பெ.இராதாகிருஷ்ணன் போன்றோர் மலையக மக்கள் முன்னணியின் சிதைவுக்கான முக்கிய பாத்திரங்களில் ஒருவர். ம.ம.மு வை பலப்படுத்த 90களில் சந்திரசேகரன், காதர், தர்மலிங்கம், லோறன்ஸ் போன்றோருடன் கணிசமான பணிகளை ஆற்றியிருந்தோம். ம.ம.மு மலையகத்தின் விடிவுக்கு கணிசமான எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தோம்.
மலையகத்தில் தனக்கெதிரான சக்திகளை அழிப்பதற்கு முன்னர் அவற்றை நுணுக்கமாக சிதைவடையச்செய்வதை முன்நிபந்தனையாக கொண்டியங்குகிறது மகிந்த அரசு. அதனை நிறைவேற்றும் நேரடி கருவி தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இதே நிலையை அரசு உருவாக்கிவிடும் காலமும் தொலைவில் இல்லை என்பதை அரசின் போக்கை அவதானித்து வருபவர்கள் இலகுவாக உணர முடியும்.
பிரித்தாழும் சூழ்ச்சியில் கண்ட வெற்றி
மகிந்த அரசமைத்தது தொடக்கம் புலிகளை உடைத்தது, பிரதான எதிகட்சி என்கிற ஒன்றே இல்லை என்கிற நிலைமையை உருவாக்கியது, பலமாக வந்துகொண்டிருந்த ஜே.வி.பி.யை உள்வாங்கி பின்னர் சுக்குநூறாக்கியது, முஸ்லிம் தலைமைகளை துண்டு துண்டாக பிரித்தது, இப்பேற்பட்ட உடைவுகளுக்குள்ளும் உடைவுகளை உறுதிசெய்தது என வரலாற்றில் பிரித்தாழும் சூழ்ச்சியில் மிகக் கைதேர்ந்த சக்தியாக மகிந்த அரசு தன்னை நிலை நிறுத்திக்கொண்டது ஒன்றும் தற்செயல் அல்ல.
அதற்கூடாக தன்னை பலம்பொருந்திய சக்தியாக ஆக்கிக்கொண்டது. இன்று மகிந்த அரசின் பலம், மகிந்த அரசின் பலமே அல்ல, மாறாக எதிர்கட்சிகளின் பவவீனம். இந்த போக்கில் அரசு தொடர் வெற்றியை நிலைநாட்டியிருக்கிறது. இதற்கொரு சமீபத்திய சிறந்த உதாரணம் தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பிரேரிக்கப்பட்டவர்கள் யார் என்பது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, முன்னாள் நீதியரசர் ஷிராணி, முன்னாள் இராணுவத்தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா ஆகியோர் முன்மொழியப்பட்டிருந்தார்கள். இவர்கள் எவருமே சமகால அரசியல் தளத்தில் இல்லாதவர்கள். அரசியல் தளத்திலேயே இல்லாதவர்களை தேடிச்செல்லும் அளவுக்கு எப்பேற்பட்ட அரசியல் பஞ்சம் நிலவுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆக மகிந்த அரசு பிரித்தாழும் சூழ்ச்சியில் ருசிகண்டு வெற்றிகண்ட நரி என்பதும், அத்தோடு அது முடியவில்லை என்பதும் நாம் அனைவரும் கவனிக்கவேண்டிய புள்ளி. அப்போக்கின் தொடர்ச்சியே ம.ம.முயின் இன்றைய பிளவு.
ம.ம.முவின் சரிவு
90 களில் வேகமாக தொடங்கி வேகமாக செல்வாக்கு சரிந்த கட்சியாக ஆகியது ம.ம.மு. அதன் அடிப்படை காரணங்களில் ஒன்று 94இல் சந்திரிகா அரசுடன் இணைந்தது. அடிப்படை அரசியல் விடுதலைக்கான கொள்கைகளைக் கொண்டிருந்த கட்சி பின்னர் வெறும் "தேர்தல் அரசியலுக்காக" தன்னை தயார் படுத்தும் குறுகிய நிலைக்கு தள்ளப்பட்டது.
அமைச்சுப்பதவி அதன் கண்களை இருட்டாக்கியது. புதிய வேடதாரிகளினதும், கொள்ளையர்களினதும், சந்தர்ப்பவாதிகளினதும் புகலிடமாகியது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இந்த பெ.இராதாகிருஷ்ணன். கட்சியை அரச சார்பு கட்சியாக இழுத்துச்செல்வதிலும் பாரிய பங்காற்றியவர்கள். கட்சிக்குள் இன்னமும் இப்படியானவர்கள் உள்ளார்கள் அவர்கள் அனைவரும் களையெடுக்கப்பட்டால் மட்டும் தேறிவிடும் என்று நான் கருதவில்லை.
கட்சி முற்றிலும் புனருத்தாபனம் செய்யப்படவேண்டும். கட்சியில் இன்னும் மிஞ்சியுள்ள மலையக விடுதலையில் பிரக்ஞையுள்ள தோழர்கள் தேர்தல் அரசியலிலிருந்து வெளியில் வருவது முதலில் முன்னிபந்தனயானது என்றே நான் கருதுகிறேன். “தேர்தல் அரசியல்”, “அரசியல் அதிகாரம்” என்பன மலையக அரசியலைப் பொறுத்தளவில் மக்களை நெருங்க முக்கியமான காரணி என்கிற வாதம் எப்போதும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.
மலையகத்தின் சாபக்கேடான இலங்கை தொழிலாளர் காங்கிரசை எதிர்கொள்வதென்றால் “தேர்தல் அரசியல்”, “தொண்டு அரசியல்”, “அதிகார அரசியல்”, “நிவாரண அரசியல்” என்பன தவிர்க்க இயலாத ஒன்றென்கிற வாதமும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.
ம.ம.மு ஒரு புரட்சிகர கட்சியாக பார்க்கவில்லை ஆனால் மலையகம் பற்றிய மிகத் தெளிவான பார்வை அவர்களிடம் அன்று இருந்தது. இன்றும் மலையக அதிகார அலகு, மலையக தேசியம் குறித்த கோஷத்தை முன்வைக்கக்கூடிய தலைவர்கள் அதில் மட்டுமே உள்ளார்கள்.
கட்சியை பாதுகாப்பதற்கு நிதிப் பலத்தை நாடுவதற்காக ஒருகட்டத்தில் மிக மோசமான சக்திகளை உள்ளே நுழையவிட்டது மட்டுமல்ல, அவர்களுக்கு தேர்தலில் இடம்கொடுத்து, பிரதிநிதித்துவத்தையும் கிடைக்கச்செய்து ஈற்றில் தலைமையை கைப்பற்றும் நிலைக்கு கொண்டுசென்றது.
ம.ம.மு மீது இது போன்ற விமர்சனங்கள் பலவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். அதற்க்கான சுயவிமர்சனத்துக்கான தேவை கட்சிக்குள்ள்ளிருப்பவர்கள் செய்வதன் மூலம் மட்டுமே சரி செய்ய முடியுமென்று நம்புகிறேன்.
சமூக விடுதலை, சமூக மாற்றம் குறித்த அலங்காரமான கோஷங்களுடன் வெளிவந்த ஒரு கட்சியின் அழிவுப்பாதை எப்படிப்பட்ட காரணிகளால் சிதைவடைய இயலும் என்பதற்கு ம.ம.மு ஓர் சிறந்த உதாரணம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...