தெளிவத்தை ஜோசப் |
மலையகத்தின் அடையாளமாக இருந்து கடந்த ஐம்பதாண்டு காலமாக எழுத்துலகில் முத்திரைப்பதித்து வெற்றிநடைபோடும் மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஈழத்து இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவருமான தெளிவத்தை ஜோசப் அவர்களின் இரண்டாவது சிறுகதை நூலான 'தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்' வெளியீடும், அவரது ஏனைய இரண்டு நூல்களின் அறிமுகமும் பாராட்டு விழாவும் எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்
1960 களில் இருந்து தொடர்ச்சியாக ஐம்பது வருடமாக எழுதி வரும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகள், 1979 ஆம் ஆண்டு பேராசிரியர் மு.நித்தியானந்தன் தனது அவர்களின் வைகறை பதிப்பகம் ஊடாக வெளியிட்ட 'நாமிருக்கும் நாடே' தொகுதிக்குப் பின்னர் நூலுருப் பெறவில்லை. அந்தக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக மல்லியப்புசந்தி திலகரின் 'பாக்யா பதிப்பகம்', 'தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்' எனும் மகுடத்தில் 17 கதைகளை தொகுத்து வெளியீடு செய்துள்ளது. இதன் வெளியீட்டு விழா அன்றைய தினம் கொழும்புத் தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கோ.நடேசய்யர் அரங்க அமர்வில் நடைபெறவுள்ளது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் காப்பாளரும், முன்னாள் அமைச்சுச் செயலாளருமான எம்.வாமதேவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நூலினை மூத்த பத்திரிகையாளர் திருமதி.அன்னலடசுமி ராஜதுரை வெளியிட்டு வைக்க, புரவலர் ஹாசிம் உமர், பேராசிரியர் சோ.சந்திரசேகரன், திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், சிங்கள-தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் காப்பாளர் அமரசிங்க குடகல்லார ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். நூலாய்வுரையை திறனாய்வாளர் லெனின் மதிவானம் நிகழ்த்தவுள்ளார்.
மீன்கள்
தமிழகத்தின் எழுத்தாளர் ஜெயமோகனின் பிரபல படைப்பான 'விஷ்ணுபுரம்' பெயரில் இயங்கும் வாசகர் வட்டத்தினரே தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு 'விஷ்ணுபுரம்' விருதினை வழங்கி விழாவெடுத்திருந்தனர். அதே விழாவில், இன்னுமொரு பரிசாக தெளிவத்தையின் 9 சிறுகதைகளை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே தொகுப்பாசிரியராக 'மீன்கள்' எனும் மகுடத்தில் வெளியிட்டு தெளிவத்தைக்கு கௌரவம் செய்தார். தெளிவத்தையின் 'கூனல்' என்ற சிறுகதையை உலகப்பெருமை மிக்க சிறுகதையென எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார். தெளிவத்தையின் 'மீன்கள்' எனும் சிறுகதையை தமிழில் வெளிவந்த முதல் நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக ஜெயமோகன் பட்டியலிட்டுள்ளார். அந்த 'மீன்கள்' தொகுப்பின் அறிமுக நிகழ்வு மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை அரங்க அமர்வாக 'ஞானம்' ஆசிரியர் தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது. நூலின் முதல் பிரதியை கொடகே பதிப்பக உரிமையாளர் தேசபந்து ஸ்ரீ சுமன கொடகே அவர்கள் வெளியிட்டு வைக்க தொழிலதிபர் நடராஜா, பேராசிரியர் தை.தனராஜ், கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் இரகுபதி பால ஸ்ரீதரன், சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாளர் கமல் பெரேரா ஆகியோர் பெற்றுக்கொள்ளவுள்ளனர். நூலாய்வுரையை கவிஞரும் சிறுகதையாசிரியருமான அல்அஸுமத் ஆற்றவுள்ளார்.
குடைநிழல்
தேசிய கலை இலக்கிய பேரவையும் - சுபமங்களாவும் இணைந்து நடாத்திய போட்டியில் பரிசு பெற்ற நாவலான தெளிவத்தை ஜோசப்பின் 'குடைநிழல்' கொடகே பதிப்பகத்தினரால் ஏற்கனவே நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாவலின் பெறுமதி; கருதி அதனை மறுபதிப்பு செய்து தமிழகத்தின் 'எழுத்து' பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். விஷ்ணுபுரம் விருது விழாவில் இன்னுமொரு பரிசாக அமைந்த இந்த மறுபதிப்பு நூல் இவ்விழாவில் மலையக சிறுகதை முன்னோடி என்.எஸ்.எம்.இராமையா அரங்க அமர்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நூல் தமிழகத்தில் வெளிவருவதற்கு பங்களிப்பை வழங்கிய கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் எழுத்தாளரும் கலைஞருமான அந்தனிஜீவா நூலினை வெளியிட்டு வைக்க துரைவி பதிப்பக உரிமையாளர் துரைவி.ராஜ்பிரசாத், சட்டத்தரணி சோ.தேவராஜா, கவிஞர் மேமன்கவி மற்றும் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ஹேமசந்திர பத்திரண ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பாராட்டு
திருமணமானபுதிதில் |
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் உபதலைவரான மு.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெறும் பாராட்டு நிகழ்வில் மன்றத்தின் இணைச் செயலாளர்களான ஜி.சேனாதிராஜா, இரா.சடகோபன் ஆகியோருடன் இலக்கிய செயற்பாட்டாளர் மு.தயாபரன் மற்றும் காப்பியக்கோ ஜின்னாஹ் சரிப்புதீன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கவுள்ளனர்.
நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் ஒழுங்கமைப்பினை மல்லியப்புசந்தி திலகர் மேற்கொள்ள, சுப்பையா கமலதாசன் வரவேற்புரை நிகழ்;த்தவுள்ளார். அமுதவிழா காணும் தெளிவத்தை ஜோசப் அவர்களின பிறந்த நாளான அன்று அவரது வாழ்க்கைப் பயணத்தினை தொகுப்பாக ஆவணப்படுத்தும் காணொளியும், தேநீர் விருந்தும் சிறப்பு நிகழ்வாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...