மலையகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் மலையக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய புதிய தலைமை உருவாக வேண்டும் என தென் மாகாண சபை உறுப்பினர் வணக்கத்திற்குரிய பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறையில் 23ம் திகதி வௌ்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை பெருபித்தல் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றிய போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
´வௌிநாட்டில் இருந்து எனது நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் கண் சிகிச்சை தொடர்பில் நன்கு கற்றறிந்தவர் என்பதால் கண் பரிசோதனை செய்து சிலருக்கு கண்ணாடி வழங்க என்னிடம் இடமொன்று கேட்டார். நான் அவரை தென் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு சுமார் 30 மாணவர்களுக்கு அவர் கண் பரிசோதனை செய்துவிட்டு அவர் வீட்டுக்கு வந்தார்.
அவரை நான் சந்தித்தபோது கண்ணீர்விட்டு அழுதார். காரணம் பரிசோதித்த பிள்ளைகளின் கண்ணில் பாரிய குறைப்பாடு காணப்படுவதாக தெரிவித்தார். பிள்ளைகளின் உணவு பழக்கம் இதில் முக்கிய காரணி என்ற அவர், சில பிள்ளைகள் கண் பார்வையற்று போகும் நிலையிலும் மூளை பாதிப்பு ஏற்படும் நிலையிலும் உள்ளதாகத் தெரிவித்தார்.
தோட்டப் பகுதிகளில் பிள்ளைகள் காலையில் ரொட்டி (கோதுமை மாவில் தயாரிக்கப்படுவது) பகல் ரொட்டி இரவு பாண் அல்லது வேறு ஏதேனும் உண்ணுகின்றனர். போசாக்கான உணவு கிடையாது. பெற்றோர் காலையில் வேலைக்குச் சென்று மாலையே வீடு திரும்புகின்றனர். அவர்களும் சரியாக கவனிப்பதில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் பரவாயில்லை. நுவரெலியாவைத் தாண்டி தென் பகுதிகளில் சிங்களவர்களுக்கு மத்தியில் வாழ்கின்ற தமிழர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதே லயன் அறை வாழ்க்கை, அரசாங்க நலன்புரி திட்டங்கள் எதுவும் கிடையாது.
ஒருமுறை நான் ஒரு தோட்டத்திற்குச் சென்றிருந்தேன். அந்த ஊர் மக்கள் யாருக்கும் வாக்களிக்க முடியாது என்று கூறினர். அந்த மக்களிடம் வாக்கு கேட்க எனக்கும் வெட்கம். 13 அறைகள் கொண்ட ஒரு லயனில் இருக்கும் 30 பிள்ளைகள் ஒரு மலசலகூடத்தையே பயன்படுத்துகின்றனர்.
நாட்டில் ஜனநாயகம், உரிமை, அதிகாரம் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். நாட்டில் யாருக்கும் விசேட கவனிப்பு இருக்க முடியா எவரையும் கவனிக்காமலும் இருக்க முடியாது.
மலையக மக்கள் இந்தியாவில் இந்தியாவில் இருந்து விருப்பத்துடன் அழைத்து வரப்படவில்லை. தென் பகுதியில் உள்ள மலையகத் தமிழர்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் தனி சிங்களவர்களாக மாறிவிடுவர். தென் பகுதி மலையகத் தமிழர்களின் மொழி, கலாசாரம், மதம் அழிந்து வருகிறது. இதனை அனுமதிக்க முடியாது. இவை அந்த மக்களின் அடிப்படை உரிமையாகும்.
சமூக அழுத்தத்தின் காரணமாக தென் பகுதி மலையக மக்கள் சிங்களவர்களாக மாற்றப்படுகிறன்றனர். இன்று அவர்களின் பிள்ளைகளுக்கு சிங்கள பெயர்கள் வைக்கின்றனர். நான் சிறுவயதில் யாழ்ப்பாணம் சென்று வளர்ந்திருந்தால் சிங்களத்தை மறந்திருப்பேன். இந்த நிலையை அனுமதிக்க முடியாது. சமூக அழுத்தத்தினால் இந்த மக்களின் அடையாளம் அழிக்கப்படுகிறது.
நான் ஒரு சுப்பர்வய்சரை (தோட்ட கண்காணிப்பாளர்) சந்தித்தேன் மலையக இளைஞர்களின் கல்வித் தரம் முன்னேற வேண்டும் என அவரிடம் கூறினேன். நீங்கள் ஏன் அதனை பேசுகிறீர்கள் அப்படி நடந்தால் உங்களால் மாகாண சபைக்குச் செல்ல முடியாது என அவர் கூறுகிறார். இவ்வாறான நிலைமைதான் காணப்படுகிறது.
நாங்கள் வரலாற்று தவறு செய்துள்ளோம். இந்தியாவில் இருந்து விருப்பம் இன்றி வந்த மலையக மக்கள் உரிமை இழந்து நிற்கின்றனர். உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற அடிமைத்தனம் இன்றும் உள்ளது. எனவே மலையகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் மலையக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய உண்மையான தலைமை உருவாக வேண்டும்´ என தென் மாகாண சபை உறுப்பினர் வணக்கத்திற்குரிய பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...