Headlines News :
முகப்பு » , , » மலையக தொழிலாளர்கள் வரலாற்றில் முதன் முறையாக கருப்பு மே தினம்!?

மலையக தொழிலாளர்கள் வரலாற்றில் முதன் முறையாக கருப்பு மே தினம்!?


மலையக தொழிலாளர்கள் வரலாற்றில் முதன் முறையாக கருப்பு மே தினம்!?April 6, 2013  03:06 pmபுதிதாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தத்தில் 70 ரூபா அடிப்படை நாள் சம்பள உயர்வு உள்ளிட்ட 105 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

எனினும் தற்போது நாட்டில் இருக்கின்ற விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் தொழிலாளர்களுக்கு இந்த சம்பள உயர்வு போதுமானதல்ல என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மை. 

கடந்த முறை கூட்டு ஒப்பந்த காலத்தில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் (தொ.தே.ச, ஜ.தொ.கா, அ.இ.தோ.தொ.ச, இ.தொ.ஐ.மு, ம.ம.மு. உள்ளிட்ட) பல கூட்டு ஒப்பந்தம் நிறைவு பெறுவதற்கு முன்னரே, கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே 500 ரூபா அடிப்படை சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள், எழுச்சிகள், கருத்தாடல்களை ஆரம்பித்திருந்தனர். 

இம்முறையும் அதேபோன்று தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கவென அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றை உருவாக்கினர். 

கூட்டு ஒப்பந்தம் காலாவதியாவதற்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் இருந்த நிலையில் இந்த தொழிற்சங்க சம்மேளனம் உருவாக்கப்பட்டது. 

அதன் பின்னர் இந்த தொழிற்சங்க சம்மேளனம் தங்களை முறையாக பதிவு செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்ததா? தனது மாநாட்டை கூட்டியதா? அதில் கூட்டு ஒப்பந்தம் குறித்து கதைத்ததா? தீர்மானம் நிறைவேற்றியதா? அத்தீர்மானத்தை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்திடம் கையளித்ததா? தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்த அவர்களிடத்தில் சென்று விழிப்புணர்வை கொடுத்ததா? அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களை உத்தியோகபூர்வமாக சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்ததா? இவ்வளவு சம்பள உயர்வு வேண்டும் இல்லையேல் போராட்டம் நடாத்தப்படும் என சம்மேளனத்தின் சார்பில் ஊடகவியலாளர் சந்திப்பு நடாத்தி எச்சரிக்கை அறிவிப்பு செய்ததா? இப்படி இன்னும் பல கேள்விகள் இந்த தொழிற்சங்க சம்மேளனத்தை நோக்கி வீசி எறியப்படுகின்றன. 

வெள்ளம் வருவதற்கு முன் அனைக்கட்ட வேண்டும் என்பார்கள். ஆனால் வெள்ளம் வரும் என்று தெரிந்தும் தொழிற்சங்க சம்மேளனம் அணைக்கட்ட தவறியது அல்லது தாமதமானது ஏனோ? பெட்டிகளை வாங்கிக் கொண்டு கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுத்துவிட்டன என்று கூட்டு ஒப்பந்த காலத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது வழமை. 

ஆனால் இம்முறை அந்த பெட்டிகளில் ஓரிரண்டு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் பக்கமும் சென்றுவிட்டதோ என்ற சந்தேகம் இன்று பலர் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கூட்டு ஒப்பந்தம் செய்த பின்னர் இவர்கள் அறிக்கைகளை விட்டு எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த எதிர்ப்பு கொள்கையை இவர்கள் சம்மேளனம் ஆரம்பித்த உடனேயே செய்திருந்தால் இவர்களுக்கான ஆதரவு படைபோல் திரண்டிருக்கும். அந்த ஆதரவு படையை திரட்ட மலையகத்தில் இருக்கின்ற இளைஞர்கள், கற்றார் சமூகம், சிவில் சமூகம் என பலரும் தயார் நிலையில் இருந்தனர். இலங்கை சர்வதேசத்திற்கு பேய் காட்டுவது போல் ஒரே இரவில் செய்துவிட முடியாது என இவர்கள் கருதுவார்களாயின் அது ஏற்றுக் கொள்ள முடியாதது. காரணம் இவர்களுக்கு இரண்டு வருட இடைவெளி இருந்தது. 

ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் சார்பு எனக் கூறிக் கொண்டு சம்மேளனம் உருவாக்கியவர்கள் தங்கள் கடமையைச் செய்ய தவறிவிட்டனர். மறுபக்கம் எதிர்ப்பு அலை உருவாக்க போதிய கால அவகாசம் இல்லை என்று இவர்கள் கூறுவார்களாயின் அது அவர்களது இயலாமையை குறிக்கும். 

இருந்த போதும் மறுபுறத்தில் கூட்டு ஒப்பந்தம் செய்யும் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே தங்களது இளைஞர் அணி, மாவட்ட நிர்வாகிகள், தோட்டத் தலைவர்கள் என பல தரப்பினரையும் அவர்களது இடத்திற்கே சென்று சந்தித்து சமூக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கதைகளை கூறி அவர்களின் போராட்ட குணங்களை மலுங்கடித்துவிட்டனர் என்பது திரைக்கு பின்னால் நடந்ததை. 

இன்னும் நான்கு வருடங்களில் தோட்டங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. அரசியல் செய்து வெறுத்துப்போய்விட்டது. நிலைமை மோசமாக இருக்கிறது. கம்பனிகள் மூடப்படும் நிலை உள்ளது.. போன்ற தொழிலாளர்களை பலவீனப்படுத்தும் கருத்துக்கள் அந்த கூட்டங்களிலே சொல்லப்பட்டதாக கூட்டங்களுக்கு சென்று வந்தவர்களே சொல்லி நொந்து கொண்டதை கண்டிருக்கிறோம். 

அவர்கள் இவ்வாறு கூட்டங்கள் போட்டு கதைத்தது கட்டாயம் மற்றைய தொழிற்சங்கங்களுக்கு தெரிந்திருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படி தெரியாது என்று சொல்வார்களாயின் இவர்களது தொழிற்சங்கம் அடிமட்ட மக்கள் மத்தியில் செயல்படுகின்றதா என்ற கேள்வி எழுவது நியாயமே. 

கூட்டு ஒப்பந்தம் சாராத தொழிற்சங்கங்கள் தங்கள் வலுவான எதிர்ப்பு கொள்கையில் இருந்திருந்தால் இன்று கிடைத்துள்ள 70 ரூபா அடிப்படை சம்பளம் குறைந்தது 80, 90, 100 என உயர்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சென்று தைரியமாகக் கதைக்க இவர்களுக்கு திராணியும் இருந்திருக்கும். 

இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் 70 ரூபா அடிப்படை சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு கிடைக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கு மாத்திரமே பங்கு உள்ளது. ஏனைய தொழிற்சங்கங்களின் பங்கு துளிகூட இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். 

இருந்த போதும் 70 ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்துவிட்டோம் என்று என்று ஊர் ஊராகச் சென்று தப்படித்து சொல்லிக் கொள்வதற்கு கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. மனசாட்சி அடிப்படையில் 70 ரூபா இன்றைய காலத்திற்கு போதுமானதா என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட மூன்று தொழிற்சங்க தலைவர்களும் கண்ணாடி முன் நின்று தங்களையே கேள்வி கேட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை ´நீங்கள் எல்லாம் உண்மையான மக்கள் பிரதிநிதிகள்தானா´ என்று கண்ணாடி கூட கேள்வி கேட்டு ஏலனமாகச் சிரிக்கக் கூடும். 

புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் சரியாக வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கு கிடைக்கும் 15000 ரூபாவில் ஒரு மாத உணவு, அத்தியாவசிய பொருள், பிள்ளைகளின் கல்வி, சுகாதார செலவு என .... பட்ஜேட் போட்டால் வரவுக்கு மீறிய செலவு வருமே தவிர வரவுடன் கூடிய சேமிப்போ வரவுக்கு ஏற்ற செலவு வந்து சேராது. இதை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். 

சரி இனி யாரையும் பேசுவதில், விமர்சிப்பதில், திட்டுவதில், ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதில் பயனில்லை. 

70 ரூபா அடிப்படை சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு போதுமானதல்ல என்பது அடிப்படை உண்மையாகிவிட்டது. தொழிலாளர் நலனில் சிறுதுளியும் அக்கறை காட்டாது செய்து கொள்ளப்பட்ட இந்த கூட்டுச்சதி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி? கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களும் ஏனைய தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது என்பதை நிரூபிப்பது எப்படி? 

புதிய செய்தி வந்திருக்கிறது... கூட்ட ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன் தங்களுடைய எதிர்ப்புக்களை, போராட்டங்களை வெடிக்க வைக்கத் தவறிய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய தொழிற்சங்கங்கள் இம்முறை வரவிருக்கும் மே தினத்தில் தங்களது பூரண எதிர்ப்பை வெளிப்படுத்த தயாராகி வருகின்றனர் என்பதுதான் அந்த புதுச்செய்தி. 

இலங்கை வரலாற்றில் ஒருபோதும் கண்டிராத மே தினம் ஒன்றை இலங்கை மக்கள், ஆட்சியாளர்கள், சர்வதேசம் காணப்போகிறது என்ற செய்தி தற்போது ஒவ்வொருவர் காதுகலுக்கும் மெல்ல மெல்ல சென்று கொண்டிருப்பதாக அறியக்கிடைக்கிறது. 

கூட்டு ஒப்பந்தத்தில் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களுக்கு போதிய நியாயம், நிவாரணம் கிடைக்காததால் தொழிலாளர்கள் புரட்சியின் மூலம் உருவான மே 1ம் திகதி தொழிலாளர் தினத்தை மலையகமெங்கும் ´கருப்பு மே தினமாக´ அனுஷ்டிக்க தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத முக்கிய தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இம்முறை கருப்பு தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக இந்த தொழிற்சங்கங்களின் உறுதிப்படுத்தப்படாத உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலே கூறப்பட்டது போன்று மலையகத்தில் கருப்பு தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்பட்டால் அது வரவாற்று பதிவாகும். மேலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் தற்போது தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து கருப்பு மே தினத்தை அனுஷ்டித்தாவது வெளியேற முயற்சிக்கட்டும். அதன் மூலம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து நல்லதொரு வரலாற்று பாடத்தை கற்றுக் கொள்ளட்டும். 

(பழனி விஜயகுமார்)

நன்றி - அததெரண
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates