Headlines News :
முகப்பு » » தீபாவளி முற்பணம்: தொழிலாளரின் திட்டமிடப்படாத வீண் செலவுகள் - எஸ். வடிவழகி

தீபாவளி முற்பணம்: தொழிலாளரின் திட்டமிடப்படாத வீண் செலவுகள் - எஸ். வடிவழகி


தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தீபாவளி முற்பணமாக வழங்க வேண்டிய தொகை குறித்து பல தொழிற்சங்கத் தலைவர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு கிடைக்கும், என்னென்ன செலவுகளை செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது மதுக்கடைக்காரர்கள் பெருந்தோட்டத் தொழிலாளரிடமிருந்து எத்தனை இலட்சங்களை அல்லது கோடிகளை சுருட்டலாம் என கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என எவரும் பேசுவதில்லை. தீபாவளி முற்பணம் என்பது தொழிலாளர்கள் தங்கள் எதிர்கால உழைப்பிலிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் என்பதை தொழிலாளர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. கைகளுக்கு பணம் வந்தவுடன் அது கடன் பணம் என்பதை மறந்துவிடுகின்றனர். உழைப்புத்தான் நமக்கு சோறுபோடுகிறது. நமது உழைப்புத்தான் இந்த நாட்டு மக்களுக்கும் சோறு போடுகிறது. நமது உழைப்பிற்கு இருக்கின்ற மதிப்பும் கௌரவமும் என்னவென்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. நமது உழைப்பை மதித்து கௌரவிக்கக் கற்றுக்கொண்டால் அந்த உழைப்பால் கிடைக்கும் பணத்தை செலவிடுவதில் இதுவரை கடைப்பிடித்து வந்த பாரம்பரிய பழக்கங்களை நாம் மாற்றிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

தமது எதிர்கால உழைப்பை அடகு வைத்து பெற்றுக்கொள்ளும் பணத்தை தீபாவளி மகிழ்ச்சி என்ற பெயரில் சாராயக் கடைக்காரர்களிடம் கொடுப்பது எந்தவிதத்தில் நியாயமாகும் என்பது குறித்து மக்களை சிந்திக்கத் தூண்ட வேண்டும். தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மக்களுக்கு பணம் தேவை என்பது உண்மைதான். ஆனால், கடனாகப் பெற்ற பணத்தை மதுக்கடைகளில் செலவழித்து குடும்பத்தாரினதும் பிள்ளைகளினதும் மகிழ்ச்சியை கெடுப்பது அப்பட்டமான முட்டாள்தனம் என்பதையும், அனாவசியமாக செலவுகள் செய்வது புத்திசாலித்தனமானதல்ல என்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதுவரை எவரும் இதனை மக்களுக்கு எடுத்துச்சொன்னது கிடையாது. அதனால்தான் மக்கள் மீண்டும் மீண்டும் தமது உழைப்புக்கே மதிப்புகொடுக்காத செலவினங்களை செய்து வருகிறார்கள்.

கடன் வாங்குவது எமது மக்களின் இரத்தத்தில் ஊறிப்போன விடயமாக தெரிகிறது. இதனை மாற்ற எவரும் முயற்சி செய்யவுமில்லை. அதனை மக்களுக்கு தெளிவுபடுத்த எந்தவித முயற்சியும் செய்யவில்லை. தீபாவளி கொண்டாட கடன், மரண சடங்குகளை நிறைவேற்ற கடன், பூப்புனித விழா கொண்டாடக் கடன், திருமணங்களை நடத்தக் கடன், இப்போது வீடுகளுக்கு பொருள் வாங்கக் கடன் என எல்லாவற்றிலுமே கடன் கலாசாரத்தையே காண்கிறோம். நமது மக்களிடம் இருக்கும் இந்தக் கடன் கலாசாரம் என்னும் பலவீனத்தை நன்கு அறிந்து கொண்டிருப்பதால் தான் இப்போது தொலைக்காட்சி பெட்டி முதல், ஹோம் திேயட்டர் வரையிலான தேவையற்ற பொருட்களை மக்களின் வீட்டு வாசல்களுக்கே வாகனங்களில் கொண்டு வந்து கடன் அடிப்படையில் மக்கள் தலையில் கட்டும் வியாபாரத்தை பிரபல கம்பனிகள் கச்சிதமாக செய்து வருகின்றன. பலர் மாதாந்தம் உழைத்த தமது சம்பளத்தை கையில் வாங்குமுன்னரே இவ்வாறான கம்பனிகளுக்கும் மற்றைய கடன்காரர்களுக்கும் கடனை செலுத்துகின்றனர். நமது உழைப்புக்கான ஊதியத்தைக் கையில் வாங்க முன்னர் கடன் கட்டுவது நமது உழைப்பை கேவலப்படுத்தும் விடயம் என்பது மக்களுக்குப் புரியவில்லை.

கடன் என்பது நமது கௌரவமான உழைப்பை, சில வேளைகளில் நமது வாழ்க்கையையே அடகு வைத்து பெறப்படும் பணம் என்பதை மக்கள் மனதில் ஆழமாகப் பதியச் செய்யவேண்டும். கடந்த காலங்களில் பிரிடோ நிறுவனம் இந்தக் கருத்தை தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறது. இதன் பலனாக இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட சிலர், தீபாவளி முற்பணம் வாங்குவதற்கு பதிலாக வருட ஆரம்பத்திலேயே தோட்ட அதிகாரிகளிடம் தமது தீபாவளி செலவுக்காக மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அறவிட்டு சேமித்து வைக்குமாறு சொல்லி விடுகிறார்கள். அவர்களால் தீபாவளிக் காலத்தில் தாம் சேகரித்தை பணத்தை பெற்றுக்கொண்டு தீபாவளி முற்பணம் என்ற கடனில்லாமல் தீபாவளியை கொண்டாட முடிகிறது. இவ்வாறு கடனில்லாமல் தீபாவளி கொண்டாடும் இந்த பாரம்பரிய வழக்கத்தை சிலரால் நடைமுறைப்படுத்த முடியுமானால் மற்றவர்களால் ஏன் முடியாது? நாம் இப்போதாவது இந்தக் கடன் கலாசாரத்திலிருந்து விடுதலை பெற வேண்டியது அவசியம்.

வெளிநாட்டு பணம் என்பது இரத்தப் பணம்;
அடுத்ததாக தீபாவளிக்காலத்தில் அதிகமாக செலவிடப்படும் பணம் வெளிநாட்டில் உழைத்த பணமாகும். உள்நாட்டில் கடன் வாங்கியவுடன் பணம் மட்டுமே கண்களுக்கு தெரிவது போல வெளிநாட்டு உழைப்பில் கிடைத்த பணம் குடும்பத்தவர் கையில் கிடைத்தவுடன் அவர்களுக்கு கையிலிருக்கும் ஆயிரம் ரூபா, ஐயாயிரம் ரூபா என பணத்தாள்கள் தெரிகிறதே தவிர அந்த பணத்தை உழைப்பதற்கு வெளிநாட்டிலுள்ள தமது உறவினர்கள் எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

பல மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் நிலைமையை எடுத்துக்கொண்டால் வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் பணம் குடும்பத்தின் தாயோ, தந்தையோ, கணவனோ மனைவியோ அல்லது பிள்ளைகளோ குடும்பத்தை பிரிந்து துயரத்துடனும், வெளியில் சொல்ல முடியாத சிரமங்களை அனுவிக்கும் மன வேதனையுடனும் பல ஆபத்துக்கள் மத்தியிலும் உழைத்த பணமாகும். ஒரு வகையில் சொல்வதானால் அது ஆங்கிலத்தில் சொல்வது போன்று “Blood Money” அல்லது இரத்தப் பணமாகும். ஆமாம், அது அவர்கள் தமது இரத்தத்தை விற்றுக் கிடைத்த பணத்திற்கு சமனாகும்.

எனவே, இந்தப் பணத்தை மனச்சாட்சியுள்ள எவரும் மதுவுக்கு செலவழிக்க முடியுமா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்புவது அவசியம். இந்தப் பணத்தை அநாவசியமாக பொறுப்பற்ற முறையில் செலவிட வேண்டாம் என மக்கள் அறிவூட்டப்படவேண்டும்.

அந்தப் பணம் உடனடி செலவிற்கான பணம் அல்ல. அது எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டிய பணம். இன்றைய கஷ்டமான சூழலில் இந்த நாட்டில் உழைத்த பணத்தை அல்லது தீபாவளி முற்பணத்தை செலவிடுவதற்கு ஒருவர் பத்துமுறை சிந்திக்கவேண்டும். ஆனால் வெளிநாட்டுப் பணத்தை செலவிட பத்துமுறை அல்ல இருபது முறை சிந்திக்க வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

இதைவிட தீபாவளிக் காலத்தில் வெளியூர்களிலிருந்து வரும் வியாபாரிகளும் நமது மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆடை உற்பத்தி நிலையங்களில் விற்பனைக்குத் தகுதியற்றதென ஒதுக்கப்படும் ஆடைகளை கிலோ அளவுக்கு மிகவும் மலிவான விலைக்கு வாங்கி, அந்த தரம் குறைந்த உடுபுடவைகளை அழகாக பெயர் பட்டியலிட்டு பொலித்தீன் பைகளில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். மக்களும் அவற்றை மிகவும் மலிவானதாக கருதி பணத்தை கொடுத்து அள்ளிக்கொண்டு செல்கிறார்கள். இதைவிட தரம் குறைந்த தளபாடங்கள் உட்படப் பல பொருட்களை கவர்ச்சிகரமாக காட்சிப்படுத்தி நமது மக்கள் தலையில் கட்டிவிடுகிறார்கள்.

இந்த வியாபாரிகளிடம் ஏமார்ந்து அநியாயமாக தங்கள் பணத்தை செலவிட வேண்டாம் எனவும் மக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

2012 தீபாவளிக்கு சில தினங்களுக்கு பின்னர் மாத்தளை பகுதியில் பல தோட்டங்களில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு 10 பேர் மரணமடைந்தார்கள். ஒரு தோட்டத்தின் பெரும் பகுதி மண்ணில் புதையுண்டது. மக்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. இதே காலப்பகுதியில் மலையகத்தில் பல வீடுகள் மின்சார ஒழுக்கினால் தீப்பற்றி எரிந்து பல குடும்பங்கள் அநாதரவான நிகழ்வுகளும் நடந்தன. 2013ஆம் ஆண்டு தீபாவளிக்கு பின்னர் நான்காம் நாளில் பண்டாரவளை, ப10னாகலையில் இடம்பெற்ற மிகவும் கோரமான பஸ் விபத்தில் 16 பேர் மரணமடைந்து 30 பேருக்கு அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

2014 தீபாவளிக்கு பின்னர் ஐந்தாம் நாளில் பெருந்தோட்ட மக்களை மிகவும் பாரதூரமாக உலுக்கிய கொஸ்லாந்தை மீரியாபெத்த மண்சரிவு அனர்ததத்;தில் 49பேர் மரணமடைந்தது மட்டுமின்றி, ஒரு தோட்டமே மண்ணுள் புதையுண்டு போனது. இந்த பின்னணியில் இந்த தீபாவளிக் காலத்தை முடியுமானவரை மதுவில் இருந்து விலகி புனிதமாக கொண்டாடுமாறும் அனர்த்தங்கள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

இறுதியாக கடன்வாங்கி தீபாவளி கொண்டாடும் சாபக்கேடான வழக்கத்திற்கு சாவுமணி அடிப்போம். கடனின்றி வாழும் புதிய சகாப்தத்தை தொடங்குவோம். கடன் வாங்கிய பணத்தையும், வெளிநாட்டில் உழைத்த பணத்தையும் சாராயக்கடைக்கு தானம் செய்யும் அடி முட்டாள்தனமான பழக்கத்தை குழிதோண்டிப் புதைப்போம் என நாம் திட சங்கற்பம் பண்ணவேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates