எஸ்.திருச்செந்தூரன் |
1983 ஜூலை கலவரத்தின் பின்னர் தமிழ் நாடு சென்று குடியேறி தாயகம் திரும்பிய மலையக மக்கள் வறுமையால் வாடிக் கூனிக்குறுகிய உரிமைகளும் உணர்வுகளும் அற்ற நிலையில் ஒடுக்கப்பட்டிருந்த சூழலில் எஸ்.திருச்செந்தூரன் தாயகம் திரும்பிய மலையக தமிழர்களுக்காக கோத்தகிரியில் அளப்பரிய சேவைகளைச் செய்து கொண்டிருந்த காலத்தில் 2001ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதியன்று திருச்சியில் அமரரானார். தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் அமரரான சொல்லின் செல்வர் இர.சிவலிங்கம் அவர்களுடன் இணைந்து ஓயாது செயற்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியில் வாழ்ந்த தாயகம் திரும்பியோர் இலங்கை அகதிகளாக அழிக்கப்பட்டு பல துன்புறுத்தலுக்கும் பகிஷ்கரிப்புக்கும் உள்ளான காலத்தில் அவர்களுடைய எல்லா உரிமைகளையும், குறிப்பாக வீட்டு வசதிகளையும் கருத்திற் கொண்டு சிவாவும் செந்தூரனும் தீவிரமாக செயற்பட்டனர்.
இவ்வாறான போராட்டத்தில் இந்திய மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் இர.சிவலிங்கம் 1993ம் ஆகஸ்ட் 5 முதல் தொடர்ந்து 120 நாட்கள் கடும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வந்தது என்பது மற்றொரு விடயம். அப்போதெல்லாம் இர.சிவலிங்கத்துடன் தோளோடு தோள் நின்று உழைத்தவர் அமரர் திருச் செந்தூரன். தாயகம் திரும்பியோருக்காக மக்கள் மறுவாழ்வு மன்றம், ஐலன்ட்ஸ் டிரஸ்ட் போன்ற அரசசார்பற்ற அமைப்புக்களில் பணியாற்றி தாயகம் திரும்பியோரின் நலன்களில் தனது இறுதி மூச்சுவரை அக்கரை செலுத்தினார்.
தமிழகத்தில் இவ்வாறான உயர்ந்த சமூகப் பணியை ஆற்றிய திருச்செந்தூரன் அதற்கான அடித்தளத்தை மலையகத்தில் அமைத்துக் கொண்டவர். அவர் கண்டி மாவட்டம் கலகா வீசு-மந்திரமலை தோட்டத்தில் பிறந்தார். உயர் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் பயின்று பட்டப்படிப்பை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் நிறைவு செய்த திருச்செந்தூரன் 1959ல் ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரியிலும் பின்னர் ஹைலன்ட் கல்லூரியில் 01.04.1971 முதல் 31.03.1976 வரை அதிபராக பணியாற்றினார்.
எஸ்.திருச்செந்தூரன் |
ஆசிரியர், அதிபர் பணியோடு கலை இலக்கியப் பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக திருச் செந்தூரன் விளங்கினார். 1959ல் கல்கி சஞ்சிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் உரிமை எங்கே? ஏன்ற கதைக்கான பரிசு பெற்றமை மூலம் மலையகத்திற்கு பெருமை தேடித் தந்தார். போட்டிக் கதையோடு நின்று விடாமல் தொடர்ந்து எமக்கு கதைகளை எழுத்திக் கொண்டிருங்கள் என்று கல்கி ஆசிரியர் ரீ.சதாசிவம் 12.01.1961ல் அவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் சிறந்த சிறுகதை படைப்பாளி என்பதை நிரூபித்தார். தொடர்ந்து நடுக்கடலில், என்ன செய்து விட்டேன், சாமிக்கடன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் இலங்கை முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளது. புல சிறுகதை தொகுப்புகளிலும் வெளிவந்துள்ளன. திருச்செந்தூரனை தொடாமல் மலையக இலக்கிய வரலாற்றை எழுத முடியாது என்ற நிலை உள்ளது.
நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த திருச் செந்தூரன் நாட்டார் கலையான காமன்கூத்தை நவீனமயப்படுத்தி கொழும்பில் மேடையேற்றினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நாடகமும், அரங்கியலும் என்ற துறையில் பட்மேற்படிப்பு டிப்ளோமா சான்றிதழ் பெற்று தொழில்முறைத் தேர்ச்சி பெற்றார். இதனால் அவர் ஏராளமானவர்களுக்கு நாடகத்துறையில் பயிற்சி வழங்கினார். ‘சிலைகள்’ என்ற நாடகத்தில் நடித்ததோடு, தாளலய நாடகங்களையும் நெறிப்படுத்தினார்.
மலையகத்தில் பல கற்றறிவாளர்களையும், அரசியல் பிரமுகர்களையும் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் உருவாக்கிய பெருமை இவருக்குரியது. வீரகேசரி நடாத்திய பல சிறுகதைப் போட்டிகளில் இவர்களுடைய மாணவர்கள் பரிசு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் முன்னால் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும், தற்பொழுது அமைச்சர் ரிசாத் பதுர்தீன் அவர்களின் சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றும் சிறப்பறிஞரான எம்.வாமதேவன் தொண்டமான் பவுன்டேசன் பிரதிப்பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய சி.நவரட்ணம், திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களான டாக்டர்ஏ.எஸ்.சந்திரபோஸ், தை.தனராஜ், முன்னால் கல்விப் பணிப்பாளர் ஆர்.மெய்யநாதன் அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறையிலிருந்தே வெற்றி பெற்று சுயநல கோரிக்கைகளை முன்வைக்காது திருமதி.சந்திரிக்கா குமாரதுங்காவின் அரசு அமைவதற்கு கைகொடுத்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் வி.டி.தர்மலிங்கம் மலையக மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் எஸ்.விஜயகுமாரன் இவரது புகழ்பூத்த மாணவர்களாவர்.
எஸ்.திருச்செந்தூரன் |
மாத்தளை பாக்கிய வித்தியாலயத்தில் பணியாற்றும் போது கலை, இலக்கிய படைப்பாளிகள் மற்றும் சமூக உணர்வாரள் பலரை உருவாக்கினார். வகுப்பறைக்கு வரும் போது தாமரை தீபம் போன்ற சஞ்சிகைகளோடு வந்து இலக்கிய தாகத்தை ஏற்படுத்தினார். சுர்வதேச புகழ் பெற்ற மாத்தளை சோமு, கலைஞர் மாத்தளை கார்த்திகேசு, மலரன்பன், மாத்தளை வடிவேலன், எச்.எச்.விக்கிரமசிங்க முன்னால் பிரதி மேயர் எம்.சிவஞானம் மாத்தளை நசீர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இலங்கையில் ஆசிரியர் பணியாற்றிக் கொண்டே தமது நண்பர் அய்யா இர.சிவலிங்கம் அவர்களுடன் இணைந்து மலையகப் பகுதிகளுக்குச் சென்று இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி மலையகத்தின் விடியலுக்காக அயராது உழைத்தார். திருவள்ளுவர் நற்பணி மன்றம் என்று ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து மலைநாட்டு வாலிபர் சங்கம் மலையக இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளின் ஊடாக இளைஞர்களை ஒருங்கிணைத்து மாபெரும் மாற்றத்தை மலையகத்தில் உருவாக்கினார்.
சமூகப் பணிகளுக்கிடையே இலக்கியப் பணியில் பெரும் பங்காற்றினார். புள்ளிகளில் சமூக சீர்திருத்த நாடகங்களை நடத்தி நடித்தார். காமன் கூத்து, என்ற தமிழரின் பண்பாட்டு கலையினை கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அரங்கேற்றினார். மாத்தளை கார்த்திகேசு தயாரித்த அவள் ஒரு ஜீவநதி என்ற தமிழ் திரைப்படத்தில் பாதிரியாராக நடித்துள்ளார்.
மூட நம்பிக்கைகளை வெறுக்கும் திருச்செந்தூரன் அவர்கள் தெய்வபக்தி மிக்கவர். நுவராத்திரி, சிவராத்திரி விழாக்காலங்களில் கோயில்களுக்குத் தவறாது சென்று சமய சொற்பொழிவாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் மற்றும் தமிழ்ச்சான்றோர்களுக்கு விழா எடுத்து, இலக்கியப் போட்டிகள் நடத்தி தமிழ் வளர்த்தார். அத்துடன் அய்யா இர.சிவலிங்கம் அவர்களுடன் இணைந்து இலங்கை வானொலியில் ‘குன்றின் குரல்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். தமது இளமை முதல் இலங்கையில் வாழ்ந்த காலம் வரை மலையகத் தமிழரின் வாழ்வுரிமைக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்தார்.
தாயகம் திரும்பிய மலையக தமிழர்கள் தமிழகம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் படும் துன்பங்களை - துயரங்களை கண்டு மனம் வெதும்பினார். ஆடிப்படை உரிமை கூடக் கிடைக்காத நிலையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களாய் மலையகத் தமிழர்கள் வாழ்வதைக் கண்டு, திரு.இர.சிவலிங்கம், சகோதரர் ஏ.டி.அல்போன்ஸ் மற்றும் இருவரும் சேர்ந்து மலையக தமிழர்களின் விடிவுக்காக அய்லண்டு அறக்கட்டளையை உருவாக்கினார்.
தமிழகத்தில் குறிப்பாக நீலகிரியில் மலையகத் தமிழர்கள் அதிகமாக வாழ்வதை கண்டு மீண்டும் சமூகப் பணியில் ஈடுபட்டார். துமக்கு கிடைத்த ஆசிரியர் பணியையும் ஏற்காது, சமூகப் பணியை தொடர்ந்தார். மலையக தமிழர்களின் விடியலுக்காக மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் 1984-ல் கோத்தகிரியில் உதயமானது. நீலகிரியில் கடந்த 16 ஆண்டுகளாக மன்றத்தின் ஊடாக அவர்கள் ஆற்றியப்பணி அளப்பரியது. அய்லண்டு அறக்கட்டளையின் தலைவராக, மன்றத்தின் தலைவராக இருந்து, வீடமைப்பு, கல்வி, கலை, சுகாதாரம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் தீட்டி மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுத்தார். குன்னூர் வட்டம் அதிகரட்டி செலவிப் நகர் உருவானதில் அய்யாவின் பங்களிப்பு அளப்பரியது.
சமூக சேவையில் ஆர்வமிக்கவராய், தன்னம்பிக்கை மிக்கவராய், தன்னலமற்றவராய், பிறருக்கு நம்பிக்கையூட்டுபவராய், ஆடம்பரம் விரும்பாதவராய், தெய்வபக்தி மிக்கவராய், மூட நம்பிக்கையற்றவராய், கடனை விரும்பாதவராய், பிறர் தீமை செய்தாலும் அவருக்கு நன்மைதான் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் உள்ளவராய் எளிமையாக வாழ்ந்து காட்டிய அய்யா சு.திருச்செந்தூரன் அவர்கள், தமது வாழ்வின் இறுதிக்காலம் வரை மலையகத் தமிழர்களின் முன்னேற்றத்திற்காகவும், உயர்வுக்காகவும், அறியாமை நீக்கி வழிப்புணர்வு பெறச் செய்வதற்காகவும், குறிப்பாக தமது சமூகம் கல்வியில் உயர்வு பெற வேண்டும் என்பதற்காகவுமே உழைத்தார் - உயர்ந்தார்.
படித்தோம், பட்டம் பெற்றோம் என சமூகத்திலிருந்து ஒதுங்கிவிடாது சமூக மேம்பாடு நோக்கியும் அதன் கலை, இலக்கியம், கல்வி மறுமலர்ச்சிக்கும் சிறந்த பணியாற்றிப் பெருமை பெற்றவர் திருச்செந்தூரன். இவர் போன்றவர்களுடைய சமூக, கலை இலக்கியப் பணிகளை விரிவாக ஆராய்ந்து அவற்றைப் பாராட்டுவதோடு அவற்றை எவ்வாறு முன்னோடியாகக் கொள்ளலாம் என்பது பற்றி அவரது மாணவர்களும், மலையகக் கற்றறிவாளர்களும் சிந்திக்க வேண்டும். இதுவே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.
“இறுதி மூச்சுவரை
இலட்சியம் கொண்டாய்
ஏழை இன்னல்களை களைய ….. !
மண்ணகம் விடுத்து
விண்ணகம் சென்று
மலையக திசைமானியாய்
மாறினாய் அய்யா …!
எம்விழி கண்ணீரால்…
இதயங்களை நனைக்கின்றோம்…!
உன்னக நெறி ஏந்தி …!”
உம்வழி பயணிப்போம் ….! மக்கள் மன்றம் சஞ்சிகையில் வெளியான கவிதாஞ்சலி சிந்தனையோடு கோத்தகிரி நண்பர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...