Headlines News :
முகப்பு » » புறக்கணிப்புக்கள் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் - துரைசாமி நடராஜா

புறக்கணிப்புக்கள் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் - துரைசாமி நடராஜா


பெருந்தோட்ட தொழிற்துறையின் சமகால போக்குகள் தொடர்பில் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றமை தெரிந்த விடயமாகும். பெருந்தோட்டங்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் புதுவடிவம் எடுக்கின்றன. தொழிலாளர்கள் மீதான அடக்கு முறைகளும் அதிகரித்து வருகின்றன. சில தோட்டங்களில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றுகின்ற முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இன்னும் சில தோட்டங்கள் கைமாற்றம் செய்யப்பட்டிருப்பதையும் அறியக்கூடியதாக உள்ளது. இந்நிலைமைக்கு எதிராக தொழிலாளர்கள் கண்டனக் குரல்களையும் எழுப்பி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

வீழ்ச்சி நிலையில் பெருந்தோட்டங்கள்
பெருந்தோட்ட தேயிலை தொழிற்துறை என்பது ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கின்ற இடமாக இருந்தது. உற்பத்தி அதிகமாக இருந்த நிலையில் கணிசமான தேசிய வருமானத்தினையும் இத்தொழிற்துறை ஈட்டிக்கொடுத்தது. தொழிலாளர்களின் தேவைகள் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டிருந்தன. சவால்கள் குறைவாக இருந்தன. தேயிலையின் விளை நிலங்களும் அதிகமாக இருந்தன. அதிகமான உற்பத்திக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி இருக்கின்றது. பெருந்தோட்டங்களின் தேயிலை விளை நிலங்கள் படிப்படியாக சுரண்டல்களுக்கு உள்ளானது. உற்பத்தியில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டு வருகின்றது. தொழிலாளர்களின் நலன்கள் புறந்தள்ளப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் அடிமைகளை விடவும், மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர். முறையான முகாமைத்துவம் இல்லாததன் காரணமாகவே தோட்டங்களில் பல்வேறு பிரச்சினைகளும் இடம்பெற்று வருவதாகவும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். கம்பனியினரின் போக்குகளில் மாற்றம் காணப்படுகின்றது. பேச்சுவார்த்தைகளின் போது தொழிற்சங்கங்களிடம் ஒரு கருத்தினை கூறும் கம்பனிகள் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிச் செயற்படுகின்றன. கம்பனியினரின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இதேவேளை கம்பனியினரும் தொழிற்சங்கங்களின் மீது அதிருப்திகள் பலவற்றையும் வெளியிட்டு வருவதும் புதிய விடயமல்ல. மாறி மாறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தோட்டத்தொழிற்துறையின் மீது தொழிலாளர்களும், இன்றைய இளம் சந்ததியினரும் அதிருப்தி நிலையிலேயே இருந்து வருகின்றனர். தோட்டத் தொழிற்துறை ஒரு முன்னுதாரணமான நிலையில் இல்லை என்பதும் பலரின் வாதமாக உள்ளது. புதியவர்கள் இத்தொழிற்துறையில் ஈடுபடுவதற்கு அச்சம் கொண்டுள்ள நிலையில், இத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் விரக்தியுடனேயே செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தோட்டப்புற காணிகள் பல்வேறு தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணி தொடர்பில் பலவகையான விமர்சனங்களும் இருந்து வருகின்றன. இத்தகைய விமர்சனங்கள் பல்வேறான சந்தேகங்களையும் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறன. பெருந்தோட்டங்களின் சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சிலர் இனியும் பெருந்தோட்டங்களை நம்பி தொழிலாளர்கள் இருப்பதால் எதுவிதமான சாதக விளைவுகளும் ஏற்படப் போவதில்லை என்று தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியும் இருக்கின்றனர். தேயிலைத் தோட்டங்களை மட்டுமே நம்பி இருக்காமல் மாற்றுத் தொழில் முயற்சிகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும் என்பதும் இவர்களின் வலியுறுத்தலாக உள்ளது. மூழ்கிக் கொண்டிருக்கின்ற கப்பலில் யாரும் ஏறுவதற்கு விரும்புவார்களா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

சமகாலத்தில் உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அதிகமாக உள்ளது. மக்களின் வாழ்க்கை இயந்திரமயமாகியுள்ளது. சில சமூகத்தினர் எட்டிப்பிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சிப் போக்கினை வெளிப்படுத்தி இருக்கின்றனர். எனினும் மலையக சமூகத்தினரின் வாழ்க்கை கிணற்றுத் தவளையைப் போன்று முடங்கிப்போய் இருப்பதாக விசனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. மலையக சமூகத்தினரின் அடிப்படை உரிமைகள் கூட உறுதிப்படுத்தப்படாத நிலையில் இவர்கள் இதனை பெற்றுக்கொள்வதற்கே பல்வேறு போராட்டங்களையும் நடத்த வேண்டியுள்ளது. இத்தகைய போராட்டங்களும் கூட எதிர்பார்த்த வெற்றிகளை இம்மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக இல்லை. எல்லாம் மாயையாக முடிந்துவிடுகின்றன.

அரசியலும் தொழிற்சங்கமும்
ஒரு சமூகத்தின் எழுச்சியில் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமானதாக கருதப்படுகின்றது. இத்தகைய அரசியல் பிரதிநிதித்துவம் என்பது அர்த்தமுள்ள வகையில் அமைதல் மிக மிக இன்றியமையாததாகும். வெறுமனே நாற்காலிகளை சூடேற்றுகின்ற சுயலாபம் கருதிய பிரதிநிதித்துவங்கள் சமூகத்தின் நிலைமையை அதலபாதாளத்திற்கு கொண்டு செல்வதாக அமையும். அரசியல்வாதிகள் இதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. மலையகத்தை பொறுத்தவரையில் அரசியலும் தொழிற்சங்கமும் பின்னிப் பிணைந்துள்ளன. தொழிற்சங்கங்களின் ஊடான அரசியல் பிரவேசம் அதிகமாக உள்ளது. மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் இந்த மக்களின் எழுச்சிக்கு காத்திரமான பங்களிப்பினையும் வழங்கி இருக்கின்றார்கள். ஏதோ ஒரு சிலர் விடுகின்ற தவறுகளுக்காக முழு அரசியல், தொழிற்சங்கவாதிகளுமே அப்படித்தான் என்று குறை சொல்லிவிடவும் முடியாது. சிலரின் அர்ப்பணிப்பான சேவை மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திகள் ஏற்படுவதற்கும் உந்து சக்தியாக இருந்து வருகின்றது என்பதனையும் மறுப்பதற்கில்லை.

எனினும் அரசியல், தொழிற்சங்கவாதிகள் தொடர்பில் நீண்ட காலமாகவே விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இவர்களின் சேவைகள் தொடர்பிலும் சிலர் அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்னும் மலையக மக்களின் அபிவிருத்திக்காக நிறைய சேவைகளை முன்னெடுத்திருக்கலாம். எனினும் இந்த வாய்ப்புகள் தவறவிடப்பட்டிருக்கின்றன என்றும் சிலர் சுட்டிக்காட்டி இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். மலையகத்தை பொறுத்தவரையில் அரசியல், தொழிற்சங்கங்களுக்கிடையிலான முரண்பாடுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. இத்தகைய முரண்பாடுகளும் மூன்றாம் தரப்பினர்களுக்கு வாய்ப்பாக போய் விடுகின்றது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்றவாறு நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களின் சம்பள உயர்வுவிடயம், உரிமைகளை பெற்றுக்கொள்ளுதல் என்பனவற்றிற்கு அரசியல், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டுச் சூழ்நிலைகள் பெரும் தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வளச் சுரண்டல்கள்
தோட்டங்களில் பல வளங்களும் காணப்படுகின்றன. இத்தகைய வளங்கள் சரியாக இனங்காணப்பட்டு முறையாக பயன்படுத்தப்படுதல் வேண்டும். வளங்களின் வீண் விரயம் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தோட்டப்புறங்களில் உள்ள பல வளங்கள் வீண் விரயத்திற்கு உள்ளாகின்றன. இன்னும் பல வளங்கள் சுரண்டல்களுக்கு உள்ளாகுகின்றன. குறிப்பாக தோட்டப்புறங்களில் உள்ள பெறுமதிமிக்க மரங்கள் தறித்து விற்பனை செய்யப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மரவிற்பனையின் ஊடாக கிடைக்கின்ற இலாபப் பணம் பல இடங்களில் தொழிலாளர்களுக்கு பங்கிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. பாரிய மரக்கட்டைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வதன் காரணமாக பல தோட்டப்புற பாதைகள் குண்டும் குழியுமாக மாறியிருக்கின்றன. இயற்கையாக வளங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக பெருந்தோட்டங்கள் பாழடைந்து காணப்படுகின்றன. மரங்கள் தறிக்கப்படுவதன் காரணமாக தேயிலைச் செடிகள் பலவும் சேதமடைகின்றன. மரங்கள் தேயிலைச் செடிகளின் மேல் விழுவதால் இந்நிலைமை ஏற்படுகின்றது. இது வீழ்ச்சி நிலையினை ஏற்படுத்தக் கூடியதாகும்.

மீள் நடுகையில் கவனமின்மை
தேயிலைச் செடிகள் பல்வேறு நிலைமைகளினால் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. அதிக வெயில் கால நிலை காரணமாக கருகி மடிகின்ற நிலைமையும் ஏற்படுகின்றது. தேயிலைச் செடிகள் பல நிலைமைகளினாலும் அழிவடைகின்றபோது மீள் நடுகை தொடர்பில் கம்பனியினர் கவனம்செலுத்தாது அசமந்தப்போக்கில் இருந்து வருவதனையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது சாதக விளைவுகளை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்காது பல இலட்சக்கணக்கான தேயிலைச் செடிகள் அழிந்துள்ள நிலையில் கம்பனிகள் மீள் நடுகை தொடர்பில் கரிசனையின்றி செயற்படுவது மோசமான பின் விளைவுகளையே ஏற்படுத்துவதாக அமையும். மலையக பெருந்தோட்டத்துறையினை ஏப்பம் விடுகின்ற ஒரு நிலையில் கம்பனியினரின் செயற்பாடுகள், சிந்தனைகளும் இருந்துவருகின்றதா என்றும் கேள்விகள் மேலோங்கி வருகின்றன.

தோட்ட மக்களை அகற்றும் செயற்பாடு
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் நாளுக்கு நாள் புதிய வடிவம் பெற்று வருவதாக முன்னர் வலியுறுத்தி இருந்தேன். இச்சவால்களின் ஒரு கட்டமாக தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை சில தோட்டங்களில் இடம்பெற்று வருவதனை அறியக்கூடியதாக உள்ளது. நாவலப்பிட்டியில் உள்ள போவில தோட்ட மக்கள் இத்தகைய ஒரு நெருக்கடியான நிலைமையினை அண்மையில் எதிர்நோக்கி இருந்தமை தொடர்பில் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கின்றது. நாவலப்பிட்டி, போவில தோட்ட மக்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை கடிதம் மூலம் அறிவித்திருந்தது. நூறு குடும்பங்களை இவ்வாறு அகன்று செல்லுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலைமையினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தது. இந்நிலையில் ஜனாதிபதி தலையிட்டு மேற்படி குடும்பங்களை அகற்றும் செயற்பாட்டினை தடுத்து நிறுத்துமாறு அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா.வின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில் பின்வருமாறு விளக்கிக் கூறி இருந்தார்.

நாவலப்பிட்டி, போவில பகுதியில் வாழும் நூறு குடும்பங்களை அவர்களது வசிப்பிடத்தை விட்டு அகன்று செல்லுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இது சட்ட விரோதமான செயலாகும். காரணம் தோட்டத் தொழிலாளர்கள் இதுவரையில் தாம் வசிக்கின்ற தோட்டங்களிலேயே வாழ்வதற்கு முடியும் என்ற எழுதாத சட்டம் உள்ளதை யாவரும் அறிவோம். இந்த நிலையில் நூறு குடும்பங்களை தமது வசிப்பிடங்களை விட்டு வெளியேறிச் செல்லுமாறு மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அதன் நகல்களும் எம்மிடத்தில் உள்ளன. நாம் ஜனாதிபதியை சந்தித்து மேற்படி விவகாரம் குறித்த அறிக்கையினை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தோம். உடனடியாக அவர் தலையிட்டு மேற்படி குடும்பங்களை அகற்றும் செயற்பாட்டினை தடுத்து நிறுத்தினார். மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட யாக்கம் உள்ளிட்ட நிறுவனங்களின் கீழ் உள்ள காணிகள் சகலதும் தற்போது தனியாருக்கு வழங்கப்படும் வகையிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நாம் பேச்சுவார்த்தை நடத்தியதற்கமைய ஜனாதிபதி துறைசார் அமைச்சருடன் பேசி தற்போதைக்கு இவ்வாறு பெருந்தோட்டக் காணிகள் தனியார் மயப்படுத்துவதை தடுத்தி நிறுத்தி இருக்கின்றார்.

கம்பனிகளின் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடமும் வலியுறுத்தி இருக்கின்றோம். அவர் இவ்விடயம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இடத்தில் அறிக்கை கோரி இருக்கின்றார். விரைவில் அதற்கான ஒரு தனியான குழுவை நியமித்து மேற்படி விடயம் குறித்த அறிக்கையினை அமைச்சருக்கு சமர்ப்பிக்க உள்ளோம். இதில் காடாக்கப்பட்ட தேயிலை தோட்டங்களை தூய்மையாக்கி மீண்டும் அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான முறைமைகளையும் சுட்டிக்காட்ட இருக்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் வலியுறுத்தி இருக்கின்றார். தோட்ட மக்களை அகற்றுகின்ற செயற்பாடுகள் என்பது ஒரு பிழையான நடவடிக்கையாகும். இதனால் அம்மக்கள் நிர்க்கதிநிலைக்கு உள்ளாகின்றனர் என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

மாபேரிதென்னை மக்கள் பாதிப்பு
இதேவேளை கண்டி உள்ளக விமான நிலையம் அமைப்பது தொடர்பாக வீடு, காணிகளை இழந்தவர்கள் தமது காணி உரிமையினை கேட்டபோது அவர்களை பொலிஸ் கூண்டில் அடைத்து வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸார் மேற்கொண்ட முயற்சி தொடர்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கண்டனக்குரல் எழுப்பியிருக்கின்றார். பாதிக்கப்பட்டவர்களது வாழ்வுரிமையை மறுக்க முடியாதென்றும் இதனை தட்டிக் கேட்ட மக்கள் பிரதிநிதிகளை அவமானப்படுத்தும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என்றும் வேலுகுமார் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,

2013இல் மாபேரிதென்னை தோட்டத்தில் உள்ளக விமான நிலையம் அமைப்பதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோட்டம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் பொறுப்பேற்கப்பட்டு பின்னர் மிருக வள அபிவிருத்தி அதிகார சபைக்கு கைமாற்றப்பட்டு பண்ணை நடாத்தப்பட்டு வந்தது. விமான நிலையம் அமைக்கும்போது பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள தரப்பைச் சேர்ந்த 183 குடும்பங்கள் அங்கிருந்தன. கற்களை உடைப்பதற்கு வெடி வைக்கப்பட்டதால் அம்மக்களது வீடுகள் சேதமடைந்தன. ஆட்சி மாற்றத்துடன் விமான நிலைய நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டன. ஆனால் சேதமடைந்த வீடுகளை திருத்தியமைக்க தேசிய மிருக வளர்ப்பு அதிகார சபை அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணிகள் பிரிக்கப்பட்டு, இலக்கமிடப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுமார் 10 பேர்ச்சஸ் அளவில் வரைபடத்துடன் திட்டம் கையளிக்கப்பட்டுள்ளபோதும் காணி உறுதி வழங்கப்படவில்லை. காணி உறுதி வழங்கப்படாமையை காரணம் காட்டி தோட்ட நிர்வாகம் புதிய இடத்தில் குடியமர இடமளிக்கவும் இல்லை.

இதனால் இருந்த வீடும் இன்றி புதிதாக வீடமைக்கவும் முடியாத இக்கட்டான நிலைமைக்கு 183 குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நியாயம் கேட்கும்போது சிறையில் அடைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் சில வருடங்களுக்கு முன்னர் இப்பிரச்சினை தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்து அதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தோட்ட நிர்வாகத்துக்கு சார்பாகவே பொலிஸார் நடந்துகொண்டனர். மக்கள் பிரதிநிதிகளையும் கொச்சைப்படுத்தினர். இவ்விடயம் தொடர்பாக மத்திய பிராந்திய பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளேன் என்றும் வேலுகுமார் தனது நிலைப்பாட்டினை மேலும் தெளிவுபடுத்தி இருக்கின்றார். பொலிஸார் பக்க சார்பான முறையில் செயற்பட்டிருப்பார்களானால் இவ்விடயம் தொடர்பில் நாம் மிகவும் ஆழமாகவே சிந்திக்க வேண்டி இருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கவேண்டிய கடமை சகலருக்கும் இருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நியாயத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இது இவ்வாறிருக்க கண்டி மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டக் காணிகளில் தலா ஒரு ஏக்கர் காணியை தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருக்கின்றார். 'ஜனவசம' உட்பட நஷ்டத்தில் இயங்குகின்ற தோட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருக்கின்றார். கண்டி மாவட்டத்தில் உள்ள ஜனவசம உட்பட நஷ்டத்தில் இயங்கும் தேயிலை தோட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை தொடர்பில் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இத்தோட்டங்களில் ஒரு ஏக்கர் காணியை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் அந்த ஒரு ஏக்கரில் இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர தேயிலை செடிகளை வளர்க்கவும் அத்தேயிலையை அரசாங்கங்கள் கொள்வனவு செய்யவும் முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

திட்டமிட்டு காடாக்கப்படுகின்றனவா?
பெருந்தோட்டங்கள் பல வழிகளிலும் இன்று அழிவுக்கு உள்ளாகி வருகின்றமை தெரிந்த விடயமாகும். இந்த நிலையில் பெருந்தோட்டங்கள் எந்த அளவுக்கு தாக்குபிடிக்கப் போகின்றன என்பது மிகப் பெரும் கேள்வியாக இருக்கின்றது. மண்சரிவு கூட பல தோட்டங்களை இல்லாது செய்திருக்கின்றது. தொழிலாளர்களின் இருப்பினை சிதறடித்திருக்கின்றது. பதுளையில் மிக அதிகமான இடங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் செய்திகள் வலியுறுத்துகின்றன. மலையகத்தின் ஏனைய பகுதிகளிலும் இத்தகையதொரு நிலைமையினையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதற்கிடையில் மலையக பெருந்தோட்டங்கள் திட்டமிட்டு காடாக்கப்பட்டு வருவதாகவும் காடு வளர்ப்பு நடவடிக்கையை ஊக்குவிக்கும் ஒரு நோக்கில் இது இடம்பெறுவதாகவும் முக்கியஸ்தர்கள் கருத்துதெரிவித்துள்ளமையும் இங்கு நோக்கத்தக்கதாகும். தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களை சில இடங்களுக்கு மாற்றம் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்ற இவர்கள் மக்களின் இருப்பு குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். மக்கள் தொழில் நிமித்தம் அல்லது இருப்பிடம் கருதி நகர் புறங்களுக்கு சென்றுவிடுவர். இந்நிலையில் பெருந்தோட்டங்கள் மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் இவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கைமாறும் தோட்டங்கள்
பெருந்தோட்டங்கள் சில கைமாறியுள்ளதாக தொழிலாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தமக்கு அல்லது தொழிற்சங்கங்களுக்கோ தெரியாதவகையில் இடம்பெற்றுவருவதாகவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அண்மையில் புசல்லாவை இ.தொ.கா. காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றின் போது தொழிலாளர்களின் அதிருப்தி வெளிப்பட்டது. இ.தொ.கா. வின் உபதலைவர் எம்.எஸ். எஸ்.செல்லமுத்துவின் தலைமையில் இவ்விசேடக் கூட்டம் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் பல விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டன. தேயிலை மலைகள் சுத்தம் செய்யாமல் காடாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய தேயிலை மலை உடனடியாக தூய்மையாக்கப்பட வேண்டும், அத்தோடு மீள் நடுகை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும், தோட்டங்களை பராமரிப்பதில் உரிய கவனம் செலுத்த வேண்டும், தொழிற்சாலைகளின் சீரான இயக்கத்திற்கு வித்திடுதல் வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தை முறையாக அமுல்படுத்துதல் வேண்டும், நிலுவையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன முறையாக மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டு பற்றுச்சீட்டுகளை எமக்கு உரியவாறு வழங்குதல் வேண்டும், ஏனைய கொடுப்பனவுகளும் தொழிலாளர்களுக்கு உரிய காலப்பகுதியில் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற பல விடயங்கள் இங்கு வலியுறுத்தப்பட்டன.

நல்லாட்சி குறித்து பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
1972 இல் பெருந்தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் மக்கள் துன்பங்களுக்கு உள்ளாகினர். பல தொழிலாளர்கள் வெளியேறி பிச்சைக்காரர்களாக அலைந்து திரிந்த ஞாபகம் என் நினைவை வருடுகின்றது. இந்த நல்லாட்சியிலும் இத்தகைய ஒரு நிலை ஏற்பட இடமளிக்கலாமா? என்று பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கேள்வி எழுப்பி இருக்கின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில், தோட்டங்களை விட்டும் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவது ஒரு கசப்பான நிகழ்வாகும். அவர்களுக்கான வாழ்வாதாரம், வாழ்விடம் என்பன உள்ளிட்ட பல விடயங்களும் உறுதி செய்யப்படாத நிலையில் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகின்றமை பிழையான செயலாகும். நல்லாட்சியிலும் இப்படி ஒரு நிலைமை இருக்குமானால் நாம் அதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லாட்சியின் உருவாக்கத்துக்கு கைகொடுத்த மலையக மக்களுக்கு அரசு செய்யும் நன்றிக்கடன் இதுதானா? என்றும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. இத்தகைய தொழிலாளர்கள் வெளியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் காணிப்பகிர்வு விடயங்கள் தொடர்பிலும் அரசியல் தொழிற்சங்கவாதிகள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். மக்களுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாது அவர்களை நடுத்தெருவில் நிற்க வைப்பது உரிமை மீறலாகும்.

பெருந்தோட்ட தமிழர்கள் என்பதால் இவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதா? என்ற ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது. மலையக மக்களின் வாழ்வாதாரத்தை இல்லாது செய்ய முற்படுத்தக் கூடாது. 1972 இல் எம்மவர்கள் வாக்குரிமையையும் பிரஜாவுரிமையையும் இல்லாதிருந்த நிலையில் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி இருந்தனர். இன்று எமது மக்கள் உரிமையுள்ளவர்களாக உள்ளனர். இந்த நிலையில் இவர்களை துன்புறுத்தி அந்நியப்படுத்துவது பிழையாகும். புறக்கணிப்புகள் சமூக பதற்றத்தையே ஏற்படுத்தும் கிளர்ச்சிகளும் மேலோங்கலாம். இது விரும்பத்தக்கதன்று என்றார்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates