லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊவாக்கலை 1ம் இலக்க தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிருவாகத்தின் அசமந்த போக்கை கண்டித்து நேற்றும் இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தோட்ட முகாமையாளர் செவிசாய்க்காத காரணத்தால் இன்றைய தினம் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாகக் கூடி போராட்டம் செய்யத் தொடங்கினர்.
இதனையடுத்து இது குறித்து தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி தொழிற்சங்க பிரதிநிதிகள் அவ்விடத்திற்குச் சென்றனர்.
அதன்பின் தோட்ட முகாமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக முகாமையாளர் உறுதி அளித்துள்ளார்.
எனவே தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஊவாக்கலை 1ம் இலக்க தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகள் உரிய வகையில் பராமரிக்கப்படுவதில்லை எனவும் தேயிலை தோட்டங்களில் காடு மண்டிக் கிடப்பதால் வன விலங்குகள் தேயிலை தோட்டங்களை நாடி வருவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழுந்து பறிக்கச் செல்லும் வேளை சிறுத்தை, பன்றி, பாம்பு போன்ற விலங்குகளால் தமக்கு உயிர் ஆபத்து ஏற்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் இரண்டு வருட காலமாக ஊவாக்கலை 1ம் இலக்க தோட்டத்தில் உள்ள தேயிலைச் செடிகள் பராமரிக்கப்படவில்லை எனவும் மருந்து அடித்தல், உரம் இடுதல், கவ்வாத்து வெட்டுதல், மனாபுல் வெட்டுதல் போன்ற செயற்பாடுகள் முறையாக இடம்பெறுவதில்லை எனவும் இவற்றை தோட்ட முகாமையாளர் கண்டுகொள்வதில்லை எனவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மலையகத்தில் பெரும்பாலான தோட்டங்கள் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுகின்றமை இன்று பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
மலையக மக்களின் பிரதான பொருளாதாரமான பெருந்தோட்ட பொருளாதாரத்திற்கு சில தேயிலை தோட்ட கம்பனிகாரர்களால் சாவு மணி அடிக்கப்பட்டு வருவதால் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உரிய தொழிற்சங்கங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
(அத தெரண - தமிழ்)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...