Headlines News :
முகப்பு » , » அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் நூற்றாண்டு நினைவு

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் நூற்றாண்டு நினைவு

தொண்டமான்
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் தலைவர்களின் தலைமைத் துவ பங்கு என்பது முக்கியமானது. அந்தவகையில் மலையகத் தலைவர்களில் முக்கியமான இடத்தை வகிப்பவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் என்றால் மிகையாகாது. அவரின் 99 வது பிறந்த தினம் எதிர்வரும் 31.08.2011 நினைவு கூரப்படுகிறது.

அவரால் மலையக மக்களின் வாழ்வில் விட்டுச்சென்ற அடிச்சுவடுகள் என்றும் மறக்க முடியாதது. தோட்ட தொழிலாளர்களின் நெஞ்சங்களில் 'அமரர் ஐயா' என்ற சுலோகத்தை தாங்கி நிற்கின்றது. மலையக மக்கள் அடிமைகளாக சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நாள் முதல் அடிப்படை உரிமை, அடிப்படை வசதி, கலை, கலாசாரம், பண்பாடு, நாடற்றவர், அடிமைகள் மற்றும் அரசியல் அநா தைகளாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

1948 இல் நமது நாடு சுதந்திரம் அடைந்திருந்தாலும் மலையகம் மக்கள் அந்த சுதந்திரக் காற்றை அனுபவிக்க முடியவில்லை. அவர்களின் உரிமை களுக்காக பல தலைவர்கள் பல வழிகளில் செயல் களில் ஈடுபட்டாலும் அமரரின் தலைமைத் துவத்தின் கீழ் மலை யக மக்களின் வாழ் வில் ஓரளவு மாற்ற மேற்பட்டது.

அடிமைகளாக அழைத்து வரப்பட்ட இந்த மக்கள் தற் போது ஏனைய சமூகத்தினருடன் ஒப்பிடும் போது அவர்களின் வாழ்க் கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. கல்விமான்களாகவும், புத்தி ஜீவிகளாகவும், தொழில் அதிபர்களாகவும், கண்டு பிடிப் பாளர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், உயர்தொழில் புரிபவர்களாகவும், சிறந்த கலைஞர்களாகவும், தொழிற்சங்க அரசியல்வாதிகளாகவும் உருவாகியுள்ளனர்.

மலையகத்தவர்கள் மட்டுமன்றி மொழி, இன, மத, தொழிற்சங்க பேதமின்றி அனைவராலும் நினைவு கூரப்பட வேண்டியவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான்.

இந்தியாவின் பட்டமங்களம் முனாபுதூர் கிராமத்தில் குமாரவேல் கருப்பையாபிள்ளை சித்தம்மையார் தம்பதியினருக்கு 1913.08.30 ஆம் அன்று மகனாக பிறந்தார். செளமியமூர்த்தியின் பெற்றோர்க்கு ஏற்கனவே நான்கு பெண் பிள்ளைகள் இரு பெண் பிள்ளைகள் இறந்து விட்டனர். இவர் மட்டுமே ஆண் பிள்ளை இவரது இயற்பெயர் செளமியமூர்த்தி. பின்னர் மாதவனாகவும் தொண்டமானாகவும் பெயர் பெற்றார். இப்பெயர்கள் தனது பரம்பரையினரையும், குலதெய்வத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. செளமியமூர்த்தி தொண்டமான் என்பதன் விளக்கம் 'வீரத்தில் விளைந்த வித்து' என்று பொருள்படுகிறது.

அவரது தந்தைக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடித் தொடர்பை அவர் 11 வயதில் 1924 இலங்கை இறம்பொடை வேவன்டன் தோட்டத்திற்கு வரக் காரணமாக இருந்தது. தனது படிப்பின் பின் 19 ஆம் வயதில் 1932 ஆம் ஆண்டு தனது திருமண பந்தத்தில் கோதையுடன் இணைந்துகொண்டார். பின்னர் இலங்கை வாழ் இந்தியர்கள், மலையகத் தோட்டத் தொழிலாளர் மீது கொண்ட அக்கறையின் காரணமாக அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

1934 ஆம் ஆண்டு இந்தியர்களை வெளியேற்ற அக்கால அரசு முடி வெடுத்ததன் காரணமாக இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்காக பண்டித் ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் பயனாக இங்குள்ள தமிழ்த் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மூலம் 'இந்திய இலங்கை காங்கிரஸ்' 1939 ஆம் ஆண்டு உருவானது.

இதன் அங்கத்தவராகவும் தீவிர செயற்பாட்டாளராகவும் இருந்த செள. தொண்டமான், தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். 1940 களில் கம்பளை ஜில்லாவில் (காரியாலயம்) நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் கன்னியுரையையும் ஆற்றினார்.

நாணயமிக்கவராகவும் நம்பியவர்களை கைவிடாதவராக, செழுமை மிக்கவராக எளிமையானவராக, சேவை மனப்பான்மை, எற்றத்தாழ்வற்ற சொல்லின் செல்வராக அஞ்சா நெஞ்சம் படைத்த சிறந்த விருந்தோம்பல் கொண்டவராக, தொழிலையும், தொழிலாளர்களையும், தெய்வமாக மதிக்கும் மாமனிதராக விளங்கினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மட்டுமன்றி அந்தந்த காலப் பகுதியில் அரசாங்கத்திடமும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராட்டங்களைத் தொடங்கினார். உரிமைகளை பெற்றுக்கொடுத்த பெருமை அவரையே சாரும். அவரது முதல் போராட்டம் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தமாகும். இதன் பின்னர் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு 9386 வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். இவருடன் மேலும் ஆறு பேர் தெரிவாகினர். இந்நிலையிலேயே 1947 ஆம் ஆண்டு இலங்கை அரசு கொண்டுவந்த பிரஜாவுரிமைச் சட்டத்தினால் இந்திய வம்சாவளியினர் குடியுரிமையையும், பிரஜாவுரிமையையும் இழந்தனர்.

இந்த துர்ப்பாக்கிய நிலை 1947 தொடக்கம் 1977 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இதன் பின்னர் மீண்டும் 1977 ஆம் ஆண்டு நுவரெலியா, மஸ்கெலியா தொகுதியில் தலைவர் செள. தொண்டமான் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பயனாக கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இடைப்பட்ட (30 வருட காலத்தில் இரண்டு தடவைகள் நியமன அங்கத்தவராக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.) 'இலங்கை இந்திய காங்கிரஸ்' பின்னர் 1941 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாறியது.

இதன் பயனாக சுமார் 60 போராட்டங்கள் வெடித்து சிதறின. இவற்றில் பல வெற்றி வாகை சூடின. அதில் மாத்தளை குப்புசாமி போராட்டம் எட்டியாந்தோட்டை கண்ணாடி வளையல் போராட்டம், சென். அன்ரூஸ் போராட்டம், மொண்டிகிரிஸ்டோ போராட்டம், பென்ரித்தோட்ட சுழற்சி முறை போராட்டம், உருளைவள்ளி தோட்ட போராட்டம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 1983 களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் நியமன அங்கத்தவராக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தோட்ட உட்கட்டமைப்பு, புடவைக் கைத்தொழில் அமைச்சராக 1999 ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார்.

தோட்டத் தொழிலாளர்கள் நாடற்றவர்கள் என்ற பிரச்சினைக்குத் தீர்வாக 1987 ஆம் ஆண்டு பாராளுமன்ற விசேட சட்டத்தின் மூலம் ஒரு சத்திய கடதாசியை சமர்ப்பித்ததன் மூலம் பிரஜா உரிமையை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார். இது தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் பாரிய வெற்றியாகும். இது அவர்களின் வாக்குரிமையை பெற்றுத் தந்தது. தொடர்ந்தும் பல உரிமைகளை பிரார்த்தனை இயக்கம் ஊடாக அஹிம்சை வழியில் வென்றெடுத்துள்ளார். தொழிலாளர்களின் வாழ்வினை மேம்படுத்துவதற்காக ILO, ICFTY ஊடாக விழிப்புணர்வுகளை ஏற்படுத் தியதோடு இளைஞர் யுவதிகளின் வாழ்வில் தலைமைத்துவத்தை வளர்த்தெடுத்தார்.

தொழிலாளர்களுக்கான கல்வி நிறுவனத்தை (CLF) கொட்டகலையில் நிறுவினார். அத்துடன் ஹட்டனில் தொண்டமான் தொழில் பயிற்சி நிலை யத்தையும் உருவாக்கினார். ஆசியா விலேயே மாபெரும் தொழிற்சங்கத்தை கொண்டு நடத்திய பெருமையும் இவரையே சாரும். இதனூடாக மலையக மக்களின் பிரச்சினைகளை உலகளாவிய ரீதியில் பேசுவதற்கு வழிவகுத்தார்.

அதேபோல் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி அனைத்துத் தலைவர் களினாலும் நேசிக்கப்பட்டவர். சொந்தப் பணத்தில் தொழிற்சங்கம் நடத்திய பெருமையும், தொழிலாளர்கள் சார்ந்த வழக்குகளுக்கு வெற்றி பெற்றுக்கொடுத்த பெருமையையும் இவரையே சாரும். அது மட்டுமன்றி தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் தற்போது ஏற்பட்டுள்ள பல அபிவிருத்திகளின் பின்னணியில், அவர் ஒரு மையக் கல்லாக செயற்பட்டுள்ளார்.

அந்த வகையில் மலையகத்தில் வீடமைப்புத் திட்டங்கள், பாதையமைப்பு, மின்சாரம், குடிநீர், சுயதொழில் ஊக்குவிப்புக்கள், அரச உத்தியேகத்தர் நியமனம், ஆசிரியர் நியமனம், பாட சாலைகளின் அபிவிருத்தி, புத்திஜீவிகளின் உருவாக்கம், அரசியல் வாதிகளின் உருவாக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இன்று மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தியை எடுத்துக்கொ ண்டாலும் அது அவரின் ஆரம்ப காலத்தில் ஏதாவது ஒரு செயற்பாட்டின் ஊடாக வந்தது எனலாம்.

இவரது சேவை இவரோடு நிறுத்தி விடாமல். மகனாகிய செளமியமூர்த்தி தொண்டமான் ராமநாதன் ஊடாகவும் பின்னர், பேரன்கள் ஆறுமுகன் தொண்டமான், செந்தில் தொண்டமான் ஊடாகவும் மலையக மக்களின் வாழ்வில் சேவை தொடர்கின்றது. இச்சேவை அன்னாரின் எண்ணம்போல் நிறைவேறும் என்பதே அனைத்து மலையகத்தவர்களின் எதிர்பார்ப்பாகும். இவரது கனவுகள் அனைத்தும் நனவாகவிட்டாலும் நனவாகியதாக கருதி 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மலையகத்தில் அணையா விளக்குகளை ஏற்றி வைத்து விட்டு இறைவனடி சேர்ந்தார். அதனாலேயே இவரை நினைவு கூரும் அனைவரும் அணையா விளக்கு என்று கூறுகின்றனர்.

ஒரு தனிமனிதனாக இருந்து மலை யக மக்களுக்காக ஆற்றிய சேவைகளை எவராலும் எளிதில் மறந்துவிட முடி யாது. அவரது எண்ணங்கள், சிந்தனைகள் மழுங்கடிக்கப்படாமல் செயலுரு பெற வேண்டும். இவரது பிறந்த தினத்தில் அதை நிறைவேற்றுவோமானால் அதுவே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாகவும், நன்றிக் கடனாகவும் இருக்கும்.

நன்றி - தினகரன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates