Headlines News :
முகப்பு » , » மலையகப் படைப்பாளி தெளிவத்தை ஜோசப் 'விஷ்ணுபுரம்' விருது பெறுகிறார் - சி.சிவகருணாகரன்

மலையகப் படைப்பாளி தெளிவத்தை ஜோசப் 'விஷ்ணுபுரம்' விருது பெறுகிறார் - சி.சிவகருணாகரன்

தெளிவத்தை  ஜோசப்
இலங்கையின் மூத்த படைப்பாளியும் மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை  ஜோசப், இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதினைப்பெறுகிறார்.  

இத்தகவலை விஷ்ணுபுரம் விருதுவழங்கும் தமிழகத்தின் பிரபல படைப்பாளி ஜெயமோகன் வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி தமிழ்நாடு கோவையில் நடைபெறவுள்ள விருது வழங்கும்  விழா இந்திராபார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ளது. 

மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய  நூலை வெளியிடுவார். எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றுவார்கள். இந்நிகழ்வில் தெளிவத்தை ஜோசப்  கலந்துகொள்ளுவார்.

இலங்கையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் தேசிய சாகித்திய விருதுகளைப் பெற்றுள்ள தெளிவத்தை ஜோசப், கொடகே பதிப்பகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் யாழ். இலக்கிய வட்டத்தின்  சம்பந்தன் விருது ஆகியனவற்றையும் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஒன்பதாவது எழுத்தாளர் விழா மெல்பனில்  நடைபெற்றபொழுது அவர் சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்டார். அவரது பவளவிழாவை முன்னிட்டு  குறிப்பிட்ட எழுத்தாளர் விழாவில் கலை, இலக்கிய சங்கத்தின் சிறப்புவிருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட ஜெயமோகன், தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில்  அன்றையதினம் விருது வழங்கினார் என்பது  குறிப்பிடத்தகுந்தது.

தெளிவத்தை ஜோசப், தமிழ் நாட்டில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த தமிழ் இனி மாநாட்டிலும்   கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடந்த இலக்கிய சந்திப்புகளிலும் கலந்துகொண்டவர். தெளிவத்தை ஜோசப் சிறுகதை, நாவல் மற்றும் இலக்கிய விமர்சனத்துறையில் நூல்களை  எழுதியிருப்பதுடன் இலங்கை, மலையக இலக்கிய வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பையும் வழங்கிய  முன்னோடி படைப்பாளியாவார்.

தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகள்
1 காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
2 நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
3 பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
4 மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
5 இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (மூன்றாவது மனிதன் வெளியீடு)
6 குடை நிழல் (நாவல், 2010)

பரிசளிப்பு விழா வரும் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும்.

இம்முறை விருதுத்தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் ஒரு லட்சமும் நினைவுச் சிற்பமும் வழங்கப்படும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates