Headlines News :
முகப்பு » , , » மீனாக்ஷியம்மாளும் மேடைப்பாடலும் - மு.நித்தியானந்தன்

மீனாக்ஷியம்மாளும் மேடைப்பாடலும் - மு.நித்தியானந்தன்


இக்கட்டுரை “1995 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா” சிறப்பு மலரிலிருந்து எடுக்கப்பட்டது. மீனாட்சியம்மாள் பற்றிய இன்னொரு கோணத்தில் ஆராயப்பட்ட அரியதொரு கட்டுரை. நமது மலையகம் வாசகர்களுக்காக.
"கல்யாண வீடு. முகூர்த்தம் நிறைவேறி, எல்லோரும் சாப்பிட்டு விட்டுக் களைப் பாறிக் கொண்டிருந்தார்கள். நடுக்கூடத்தில் சில பெண்மணிகள் தாம்பூலம் போட்டுக் கொண்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். வயதான ஒரு அம்மாள் தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்திரியிடம் “ஏண்டி ராஜம்மா நீ நன்றாப் பாடுவியே, ஒரு பாட்டுப் பாடேன். நாங்கள் கேட்கணும்' என்றாள். ராஜம்மாள் முதலில் சங்கோஜப் பட்டாலும், அது உறவுப் பெண்கள் கூட்டம் தானே என்ற தைரியத்தில் ஒருபாட்டுப் பாட ஆரம்பித்து, அனுபல்லவி மட்டும் வந்து விட்டாள்.

கூட்டத்தை ஒட்டிய அறையிலிருந்து ஒரு பெரியவர் வெளியே வந்தார். "யாரது பாடறது? என்மாட்டுப் பெண் ராஜம்மாவா! அவமானம். அவமானம். நிறுத்து உடனே. பொது இடத்தில் இப்படிப் பாடுவதை நிறுத்தி விட்டு உள்ளே போ!' என்று இடிமுழக்கம் செய்தார். அவ்வளவுதான் - ராஜம்மாள் துக்கத்தை அடக்கிக் கொண்டு உள்ளே ஓடி மறைந் தாள். கூடியிருந்த மற்ற ஸ்திரிகளும் மூலைக்கொருவராகச் சிதறி கூடத்தைக் காலி செய்தனர்.

“ஆம் அப்படி ஒரு காலம்! பெண்கள் அதிலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பத்துப் பேர் முன்பு பாடுவது என்பதை ஒப்புக் கொள்ளாத சமூகம்’ என்று வி. என். சுந்தரராஜன் தமிழ்நாட்டின் பிராமண சமூக நிலைமையை விபரித்துச் சொல்கிறார்.

பெண்கள் பாட்டுக் கற்றுக் கொள்வது கூட பெண் பார்க்க பிள்ளை வீட்டார் வரும் போது அவர்கள் முன்னிலையில் தங்கள் இசைத் திறனைக் காட்டக் கூட அல்ல பெண் தான் ஊமையல்ல, திக்கு வாயுமல்ல என்று நிரூபிக்கத் தான் என்ற நிலை நிலவிய போது பொதுமக்கள் முன் - அதுவும் சமூகத்தின் கடைத்தட்டில் நின்ற மக்களின் முன்னால் மேடையில் நின்று அரசியற் கிளர்ச்சிப் பாடல்களை இசைக்க ஒரு பெண்மணி முன்வருவது, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைத் தீயைக் கொளுத்தும் கைங்கரியத்தின் அற்புதமான சகுனமல்லவா?

ஆக்ரோஷக்காரி

மலையகப் பெண்கள் சமூகத்தின் சரித்திரத்தில் அரசியல், சமூக, இன, ரீதியான சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்த முதல் பெண்மணியாக மீனாக்ஷி அம்மாளைத் தான் நாம் காண்கிறோம்.

எழுத்துச் சரித்திரம் காட்டும் நிரூபணம் இது. தனது கணவர் நடேசய்யரோடு சேர்ந்து தோட்டம் தோட்டமாகச் சென்று கூட்டங்கள் போட்டுப் பேசுவதிலும் அகவியல் பாடல் களைப் பாடுவதிலும் இவர் முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறார். பாடல்கள் எழுதவும், கட்டுரைகள் எழுதவும் திறமை பெற்றிருந்த மீனாக்ஷி அம்மாள் மேடையிற் தோன்றிப் பேசவும் பாடவும் கூடிய ஆற்றலையும் துணிவையும் கொண்டிருந்தது மிகவும் அரிதான திறமைகளின் கலவையை கோடியிடு கிறது. அரசின் ஒடுக்குமுறைக் கரங்கள் எங்கெல்லாம் நீண்டனவோ அங்கெல்லாம் இவரைக் காண் கண் றோம் . தோட்ட மைதானங்களில் தோட்டத் தொழிலாளர் களுக்காக மட்டுமல்ல, கொழும்புக் காலிமுகக் கடலில் பிறேஸ்கேர்டிலுக்காகவும் (Bracegirdle) குரல் கொடுக்கும் தூரநோக்கும் தீட்சண்யமும் இவரிடம் இருந்திருக்கிறது.

இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வரவர மிகவும் மோசமாகிக் கொண்டே வருகின்றது. இலங்கை வாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலை நாட்டுவ தற்காக தீவிரமுடன் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே அதிலும் முக்கியமாக இந்தியா தோட்டத் தொழிலாளர் களிடையே பரிரச்சாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியாகும். அத்தகைய பிரச்சாரம் பாட்டுகள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலன் அளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையைப் பாட் டு கள் மூலம் எடுத் துக் கூற முன்வந்துள்ளேன். இந்தியர்களை தூக்கத்தில் ஆழ்ந்து விடாது தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தீவிரமாகப் போராடும் படி அவர்களை இப்பாட்டுகள் தட்டியெழுப்ப வேண்டுடமென்பதே எனது அவா "இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை” என்ற தலைப்பில் எழுதிய பாட்டுப் புத்தகத்தின் முகவுரையில் கு.ந.மீனாக்ஷி அம்மாள் எழுதியிபிருப்பதை நாம் கருத்தூன்றி நோக்க வேண்டும்.

பாடல்களை எழுதியதுடன் மட்டுமல்லாமல் இவற்றை தோட்டங்களில் கூட்டங்களில் தொழிலாளர் முன் பாடிய செய்முறை மீனாக்ஷி அம்மாளை மகத்தான மனுஷியாக்கிக் காட்டுகிறது.

தேயிலைத் தோட்டத்தை நினைத்தால் என் மனதில் பளிச்சிடும் விஷயம் யூனியன் ஹாஸ்டலிலே என் சக மாணவன் ஒருவன் அடிக்கடி முணுமுணுக்கும் “தேயிலைத் தோட்டத்திலே’ எனும் பாடலாகும். பாரதியின் “கரும்புத் தோட்டத்திலே . " என்னும் கவிதையைப் பின்பற்றி மீனாஷியம்மாள் என்பவர் இந்தப் பாடலை இயற்றினாராம் “தந்திர முதலாளிகள், தரகர், கங் காணிகள் தன்நலம் கருதுதல் குறைத்திடுவோம்’ என்ற பாணியில் அமைந்த இந்தப் பாடலை, மீனாட்சியம்மாள் தனது கணவரும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்க இயக்கம் கிளைத் துப் படர வழிவகுத்தவர்களில் ஒருவருமான நடேசய்யரின் கூட்டங்கள் துவங்கும் முன்னர் பாடுவாராம். இந்த பாடலின் முழுப் பகுதியையும் பெற எவ்வளவோ முயன்றேன். நாளது வரை எனக்கு எட்டவில்லை. எட்டியதெல்லாம் இதே மீனாக்ஷியம்மாள், 1931 ல் இயற்றிய "இலங்கையில் இந்தியத் தொழிலாளார் அந்தரப்பிழைப்பு" என்னும் சிறிய செய்யுள் நூல் ஒன்றே" என்று ஏ.எம்.ஏ.அளபீஸ் "கிழக்கப்பிரிக்கக் காட்சிகள்" என்ற தனது பிரயாண நூலில் குறிப்பிடுகிறார்.

இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய தொழிலாளார்களின் இயக்கங்களில் தீவிர பங்கு கொண்டிருந்தவர்களின் காரணமாகவே இக் கவிதை மிகுந்த பிரசித்தி பெற்றதெனலாம். இதனாலேதான் போலும், நான் அறிந்தவரையில் பாரதியார் “தேயிலைத் தோட்டத்திலே’ என்னும் தலைப்பரில் பாடல் எதனையும் இயற்றாத போதிலும் பலர் அவர் அத்தகைய பாடலை இயற்றியுள்ளார் என்று நம்பி வருகிறார்கள்; எழுதியும் இருக்கிறார்கள்" என்றும் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்கள் குறிப்பிடுவதல் இருந்து மீனாக்ஷியம்மாள் இந்தப்பாடலை எவ்வளவு பிரசித்தி பெறச் செய்திருக்கிறார் என்பது புலனாகிறது.

பாரதி உண்மையில் தனது கவிதைக்கு "கரும்புத் தோட்டத்திலே’ என்று தலைப்பு வைக்கவில்லை. பாரதி பிரசுராலயத்தாரின் “தேசிய கீதங்கள்" என்ற தொகுப்பில் இக் கவிதை "பிஜித் தீவிலே இந்து ஸ்திரிகள்" என்னும் தலைப்பின் கீழேயே வந்திருக்கிறது. பின்னால் வந்த பதிப்புக்களில் இந்த தலைப்பு மாற்றப்பட்டு "கரும்புத் தோட்டத்திலே" என்ற புதிய தலைப்பு இடப்பட்டு விட்டது. பிஜித் தீவின் கரும்புத் தோட்டத்திலே துயருற்ற இந்தியப் பெண்களின் அவல நிலையை சித்தரித்து பாரதி எழுதிய பாடல்தான் இது.

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் சகல மூலைகளுக்கும் ஒப்பந்தக் கூலி அடிமைகளாய் கடத்திக் கொண்டு செல்லப்பட்ட லட்சோப லட்சக்கணக்கான இந்தியர்களின் மிக மோசமான அவல வாழ்க்கையின் நிதர்சனத்தை பிஜித் தீவின் ஸ்துால - பிராந்திய எல்லையை மீறி அவனது மந்திரச் சொல்லிலே தகித்து வெளிப் படுத்தியதிலே தான் அந்த மகா கவிஞனின் உணர்வு நலன் வெளிப்படுகிறது.

தேயிலைத் தோட்டத்திலே

பாரதியின் “கரும்புத் தோட்டத்திலே’ மெட்டைப் பின்பற்றி மீனாக்ஷியம்மாள் பாடியதாகக் கூறும் தேயிலைத் தோட்டத்திலே’ பாடல் எதுவென்று நமக்கு இன்னும் தெரியவில்லை.

"தமிழகத்தில் சென்ற தலைமுறையின் தேசபக்தி மிகுந்த நாடக நடிகராக விளங்கிய விஸ்வநாததாஸ் "கரும்புத் தோட்டதிலே’ என்ற இந்தப் பாடலையும் மேடைகளிற் பாடி வந்தார். அத்துடன் இலங்கையிலும் மேலை மலைக்காடுகளிலும் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பாடுபடச் சென்ற தமிழ் மக்களைக் குறித்து அவர் இதே மெட்டிலும் பாணியிலும் “தேயிலைத் தோட்டத்திலே " என்ற பாட்டை இயற்றிப்பாடி வந்தார் என்றும், அப்பாட்டு அந்தக் காலத்தில் மேடையில் மிகவும் பிரபலமாக இருந்தது என்றும் நாம் அறிய வருகின்றோம். மேலும் தமிழில் யதார்த்தவாதச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கிய "புதுமைப்பித்தன்” இந்த இரு பாடல்களாலும் கவரப் பட்டார் என்பதையும் , அவரது "துன்பக் கேணி" என்ற நெடுங் கதை அந்தக் கவர்ச்சியரில் எழுந்த உணர்ச்சிகரமான படைப்புத்தான் என்பதையும் நாம் அறியலாம்" என்று ரகுநாதன், "பாரதி சில பார்வைகள்" என்ற நூலில் தரும் தகவல்கள் நமது அவதானத்திற்குரியவை.

"தேசவிரோதப்பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றவர்" என்ற பிரிட்டிஷ் அரசினால் முத்திரை குத்தப் பெற்றிருந்த என்.என். விஸ்வநாத தாஸ் பாடிய "பஞ்சாப் படுகொலை பாரினில் கொடியது" என்ற பாடல் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்து தமிழக மக்களை ஆங்கிலேய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழச் செய்தது. "போலிஸ் புலிகூட்டம் - நம் மேல் போட்டு வருது கண்ணோட்டம்" என்று வெங்கலக் குரலில் விஸ்வநாததாஸ் மேடையேறிப் பாடியபோது கூட்டம் கொதித்துப் போய் நின்றது. 1940இல் மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே இறந்து போன காங்கிரஸ் தீவிரவாதியான விஸ்வநாததாஸ் இயற்றிப் பாடியதாகக் கூறப்படும் “தேயரிலைத் தோட்டத்திலே "பாடலுக்கும் மீனாக்ஷியம்மாள் இயற்றிப்பாடி யதாகக் கூறப்படும் பாடலுக்கும் உள்ள தொடர்பு நமக்குத் தெரியவில்லை.

அக்காலத்தில் தமிழகத்தில் பாமரமக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாய் இருந்த வெள்ளைச் சாமித் தேவர் எனப் படும் பாஸ்கரதாஸரின் பாடல்கள் தமிழகத்தின் குக்கிராமத்திலும் கூடப் பரவியிருந்தது. பாஸ்கரதாஸரின் பாடல்களை மேடையில் உணர்வு பூர்வமாகப் பாடுபவர் களில் விஸ்வநாததாஸ் முக்கியமானவர்.

"இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பிரயாணத்தடை இல்லாத அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து கதிர்காமம், சிவனடி பாதை யாத்திரையை மேற்கொண்டு கவிராயர் கள் பெரிய கங்காணி வீடுகளுக்கு வந்துபாடு வார்கள். தோட்டத்து வாலிபர்கள் இவைகளைக் கவனித்துக் கேட்டு தோட்டங்களில் பாட்டுக் கச்சேரிகள் நடத்துவார்கள். பாஸ்கரதாஸ் கீர்த்தனங்கள், அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து பாடுவதுடன், பாரதியின் "கரும்புத் தோட்டத்திலே’ பாடலையும் “தேயிலைத் தோட்டத்திலே" என்றும் பாடுவார்கள் என்று சி.வி. வேலுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் 1930களில் தமிழ் நாட்டில் தூள் கிளப்பரிய முசிரி சுப்பிரமணிய ஐயரின் இசைத் தட்டுக்களை அன்று கேட்டு உருகாதவர்கள் யாரும் இல்லை எனலாம்.

'நல் ல தமிழ் பாடல்களை உருக்கமாகப் பாடியதுடன், தியாகராஜரின் உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகளையும் பக்தி மணக்கப் பாடினார். "எந்த வேடுகோ' "நீரஜாக்ஷி” “காமாக்ஷி" "இகபரசுகம்" "ராம ராமராம". என்று எத்தனையோ பாடல்கள் அவரால் பிரசித்தி அடைந்தன. “தேயிலைத் தோட்டங்களிலே’ என்று அவர் பாடிய பாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய வம்சாவளியினர் இலங்கையில் தேயிலைத் தோட்டங்களிலே அடைந்து வந்த இன்னல்களைப் பற்றிய பாட்டு, முசுரியின் பெயர் பரிரபலமாக அது கணிசமாக உதவிற்று என்று சு.ரா. தனது "இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள்’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

அவருடைய இசைத் தட்டுகள் ஒகோ என்று எப்படி விற்பனையாகின என்பதற்கு ஒரு உதாரணம் தரலாம். கொலம்பியா ரெகார்டுகளில் அவருடைய பல பாடல்கள் பதிவாகி வெளியிடப்பட்டன. பாட்டுக்காக அவருக்கு மொத்தத் தொகையாகக் கொடுக்க விரும்பினார் ஏ.வி. மெய்யப்பன் அவர்கள். ஆனால் முசிரி "ரோயல்டி" யாகக்கேட்டார். 10% ரோயல்டி! “மொத்தத் தொகையானால் அதிகப் பணம் உடனே கிடைக்கும் ரோயல்டி அப்படி இல்லையே" கூடச் சொல்லிப் பாார்த்தார் ஏ.வி. எம். ஆனால் முசிரி அசாத்திய தன்னம்பிக்கையுடன் ரோயல்டியே போதும் என்று கூறிவிட்டார்.

கடைசியில் அவருடைய நம்பிக்கையே சரியானது என்று நிரூபரிக்கப்பட்டது. மொத்தப் பணமாக வாங்கியிருந்தால் கிடைத்திருக்கக் கூடியதை விட நாலு மடங்கு தொகை அவருக்கு ரோயல்டி மூலமே கிடைத்ததாக ஏ.வி.எம் சொல்லியுள்ளார். (அந்த முப்பது - முப்பதைந்துகளில் அவர் பெற்ற தொகை சுமார் ரூ 40 ஆயிரம்! அதே கட்டுரையில் ஏ.வி.எம் வேறொரு தகவலும் தந்துள்ளார். 1950ல் "பூகைலான்’ படத்தை ஏ.வி.எம் தயாரித்த போது முசிரி அதன் பாகஸ்தராக இருந்தாராம்) “ஒரு வித்துவான் சினிமா படப் பங்குதாரராக ஆவதென்பது அந்த நாளில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

முசிரியின் இசைத் தட்டுகளில் இருந்தும் விஸ்வநாததாஸ் பாடல்களில் இருந்தும் “தேயிலைத் தோட்டத்திலே பாடலைத் தேடிப்பிடிப் பது சாத்தியமெனினும் மீனாக்ஷியம்மாள் பாடிய பாடல் பற்றி முடிந்த முடிவாக எதுவும் கூறுவதற்கில்லை.

அரசியல் அந்தகாரத்தில் - சூனியமே சகலதுமாய் வியாபகம் கொண்டிருந்த சூழலில் மலையக மக்களை அரசியல் மயப்படுத்தும் மகத்தான பணியில் மீனாக்ஷியம்மாள் தேர்ந்தெடுத்திருந்த வழிமுறைகள் தகித்தும் மனிதார்ந்த கொடூரத்தின் நிதர்சனத்தின் பின்னணியில் அவரை நடைமுறை காரியசித்தி சார்ந்த மனுஷியாக நிலைநிறுத்துகின்றது. கல்வியறிவில்லாத தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் - வாய்மொழிப்பாடலின் வளம் மதார்த்த மலையக மண்ணில் எளிய மெட்டுகளில் அமைந்த பாடல்கள் எத்துணை வீரியமாக செய்திகளை கொண்டு செல்ல வல்லன என்பதை மீனாக்ஷியம்மாள் நாடிபிடித்து அறிந்திருக்கிறார். தமிழகத்தின் அரசியல் மேடைகளில் சுதந்திரப் போராட்டப் பாடல்கள் வகித்த முக்கியத்துவத்தையும் அதன் பின்னணியையும் விளங்குவது மீனாஷியம்மாளின் அரசியல் மேடைப் பிரதேசத்தில் மேடையில் பாட்டு இசைத்தலின் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தத் துணைபுரியும்.

ஆங்கிலேய அரசுக்கு எதிராக தேசிய எழுச்சி இந்தியாவில் அலை அடித்துக் கொண்டிருந்த போது, "தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு" வேண்டி நின்ற பாரதி எளிய பதங்கள், எளிய நடை எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, ஓரிரண்டு வருஷத்து தமிழ் மக்கள் எல்லாருக்கும் நன்கு பொருள் விளங்கும் படி எழுதப்பட்ட கவிதைகளுடன் தமிழ் மண்ணில் பாவிசைக்க வந்தவன்.

தெருவில் ஊசிகள், பாசிமணிகள் விற்கும், பிச்சை எடுக்கும் பெண்களின் பாடல்களில், பாம்பாட்டி , வண்ணான், நெல்குத்தும் பெண்கள், செம்படவர்கள், உழவர்களின் நாடோடிப் பாடல்களில், ரயிலில் பரிச்சைக்காரப் பெண்ணொருத்தி பாடிய இந்துஸ்தானிப் பாடலின் மெட்டி லெல்லாம் மனம் தோய்ந்து போய் நின்றிருக்கிறாான்.

"பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ –
உந்தன் பாத தரிசனம்'

என்ற நந்தனார் சரித்திரக் கீர்த்தனையை மனமுருகப் பாடியவன் "ஒரு அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தின் சகல இசை நாடகங்களிலும் கட்டாயமாகி' போய்விட்ட கிளிக்கண்ணியிலும் காவடிச் சிந்திலும் மனதைப் பறிகொடுத்தவன் பாரதி.

பரந்த மக்கள் இசையை மட்டும் ரசித்தவன் என்பது மட்டுமல்ல, சாகித்திய கர்த்தனாக தனது பாடல்களை கம்பீரமாக வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தவன் "அவர் பாடும் போது கேட்கவேண்டும். அது என்ன மனிதன் குரலா? இல்லை இடியின் குரல், வெடியின் குரல், ஒஹோஹோ என்ற லையும் ஊழிக்காற்றின் உக்கிரக் கர்ஜனை; ஆனால் அவைகளைப் போல் வெறும் அர்த்தமல்லாத வெற்றோசையல்ல; அர்த்தப் புஷ்டி நிறைந்த அசாதாரண வீரியத்தோடு கூடிய வேதக்கவிதையின் வியப்புக் குரல்.

‘ஐயமுண்டு பயமில்லை மனமே – இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு”

ஆம்! இந்தப் பாடலைத் தான் நான் முதல் முதலாக அவர் வாய் மூலம் கேட்டேன். அதன் முத்தாய்ப்புக்கு மேல் முத்தாய்ப்பான, ஜாஜ்வல்ய ஜங்காரத்வனி, மூர்ச்சனாக்ரமம் தவறாது மூர்க்காவேச முழக்கமான மூர்த் தண்யம், அண்ட கண்டங்களையெல்லாம் துண்டு துண்டாய் உடைத்து உருட்டுவது போன்ற உத்தண்ட சண்ட மாருத வீர்யம், அன்று போலவே இன்றும் என் நெஞ்சில் தனல் மூட்டுகிறது" என்று பாரதியின் பாடலை நேரில் அவர் பாடக் கேட்ட ச.து. சுப்பிரமணிய யோகியார் தனது அனுபவத்தை விபரிக்கிறார்.

முன்னோடி பாரதி கவிதையை எழுதியும் பாடிப் பரவசமும் அடைந்த பாரதி தான் அரசியலில் கவிதையை அநாயாசமாகப் பிரயோகித்து வெற்றி கண்ட மகாகவியாக மிளிர்கின்றான். பாரதி முதன் முதலாக பாடிய தேசிய எழுச்சிப் பாடல் 1905இல் சென்னைக் கடற்கரையில் நடந்த சுதேசிய மாணவர் கூட்டத்தில் பாடிய "வங்கமே வாழிய" என்ற கீதங்கள் தான். மக்களுடனான அரசியற் பரிவர்த்தனையின் சக்தி மிக்க கருவியாக கவிதையின் வலுவை பாரதி எடைபோட்டு வைத்திருந்ததை இது காட்டுகின்றது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை அடுத்தே தமிழகத்தில் தீவிர தேசிய எழுச்சி உருப் பெற்றது. மேடைகள் நாடக அரங்குகள், பாடல்கள், பத்திரிகைகள் அனைத்தும் வெவ்வேறு அளவிலும், வடிவிலும் தேசிய எழுச்சியின் செய்திகயை மக்களிடம் கொண்டு செல்வதில் முனைந்து நின்றன . எளிமையான மெட்டுகளில் அமைந்த ஜனரஞ்சக பாடல்கள் இந்த அரசியல் எழுச்சிக் கட்டத்தில் பரவலாக எழுந்தமையை நாம் அவதானிக்க வேண்டும். தேசியம், தேசாபிமானம், கதர் ராட்டை, தேசசேவை, மதுவிலக்கு, சமூக சீர்திருத்தம், விடுதலை, அந்நிய ஆட்சி எதிர்ப்பு போன்ற பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பாடல்கள் மக்களை வெகுவாக ஆகர்ஷித்தன. அன்றாட அரசியல் நடைமுறைகளைச் சார்ந்து இந்தப் பாடல்கள் அமைந்தன. ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரெளலட் சட்டத்திற்கு எதிர்ப்பு, காந்தியின் தலைமை போன்றன இவர்களின் பாடு பொருளாயின. இந்தப் பாடல்களை எழுதியவர்கள் தீவிர தேசபக்தர்களாக இருந்தனர் என்பதுதான் அக்கறையுடன் கவனிக்கத்தக்கது. இவர்களின் கவித்துவ வெற்றி தோல்விகள் நமக்கு இங்கு பொருளில்லை. அத்துணை இலக்கியப் பயிற்சி அற்றவர்களும் கேட்டறிந்ததை வைத்துக் கொண்டு பாடல்களை எழுதினார்கள்.

மேடைகளில் பாடத் தோன்றிய பாடகர்களும் சாஸ்திரிய சங்கீதப் புலமை கொண்டவர்களும் இல்லை. "கே.பி.சுந்தராம்பாள், என்.ஜி. கிட்டப்பா, எம்.கே. தியாகராஜபாகவதர் போன்றோர் சாஸ்திரிய இசைப் பயிற்சி இல்லாதவர்களாக இருந்த போதும் அவர்களது. பாடல்கள் இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் ஒலித்துக் கொணி டிக் கன றன " " என நூறு எம் . அருணாசலம் குறிப்பிடுகின்றார். "சிறை வாயில் நின்றழுதாள் பாரத மாதா” என்ற கே.பி. சுந்தராம்பாளின் பாடலைக் கேட்டு நெஞ்சுருகி நிற்காதவர்கள் யார்?

1933லிருந்து தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் பாடியவர்கள் என்ற முறையில் 1983ல் பரிசு பெற்ற மூவரில் கே.பி. சுந்தராம்பாளும் ஒருவர். 1939 ல் "தியாக பூமி’ படத்தில் "பந்தமகன்று நம் திருநாடு உய்ந்திட வேண்டாமோ? என்ற தேசியப் பாடலின் மூலம் பிரபல்யமான டி.கே. பட்டம் மாளும் ஒருவர். அரசியல் உள்ளடக்கத்துடன் சங்கீதத் தரத்தையும் பேணி மிகப் பரந்த மக்களை மேடைகளில் சந்தித்த கே.பி. சுந்தராம்பாள் மிக முக்கியமான பாடகியாவார். ஒத்துழையாமை இயக்கத்தின் போதுதான் இத்தகைய பாடல்கள் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தின. சினிமாத் தியேட்டர்களில் விற்கப்படும் சினிமாப் பாட்டுப் புத்தகங்களைப் போல அமைந்த இந்தப் பாட்டுப் புத்தகங்கள் 1932ல் பல்கி உச்சக் கட்டத்தை அடைந்தது என்கிறார் தியேடோர் பாஸ்கரன். 1928ல் பாரதியாரின் "சுதேச கீதங்கள்" ராஜதுரோகமான விஷயங்களைக் கொண்டுள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில் அரசாங் கத்தால் தடைசெய்யப்பட்டது. "செப்டம்பர் 20ம் திகதி சென்னைப் பொலிஸார், இந்தி பிரசார சபையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுதேச கீதங்களை சுமார் 2000 பிரதிகளை பறி முதல் செய்தனர். பிரதமபிரசிடன்சி மாஜிஸ்ரேட்டின் உத்தரவுபடி எஸ்பிளனேடில் இருந்த தண்டபாணி பிள்ளை கம்பனியை சோதனை செய்து 12 பிரதிகளை கைப்பற்றினர்"

அரசின் தடை

இந்நிலை தொடர்ந்து அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் மூர் க் கம் கொண்டிருந்த போது 1931ல் தேசவிரோதக் கருத்துக்கள் கொண்ட பாட்டுப் புத்தகங்களை இந்திய அரசு தடை செய்தது.

இந்தியாவில் பாட்டுப் புத்தகங்கள் வெளியிடுவதில் பாரிய கஷ்டங்கள் ஏற்பட்டதும் இந்தப் பாட்டுப் புத்தகங்கள் கொழும் பரில் அச் சரிடப்பட்டு, கப்பல் பயணிகளினர் பொதரிகளைப் போல தனுஷ்கோடி க்குக் கொண்டுவரப்பட்டது. "உக்கிரமான தேசவிரோதக் கருத்துக்களைக் கொண்ட வெளியீடுகள் தமிழில் கொழும்பில் அச்சிடப்பட்டு இலங்கையிலிருந்து பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் வந்து நுழைந்கின்றன’ என்று இந்திய அரசு இலங்கை அரசிற்கு அனுப் பரிய கடிதத்தை மேற் கோள் காட்டுகிறார் தியேடோர் பாஸ்கரன். அவர் தரும் தடை செய்யப்பட்ட தேசிய பாட்டுப் புத்தகங்கள் 41 இனது பட்டியலைப் பார்த்தால் அவற்றில் கொழும்பில் அச்சிட்ட பாட்டுப் புத்தகங்கள் மூன்றும் உள்ளடங்குகின்றன.

  1. கே.என். அப்துல் ரசாக் எழுதிய “மகாத்மா காந்தியின் மகிமை” (1928)
  2. கே.என். அருணகிரிநாதன் எழுதிய "பாரத மாதா பக்திரச பாசுரம்" (1928)
  3. ரி. கே. எம். ஜப்பார் எழுதிய “மதுவிலக்கு மணி’ (1930)


இலங்கையில் இத்தகைய பாடல் புத்தகங்கள் நன்கு அறியப்பட்டிருந்தன என்று கொள்வதில் தவறில்லை. கிராமபோன் தட்டுகள் வந்ததும் அதற்குத் துணையாக பாடல் புத்தகங்களும் பெருகின.

"1921 - 1935 வரை பெரிய கங்காணி வீடுகளிலும் , கடைகளிலும் பாட்டுப் பெட்டிகள் பாடும். பெரிய கண்காணிகளின் வீட்டு மேட்டில், பள்ளத்தில் இருந்து தொழிலாளர்கள் கேட்டு ரசிப்பார்கள் . இதற்குப் பின் டுரிங் டாக்கிஸ், பயஸ் கோப் கூடாரம் மலைநாட்டுப் பட்டினங்களுக்கு வந்தன. “சிந்தாமணி படம் மலைநாட்டை ஒரு ஆட்டு ஆட்டி விட்டது. பாபநாசம் சிவம் இயற்றிய அந்த ரசமான பாடல்களை தோட்டத்துக் காளையர்கள் அங்குள்ள பெண்மணிகள் சொக்கும்படி பாடுவார்கள்" என்கிறார் ஸ்ரி.வி. வேலுப்பிள்ளை.

இந்தப் பின்னணியில் மீனாக்ஷியம்மாளின் பாட்டுப் புத்தகத்தை வைத்து நோக்கினால் தான் அதன் அரசியற் பரிமாணத்தை , சமூகத் தாக்கத்தை உணரமுடியும். நான் இதை "பாட்டுப் புத்தகம்’ என்ற மலிந்த அர்த்தத்தில் பாவிக்கவில்லை.

கலாச்சாரப் பீலி

சுவரிடிஷ் மொழியில் "Kulturbarer" என்ற ஒரு சொல் இருக்கிறது. இதை ஒரு மாதிரி "CULTURE BEARER" என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். “கலாச்சாரப் பீலிகள்” என்று தமிழில் கொஞ்சம் சொல்லிப் பார்க்கலாம். கலாச்சாரப்பீலிகளாக அமைகின்ற இந்தப் புத்தகத்தின் பொதுவான அம்சங்கள் எல்லாவற்றையும் நாம் கருத்திற் கொள்ளத் தேவையில்லை. ஆனால் இந்த வகையறாப் புத்தகங்கள் கலாச்சார விழுமியங்களுக்கு சவாலிடுகின்றன.

“இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை" என்ற பிரதான தலைப்புடன், "இந்தியரை விரட்ட வேண்டுமென் கிற இலங்கை மந்திரிகளுக்கு எதிர்ப்பு" என்ற உபதலைப்புடன் 1940ல் வெளியாகி இருக்கிறது. "இலங்கை சட்டசபை அங்கத்தினர் திரு. கோ. நடேசைய்யர் அவர்கள் மனைவியார் திருமதி. கோ. ந. மீனாக்ஷியம்மாள் எழுதிய பாடல்கள்” என்று முன்னட்டையிலேயே போட்டிருக்கிறது. எட்டுப் பக்கங்களில் ஒன்பது பாடல்களை எழுதியிருக்கிறார்.

இந்தப் பாடல்கள்
  1. காந்தி மகானின் கொள்கை
  2. இலங்கையில் இந்தியர்கள் கஷ்டப்பட்டு உழைத்தமை
  3. இலங்கையர்கள் இந்தியர்களை விரட்ட வேண்டுமென்று சொன்னதற்கு எதிர்ப்பும் எச்சரிக்கையும்
  4. தோட்டத் தொழிலாளர்களின் ஒற்றுமை
ஆகிய முக்கிய அம்சங்களைப் பற்றிப் பேசுகின்றது.

இது போன்ற பாட்டுப் புத்தகங்களின் முக்கியமான குணாம்சம் அது பாமர மக்களுக்கு விளங்குகிற - அவர்கள் புழங்குகிற மொழி வழக்குகளை இயல்பாகக் கையாள்வதாகும்.

அரஸ் டு, ராஜபார்டு, லெக்சர் என்ற ஆங்கிலச் சொற்கள் அப்படியே இப்பாடல்களில் வழங்கும்.

அன்ராசபுரம் (அநுராதபுரம்), ஷோக்காய், விஸ்கி, பிராந்தி, கவர்னர் துரை போன்ற பதங்களை மிக இயல்பாக மீனாக்ஷியம்மாள் இப்பாடல்களில் கையாண்டிருக்கின்றார்.
தீட்டின மரத்தில் கூரு பார்க்கிறீர்களா?
வெருவாய்க்கு அவல் போல் மெல்லுரீர்,
சேதியொன்று சொல்ல வேணுமிப்போ,
கட்டைக்கு உயிர் கொடுத்தால் போலே
என்று சாதாரண மக்களின் பேச்சு மொழியை அப்படியே பிரயோகிக்கிறார்.

கருத்துகள் நேரடியாக - சிக்கல் எதுவும் இல்லாமற் பளிரென்று பாமர மக்களுக்கும் விளங்கத்தக்க வகையில் சொல்லப் படவேண்டிய தேவை பரபூரணமாக உணரப்பட்ட தனிமை துல்லியமாய் பாடல்களில் தெரிகின்றது. 
"இந்தியர் இலங்கையைச் காண்டுகிறார் என்று
எக்காளம் கொட்டிடும் இலங்கையர்கள்
சிந்தனை செய்யாது பேசிடும் பேச்சுக்கு
சேதியொன்று சொல்லவேணும் இப்போ'
என்று, தான் நிறுவ வேண்டிய வாதத்தை ஸ் படிகத் தெளிவுடன் முன்வைத்து தர்க்க பூர்வமாக எதிர்வாதத்தை பிரகடனம் செய்கிறார்:
"நூறு வருஷங்கள் முன்னாலே யிலங்கையின்
நேர்த்திதா னெப்படி யிருந்ததென்று
பாருங்கள் பங்களா தோட்டங்கள் தேட்டங்கள்
பண்பா யமைந்து விளங்குவதை"
என்கிறார் மீனாக்ஷியம்மாள். இந்தப் பாடல்களுக்கு மிகச் சாதாரண மெட்டும் போட்டு மேடைகளில் இசைத்திருக்கிறார்.

நந்தவனத்தில் ஒர் ஆண்டி - அவன்நா
லாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிக் போட்டுடைத்தாண்டி’

என்ற  ஜனரஞ்சக மெட்டில் பாட்டிசைத்து அரசியல் சேதிகளை மலையகத் தொழிலாளருக்கு சொல்ல வந்த மீனாக்ஷியம்மாளின் யுக்தி இன்றும் கூட வெவ்வேறு வடிவங்களில் நாம் கைக்கொள்ளத்தக்கது தான்.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates