Headlines News :
முகப்பு » » 2025 இல் மலையகம் எப்படி இருக்கும்? கனவுகள் நனவாகட்டும் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்

2025 இல் மலையகம் எப்படி இருக்கும்? கனவுகள் நனவாகட்டும் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்


''2015 இலங்கையில் நடைபெற்ற தேர்தலி;ன் பின்னர் இடம் பெயர்ந்து வெளிநாட்டில் உள்ள நான் 10 வருடங்களின் பின்னரே தங்களுடன் தொடர்பு கொள்கின்றேன். தங்களுடன் தொடர்பு கொள்ள நீண்ட காலம் எடுத்தமைக்கு வருந்துகின்றேன். எனினும் 2015 தேர்தல் காலத்தில் நான் மலையகத்தில் இருக்கும் போது பல்வேறு உறுதி மொழிகள் அப்போதைய அரசியல் தலைவர்களும் வழங்கினர். இவற்றில் வீடமைப்பு, தொழில்நுட்பக் கல்லு}ரி அமைத்தல், மற்றும் மலையக பல்கலைக்கழகம் அமைத்தல் போன்றன முக்கியமான உறுதி மொழிகளாக காணப்பட்டன. இவ்வுறுதி மொழிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளதாக நான் அறிகின்றேன். எனவே அது பற்றி எழுதி அனுப்பினால் அதனை இங்கு வாழ்கின்ற எமது சமூகம் பற்றி ஆர்வமுள்ளவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன் அத்தகைய வளர்ச்சிக்கு பின் புலமாக இருந்தவர்களுக்கு சர்வதேச ரீதியாக பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்வதும் பயனுள்ளதாக இருக்கும்."" – இப்படிக்கு, அன்புடன் நண்பன்.

''நண்பரே நீங்கள் அனுப்பிய கடிதம் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். பிரிந்து சென்று 10 வருடங்களாக இருந்தும் ஏதோ நேற்று பிரிந்து சென்றது போல உணர்வாக இருக்கின்றது. நீங்கள் குறிப்பிட்டது போல கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாற்றங்களுக்கான பெருமைகள் யாவும் அக்காலத்தில் (2015 இல் ) மலையகப் பகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற தலைவர்களுக்கே உரித்தாக வேண்டும். பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை அமுல்படுத்த முடியாது என்று கூறிக் கொண்டே காலத்தை வீணடித்தவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து செயற்பட்ட அவர்கள் சர்வதேச ரீதியில் பாராட்டப்பட வேண்டியதும் அவசியமே.

“வீடமைப்பு” , “தொழிற் கல்வி” , “ பல்கலைக்கழகம்” போன்றவற்றில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் எண்னென்னவென்பதை சுருக்கமாக அறியத்தருவதில் பெருமைப்படுகின்றேன்.

பெருந்தோட்டங்களின் வீடமைப்பில் இப்போது பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. “லயன் காம்பிராக்கள்” எல்லாம் எங்கேயோ போய்விட்டன. தோட்டங்களில் இப்போது லயன் காம்பிராக்களே இல்லை . காம்பிராவில் இருந்தவர்கள் யாவருக்கும் தனித்தனி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனி வீடும் முதலில் 7 பேர்ச் என்றனர். பின்பு கம்பனிகள் தோட்டங்கள் நட்டத்தில் இயங்கியமையால்; மக்களின்; வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். என்று தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டதால் தலா ஒவ்வொருவருக்கும் சுமார் 20 பேர்ச் காணிகளுடன் வீடுகளும் கட்டிக் கொள்ள வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. இதன்படி ஒவ்வொரு தொழிலாளிக்கும் குறைந்த பட்சம் 20 பேர்ச் காணி வழங்கப்பட்டன. அதில் 5  6 பேர்ச் அளவிலான நிலத்தில் வீடுகள் கட்டினர். மிகுதி 15 16 பேர்ச் பரப்பினை கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காய்கறிச் செய்கை, பூக்கன்றுகள் நடுதல் போன்ற இன்னோரன்ன தொழில்களுக்காக பயன்படுத்துகின்றனர். சிலர் வாகனம் பழுது பார்க்கும் தொழில் புரிகின்றனர்.
இன்னும் சிலர் கடைகள் வைத்துள்ளனர் வேறு சிலர் சிறிய உணவுகளை தயாரிக்கின்றனர். இப்படி பல்வேறு விதமான கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

கம்பனிகளுக்கு சொந்தமான காணிகள் எவ்வாறு பிரித்து வழங்கப்பட்டன' தேயிலை தொழிலுக்கு என்ன நடந்தது? என்று நீங்கள் கேட்கலாம்.

உண்மையில் கம்பனிகள் தோட்டங்கள் இரண்டு அல்லது மூன்று இணைக்கப்பட்டு தேயிலைச் செய்கைக்கு பயன்படுத்தாத காணிகளையே வீடுகள் நிர்மாணிக்க வழங்கினர். சுமார் 33000 ஹெக்டேயர் அளவிலான காணி கம்பனிகளால் கைவிடப்பட்டதாக ஏற்கனவே நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். இவ்வாறு அரசாங்கம் பெற்ற காணிகளில் சுமார் 20 ஹெக்டேயர் காணித்துண்டில் 250 – 300 குடும்பங்களுக்கு ஒரு குடியிருப்பாக இருக்கும் வகையில் வடிவமைத்து மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. நாங்கள் இருக்கும் குடியிருப்பில் சுற்றிவர மூன்று தோட்டத்தில் லயன் காம்பிராக்களில் வாழ்ந்தவர்கள் யாவரும் சேர்ந்து சுமார் 288 பேர் ஒரு குடியிருப்பில் வாழ்கின்றோம். வீட்டிற்கான அடிப்படைத் தேவைகளான மின்சாரம், வீதி, குடிநீர் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

காணி உறுதிகள் வழங்கப்படுவற்கு சுமார் 10 ஆண்டுகளாகி விட்டன. எங்களுக்கு 2020 ஆம் ஆண்டுகளிலேயே காணி உறுதிகள் கிடைத்தன. காணி உறுதி வழங்குவதுடன் அதற்கான அத்தாட்சிகள் பெற்றுக் கொள்வதில் அரசியல் தலைவர்களின் அயராத முயற்சி காணப்பட்டது. இங்குள்ளவர்களில் சிலர் இன்றும் பெருந்தோட்டங்களில் வேலைக்கு சென்று வருகின்றனர். கொழுந்து பறிப்பதில் கை இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

கை இயந்திரத்தை பயன்படுத்த படித்த இளைஞர்களுக்கு பயிற்சியும் வழங்குகின்றனர். நாளாந்த வேலைக்கு ரூபா 2000 முதல் 2500 ரூபா வரை சம்பளம் கிடைக்கின்றது. இருப்பினும் அதிகமானோர் சுயதொழில் புரிகின்றனர். இங்குள்ள குடும்பங்களில் பலர் வாகனங்கள் வைத்திருக்கின்றனர். பல்வேறு வகையிலான வீட்டுப் பாவனை பொருட்களும் வைத்திருக்கின்றனர்.

இதற்காக சேவை வழங்கும் நிறுவனங்களும் நல்ல முறையில் வளர்ச்சி பெற்றுள்ளன.

இப்படியாக 2015 அளவில் தோட்டங்களில் அதிலும் குறிப்பாக பிரித்தானியர் கட்டிய லயன் காம்பிராக்களில் மூன்று அல்லது நான்காவது பரம்பரையினராக வாழ்ந்து வந்த சுமார் 90, 000 குடும்பங்களுக்கும் தனித்தனி வீடுகள் வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய அபிவிருத்தி திட்டமாகும். “ லயன் காம்பிராக்கள்” சிலவற்றை படம் பிடித்து வைத்துள்ளோம் . ஒரு சில இடங்களில் பழைய கட்டுமானங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இப்போது எவருமே லயத்தில் இல்லை.

தேயிலைக்கு என்ன நடந்தது? அதுதானே நமது உயிர்நாடி? நமது வாழ்க்கை கடந்து மூன்று நான்கு பரம்பரையாக தேயிலையுடன் ஒட்டியதாகவே காணப்பட்டதே என்று நீங்கள் இப்போது இன்னுமொரு கேள்வியை கேட்கலாம். உண்மையி;ல் தேயிலைத் தோட்டங்கள் இல்லாமல் போய்விடவில்லை. நாங்கள் வாழ்கின்ற குடியிருப்பைச் சுற்றி தேயிலைத் தோட்டங்கள் கம்பனிகளுக்கு சொந்தமான தோட்டங்களாகவே காணப்படுகின்றன. ஆனால் இத்தேயிலை செடிகளை கம்பனிகள் போதுமான வகையில் பராமரிக்க தவறிவிட்டனர் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை வழங்குகின்றனர். அதனால் அக்காலத்திற்போல தோட்டத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில் இங்குள்ளவர்கள் இப்போது இல்லை.

நீங்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பது போல இப்போது “ தேயிலை தொழில்” என்பது சிறு தோட்டங்களின் உற்பத்தியாகவே காணப்படுகின்றது.
இன்னுமொரு முக்கிய விடயத்தையும் தங்களுக்கு குறிப்பிட்டு வைக்க விரும்புகின்றேன். நாங்கள் வாழ்கின்ற இந்த குடியிருப்பிற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை சிலர் பிரித்தானியர்களால் வழங்கப்பட்ட ஆங்கிலப் பெயரை தொடர்ந்தும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். சிலர் இத்தகைய மாற்றத்திற்கு உழைத்த அரசியல் தலைவர்களின் பெயர் வழங்குவோ மா என்கின்றனர் ஆனால் இதுவரை எதுவும் முடிவு செய்யவில்லை.
எல்லா வீடுகளுக்கும் இலக்கம் வழங்கப்பட்டு மதிப்பிடல் செய்யப்பட்டு வருடாந்தம் வரிப்பணமும் பிரதேச சபைக்கு வழங்குகின்றோம். தபால்கள் நேரடியாக வீட்டிற்கே வருகின்றன.

இப்போது மலையகம் எங்கும் சுமார் 300 குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்;ளதாக கூறப்படுகின்றது. ஒவ்வொரு குடியிருப்பிலும் சுமார் 250, 300 குடும்பங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

நான் குறிப்பிட்டது போன்று புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருப்பது போல இளைஞர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தமிழ் மொழியிலேயே வகுப்புகள் நடப்பதால் பாடசாலையை விட்டும் விலகும் இளைஞர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றன. உண்மையில் 2015 இல் மலையக அரசியல் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல மலையக மக்களை தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்ட அறிவியல் சமூகமாக மாற்றுவோம் என்பதறகான விரிவான களம் அமைக்கப்பட்டுள்ளது எனலாம்.

சரியாகக் கூறினால் இப்போதுதான் மக்கள் இங்கு நிரந்தரமாக வாழ்கின்றதாக உணர்கின்றனர்;. வீட்டின் உரிமையாளர்கள் தங்களது வீட்டை விஸ்தரிப்பதிலும் அழுகுபடுத்துவதிலும் வெவ்வேறு வடிவங்களில் மதில் கட்டுவதுமாக சுறு சுறுப்புடன் இருப்பதை காணலாம். இதற்கு தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்ற இளைஞர்களும் கணிசமான பங்களிப்பினை நல்குகின்றனர்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல “மலையக பல்கலைக்கழகம்” ஒன்றினையும் அட்டனில் அமைத்து வருகின்றனர். ஹட்டனில் இருந்து கொட்டகலை செல்லும் வழியில் காணப்பட்ட கைவிடப்பட்ட தேயிலைத் தோட்டத்தில் சுமார் 100 ஹெக்டேயர் பரப்பில் நிர்மாணிக்கப்படுகின்றது. இப்போதைக்கு ஆங்கில மொழிக் கல்வி தேயிலை தொழில்நுட்பம், இந்திய கலாசாரம் போன்ற பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இது ஒரு தேசிய பல்கலைக்கழகமாக இயங்கும். இப் பல்கலைக்கழகத்தை உருவாக்க பின்புலமாக இருந்த பேராசியர்களான சந்திரசேகரம், தனராஜ், மூக்கையா போன்றோர்களின் பங்களிப்பையும் மக்கள் மறக்கவில்லை. உங்களைப் போன்றோர்களின் உதவிகள் இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு பயனுள்ளதாக அமையலாம். எனினும் இது பற்றிய விபரங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேசி உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றேன்.

மற்றுமொரு முக்கியமான விடயத்தையும் தங்களுக்கு குறிப்பிட்டு இக் கடிதத்தை இப்போதைக்கு முடிக்கலாம் என்று எண்ணுகின்றேன்.

இங்குள்ள மக்களின் கலை, கலாசார மரபுகளை தொடர்ந்தும் பின்பற்றுவதற்கு போதுமான ஏற்பாடுகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. வீடு , தொழில் , வருமானம் என்பன நிச்சயம் இல்லாத போது நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபங்கள் யாவும் பயனற்ற இடத்தில் பாழடைந்த கட்டடங்களாக இருக்கின்றன. இப்போது நிரந்தர குடியிருப்பாளர்களாக மலையக மக்கள் மாற்றம் அமைத்திருப்பதால் அவர்கள வாழ்கின்ற இடங்களில் இந்த கலாசார மண்டபங்களை அமைக்கலாம். இது பற்றி உங்களது பதிலை எதிர்பார்த்து இக் கடிதத்தை நிறைவு செய்கின்றேன''
இது ஒரு கனவு! நிஜமாகலாம்,
நிஜமாக்குவோம்!
நிதானமாக வாக்களிப்போம்.

நன்றி - வீரகேசரி 02.08.2015
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates