத் தின்று வாழுமே? கங்காணியின் காரியத்தில் தவறேதும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட நாராயணி, மன நோய் பீடிக்கப்பட்டு, வேலை இழந்து, தோட்டப் பகுதிகளில் உலவிக்கொண்டிருந்து செத்துப்போனாள்.

இப்படிப் பதிவுசெய்யப்பட்ட கதைகள் சில. ஆனால் சொல்லப்படாதவை மிக அதிகம். கூலிக்கு ஆள் எடுக்கும்போது, பெண்களை எடுக்க வேண்டாம் என்பது கம்பெனியின் பொதுநோக்கு. இந்தியக் கூலிகளைக் கப்பலில் ஏற்றும்போது, 100 ஆண்களுக்கு 12 பெண்களா 25 பெண்களா என்று கம்பெனி அதிகாரிகள் விவாதங்களில் ஈடுபட்டார்கள். கப்பலில் வந்த கூலிகள் உள்ளூர் மக்களுடன் தொடர்போ உறவோ வைத்துக்கொள்ளக் கூடாது என்று சட்டதிட்டங்கள் இருந்தன. நீரும் உப்பும் சத்தும் உறிஞ்சி வாழ்ந்த இடத்திலிருந்து வேரறுக்கப்பட்ட மனங்களும் வாழும் இடத்தின் சமூக முரண்களும் நடைமுறைச் சூழல்களின் வற்புறுத்தல்களும் அது வரை அவர்களுக்கு அறிமுகமாகியிருந்த குடும்பம், உறவு, தனிமனித வரையறைகள் போன்ற கோட்பாடுகளைச் சின்னாபின்னமாக்கின.

அதிகாரிகள், கங்காணிகளின் இழுப்புக்கு வளைவதுபோக, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் ஒரு பெண்ணுடன் உறவுகொள்வது என்பது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கணவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஆண்களுடன் மனைவியைப் பகிர்ந்துகொண்டதும் தந்தைகள் சொந்த மகள்களின் உறவுகளைக் கவனித்துக் கொண்டதும் கங்காணிகள் யாரைக் கைகாட்டுகிறார்களோ அந்த ஆளுடன் வாழ வேண்டியிருந்ததும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. பணமும் வசதியும் சலுகைகளும் பெண் உறவின் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்டன. வசதி கருதிய உறவுகள் காலத்தில் மனம்போல மாற்றிக்கொள்ளப்பட்டன. பற்பல கொலைகளும் தற் கொலைகளும் பெண் உறவுத் தகராறுகளால் நடந்தன. நோயும் சீற்றமும் இழிப்பும் சீரழிவும் கூத்தாடின. இவற்றிற்கெல்லாம் நடுவிலே, ‘திருமணம்’ என்னும் நிகழ்வும் ‘குடும்பம்’ என்னும் அமைப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. தோட்டக் கூலி முறை காலனியாதிக்கத்தில் ஒழிக்கப்பட்டு, கூலிகள் தோட்டத்தைவிட்டு விவசாயிகளாக மாறிய காலம்வரை நிலமை இப்படியாகத்தான் இருந்துவந்தது.

o

துன்பப் / பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு / தஞ்சமுமில்லாதே - அவர் / சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் / மிஞ்ச விடலாமோ? - ஹே / வீரமா காளி சாமுண்டி, காளீஸ்வரி!

நாம் நாமாக இருப்பதற்குக் காரணம் நாம் மட்டுமே என்று நம்புவது எளிமையானது. பண்பாடு எதிர்ப்பும் பண்பாடு உடைப்பும் பண்பாட்டு வளர்ச்சியின் இயல்பான கூறுகள் - வழுவல, கால வகையினானே. ஆனால் பண்பாடு பறிப்பும் பண்பாடு இழப்பும் வேறு வகையைச் சேர்ந்தவை. சூழல் பறி போகும்வரை, சூழலின் முக்கியத்துவம் புரிவதில்லை. கப்பலில் வந்திறங்கியபின், இதுதான் இனி உன் உலகம் என்று கைகாட்டி விட்ட இடத்தில், அவர்கள் நிஜமாக விட்டு விட்டுவந்த உலகத்தின் சாயல்களையாவது எப்படிக் கொண்டுவருவது?

கப்பலில் ஏறும்போது குறிக்கப்பட்ட தகவல்களில், சாதியும் சமயமும் இருந்தன. அதனால், வந்தவர்களில் இந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் இத்தனை பேர், இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இத்தனை பேர் என்று சுட்டிக்காட்டிவிட முடிகிறது. ஆனால் கப்பலிலிருந்து இறங்கிய பிறகு, இவற்றிற்கெல்லாம் கம்பெனி கவனம் செலுத்தவில்லை. சாதி ஒழிப்பு உடனடியாக நடந்தது. வாழும் சூழலிலும் உறவுகளிலும் திருமண விவகாரங்களிலும் சாதியைப் பார்த்து நடக்குமளவுக்கு வசதி இல்லை. (இன்றைக்கும் ஃபிஜி இந்தியர்களிடையே சாதிப் பிரிவுகள் இல்லை. அது இல்லாத விஷயத்தின் நூதன இன்பத்தை அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும்). எண்ணிக்கை குறைவானதால் மொழிகளும் நாவு விட்டுக் காதேறி வாழ முடியாமல் தத்தளித்துத் துவண்டன. பெரும்பான்மையினர் பேசிய மொழியைச் சிறுபான்மையினர் பின்பற்ற வேண்டியதாயிற்று. (வயதான பெரியவர்கள் ஓரிருவர் தமிழில் பேசிக் கேட்டேன். மற்றபடி இன்றைக்கு எல்லா ஃபிஜி இந்தியர்களும் ஹிந்தி மொழிதான் பேசுகிறார்கள். அதுவும் கொஞ்சம் பழங் கால வாடையடிக்கும் ஃபிஜி ஹிந்தி.)

ஆனால் மதமும் வெகுசில கலை அம்சங்களும் வேர் பிடித்து, சூழலுக்கேற்ற வளர்ந்தன. தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் கற்றுத் தந்தார்கள். பல மருவுகளும் திரிபுகளும் குழப்பங்களும் வந்தேறின. ஓரிரு கோயில்கள் கட்டினார்கள். (காளி மாதா கோயில், முருகர் கோயில் போல, பாரதமாதா கோயில் ஒன்றும் கட்டினார்கள். இன்றைக்கும் இந்தியச் சுதந்திர தினத்தன்று கொடியேற்றிச் சூடம்காட்டிக் கும்பிடுகிறார்கள்) அவர்களிடையே சில ‘குருக்கள்’ உருவானார்கள். ராமாயணக் கதைகள், தெருக்கூத்து, தப்பட்டை, சலங்கை என்று இன்றைக்கும் இந்தியப் பண்பாட்டின் கூறுகள் இங்கே திகழ்வதற்கு, அந்தக் காலத்தில் சவுக்குக்கும் ரத்தத்துக்கும் பசிக்கும் இழிவுக்கும் ரணத்துக்கும் நடுவிலும் சாமி கும்பிட்டவர்களும் கும்மி அடித்தவர்களும் பிள்ளைகளுக்குத் தாலாட்டுப் பாடியவர்களும்தாம் காரணம்.

அந்தத் தலைமுறையுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் அருகிவருகிறார்கள். ஆயினும் அர சியல்வாதிகளையோ பல்கலைக்கழக ஆசிரியர்களையோ ஓட்டல் முதலாளிகளையோ கடையில் எடுபிடியாய் இருப்பவர்களையோ காணும் வயதான ஃபிஜி இந்தியர்களில், ‘நான் என் அப்பா அம்மாவுடன் வயலில் கரும்பு வெட்டியபோது’ என்று காய்த்துப்போன உள்ளங் கைகளைக் காட்டிப் பேசாதவர்கள் அரிது. துன்பக்கேணியின் சவுக்கு ஒன்று சலீர் பின்னணியில் கேட்கும் அப்போது.

உதவிய நூல்கள்:

1. Oxford Encyclopedia of Indian Diaspora, Brij V. Lal, Peter Reeves, Rajesh Rai, University of Hawaii Press, 2006

2. Girmitiyas - The origins of the Fiji Indians, Brij V Lal, Fiji Institute of Applied Studies, Lautoka, Fiji Islands, 2004

3. Pacific Indians - profiles from 20 countries. (Fiji: the Fiji Indian Achievement by Ahmed Ali), Institute of Pacific Studies, University of the South Pacific in association with the Hanns Seidel Foundation, 1981

4. Bittersweet: the Indo-Fijian experience, Editor: Brij V. Lal, Pandanus Books, 2004

புகைப்படங்கள் உதவி: www.fijigirmit.org

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates