Headlines News :
முகப்பு » » நூல் அறிமுகம்: அந்தனி ஜீவாவின் அ.ந.க ஒரு சகாப்தம்!

நூல் அறிமுகம்: அந்தனி ஜீவாவின் அ.ந.க ஒரு சகாப்தம்!


எழுத்தாளர் அந்தனி ஜீவா அறிஞர் அ.ந.கநத்சாமியின்பால் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர். அவ்வப்போது அ.ந.க. வை மறக்காது கட்டுரைகள் பத்திரிகைகளில் எழுதி நினைவு கூர்பவர். அவரது அ.ந.க பற்றிய கட்டுரைத் தொடரொன்று முன்னர் இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் பெயரில் வெளிவந்திருந்தது. அத்தொடர் பதிவுகள் இணைய இதழிலும் பின்னர் தொடராக வெளிவந்திருந்ததை அனைவரும் அறிவீர்கள். அ.ந.க பற்றிய ஆய்வுகள் செய்ய விழையும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்களை வழங்கும் கட்டுரைத் தொடர். 

அண்மையில் எழுத்தாளர் அந்தனி ஜீவா மேற்படி கட்டுரைத் தொடரினை சில மாற்றங்களுடன் 'அ.ந.க. ஒரு சகாப்தம்' என்னும் நூலாக மலையக வெளியீட்டகம் என்னும் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். மேற்படி நூலானது அ.ந.க.வின் மறைவு தினமான பெப்ருவரி 14ந்திகதி மேற்படி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருப்பது பொருத்தமானதே. இதற்காக அந்தனி ஜீவாவைப் பாராட்டிட வேண்டும். இதன் மூலம் மலையக வெளீயிட்டகம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு நல்லதொரு பணியினை ஆற்றியுள்ளது. இதுவரையில் அ.ந.க வின் படைப்புகளைத் தாங்கி இரு நூல்களே வெளிவந்திருக்கின்றன. தமிழகத்தில் பாரி நிலைய வெளியீடாக, எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் முயற்சியின் பயனாக வெளிவந்த அ.ந.க.வின் வாழ்க்கையில் வெற்றி அடைவது பற்றிய நல்லதொரு உளவியலுடன் கூடிய நூலான 'வெற்றியின் இரகசியங்கள்' என்னும் நூலினைக் குறிப்பிடலாம். மேற்படி நூல் அவரது இறுதிச் சடங்குகளின்போது அவரது தலைமாட்டில் காணப்பட்டதொரு புகைப்படத்தினை இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ்ப் பத்திரிகைகளிலொன்றில் அன்றைய காலகட்டத்தில் கண்டிருக்கின்றேன். அடுத்தது 'மதமாற்றம்'. அ.ந.க.வின் புகழ்பெற்ற நாடகமிது. மேற்படி நாடகமும் செ.கணேசலிங்கன், மற்றும் இன்னுமொருவரின் நிதி உதவியுடன் தேசிய கலை இலக்கியப் பேரவையினரால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அந்தனி ஜீவாவின் மேற்படி நூலான 'அ.ந.க ஒரு சகாப்தம்' என்னும் நூல் 'மலையக வெளீயீட்டக'த்தினரால் வெளியிடப்பட்டிருப்பது ஈழத்தின் இன்றைய தலைமுறையினருக்கு அ.ந.க.வை அறிமுகம் செய்து வைப்பதற்கு மிகவும் உதவியாகவிருக்கும். மேற்படி நூலானது எண்பதுகளின் இறுதிப் பகுதியில் வெளிவந்திருக்க வேண்டிய நூல். இருந்தாலும் தான் தொடங்கிய முயற்சியினைக் கைவிடாது அதனை வெற்றிகரமாக முடித்திருக்கின்றார் அந்தனி ஜீவா. இது போன்று ஏற்கனவே தனது 'மலையக வெளியீட்டகத்'தினால் 17 நூல்களை வெளியிட்டுள்ள அதன் மூலம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு (ஈழத்து மலையகத் தமிழ் இலக்கியமுட்பட) நல்லதொரு சேவையினை ஆற்றியுள்ளார்.

மேற்படி நூலில் பதிவுகள் தளத்தில் வெளிவந்த அ.ந.க.வின் கவிதைகள் சிலவும் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பதிவுகள் இணைய இதழில் மீள்பிரசும் செய்யப்பட்ட அந்தனி ஜீவாவின் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத் தொடரினையே மேற்படி நூலாக்கத்தின்பொருட்டு கணினியில் தட்டச்சு செய்தவர் பாவித்திருக்க வேண்டும் போல் படுகின்றது. அதன் மூலம் ஒரு சில தவிர்த்திருக்கக் கூடிய தவறுகள் மேற்படி நூலில் தென்படுவதைச் சுட்டிக் காட்டுவது , இனி வரும் பதிப்புகளில் அவை திருத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதனால்தான். 

பதிவுகள் இதழில் மேற்படி கட்டுரைத் தொடரினைப் பிரசுரித்தபொழுது சில பகுதிகள் பின்வருமாறு பிரசுரிக்கப்பட்டிருந்தன:

1. துள்ளி விளையாடும் பள்ளிப் பருவம்.... 

மேற்படி நிகழ்வில் நன்றியுரை கூறும் எழுத்தாளர் அந்தனி ஜீவா. -யாழ்ப்பாணத்தில் அளவெட்டியைப் (*இது உண்மையில் தவறு. அ.ந.க. உண்மையில் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அந்தனி ஜீவா அளவெட்டி என்று குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையில் அ.ந.க.வின் தந்தையாரின் அடி அளவெட்டியாகவிருந்ததால், சிறுவயதில் தனது பெற்றோரை இழந்த அ.ந.க. அளவெட்டியில் தனது பால்ய காலத்தின் சிறு பகுதியைக் கழிக்க நேர்ந்தது. அதன் விளைவாக அம்மண்ணின் மேல் கொண்ட பற்றுதலினாலும், அளவெட்டியைச் சேர்ந்த நடராஜா என்பதைக் குறிப்பதற்காகவும் தனது பெயருக்கு முன்னால் அ.ந.வைச் சேர்த்துக் கொண்டார். இவரது குடும்பத்தவர்களுக்குச் சொந்தமான, கே.கே.எஸ்.வீதியில் அமைந்திருந்த நாற்சார வீடுகளிலொன்றே - கடையுடன் கூடியது, கில்னர் கொலிஜிற்கு முன்பாக உள்ளது - பலர் கை மாறிப் பின்னர் பேராசியர் கைலாசபதியின் சகோதரர் ஸ்ரீபதியின் கைக்கு மாறியது. -  பிறப்பிடமாகக் கொண்ட அ.ந.கந்தசாமியவர்கள் சிறு வயதில் தாய் தந்தையரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். இவரது தந்தையாரான நடராசா யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் வைத்தியராகக் கடமை புரிந்தவர். கே.கே.எஸ்.வீதியீல் ,யாழ்நகரில், பல சொத்துகளுக்கு அதிபதியாகவிருந்தவர். இவற்றில் பலவற்றை பராமரிப்பாளராகவிருந்த உறவினர்கள் சிலர் பாட்டியின் மறைவுக்குப் பின்னர் அபகரித்துச் சீரழித்து விட்டனர். இதற்கு உடந்தையாகவிருந்த பிரபலமான சட்டத்தரணியொருவர் பின்னர் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சட்டத்தரணி இது போல் பல மோசடிகளைப் புரிவதற்கு உடந்தையாகவிருந்தாரென்றும் அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டாரென்றும் கேள்வி. மன்னாரிலும் இவருக்கும் சகோதரர்களுக்கும் நிலபுலன்கள் இருந்தன. அதனை அப்படியே அதில் வசித்து வந்த முஸ்லீம்வாசியொருவரிடமே விட்டு விட்டார்கள். சிறுயதில் பாட்டிக்கு விகடனில் வெளிவந்த கல்கியின் 'தியாகபூமியை' வாசித்துக் காட்டுவது இவர்களது முக்கியமானதொரு பொழுது போக்கு. இவரது ஒரே தங்கையான தையல்நாயகி என்பவர் ஈழகேசரி சிறுகதைப் போட்டியொன்றில் முதற் பரிசு பெற்றதாகவும் அறியப் படுகிறது. அதன் பின் அவர் ஏதும் எழுதியதாக அறியப் படவில்லை. இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆய்வு செய்பவர்கள் இது பற்றியும் ஆய்வு செய்வது நல்லது. அ.ந.க.வும் பதினேழு வயதில் தனியாகக் கொழும்பு சென்று விட்டதாகவும் அறியப்படுகிறது. கொழும்பில் இவரது ஆரம்பகால உற்ற நண்பனாகவிருந்தவர் சில்லையூர் செல்வராசன். இறுதிக் காலத்தில் பெரிதும் துணையாக இருந்தவர் பிரபல தமிழ் எழுத்தாளர் செ.கணேசலிங்கன். இறுதிக் காலம் வரையில் அ.ந.கவுக்கும் அவரது குடும்பத்தவர்களுக்குமிடையில் நேரடித் தொடர்புகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை). உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் சகோதரியும். எஸ்.எஸ்.ஸி.வரை கல்வி பயின்ற அ.ந.க. தன் சுயமுயற்சியால் ஒரு பட்டதாரியை விட அதிகம் கற்றிருந்தார். 'கண்டதும் கற்கப் பண்டிதனாவான்' என்ற ஆன்றோர் வாக்குப்படி கண்டதையெல்லாம் கற்றதால் பண்டிதர்களையும் பட்டதாரிகளையும் மிஞ்சும் அளவுக்கு அ.ந.கந்தசாமி புலமை பெற்றிருந்தார். அதனால் தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கே தலைமை தாங்கும் அளவுக்குத் தகுதி பெற்றிருந்தார். கதைகளையும், கவிதைகளையும் ,கட்டுரைகளையும் விரும்பிப் படித்தார். பழைய இலக்கியங்களையும் ஆர்வத்துடன் ஆழ்ந்து கற்றார். இளமையிலிருந்து இலக்கியத்திலிருந்து வந்த ஆர்வந்தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கு முன்னோடி என்றழைக்கப்படும் அளவுக்குச் சிறந்து விளங்க அவருக்குப் பக்கத் துணையாகவிருந்தது.

மேலுள்ள பகுதியில் அடைப்புக் குறிகளுக்குள் உள்ள பகுதி பதிவுகளின் விளக்கம். அந்தனி ஜீவாவின் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத் தொடரினொரு பகுதியல்ல. தட்டச்சு செய்தவர் தவறுதலாக அதனையும் அந்தனி ஜீவாவின் கட்டுரையினொரு பகுதியாக்கி விட்டார். 

2. மேலும் கவிதைகளிலும் பல தட்டச்சு எழுத்துப் பிழைகள். 'சிந்தனையும் மின்னொளியும்' 'வெட்டியிடி யொன்று' என்பது வெட்டி யிடி யன்று' என்று வந்திருக்கிறது. 'வானம் பொத்ததுபோல்' 'வானம் பெய்த்ததுபோல்' என்று வந்திருக்கிறது. இது போல் 'எதிர்காலச் சித்தன் பாடல்' கவிதையில் 'அலைக்கழிக்கும் ஆதலாலே' 'அலைக்கழிக்கும் தனலாலே' என்றும், 'யானொருவன் ஆதலாலே' யானொருவன் தனலாலே' என்றும் ... இதுபோல் மேலும் சில தட்டச்சுப் பிழைகள். 'வள்ளுவர் நினைவு' கவிதையிலும் 'பல் ஆதாரம் சொல்வேன்' என்பது 'பல் தாரம் சொல்வேன்' என்றும் இது போல் மேலும் சில தட்டச்சுப் பிழைகள் காணப்படுகின்றன. அதே சமயம் பதிவுகள் தளத்திலும் ஒரு சில எழுத்துப் பிழைகளை அவதானிக்க முடிந்தது. வாசகர்களே! நீங்கள் பதிவுகள் இதழில் எழுத்துப் பிழைகளைக் கண்டால் அறியத் தரவும். உடனுக்குடன் திருத்துவதற்கு அது மிகவும் உதவியாகவிருக்கும். 

'அ.ந.க ஒரு சகாப்தம்' நூலின் மறு பதிப்புகளில் இவை போன்ற தவறுகள் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் கவிதைகளை நூலின் இறுதியில் அனுபந்தமாகப் பிரசுரித்திருக்கலாம். இடையில் பிரசுரிப்பது நூலின் அமைப்பின் நேர்த்திக்குக் குந்தகமாகவிருந்து விடுமபாயமுண்டு என்பதை மறந்து விட முடியாது.

இத்தகைய தவறுகள் பெரிய தவறுகளல்ல. கவலையீனமாக ஏற்பட்டுவிடும் தவறுகளிவை. இதனால்தான் 'புரூவ் ரீடிங்' என்பது மிகவும் கடினமானதென்று பலர் கருதுவர்

அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றி இவ்விதமானதொரு நூல் வெளிவருவது காலத்தின் கட்டாயம். அதனை அந்தனி ஜீவா நன்கறிந்திருக்கிறார். அதன் பயனாக விளைந்ததே மேற்படி நூல். அதற்காக அவர் பாராட்டப்பட வேண்டும்..

மேற்படி நூலின் இறுதியில் அந்தனி ஜீவாவின் இலக்கியத் துறைப் பங்களிப்பு' என்னுமொரு குறிப்புகளை உள்ளடக்கிய கட்டுரையொன்றுமுள்ளது.

நூலின் வெளியீட்டு விழாவில ...

Antony Jeevaaமேலும் மேற்படி நூலின் வெளியீட்டு விழாவினையும் அந்தனி ஜீவா அவர்கள் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் மார்ச் 8, 2009 அன்று சிறப்பாக நடாத்தியுள்ளார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இன்றைய தலைவரான கலாநிதி சபா. ஜெயராசாவின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நூல் வெளியீட்டு விழாவில் அ.ந.க.வின் நண்பர்களிலொருவரான எழுத்தாளர் செ.கணேசலிங்கன் நூலினை வெளியிட்டு வைத்ததும் பொருத்தமானதே. மேற்படி விழாவில் வரவேற்புரையினைக் கலைஞர் கலைச்செல்வன் வழங்க, கருத்துரையினை 'இலக்கிய வித்தகர்' திரு. ஏ.இக்பால் வழங்கியிருந்தார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி'யின் தலைவரான திரு. அ.முத்தப்பன் செட்டியார் கலந்து கொண்டார், மேற்படி விழாவில் சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு மூத்த பெண் படைப்பாளியான திருமதி பத்மா சோமகாந்தன் கெளரவிக்கப்பட்டிருக்கின்றார். கலாபூஷணம் வீ.முத்தழகின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான மேற்படி விழாவின் பாராட்டுரையினை திருமதி. வசந்தா தயாபரன் வழங்க அந்தனி ஜீவா அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்வினை முடித்து வைத்தார்.

மேற்படி நூலினைப் பெற விரும்பும் கலை இலக்கிய ஆர்வலர்கள் பின்வரும் முகவரிக்கு ஆசிரியர் அந்தனி ஜீவாவுக்கு எழுதுங்கள்.

Antony Jeevaa
Hill Country Publishing House
P.O.Box 32,
Kandy, Sri Lanka.

- ஊர்க்குருவி -

நன்றி - பதிவுகள்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates