ஏ.லோறன்ஸ் |
மலையக தமிழ் மக்களை, மலையக தமிழ் மக்கள் என்று அழைப்பதா? அல்லது இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் என்று அழைப்பதா? எனக்கருத்து வேறுபாடு, அண்மைக் காலங்களில் நிலவுகின்றது. இந்த சர்ச்சை கிளப்பப்பட்ட பின்பே, “இந்திய வம்சாவளித் தமிழர்” என்ற பதம் பற்றி சிந்திக்கப்படுகின்றதேயொழிய, பொதுவாகவே மலையக மக்கள், அவர்கள் நுவரெலியா மாவட்டமாக இருந்தாலும் சரி, பதுளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மலை மாவட்டங்களாக இருந்தாலும் சரி, தலைநகராகிய கொழும்பாக இருந்தாலும் சரி, வடகிழக்கில் வவுனியா, கிளிநொச்சி மாவட்டமாக இருந்தாழும் சரி, 80 சதவீதமான மலையக தமிழ் மக்கள், தம்மை, ஏற்கனவே “மலையக மக்கள்” என்றே அழைத்துக் கொள்கின்றனர். தம்மை அறிமுகப்படுத்தும் போது பெருமையாக “மலையகத் தமிழர்” என்றே அறிமுகப்படுத்துகின்றனர். ஆகவே இந்த கட்டுரையில் மலையக மக்கள் என்ற பெயர் உருவாகிய விதம், அப்பெயர் உருவாக்கத்தின் வரலாற்றுப் பின்னணி, அப்பெயர் இந்திய வம்சாவளி என்ற பதத்தையும் விட, எந்த விதத்தில் விஞ்ஞான பூர்வமானது, தர்க்க ரீதியானது, மலையகத் தமிழ் மக்களின் அபிலாசைகளை எவ்வளவு தூரம் பிரதிபலிக்கின்றது, என்பதை, ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மலையக தமிழ் மக்கள் ஓர் தனியான சிறுப்பான்மை தேசிய இனமாவர்
மலையக தமிழ் மக்கள் ஓர் தனியான தேசிய இனமாவர். அந்த தேசிய இனம் உருவாவதற்கான பின்புலமாக அமைந்ததே “மலையகம் தான்” என்பது ஓர் மறுக்க முடியாத உண்மையாகும். இந்த நாட்டின் 1000 அடிகளுக்கு (300 மீட்டர்)மேற்பட்ட மலைப் பிரசேதங்களிலேயே நிலையான பெருந்தோட்டப் பயிர்களாகிய தேயிலை, இறப்பர் ஆகிய பெருந்தோட்டப் பயிர்கள் பயிரிடப்பட்டன. இந்தப் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் ஆரம்பத்துடனேயே, இலங்கையில் முதலாளித்துவ பொருளாதாரமும் அதன் விளைவாக இந்த நாடு, பல தேசிய இனங்களை கொண்ட நாடாகவும் உருவாகியது. அதற்கு முன்பு இலங்கை நிலப்பிரப்புத்துவ அமைப்பில் பல இராஜதானிகளைக் கொண்டு விளங்கியது. ஆகவே மலையகத் தமிழ் தேசிய இனத்தின் உருவாக்கமே 1000 அடிகளுக்க மேற்பட்ட மலை சார்ந்த பகுதிகளில் இம் மக்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் கொண்டு வந்து குடியேற்றப்பட்ட பிறகுதான் உருவாக்கம் பெற்றது. மலையகத் தமிழ் தேசிய இனமொன்று உருவாக்கத்திற்கு எந்த காரணிகள் துணையாக இருந்ததோ அந்த காரணிகள்தான் “மலையகத் தமிழர்” என்ற பெயரை கொண்ட பிரிவினரையும் உருவாக்கியது. அம்மக்கள் அந்தப் பெருந்தோட்டப் பொருளாதாரத்துடன் தொடர்புடைய புவியியல் தன்மையுடன் நமது இனத்தினது பெயரையும் இணைத்துக்கொண்டனர். ஆகவே “மலையகத் தமிழர்” என்ற வரலாற்று உணர்வு ஏற்பட்டதுதான் முக்கியமே தவிர, அது எந்த தசாப்தத்தில், எந்தக்கால கட்டத்தில் என்பது முக்கியமல்ல. ஆகவே மலையக மக்கள் ஓர் தனியான தேசிய இனம் என்ற கருத்து உருவாக்கம் பெற்று அக்கருத்து ஆழமாகவும் வேகமாகவும் வேரூன்றும் இக் காலகட்டத்தில் மலையக தமிழ் மக்களை மலையக தமிழ் மக்கள் என்று அழைப்பதா அல்லது இந்தியவம்சாவளியினர் என்றழைப்பதா என்ற தேவையற்ற வாத பிரதிவாதங்களை முன்வைப்பது அவர்களை அடிப்படை அரசியல் பிரச்சினையிலிருந்து திசைத்திருப்பும் முயற்சியாகும். வரலாற்று சக்கரத்தை பின் நோக்கிச் சுற்றும் பிற்போக்கு நடவடிக்கையாகும். அம்மக்கள் தொடர்பாக பல முக்கிய விடயங்கள் முன்வைக்கப்படும் போது இந்தப் பெயர் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட இம்மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு கூடுதலான பிரச்சார முக்கியத்துவம் கொடுப்பதுடன் மலையக தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் பிரச்சினை தொடர்பாக ஒட்டு மொத்தமான கருத்துருவாக்கதை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
மலையக தமிழர் என்று அர்த்தப்படுத்தும் போது, அதில் ஓர் புவியியல் பிரதேசம் உள்ளடங்கியிருப்பதோடு இந்நாட்டில் இருக்கும் கிட்டத்தட்ட 30 இலட்சம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரான 10 இலட்சம் தோட்டத் தொழிலாளர்களும் இத்தொழிலாளர் வர்க்கத்தில் உள்ளடக்கப்படுகின்றனர். ஆகவே இந்த 10 இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலில் பின் புலத்தையும் பெரும்பான்மையான அத்தொழிலாளர்களை அடையாளங் காட்டுவதாக மலையக தமிழர் என்ற பதம் விளங்குகிறது. ஆகவே மலையக தமிழர் என்பது ஒரு சொற்பதம் மாத்திரமல்ல அது வரலாற்றின் ஒர் உருவாக்கம். இந்த நாட்டின் முதலாளித்துவ பொருளாதாரத்தின் தோற்றத்துடன் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதாரத்தின் விளைவு. இன்று இந்திய தமிழன் என்பதை விட “மலையக தமிழன்” என்று அழைப்பது சர்வ சாதாரணமான வழக்காறாகிவிட்டது. ஆகவே தோட்டத் தொழிலுக்காக இங்கு வந்து, இலங்கையில் பல பகுதிகளில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்வதன் பயனாக, ஏற்பட்ட உணர்வே மலையக தமிழர் என்ற உணர்வாகும். உலகில் குறுகிய கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட தேசிய இனங்களும் நீண்ட வரலாற்று பின்னணியைக் கொண்ட தேசிய இனங்களும் இருக்கவே செய்கின்றன.
மலையகத் தமிழர்களும், அவர் தம் பரம்பலும்
இலங்கையில் ஆகக்கூடுதலாக யாழ் மாவட்டத்தில்தான் 6 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இரண்டாவது தமிழர்கள் கூடுதலாக வாழும் மாவட்டம் நுவரெலியா மாவட்டமாகும். இங்கு கிட்டத்தட்ட 4 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இந்த மாவட்டத்திலுள்ள மயைக தமிழர்கள் மாத்திரமல்ல பதுளை மற்றும் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டகளப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, கேகாலை, யட்டியந்தொட்டை பகுதி மலையக தமிழர்களும் தம்மை மலையக தமிழர்கள் என்றே அடையாளம் காட்டுகின்றனர். கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணை மாவட்ட ரீதியில் மலையக தமிழர்களையும் அவர்கள் கூடுதலாக வாழும் மாவட்டங்களையும் காட்டுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில்தான் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் மலையக தமிழர்கள் வாழ்கின்றனர். இங்கு 85 ஆயிரம் பேருக்குமேல் இலங்கைத் தமிழர் என்று காட்டப்பட்டிருந்தாலும் இதில் கணிசமானோர் மலையகத் தமிழர் ஆவர். ஆகவே மலையக தமிழர்களது ஜனத்தொகை நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் மூன்றரை இலட்சமாக அமையும்.
அட்டவணை I
(மூலம்: பிரதேச செயலகங்களுக்கான வழிகாட்டி1993, கொள்கைத் திட்டமிடல் அமைச்சு)
நுவரெலியா மாவட்டத்திற்கு அடுத்த நிலையில் 1 இலட்சம் 20 ஆயிரம் பேருக்கு மேல் மலையக தமிழர்கள் பதுளை மாவட்டத்திலும், கண்டி மாவட்டத்தில் 1 இலட்சத்து 19 ஆயிரம் பேருக்கு மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் 77 ஆயிரம் பேரும், அடுத்து மாத்தளை மாவட்டத்தில் 35 ஆயிரம் பேருக்கு மேலும், கேகாலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேரும், களுத்தறை மாவட்டத்தில் 32 ஆயிரம் பேருக்கு மேலும், மாத்தறை மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும், மொனராகலை மாவட்டத்தில் 12 ஆயிரம் பேரும் மலையகத் தமிழர்கள் பரந்து வாழ்கின்றனர். இதனைத் தவிர யாழ் மாவட்டம, வன்னி மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், மன்னார் மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய மாவட்டங்களிலும் மலையக மக்கள் பரந்து வாழ்கின்றனர். ஆனால் இதில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் நுவரெலியா மாவட்டத்திலேயே மலையக தமிழர்கள் வாழ்கின்றனர். மேற்படி புள்ளி விபரங்கள் பிரதேச செயலகங்களுக்கான வழிகாட்டி என்ற கொள்கை திட்டமிடல் அமைச்சால் 1993 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலிலிருந்து பெறப்பட்டது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான புள்ளி விபரம் தரப்படவில்லை. அதே நேரத்தில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கான புள்ளி விபரங்களில் மலையக தமிழரின் புள்ளி விபரம் தரப்படவில்லை. பொதுவாக தமிழர் என்றே மேற்படி இரு மாவட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையக தமிழர், பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் நுவரெலியா அம்பகமுவ பிரதேசச் செயலக பிரிவுகளிலே தமிழர்கள் இரண்டு இலட்சத்துக்கு மேல் வாழ்கின்றனர். கொத்மலை, வலப்பனை ஆகிய நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளிலும் கண்டி மாவட்டத்தில் உடபலாத்த, பஸ்பாகே, கோரளை ஆகிய பிரதேச செயலகங்களிலும், பதுளை மாவட்டத்தில் ஹாலியல்ல செயலக பிரிவிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையக தமிழர்கள் வாழ்கின்றனர்.
30000க்கு மேற்பட்ட ஜனத்தொகையினரைக் கொண்ட பிரதேச செயலாளா; பிரிவுகளாக பதுளை மாவட்டத்தில் பசறை, அப்புத்தளை, ஹல்மதுல்ல ஆகிய மூன்று செயலாளர் பிரிவுகளும், கண்டி மாவட்டத்தில் கங்கவட்ட கோரளையும் விளங்குகின்றன. மலையக தமிழர்கள் பரந்து வாழும் அடிப்படையில் பிரதேச செயலாளர் பிரிவுகளை நோக்கினால் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட 5 செயலகப் பிரிவுகளிலும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஜனத்தொகையை கொண்ட 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மலையக தமிழர்கள் வாழ்கின்றனர். 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மலையக மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளாக நுவரெலியா மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளும் பதுளை மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளும் கண்டி மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 3 செயலாளர் பிரிவுகளும் கேகாலை மாவட்டத்தில் 1 செயலாளர் பிரிவும் மொத்தமாக 18 பிரதேச செயலாளர; பிரிவுகள் இம்மாவட்டங்களில் மலையக தமிழர் பரந்து வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளாகக் காணப்படுகின்றன.
இந்தியத் தமிழர் என்ற பதம் உத்தியோகரீதியான பதமா?
இந்தியத் தமிழர்கள் என்ற பதத்தின் மூலமே நாம் அடையாளம் காட்டப்படுகின்றோம். அது நமது இனத்தைக் குறிக்கும் உத்தியோக பூர்வமான பதம் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் மலையக மக்கள் சம்பந்தமாக 1911ம் ஆண்டு குடிசனக் கணிப்பீட்டின் பின் தான் உத்தியோக பூர்வமாக இப்பதம் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இது மலையக மக்களின் சம்மதத்துடன் பாவிக்கப்பட வில்லை. பிரித்தானியர் எம்மீது அக்கறை கொள்ளாதபடியால் இப்பெயரிலும் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. பெரும்பான்மை மக்களும் மற்றும் இந்நாட்டின் மலையக மக்கள் தவிர்ந்த ஏனைய சிறுபான்மையினர் கூட நாம் இந்தியாவிற்கு திரும்பி போக வேண்டியவர்கள் என கருதினர். ஆகவே இவர்கள் இந்தியத் தமிழர் என்று அழைக்கப்படுவதே சிறந்தது என்று எண்ணினர். எனவே இந்தியத் தமிழர் என்ற சொல் எமது அபிலாசைக்குப் புறம்பாக பாவிக்கப்பட்ட பெயராகும்.
பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றில் இந்தியத் தமிழர் என்று பாவிக்கப்பட்டாலும் கூட அது மாற்றப்படக் கூடியது. முஸ்லீம் மக்களினது பிறப்பு சான்றிதழில் அண்மைக் காலம் வரை அவர்களது தேசிய இனத்தை உணர்த்த “மறக்கல” என்றே குறிப்பிடப்பட்டது. ஆனால் மிக அண்மை காலத்தில் பாராளுமன்றத்தில் பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டு “மறக்கல” என்பதற்கு பதிலாக “இலங்கை சோனகர்” என்ற பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே இலங்கையில் உத்தியோக பூர்வமான ஆவணங்களில் “மலையகத் தமிழர்” என்று குறிப்பிட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவது முடியாத காரியம் இல்லை. முஸ்லீம் மக்களுக்கு செய்த காரியத்தை மலையக மக்களுக்கு செய்யக்கூடாது என்பதல்ல. இது சாத்தியமாகக் கூடியதே. உத்தியோக பூர்வமான ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது போலவே வேலை வாய்ப்பிலும் எமது விகிதாசாரத்திற்கு ஏற்ப மலையகத் தமிழருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆகவே மலையத் தமிழர் என்ற பதத்தை உத்தியோக பூர்வமாக மாற்ற முயற்சிக்காமல் இந்திய வம்சாவளித் தமிழர் என்ற பதத்திற்காக குரல் கொடுப்பது அர்த்தமற்ற செயலாகும். பொதுவாக இலங்கையில் வாழும் இனங்கள் பற்றி நூல்களிலோ அல்லது பொதுவான கூட்டங்களிலோ குறிப்பிடும் போது சிங்களவர், தமிழர், முஸ்லீம், பறங்கியர் அல்லது பேகர் என்று முன்னால் குறிப்பிட்டுள்ளார்கள். மலையக மக்கள் பற்றி குறிப்பிடப்படுவதில்லை. ஆயிரக்கணக்காக வாழும் பறங்கியர் பற்றி புள்ளி விபர நூல்களில் உத்தியோக பூர்வமாக குறிப்பிடப்படும் போது மலையத் தமிழ் மக்கள் என்ற பெயரை உத்தியோக பூர்வமாக்குவதும், அழைப்பதும் ஓர் பிரச்சினையான விடயமல்ல.
மலையகம் என்ற பெயரின் வரலாற்றுப் பின்னணி
1960 ஆம் ஆண்டுகளிலேயே மலையகம் என்ற பெயர் அடிபடத் தொடங்கி விட்டது. 1960களின் பின் மலையகம் மலைமுரசு என்ற பெயர்களில் பத்திரிக்கைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. மலையக மக்கள் தம்மை மலையகத் தமிழர் என்று அழைத்துக் கொள்ள விரும்புவதை வெளிப்படுத்துவது போல் 1970 களில் இளைஞர் அமைப்புகளும் வெகுஜன அமைப்புகளும் உருவாகின. இதில் இரா. சிவலிங்கம் தலைமையில் உருவாகிய மலையக இளைஞர் முன்னணி, வி.எல்.பெரேரா சக்தி பாலையா இவர்களின் தலைமையில் உருவான மலையக இளைஞர் பேரவை சாந்திகுமார், மரியதாஸ் ஆகியோர் தலைமையில் உருவாகிய மலையக மக்கள் இயக்கம், பீ.ஏ.காதர், வீ.டீ.தர்மலிங்கம், ஏ.லோரன்ஸ், எஸ்.தேவசிகாமணி போன்றோர் தலைமையில் உருவாகிய மலையக வெகுஜன இயக்கம், திரு. வீ. புத்திரசிகாமணி, திரு திவ்வியராஜன், நேருஜி ஆகியோர் தலைமையில் உருவாகிய மலையக ஐக்கிய இளைஞர் முன்னனி போன்ற இயக்கங்கள் “மலையகம்” என்ற மக்கள் விரும்பியதை வெளிப்படுத்துவதாகவே அமைந்தது. ஆகவே மலையகத்தில் இளைஞர் அமைப்புகள் வெகுசன ஸ்தாபனங்கள், பெண்கள் அமைப்புக்கள் என்பன மலையகம் என்ற பெயரைக் கொண்டே உருவாகியது. ஏன் மலையகத்தில் உருவாகிய தீவிரவாத அமைப்புக்கள் கூட மலையக அமைப்புகளாகவே தம்மை பிரகடனப்படுத்தின. ஆகவே இளைஞர்கள் நடுத்தர வயதினர், படித்தவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாது “மலையத்தமிழர்” என்று தம்மை அடையாளம் காட்டினர். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கூட இலங்கையில் மலையகத்தில் வாழும் மலையக மக்களை இன்னும் மலையகத் தமிழர் என்றே அழைக்கின்றனர். தமிழகத்தில் இன்று தாயகம் திரும்பியோர் மத்தியில் வெளிவரும் நூல்களில், சஞ்சிகைகளில் மலையகத் தமிழர் என்ற சொற்பதமே அதிகமாகப் பாவிக்கப்படுகின்றது.
1940 களில் இலங்கை, இந்திய காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பு உருவாகினாலும் மலையகத் தமிழரின் வாக்குரிமை 1948ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட பின் இந்திய என்ற பதத்தைக் கொண்டு அரசியல் ஸ்தாபனங்கள் உருவாகவில்லை. மிக அண்மைக் காலத்தில் உருவாக்கிய இந்திய சமுதாயப் பேரவை என்ற கொழும்பு வாழ் வர்த்தகர்களை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பைத் தவிர வேறு அமைப்பு ஒன்றும் உருவாக்கவில்லை. தொண்டமான் இதன் தலைவர் என்று சொல்லப்பட்டாலும் தோட்டத் தொழிலாளர்கள் யாவரும் இவ்வமைப்பில் அங்கத்தவராக இருக்கவில்லை. தோட்டத் தொழிலாளர்கள் தொண்டமான் இ.தொ.கா தலைவராகவும் மலையகத் தமிழர் ஆகவும் மதிக்கின்றனர். அண்மையில் இந்திய வம்சாவளிப் பேரணி என்ற அமைப்பு இ.தொ.கா. தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் பல மலையக அமைப்புகள் இணைந்து கட்சியாக ஆரம்பித்திருந்தாலும் அது தேர்தல் முடிந்தவுடன் செயலற்றுப் போய்விட்டது.
'இந்திய வம்சாவளியினர்' என்ற பதம்
இந்திய வம்சாவளியினர் என்ற பதம் இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினரை அதாவது பெரும் முதலாளிகளையும் அவர்களின் இந்திய நலன்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. இந்திய வம்சாவளியினர் என்னும் போது சிந்து, மார்வாடிகள், நாட்டுக்கோட்டை ச் செட்டிகள், கொழும்புச் செட்டிகள், பரத குலத்தினர், கைதராமணி, இந்திய பாய்மார்கள் ஆகியோரைக் குறித்து நிற்கின்றது. இந்திய சமுதாய பேரவை என்ற அமைப்புக்குகூட மலையக மக்கள் பெரும் பான்மையாக வாழும் நுவரெலியா பதுளை இரத்தினபுரி, கண்டி, மாத்தளை மாவட்ட தோட்ட தொழிலாளர்களை குறித்து நிற்கவில்லை. இன்று கருத்து முரண்பாடுகளுக்கு உள்ளடக்கப்பட்டுள்ள “இந்தியத் தமிழர்” “மலையகத் தமிழர்” என்ற பதப்பிரயோகம் தொடர்பாக ஓராய்வை செய்தால் கூட அது 80 வீதமாக மலையகத் தமிழர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தும். பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் மற்றும் ஆய்வு நூல்களில் தினசரி தேசிய பத்திரிகைகளில், பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. மலையக மக்கள் தவிர்ந்த ஏனைய இனத்தினர் கூட தற்போது மலையகத் தமிழர் என்ற சொல்லையே பாவிக்கின்றனர். மலையகத் தமிழர் என்று குறிப்பிட விரும்பாத இந்தியாவில் இருந்து வந்த தமிழர்கள் குறைந்த வீதத்தினராக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான மலையகத் தமிழர்கள் தம்மை மலையகத் தமிழர் என்றே அழைக்கவே விரும்புகின்றனர். மலையகத் தோட்ட தமிழர்களோடு இணைந்து மலையகத் தமிழர் என்று கூற விரும்பாதவர்களைப்பற்றி நாம் கூடுதலாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மலையக மக்களின் அபிலாசை அவர்களது இனத்துவம், தனித்துவம், தன்னடையாளம், கலாசாரம், அவர்கள் வாழும் பிரதேசம் என்பவற்றின் தனித்துவம் பாதுகாக்கப்படுவது மிக அவசியமானதாகும். இதன் மூலமே இவர்கள் உரிமையும் அவர்களது பிரதேசமும் பாதுகாக்கப்படும். ஆகவே மலையக மக்கள் எழுச்சிக்கு இந்த மண்ணோடு இணைந்து மலையகத் தமிழர் என்ற பெயர் ஒரு தூண்டுகோலாகும். எழுச்சியை ஏற்படுத்தும் பெயராகவும் அமைவதோடு இந்திய வம்சாவளித் தமிழர் என்ற பதத்தை விட தர்க்கரீதியாகவும் விஞ்ஞான பூர்வமானதாகவும் யதார்த்த பூர்வமானதாகவும் அமையும்.
மாறாக இந்திய வம்சாவளி என்றபதம் முதலாளித்துவ வர்க்க பிரதிநிதிகளைக் குறித்து நிற்கின்றது. மலையகத் தமிழர் பதம் 80 வீதமான தோட்டத் தொழிலாளர்களையும் மற்றும் பிற தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள மலையக புத்தி ஜீவிகள், படித்தவர்களை குறித்து நிற்கின்றது. ஜனதாவிமுத்தி பெரமுன என்றழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னனியால் முன்வைக்கப்பட்ட இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகுப்பில் கூறப்பட்டவர்கள் மேற்படி வசதிபடைத்த முதலாளிகளேயாவர். ஆனால் ஜே.வீ.பி. காரர்கள் தோட்டத் தொழிலாளர்களை சுட்டிக் காட்டி இந்திய விஸ்தரிப்பு வாதிகள் என்று கூறியது அவர்களுக்கிருந்த இனவாத கண்ணோட்டத்தின் அடிப்படையே அதற்கு காரணமாகும்.
இந்தியாவின் 80 கோடி இந்தியர்கள் வாழ்ந்தும் அவர்கள் இந்தியாவில் தாங்கள் வாழும் மாநிலங்களில் தமது தேசிய இன உரிமையை விட்டுக்கொடுப்பதில்லை. கன்னடர்கள், குஜராத்திகள், கேரளக்காரர்கள், ஒரிசியர்கள், வங்காளிகள், தெலுங்கர்கள், தமிழ்நாட்டுக்காரர்கள் என்றே தம்மை அடையாளப்படுத்துகிறர்கள். பொதுவாக இந்தியர்கள் என்ற பரந்த அடிப்படையில் அழைத்தாலும் தமது மாநில ரீதியிலான அல்லது தேசிய இன அடையாளத்தை விட்டுக்கொடுப்பதில்லை. தமிழ்நாட்டிலுள்ள 5 கோடி தமிழர்களும் தம்மைத் தமிழகத்தவர்கள் என்றுதான் அழைக்கின்றனர்.
இக் கட்டுரை 'மலைய மக்களின் சமகால பிரச்சினைகள்: ஒரு பல்நோக்குப் பார்வை' (இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழு,கொழும்பு, 2003,)என்ற நூலில் இருந்து நன்றி "நிச்சாமம்" வலைத்தளத்தினரால் எடுக்கப்பட்டது. கட்டுரையாளர்: ஏ.லோறன்ஸ்; பிறப்பு: தல்வாக்கொல்லை; கொழும்புப் பல்கலைக் கழக இளமானிப் பட்டதாரி, பத்திரிகையாளர், தொழிற்சங்க-, அரசியற்செயற்பாட்டாளர். மலையக மக்கள் முன்னணியின் செயலாளார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...