ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மூன்றாவது தீர்மானம் மார்ச் மாதம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது இலங்கை அரசாங்கத்திற்கு பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிப்பதாக அமைவதோடு ஆட்சியாளர்களிடத்தில் போர்க்குற்ற பீதியையும் வலுத்துள்ளது. இந்நிலையில் வழமை போலவே சர்வதேச அழுத்தங்களை தமது அரசியல் ஸ்திரத்துக்கு பயன்டுத்துவதற்கு ஏற்ற வகையில், மார்ச் மாதம் கடைசியில் தேர்தல் வரும் வகையில் மேல் மற்றும் தென் மாகாண சபைகள் அதன் ஆட்சி காலம் முடிடைவதற்கு முன்னமே கலைக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதற்கு உள்ளூரில் தமக்கு கிடைக்கும் தேர்தல் வெற்றிகளை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளமையும் கவனிக்கத்தக்கது. எனவே ஜனாதிபதி அண்மைகாலமாக பல கூட்டங்களிலும், விழாக்களிலும் கலந்து கொண்டு பரப்புரைகளை செய்து வருகிறார். அண்மையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி தமது அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தி உட்பட ஏனைய அபிவிருத்திகள் யார் தடை விதித்தாலும் தொடரும் என்று குறிப்பிட்டதோடு தனது அரசாங்கத்தின் கீழ் ஹெரோயின், எத்தனோல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு நுவரெலியாவில் நடந்த பொங்கல் விழாவில் தோட்டங்கள், கிராமங்கள், நகரங்கள் என்று இல்லாமல் எமது அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டார்.
தோட்டங்கள் தொடர்பான இக் கருத்து போர் முடிந்தவுடன் ஜனாதிபதி குறிப்பிட்ட எமது நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற இனங்கள் இல்லை என்று சொன்னதற்கு ஒப்பானதாகும். அத்தோடு ஒரு வகையில் ஹெரோயின், எத்தனோல்களை இன்றைய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது போல் தோட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் நகரங்கங்கள் உள்ள பாரபட்சத்ததை ஏற்று வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் பிரச்சினை என்னவேனில் ஹெரோயின், எத்தனோல் கொண்டு வந்தது யார் என்பதை அரசாங்கத்தினால் கண்டு பிடிக்க முடியாமல் போனது போல் மலையக மக்கள் அபிவிருத்தியில் உள்ள பாரபட்சமும் இரு நூறாண்டு தாண்டியும் நீளுமா என்பது. உண்மையிலே தோட்டங்கள் கிராமங்கள் நகரங்கள் போல் சமத்துவமாக சகல விடயங்களிலும் நடத்த எந்த அரசாங்கமாயினும் எந்த தலைவராயினும் அதனை செய்வார்களாயின் அது பாரட்டத்தக்கது. விரும்பத்தக்கது. மலையக மக்களும் அதனை எதிர்பார்த்திருக்கின்றனர் எனினும் அது நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இல்லை.
மலையக மக்களுக்கு ஏனைய மக்களுக்கு இனையான அபிவிருத்தி என்பது அவர்ளுக்கான தனித்துவப் பிரச்சினைகளை நேர்மையோடு அணுகுவதன் மூலமே கிடைக்கப் பெறும். அவ்வாறு நோக்கும் அரசியல் தலைமையினாலே அது சாத்தியப்படும். அது வெறுமனே அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தி திட்டங்கள் தோட்டங்களில் நடைபெறுவதனாலோ, அல்லது தோட்டங்களில் உள்ளவர்களில் உள்ளவர்கள் மின்சாரத்தைப் பெறுவிடுவதனாலேயோ வரப்போவதில்லை. ஏனெனில் மலையக மக்களின் அபிவிருத்திப் பிரச்சினைகள் தனித்துவமிக்கதாகும்.
இன்று மலையக மக்கள் முகம் கொடுத்திக்கும் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பவைகள் பல. அவற்றில் பிரதானமானது இன்றும் முகவரி அற்றவர்களாக இருக்கின்றமை. ஒரு தோட்டத்தை எடுத்துக் கொண்டால் தோட்ட நிர்வாக பீடத்தின் முகவரியே அத்தோட்டத்தில் முழு தோட்ட மக்களுக்குமாக உள்ளது. இது வெறுமனே கடித போக்குவரத்திற்கான முகவரியை வழங்குதல் என்ற சிறு பரிமாணம் கொண்டதல்ல. மாறாக ஒட்டு மொத்த தோட்டக் கட்டமைப்பின் வடிவத்தோடும் தொடர்புடையப் பிரச்சினையாகும். அதாவது தோட்டங்கள் தனி இராஜ்யங்களாக பிரித்தானியர்களும் அவர்களின் தனியார் கம்பனிகளும் ஆட்சி செலுத்தியமையின் பிரதிபலிப்பாகும். இன்று பல்தேசிய பொருந்தோட்டக் கம்பனிகள் அந்த ஆட்சியினை தொடர்கின்றனர், இவர்களும் முழு பெருந்தோட்டக் குடியிருப்புகளையும் குத்தகைக்கு பெற்று அதற்கு சொந்தக்காரர்களாகியுள்ளனர். இதன் விளைவு தோட்டங்கள் இன்றும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தைப் போன்றே தனி ஆளுகை பிரதேசம். நாட்டின் வேறு இடங்களில் இருந்து வேறுபட்ட நிர்வாக முறைமை இங்கு காணப்படும். இந்த முறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும் அடிப்படை கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் இன்றி நிலைபெற்று வருகிறது.
பெருந்தோட்டங்களில் அரசாங்கம் எந்த வித நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தாலும் பெருந்தோட்டக் கம்பனிகளின் அனுமதியை பெற்றாக வேண்டும். இவ்வாறான நிலைமைக்கு ஒப்பான இடங்களாக சுதந்திர வர்த்தக வலையங்கள் காணப்படுகின்ற போதும் அவற்றுக்கு பெருந்தோட்டங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. சுதந்திர வர்த்தக வலையங்கள் ஒரு பொருளாதார பிரதேசம். அங்கு மக்கள் குடியிருப்பு என்பது இருக்காது. அரசின் பொதுவான தொழில் நிபந்தனைகளே (சட்டங்களே) அங்கு கட்டுப்படுத்தப்படுகின்றன. எனினும் பெருந்தோட்டங்களைப் பொருத்தவரை முழு குடியிருப்புமே பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உட்பட்டதாக இருப்பதனால் தொழில்தருநர் என்று வகிபங்கை மீறி மக்களின் செயற்பாடகளில் தலையிடும் நிலை காணப்படுகிறது.
பெருந்தோட்டங்களில் உள்ள அனைத்து நிலங்களும் உற்பத்திக்குரிய பிரதேசமாகவே கருதப்படுகின்றன. மக்களின் வாழ்வுக்கும் உற்பத்திக்குமான இடங்கள் என்று பிரிவினைக் கிடையாது. அதாவது பயிர் செய்யகை
பிரதேசம் குடியிருப்பு பிரதேசம் என்ற வேறுபாடு இல்லை. இதனாலேயே தன் பாட்டன் வைத்து வளர்த்த எந்த வகை மரமாயினும் அது பேரனுக்கோ தோட்ட மக்களுக்கோ சொந்தமானது அல்ல. தோட்டத்துக்கே சொந்தம் என்று அதனை அபகரிக்கப்படுகிறது. வீட்டில் இட வசதி போதாது என்று மேலதிக அறைகளை கட்டவேண்டுமாயினும் அதற்கு தோட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். கால் நடை வளர்க்க கொட்டில் கட்டுவதாக இருந்தாலும், ஏன் மலசல கூடம் அமைப்பதாக இருந்தாலும் தோட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். மேலும் தோட்டத்தில் உள்ள ஒருவர் ஒரு சுய தொழிலை ஆரம்பிப்பதாக இருந்தாலும் மின்சாரம் பெறுவதாக இருந்தாலும் அதற்கு கிராம உத்தியோகத்தர் முகாமையாளரின் அனுமதியைப் பெற்ற பின்னரே தனது அனுமதியை வழங்கின்ற நிலைமை காணப்படுகிறது. இவற்றில் இருந்து தோட்டங்கள் என்பது இன்றும் ஒரு தனி இராஜ்சியத்திற்கு உட்பட்ட பிரதேசங்கள் என்பதை மறுக்க முடியாது. இவை அரசாங்கத்தின் பாதை எழுச்சித்திட்டத்தினாலோ அல்லது கிராம எழுச்சி அபிவிருத்தி திட்டங்களுக்கு உட்பட்டவையல்ல.
எனவே முகவரிக்கான பிரச்சினை என்பது வீட்டுரிமைக்கான பிரச்சினையையும் காணி உரிமைக்கான பிரச்சினைகயையும் தன்னகத்தே கொண்டுள்ளன. தோட்டங்களில் உற்பத்தி பிரதேசங்களும் குடியிருப்பு பிரதேசங்களும் தனித்தனியாக வரையறுக்கப்பட்டு குடியிருப்பு பிரதேசங்கள் தோட்ட நிரவாகத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவைகள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உட்படுத்தி அவற்றை அரச கட்டமைப்புக்கு இணைப்பதே இதற்கான தீர்வாக அமைய முடியும். இதன்போது தோட்ட மக்களுக்கு காணியுரிமையையும் வீட்டு உரிமையையும் உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானதாகும். வீடு, காணி உரிமையை மறுத்து மலையக மக்களுக்கான முகவரியை பெறுவது என்பது அபத்தம்.
மேற்குறித்த தீர்வினை வழங்குவதால் இலங்கை அரசாங்கம் எதனையும் இழக்கப் போவதில்லை. எனினும் இதனை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக கட்சிகள் வழியுறுத்துவதாயில்லை. இது ஏன் என்று மலையக மக்களுகள் சிந்திப்பது இன்று அவசியமாகியுள்ளது. இந்த தீர்வு மலையகத்தில் இன்றளவும் மக்கள் மத்தியிலும் பொதுவில் இலங்கை மக்களிடத்திலும் போதிய கருத்தாடல்களுக்கு உட்டபட்டவில்லை. அரசாங்கம் சாரா நிறுவனங்கள் இது தொடர்பாக பேசுகின்ற போதும் அவைகள் இதனை மக்கள் மத்திக்கு கொண்டு செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. இதனை அரசியல் பிரச்சினையாக உருவெடுக்கச் செய்வதில் அவர்களிடம் உள்ள மனத்தடையே இதற்கு காரணம் என்பது நோக்குனர்களின் கருத்தாகும்.
மலையக தலைமைகளே மலையக மக்களின் பிரச்சினைகளை அரசியல் பிரதிநித்துவத்திற்கான மற்றும் அபிவிருத்திகான பிரச்சினையாகவோ அல்லது அடையாளப் பிரச்சினையாகவோ அதாவது மலையக தேசியத்திற்கான பிரச்சினைகளாகவே அல்லது இவை இரண்டின் கலவையாக நோக்கும் போக்கே காணப்படுகிறது. இதனை கடந்து மலையக மக்களின் வேராக உள்ள பொருந்தோட்ட பொருளாதாரம் அதனால் ஏற்பட்ட கட்டமைப்பை விளங்குவதற்கான முயற்சிகள் மிகவும் குறைவே. மலையக மக்களின் பொருளாதார உரிமைக்கான போராட்டங்களே அவர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டங்களுக்கான வெளியை அமைத்தன வெற்றிகளையும் பெற்றுத்தந்தன. மலையக மக்களின் பொருளாதார உரிமை மறுப்பதற்காகவே அரசியல் உரிமைகள் பல மறுக்கப்பட்டன என்ற வரலாற்று உண்மை கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இந்த உண்மையை நேர்மையாக நோக்குவதும் இல்லை.
இப்பின்னணியிலேயே மலையக அரசியல் தலைவர்கள் தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக சொல்லி வருகின்றனர். அந்த தீர்வுகளை ஆளும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு வருகின்றனர். எனவேதான் மலையக மக்களின் பொருளாதார உரிiமைகளுக்கான போராட்டங்களை (சம்பள உயர்வு போராட்டங்கள்) மலையக தலைவர்களுக்கிடையிலான போட்டிகளாக மாற்றி இறுதியில் அரசாங்கத்திற்கும் கம்பனிகளுக்கும் வாய்ப்பாக தீர்த்து வைக்கின்றனர். இதனூடாக தங்களின் அரசியல் வெற்றியை நிலைநிறுத்துகின்றனர்.
எனவே மலையக மக்களுக்கான முகவரிக்கான பிரச்சினை என்பது தோட்டங்களில் உள்ள லயன் அறைகளுக்கு இலக்கங்களை வழங்கி தனி முகவரிகளை வழங்குவது என்ற குறுகிய வரையறைக்கு உட்பட்டதல்ல. மாறாக அவை ஒரு கட்டமைப்பு ரீதியான பாரபட்சத்தின் வெளிப்பாடு என்ற வகையில் பரந்த அடிப்படைகளைக் கொண்டது. எனவே அவை முழுமையாக நோக்கப்பட்டு தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். அரசாங்கமோ அதில் அங்கம் வகிக்கும் மலையக கட்சிகலோ தீர்வு யோசனைகளை முன்வைக்கும் முயற்சிகளையன்றி அதனை கருத்திற் கொள்ள தயாராக இருப்பதாக தெரியவில்லை. எனவே மலையக மக்களே தமது முகவரியை எழுத வேண்டும் என வரலாறு நிற்பந்திக்கின்றது.
நன்றி - http://ndpfront.com/
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...