Headlines News :
முகப்பு » » மலையக அரசியல் களத்தில் குறைந்துவரும் தனிமனித செல்வாக்கு - சிலாபம் திண்ணனூரான்

மலையக அரசியல் களத்தில் குறைந்துவரும் தனிமனித செல்வாக்கு - சிலாபம் திண்ணனூரான்


மலையகத்தின் அரசியல் களத்தில் இன்று தனிமனித அரசியல் பலம் அல்லது செல்வாக்கு குறைந்து வருகின்றது. மலையக அரசியல் கடந்த காலங்களில் கடந்து வந்த பாதை மிகக்கொடிய கஷ்டமான பாதையாகும்.

1924 ஆம் ஆண்டு இடம்பெற்ற சட்ட சபைக்கான இந்தியர் தொகுதியில் போட்டியிட்ட கோ.நடேசய்யர் 2948 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்தியர்களான ஐ.எக்ஸ்.மார்ட்டின் 5141 வாக்குகளைப் பெற்று 01 ஆவது உறுப்பினராகவும், மொஹமட் சுல்தான் 3511 வாக்குகளால் 02 ஆவது உறுப்பினராகவும் இந்நாட்டு இந்திய மக்களின் பிரதிநிதிகளாக சட்டசபைக்குத் தெரிவானார்கள். நடேசய்யரின் எதிர்பாராத இத்தோல்வியுடன் மலையக அரசியலில் அதிரடியான விழிப்புணர்வு ஏற்பட்டது.

அன்றைய பெருந்தோட்ட பாட்டாளி வர்க்கத்தின் பெரும் ஆதரவுடன் கோ.நடேசய்யர் 1931 இல் இலங்கைத் தோட்டத்தொழிலாளர் சம்மேளனத்தை நிறுவினார். இத்தொழிற்சங்கத்தின் ஊடாக மலையக பாட்டாளி வர்க்கத்தினரின் தொழில், அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் போராட்டத்தை ஆரம்பித்தார் நடேசய்யர்.

மலையகத் தொழிற்சங்க உதயத்திற்கான முன்னோடி தஞ்சாவூர்க்காரரான கோ.நடேசய்யர் என்பது இன்றைய தலைமைகளுக்கும் தலைமுறையினருக்கும் தெரியாத விடயமாகும். பின்னர் இலங்கை, இந்திய தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தையும் உருவாக்கினார்.

இவர் 16.03.1936 இல் இடம்பெற்ற சட்டசபைக்கான தேர்தலில் அட்டன் தொகுதியில் போட்டியிட்டு 16,324 வாக்குகளால் அபாரவெற்றியைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.ராசரத்தினம் 3635 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

அன்றைய சிலாபம் தொகுதி உறுப்பினரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ஏ.ஜீ.எஸ். கொரயாவிடம் மலையகத்தின் தோட்டங்களில் கூட்டுறவுச் சங்கங்களை ஆரம்பிக்கும் யோசனையை முன்வைத்தார் நடேசய்யர். அதன்பின்னரே தோட்டங்களில் கூட்டுறவுச் சங்கம் ஆரம்பமானது.

குறைந்தபட்ச சம்பள (இந்திய) இல 27–1927 சட்டமூலம், தொழிலாளர் நலச்சட்டமூலம் இலங்கை அரசினால் ஏற்படுத்தப்பட்ட பின்னரே மலையக பாட்டாளி சமூகம், சமூக ரீதியாக தமக்கான அமைப்புத் தேவை என்பதை உணரத் தொடங்கியது. இப்புதிய சிந்தனைக்கு வித்திட்டவர் கோ.நடேசய்யர் ஆவார். இவரே மலையகப் பாட்டாளி சமூகத்தை குறைந்தபட்ச கூலிக்காக போராடத் தூண்டியவர்.

1947 ஜுலை 23 முதல் ஆகஸ்ட் 20 வரை 19 தினங்கள் இடம்பெற்ற முதலாவது பாராளுமன்ற தேர்தலில் கோ.நடேசய்யர் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டு 918 வாக்குகளை மட்டுமே பெற்று பெரும் பின்னடைவை சந்தித்தார். இலங்கை– இந்திய காங்கிரஸ் வேட்பாளர் ஜீ.ஆர்.மோத்தா 9086 வாக்குகளால் வெற்றி பெற்றார். மலையகப் பாட்டாளி சமூகத்தின் விடிவெள்ளியாக உருவெடுத்த கோ.நடேசய்யர் தன் அதிர்ச்சி தோல்வியின் பின்னர் சுகவீனம் அடைந்து சில மாதங்களின் பின்னர் மரணத்தை தழுவினார்.

 இன்று மலையக அரசியல், தொழிற்சங்கங்களில் தனிமனித சமுதாய கடமை, செல்வாக்கு எவ்வளவு தூரம் தோட்டத்தொழிலாளர் சமூகத்தின் வாழ்க்கையில் ஊடுருவியுள்ளது என்பது கேள்விக்குறியாகவே எழுகிறது. அமரர் கோ.நடேசய்யர் காலத்தின் பின்னர் தலைவர்களாக உருவான ஏ.அஸீஸ், செளமியமூர்த்தி தொண்டமான், பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோர் மலையகத்தில் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தினர். அன்றைய அரசியல் பெரும் கற்பாறையான பேரினவாத, இனவாத அரசியல் தலைமைகளுடன் போராட வேண்டியிருந்தது.. இன்று அரசியல் சந்தர்ப்பவாத அரசியல் களமாக மாறிவிட்டது.

இந்நாட்டில்1977 களின் பின்னர் ஏற்பட்ட திறந்த பொருளாதார சிந்தனை மாற்றம் மலையக சமூகத்திலும் பொருளாதார, சமூக, அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. மலையகத்தைவிட்டு தொழிற்சங்கங்கள் மறைந்து போக தொழிலாளர் படையினரின் தொழில் உரிமைகளும் உரிமை போராட்டங்களும் குறைந்தன.

அமரர் பெ.சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணி உதயத்தின் பின்னர் மலையகக் கல்வி கற்ற சமூகம் அரசியல் மாற்று சிந்தனையாளர்களாக இம் முன்னணியில் இணைந்தனர். இன்று மலையகக் கல்வி கற்ற சமூகம் அரசியலில் கால் பதிக்கத் தயங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

இந்நிலையில் 1960 முதல் 1977 வரையிலான கால எல்லையில் மலையக இலக்கிய களத்தில் பெரும் பிரகாசம் ஏற்பட்டது. இர.சிவலிங்கம், திருச்செந்தூரன், வீரகேசரி எஸ்.எம்.கார்மேகம் ஆகியோர் பிரதானிகளாக செயலாற்றினர். பல எழுத்தாளர்களை இச்சமூகத்தில் விதைத்தனர். அவ்விதை, செடி, கொடி, மரமாகிச் சமூகத்திற்கு நல்ல பலனை வழங்கியது.

 1960–1977 காலம், மலையக இலக்கியத் தாயின் பொற்காலம் எனலாம். மலையக இலக்கியவாதிகளின் எழுத்தாயுதம் இக்கால எல்லையில் மலையகப் பாட்டாளி சமூகத்தில் பெரும் மாற்றத்தை எழவைத்தது. அம்மாற்றத்தினால் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாகவே 20.02.1989 இல் மலையக மக்கள் முன்னணி பிரசவம் ஆனது வரலாற்றுப் பதிவாகும்.

1977–2004 ஆம் ஆண்டு வரையில் மலையக அரசியல் அரங்கில் பல முன்னேற்ற மாற்றங்கள் உருவாகின. 2004க்குப் பின்னர் மலையக அரசியல் நிலைமை பேரினவாத அந்நிய சக்திகளால் நிலைகுலைய வைக்கப்பட்டது.

இவ்வாறான பெரும் வரலாற்று பின்னணியுடன் நிலை கொண்டுள்ள மலையக அரசியல் இன்று மிகவும் நலிந்த நிலையில் உள்ளதாக இச்சமூக மக்களே தெரிவிக்கின்றனர். 2015 ஜனவரி 8 இல் இந்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இம்மாற்றம் மலையக சமூகத்திற்குள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் அரசியல் பிழைப்பை தேடுபவர்கள் உழைக்கிறார்கள். இதுவும் இம்மக்களின் கருத்தாகும்.

10.02.2018 இல் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஒரு ஸ்திரம் கொண்ட ஆட்சியை அமைக்கும் நிலை நுவரெலியா மாவட்ட சபைகளில் காணப்பட வில்லை. மலையக மக்களின் வாழ்விடமாக அடையாளம் கொண்டுள்ள நுவரெலியா மாவட்டத்தின் மக்கள் இத்தேர்தலில் தனி மனித அரசியல் ஆதிக்கத்தை இல்லாதொழித்துள்ளதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

 எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலும் புதிய கலப்புத் தேர்தல் முறையில் இடம்பெற்றால் மலையக மக்களின் மாகாண சபைக்கான பிரதிநிதிகள் தெரிவு சிதைக்கப்படும். மலையக மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பப்படும் பிரதிநிதிகள் அரசியல் வர்த்தகர்களாக இல்லாது புத்திஜீவிகளாக , கல்விமான்களாக, சுயநலமற்றவர்களாக, மக்களின் தொண்டர்களாக இருக்கவேண்டும். ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கவும், ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம் மாற்றுக்கொள்கைகளை, மாற்றுக் கருத்துக்களை மதிக்கின்ற மனப்பக்குவம் கொண்ட அரசியல்வாதிகள் மலையகத்தில் மீண்டும் தனிமனித சமுதாய கடமையாளராக உருவாகவேண்டும் என்பதே அனைவரினதும் பிரார்த்தனையாகும். இல்லையேல் 1989 இல் மலையக மக்களுக்குக் கிடைத்த வாக்குரிமையின் பயன், பலன் இல்லாது நலிந்து போய்விடும் என்பதில் சந்தேகமில்லை.


நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates