ஹட்டன் நகரைத் தளமாகக் கொண்டும் இளம் கலை, இலக்கிய ஆளுமைகளை செயற்பாட்டாளர்களாகக் கொண்டும் இயங்கி வருவது பெருவிரல் கலை இலக்கிய இயக்கம். மாதம் ஒரு நாள் ஒன்று கூடி மூத்த படைப்பாளி ஒருவரின் படைப்புகளை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்வதும் அவரிடம் இலக்கிய கருத்து பரிமாறல்களைச் செய்வதும் அவர் களது இலக்கிய செயற்பாடு. கூடவே புதியவர்களின் இலக்கிய செயற்பாடுகளுக்கும் களம் அமைத்துக் கொடுக்கிறார்கள். இதுவரை 20 களங்களைக் கண்டுள்ள இந்த மாதாந்த நிகழ்ச்சித் தொடர் இம்முறை மலையகத்தின் மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப் அவர்களுடனான கலந்துரையா டல்களாகவும் அவரது படைப்புகள் பற்றிய ஆய்வாகவும் நடைபெற்றது.
ஹட்டன், சி.எஸ்.சி மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர் சாரல்நாடன் தலைமை தாங்கினார் . மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. வழமையாக மாணவிகளைக் கொண்டு இசைக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு மாணவர்களை மாத்திரம் கொண்டு இசைக்கப்பட்டது. கவிஞர் பெரியசாமி விக்னேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார் .
தலைமையுரையில், தனது நண்பரான தெளிவத்தை ஜோசப் பற்றிய நினைவுகளுடன் தாங்கள் கூட்டாக இலக்கிய பணியாற்றியமை, தபால் மூலமாக நட்பைப் பேணியமையை போன்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ‘இன்றைய நாட்கள் போன்று தொலைத்தொடர்பு வசதியற்ற நாட்களில் நானும், தெளிவத்தையும், என்.எஸ்.எம் ராமையாவும் கடிதம் மூலமாக தொடர்பு கொண்டு ஒருவர் கதையை ஆரம்பிக்க மற்றையவர் அதனைத் தொடர்ந்து மூன்றாவர் முடித்துவைக்கும் புதுமையான இலக்கிய முயற்சிகளையெல்லாம் 1960 களிலேயே பரீட்சித்துப்பார்த்தவர் கள். ‘குறிஞ்சிப்பூ’ எனும் 48 மலையகக் கவிஞர்களின் கவிதைகளை கவிஞர் ஈழகுமார் தொகுத்தபோது அதில் தெளிவத்தையும் ‘ஜோரு’ எனும் புனைப்பெயரில் கவிதை எழுதியுள்ளார் . நானும் எழுதியுள்ளேன்’ என பல்வெறு சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ‘ஐம்பது வருடகாலமாக எழுதிவரும் தெளிவத்தை இதுவரை இரண்டு சிறுகதை தொகுப்புகளையே வெளியிட்டுள்ளார். அவரது படைப்புகள் அதிகம் நூலுருப் பெறவில்லை. தனது வேலை எழுதுவதே தவிர புத்தகம் பதிப்பிப்பது அல்ல எனும் தெளிவத்தையின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த காலத்தில் எழுத்தாளனே அதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். நானும் சாரல் பதிப்பகத்தின் ஊடாக 20 நூல்களை வெளியிட்டுள்ள போதும் எனது நண்பன் தெளிவத்தையின் ஒரு நூலையேனும் பதிப்பிக்காமை வருத்தமளிக்கிறது’ எனவும் தலைமையுரையில் குறிப்பிட்டார் சாரல்நாடன்.
தெளிவத்தையின் ஏழு நூல்களையும் காட்சிப்படுத்தியும் மூன்று புதிய நூல்களை அறிமுகப்படுத்தியும் அறிமுகவுரையாற்றிய மல்லியப்புசந்தி திலகர்: ‘பெருவிரல் கலை இலக்கிய இயக்கம் இன்று இருபது களங்களைக் கண்டிருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகமான எழுத்தாளர் நண்பர் சுதர்ம மகாராஜன் தங்களது இத்தகைய முயற்சியைக் கூறி தங்களுக்கு இந்த கலை இலக்கிய இயக்கத்தை நடாத்த ஒரு பொருத்தமான இடம் வேண்டும் என கேட்டபோது நான் அறிமுகப்படுத்திய இடம்தான் இந்த சி.எஸ்.சி மண்டபம். அந்த ஏற்பாடுகளைச் செய்த செ.கிருஸ்ணாவும் அருட்பணி.கவிஞர் .பெனி அவர் களும் என் நன்றிக்குரியவர்கள். களத்தினைப் பெற்றுக்கொண்ட பெருவிரல் இயக்கத்தினர் இதுவரை வெற்றிகரமாக உங்களது பணிகளை செய்து வருகிறீர்கள். அதற்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்ததோடு, தெளிவத்தையின் புதிய மூன்று நூல்களும் வெளியானதன் பின்னணியுடன் அறிமுகவுரையை ஆற்றினார் .
அத்தோடு தாய்வீடு (கனடா), வடு (பிரான்ஸ்), புதிய தளம், மறுகா போன்ற இதழ்களையும், தவமுதல்வனின் ‘பச்சைரத்தம்’ ஆவணப்படத்தையும் சபைக்கு அறிமுகப்படுத்தினார்.
குறிப்பாக தாய்வீடு (கனடா) பத்திரிகையடன் இணைந்து மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நடாத்தும் கவிதை, சிறுகதை போட்டிகளுக்கு ஆக்கங்களை அனுப்பி போட்டிகளில் கலந்தகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார் . கூடவே தலைமையுரையில் சாரல்நாடன் அவர்கள் குறிப்பிட்ட அவரதும், ‘ஜோரு’ எனும் புனைபெயரில் தெளிவத்தை எழுதிய கவிதைகளையும் ‘குறிஞ்சிப்பூ’ தொகுதியில் இருந்து வாசித்து காட்டினார் .
புதிய நூலின் சிறப்புப் பிரதிகளை சிரேஷ்ட சட்டத்தரணி தாயுமானவன், எழுத்தாளர்கள், மொழிவரதன், மு.சிவலிங்கம், மாத்தளை மலரன்பன், சட்டத்தரணி விநாயகமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .
தெளிவத்தையின் சிறுகதைகள் குறித்த ஆய்வினை கவிஞரும் எழுத்தாளருமான சு.தவச்செல்வன் நிகழ்த்தினார். ‘தெளிவத்தையின் கதைகள் பற்றிய ஆய்வினை செய்வதற்கு இதுவரை வெளிவந்துள்ள அவரது மூன்று சிறுகதை நூல்களிலும் உள்ள வெளியீட்டுரை, முன்னுரை, பதிப்புரை, ஆகியவற்றைப் பின்னணியாகக் கொள்கிறேன். ‘நாமிருக்கும் நாடே’ தொகுதிக்கு வெளியீட்டுரை எழுதியிருக்கும் மு.நித்தியானந்தன் காட்டும் ‘மலையக மண்வாசைன’, ‘மீன்கள்;’ தொகுதியில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் முன்னுரையில் சொல்லப்படும் ‘தெளிவத்தையின் அழகியல்’, ‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ தொகுதிக்கு மல்லியப்புசந்தி திலகர் எழுதியிருக்கும் பதிப்புரையில் அவர் குறிப்பிடும் ‘தெளிவத்தையின் எழுத்துக்களில் உள்ள அரசியல்’ முதலான விடயங்கள் எனது ஆய்வுப் பார்வையினை ஒழுங்கமைக்க உதவியுள்ளன. தெளிவத்தையின் ஆரம்ப காலக்கதைகளில் உள்ள மலையக மண்வாசைன பின்னாளில் குறைவடைந்து செல்வதைப் பார்க்கலாம். அதற்கு அவர் தலைநகர் நோக்கி நகர்ந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அதேபோல ஜெயமோகன் குறிப்பிடுவது போல மலையக எழுத்தாளர்களில் அழகியல் நுட்பத்தில் முதலிடத்தில் தெளிவத்தை இருக்கிறார் என்பது கூட உண்மைதான். அவரது படைப்புகளில் மிதமிஞ்சிய அழகியல் வெளிப்பட்டுள்ளதனை அவதானிக்கலாம். அதேபோல மல்லியப்புசந்தி திலகர் குறிப்பிடும் கோ.நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை போன்றோரது எழுத்துக்களில் உள்ளது போன்ற அரசியல் பிரக்ஞை தற்போதைய மலையக எழுத்தாளர்களிடம் உள்ளதா எனும் வினாவோடு ஒப்பிடுகையில் தெளிவத்தையின் எழுத்துக்களில் ஒரு மிதமான அரசியல் போக்கே காணப்படுவதாகவும் தீவிர அரசியலை முன்வைக்கும் தன்மை அவரது எழுத்துக்களில் காணமுடியவில்லை’ எனவும் சு.தவச்செல்வன் குறிப்பிட்டார் .
தெளிவத்தையின் ‘நாவல்கள்’ பற்றிய ஆய்வுரையினை கவிஞர்.மு.கீர்த்தியன் வழங்கினார். ‘தெளிவத்தையின் நாவல்களான ‘காதலினால் அல்ல’ , ‘நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்’, ‘மாறுதல்கள்’ போன்றன இதுவரை நூலுரு பெறாத நிலையில் நூலுரு பெற்றுள்ள ‘காலங்கள் சாவதில்லை’, பாலாயி (குறுநாவல்), குடைநிழல் ஆகிய நாவல்களையே நான் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளேன். இவரது நாவல்களில் வரும் காட்சி விபரிப்புகளும் பாத்திர படைப்புகளும் வெகு யதார்த்தமாக மலையகத்தைக் காட்டி நிற்கின்றன. குறிப்பாக ‘பாலாயி’ குறுநாவலில் வரும் தோட்ட கிளார்க்குள், கணக்கப்பிள்ளைகளின் சுரண்டல்கள் மிகவும் உண்மையானவை என்பதை நான் உறுதிபடச்சொல்வேன். தொழிலாளிகளுக்கு சம்பளம் வழங்கும்போது சில்லறைகளை வழங்காமல் விடுவதனூடாக பன்னிரண்டாயிரம் ரூபா தனக்கு கிடைத்தாக அண்மையில் ஒரு தோட்ட உத்தியோகத்தர் குறிப்பிட்டதை நான் அறிந்தேன். இத்தகைய சுரண்டல்களை பல வருடங்களுக்கு முன்பதாகவே தெளிவத்தை தனது நாவலில் பதிவு செய்துள்ளார் . அதேபோன்று குடைநிழல் நாவலிலும் யுத்தகாலத்தில் தலைநகரில் வாழ்ந்த மலையகத்தவரின் நிலைமை மிக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது’ எனவும் குறிப்பிட்டார் மு. கீர் த்தியன்.
தெளிவத்தையின் ‘ஆய்வுகள்’ குறித்து இளம் சட்டத்தரணியும் எழுத்தாளருமான நேரு கருணாகரன் ஆய்வுரையாற்றினார். ‘தெளிவத்தை தனியே புனைகதை எழுத்தாளர் மாத்திரமல்ல. அவர் இலக்கியத்தில் பல துறைகளில் ஆய்வுகளையும் செய்திருப்பவர். மலையக சிறுகதைகளை கால ஒழுங்கில் தொகுத்து துரைவி பதிப்பகத்துடன் இணைந்து அவர் வெளியிட்டிருக்கும் ‘மலையகச்சிறுகதைகள்’ - ‘உழைக்கப்பிறந்தவர்கள்’ ஆகிய தொகுப்புகள் மிக முக்கியமான நூல்கள். இந்த தொகுப்புகளின் தொடர்ச்சியாக அவர் மேற்கொண்ட ஆய்வு முயற்சியான ‘மலையக சிறுகதை வரலாறு’ ஒரு கைநூலாகக் கொள்ளக்கூடியது. இப்படியொரு நூல் இதுவரை மலையகத்தில் கவிதைக்கோ, நாவலுக்கோ செய்யப்படவில்லை. வெறும் ஐம்பது பக்கத்தில் மலையக இலக்கிய வரலாற்றையே எழுதியருக்கும் துரதிஷ்டகரமான சூழலில் இவர் சிறுகதைகளுக்கு மாத்திரமே இத்தனை பெரிய நூலை எழுதியுள்ளமை வரலாற்றுச் சாதனைதான். இதனை எழுதும்போது தொடர் கட்டுரையாக பத்திரிகையில் எழுதியதனால் கூறியது கூறல், சில மிகைக் கூறல்கள் இடம்பெற்றிருந்தாலும் ஒரு வரலாற்று ஆவணமாக மலையக சிறுகதை வரலாற்றினைக்கொள்ள முடியும். கோ.நடேசய்யர் முதல்- சிவனு மனோகரன் வரை அவர் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார் . சிறுகதைகள் தவிர ‘இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்’ எனும் ஆய்வுக்கட்டுரையை எழுதியள்ளார் . இதுவும் தற்போது நூலுருபெற்றுவருவதாக அறிகிறோம். அதே போல மலையக ‘நாவல்கள்’ குறித்தும் ஆய்வுகளைச் செய்துவருகிறார் . மலையக இலக்கியம் தவிர்த்து பிற இலக்கிய படைப்புகள் குறித்தும் ஆய்வுக்குறிப்புகளை எழுதியுள்ளமை இவரது சிறப்பு’ எனவும் நேரு கருணாகரன் தனதுரையில் தெரிவித்தார் .
தெளிவத்தையின் ‘முன்னுரைகள்’- ‘அணிந்துரைகள்’ பற்றிய ஆய்வினை நிகழ்த்துதற்கு நிரேஸ்குமார் திட்டமிட்டிருந்தபொதும் அவர் தவிர்க்க முடியாத காரணத்தினால் சமுகம் தரவில்லை. ஆனாலும் மூத்த படைப்பாளிகளான மலரன்பன், அல் அஸுமத், மொழிவரதன், மு.சிவலிங்கம் பொன்றோரும் டேவிட், சுப்பையா கமலதாசன், ரஞ்சித்குமார், கிருபாகரன், போன்ற இலக்கிய செயற்பாட்டாளர் களும் தங்கள் கருத்துரைகளை வழங்கினர் .
அனைத்து ஆய்வுரைகளையும், கருத்துரைகளையும் உள்வாங்கிய தெளிவத்தை ஜோசப் அவர்கள் சுமார் ஒன்றரை மணிநேர உரையொன்றை பதிலுரையாக வழங்கினார் . ஒரு பல்கலைக்கழக விரிவுரைபோன்று அமைந்த அவரது ஆழமான கருத்துக்களும் விளக்கங்களும், நகைச்சுவை இழையோட அனைவரும் அமர்ந்து ரசித்து சுவைத்த நீண்ட உரையாக அமைந்தது.
நன்றியுரை வழங்கிய பெருவிரல் இயக்க செயற்பாட்டாளர் சுதர்ம மகாராஜன் ‘மலையக இலக்கியம் வளர்ந்து விட்டது போன்ற மாயை நீக்கப்பட்டு உண்மையான வளர்ச்சிக்கு நாம் அனைவரும் உழைக்க வெண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார் . நிகழ்;ச்சிகளை கவிஞர் பத்தனையயூர் வே.தினகரன் தொகுத்து வழங்கினார் . மூத்தவர்களையும் இளையவர்களையும் இணைத்து இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ‘பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தினர் ’ பாராட்டுக்குரியவர்கள்.
நன்றி : தினக்குரல் –மலையகபார்வை
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...