Headlines News :
முகப்பு » » புதிய தேர்தல் முறை : சிறுபான்மை மக்களுக்கு நன்மை கிட்டுமா? - திருமலை நவம்

புதிய தேர்தல் முறை : சிறுபான்மை மக்களுக்கு நன்மை கிட்டுமா? - திருமலை நவம்

19ஆவது திருத்தச் சட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டாலும் புதிய தேர்தல் முறையொன்றை உடனடியாக கொண்டு வருவது என்பது சாத்தியமானதல்ல. புதிய முறையினால் சிறுபான்மை மக்கள் நன்மை அடையப் போவதில்லை. சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் உரிய பிரதிநிதித்துவத்தை உண்டாக்க முடியும்.

இவ்வாறு வட கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பொன் செல்வராசா ஆகியோர் தெரிவித்தனர். புதிய தேர்தல் முறையானது உடனடியாக கொண்டுவரப்படுமா? இம்முறையினால் சிறுபான்மை சமூகம் நன்மைகள் அடைய வாய்ப்புண்டா என வினவிய போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள்.

அவர்களுடனான செவ்வி பின்வருமாறு,
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதுபற்றி தனது கருத்தை தெரிவிக்கையில்,

புதிய தேர்தல் முறை கொண்டு வருவதைப் பற்றிய எந்த நிபந்தனைகளையும் 19 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் எதிர்த்தரப்பினரால் முன்வைக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க 19ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றிய தினம் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் புதிய தேர்தல் முறைபற்றி குறிப்பிட்டாரே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புதிய தேர்தல் முறை கொண்டு வருவதைப்பற்றி அவர் பிரஸ்தாபிக்கவில்லை.

குறிப்பிட்டு சொல்வதனால், புதிய தேர்தல் முறையானது உடனடியாக கொண்டுவரக் கூடிய சாத்திய நிலையில்லைெயன்றே கூற வேண்டும். அதேவேளை, த.தே.கூட்டமைப்பினராகிய நாங்களும் அவசரப்பட்டு புதிய தேர்தல் முறையை கொண்டுவர அனுமதிக்க மாட்டோம். காரணம் ஜனாதிபதி அதிகாரத்தை குறைப்பதோ அல்லது சுயாதீன ஆணைக்குழுக்களைக் கொண்டு வருவதோ அனைவரும் இணங்கி உடனடியாக கொண்டு வரமுடியும், ஆனால், தேர்தல் முறைமாற்றமென்பது அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து தீர்மானிக்க முடியாது.

எல்லை நிர்ணய சபையை உண்டாக்கி மாவட்டந்தோறும் புதிய தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பது மற்றும் விடயங்களை தீர்மானிப்பது என்பது எல்லை நிர்ணய சபை நேரடியாகவே மக்களை சந்தித்து கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும். எனவே அதற்கு கால அவகாசம் வேண்டும் ஆகக்குறைந்தது ஒரு வருடம் தேவை. ஆகையால் புதிய தேர்தல் முறை என்பதை அவசரமாக கொண்டு வருவதற்கு நாம் இணங்க முடியாது. உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் பழைய விகிதாசார முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய தேர்தல் முறை கொண்டுவரப்பட வேண்டுமானால் கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய முறை கொண்டு வருவதற்கு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் பழைய முறையிலேயே நடத்தப்படவுள்ள தேர்தல் நடைபெறுமென்று நம்பலாம்.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிேரமச்சந்திரன் தனது கருத்தை தெரிவிக்கையில், 20ஆவது திருத்தம் எவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது திட்டவட்டமாக தெரியாது. புதிய தேர்தல் மாற்றம் பற்றி ஸ்ரீல.சுதந்திரக் கட்சி ஒரு செயல்முறையை முன் வைத்துள்ளது. அதன்படி முன்பிருந்த 160 ஆசனங்களுடன் மொத்தமாக 255 பேர் பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். மாவட்ட அடிப்படையில் குறித்த ஆசனங்கள் என்றும் தேசிய அடிப்படையில் குறித்த தொகை ஆசனங்கள் என்றும் முன் மொழிந்துள்ளனர். ஆனால், இவை சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதா என்ற கேள்வி உள்ளது. மலையக மற்றும் முஸ்லிம் மக்களுக்கு வரவிருக்கும் புதிய தேர்தல் முறை எவ்வளவு தூரம் பயனளிக்க முடியும் என்பது தெரியாது.

அண்மையில் சிறிய கட்சிகளும் சிறுபான்மை கட்சிகளும் கூடியாராய்ந்த போது 50 வீதம் தொகுதி வாரியாகவும் 50 வீதம் விகிதாசார முறையிலும் தேர்ந்தெடுக்கப்படும் முறை கொண்டு வரப்பட்டால் அது சிறுபான்மை மக்களை பாதிக்காது எனக் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி இன்னொரு முறையான முன்மொழிவை செய்துள்ளது. அதன்படி 235 ஆசனங்களாக்கப்பட்டால் சுமூகமான தீர்வு காண முடியுமெனத் தெரிவிக்கின்றார்கள். தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையை நீக்கிவிட்டு கலப்பு முறையான தேர்தல் முறையொன்றை கொண்டுவர வேண்டுமென அரசு யோசித்து வருகிறது. இக்கலப்பு முறையானது சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகத்தின் முழுமையான பிரதிநிதித்துவத்தை கொண்டுவருமா? ஆனால் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென்பதுதான் எமது எதிர்பார்ப்பு. மக்களுடைய சனத்தொகை வீதத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். இதை கொண்டுவரப்படவுள்ள தேர்தல் முறை உறுதி செய்யுமாக இருந்தால் பிரச்சினை உருவாகாது. ஆனால் அவ்வாறானதொரு முன்மொழிவு இதுவரை வெளிவரவில்லையென்பதே உண்மை.

தற்பொழுதுள்ள விகிதாசார முறை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுமாக இருந்தால் பிரச்சினை எழ நியாயமில்லை. முன்பிருந்தது போலவே எல்லை நிர்ணயம் இருந்து கொண்டிருக்குமென கூறப்பட்டாலும் அது ஏற்புடையதாக கருதப்படும்.

இல்லாமல் மீண்டும் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டிய தேவை உருவாகுமாக இருந்தால் அதை நிர்ணயிப்பதற்கு கால அவகாசம் தேவை. எல்லை நிர்ணயத்தை இரண்டொரு நாளில் செய்து விட முடியாது. எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் குழுக்கள் மற்றும் பிரதேசவாதிகளுடன் கலந்துரையாட வேண்டும். இந்த எல்லை நிர்ணயம் என்பது சனத்தொகை மற்றும் பூகோள அடிப்படையில் தீர்மானிக்கப்படும் விடயமாகும்.

தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் புதிய தேர்தல் முறையில் உடனடியாக நடத்த முடியாது. பழைய முறையிலேயே நடத்த முடியும். புதிய தேர்தல் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு அது சிறுபான்மை மக்களை பாதிக்குமாக இருந்தால் ஐ.தே.கட்சியே பல ஆசனங்களை இழக்க வேண்டி நேரிடும். உதாரணமாக முஸ்லிம், மலையக மக்கள் ஊடாக வரக்கூடிய ஆசனங்களை இழந்தால் அது அவர்களைப் பாதிக்கும். எனவே மேற்படி சமூகத்தின் வாக்கு வங்கியை இழக்க ஐ.தே.கட்சி விரும்பாது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தல்முறை மாற்றத்துடன் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் அது உடனடியாக முடியாது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் செய்யமுடியும். எனவே உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின், நடைமுறையிலுள்ள விகிதாசார முறையில் நடத்திவிட்டு அடுத்த தேர்தலை புதிய முறையில் நடத்த முடியும்.

புதிய தேர்தல் முறை யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதித்துவத்தில் என்னவித மாற்றத்தை கொண்டுவர முடியுமென பார்ப்பின், ஏலவே 11 பிரதிநிதிகளை தெரிவு செய்த நிலை குறைக்கப்பட்டு தற்பொழுது 7 ஆசன மாக்கப்பட்டுள்ளது. பழைய விகிதாசார முறையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் இப்போதைய விருப்பின்படி 7 ஆசனங்களையே யாழ். கொண்டிருக்கும். இதற்கு காரணம் மக்கள் தொகை குறைந்தமையாகும். எனவே தேர்தல் தொகுதியை குறைக்கவே அரசு விரும்பும். அவ்வாறு குறைப்பதாக இருந்தால் கிளிநொச்சி மாவட்டத்தை ஒரு தேர்தல் தொகுதியாகவும் யாழை 5 தேர்தல் தொகுதியாகவும் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் மக்களுக்கு இரு இடத்தை ஒதுக்குவதாகவும் கூறப்படுகிறதே, தவிர, இந்தக் கணக்கு சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். புதிய தேர்தல் முறையானது வடகிழக்கு மக்களுக்கு மாத்திரமல்ல மலையக மற்றும் முஸ்லிம் மக்கள் எல்லோரையும் பாதிக்க கூடிய விடயமாகும்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தனது கருத்தை தெரிவிக்கும் போது கூறியதாவது, 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை பாரிய வரலாற்று வெற்றியாகும். 215 வாக்குகளால் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தின் மூலம் தமிழர்களுக்கு நன்மை கிடைக்குமென்பது உறுதிப்படுத்தப்படவில்லை இருந்த போதிலும் இலங்கை வாழ் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய வாய்ப்பை இது உருவாக்கியுள்ளது. 18ஆவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்பட்டு ஏலவேயிருந்த 17 ஆவது திருத்தச் சட்டத்தின் நன்மைகள் மீளக்கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பு இரண்டு தடவைகளுக்கு மேல் வரமுடியாது என்பதும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவும் சுதந்திரமும் 19ஆவது திருத்தம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றினால் இலங்கை மக்கள் பரிபூரண நன்மைகளை பெறுவார்கள் என்று நம்பலாம். இதற்குப் புறம்பாக பார்க்கின்ற போது இதனைத் தொடர்ந்து 20 ஆவது சட்ட மூலமொன்று கொண்டு வரப்படவுள்ளது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. மிக விரைவில் 20ஆவது சட்டமூலம் பாராளுமன்றுக்கு வரவிருக்கின்றது.

இச்சட்டமூலத்தின் மூலம் கொண்டு வரப்படவுள்ள விடயம் என்னவென்றால் தற்போதுள்ள விகிதாசார முறை நீக்கப்பட்டு முன்னைய கால தொகுதி முறை கொண்டு வரப்படவுள்ளது. இத்தொகுதி முறையோடு விகிதிசாரமும் சேர்க்கப்பட்டு கலப்பு முறை தேர்தல் முறையொன்று கொண்டு வரப்படவுள்ளது. இதையே 20ஆவது திருத்தமாக பார்க்கலாம்.

மேற்படி 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கிழக்கில் வாழ்கின்ற மூன்று இனங்களும் என்ன வகையில் நன்மையடையப் போகிறார்கள் அல்லது பாதிப்படையவுள்ளார்கள் என்பதை ஆராய்ந்தால் உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொள்வோமாயின், நான்கு தொகுதிகள் என்று கூறலாம். மட்டக்களப்பு இரு அங்கத்தவர்கள் தொகுதியாகவும் மற்றும் பட்டிருப்பு தொகுதியென வரலாம். இது பற்றி சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே சொல்ல முடியும்.

இதைவிடுத்து, வட கிழக்குக்கு வெளியே சென்று பார்ப்போமாயின், ஏனைய பிரதேசங்களில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்கள் புதிய தேர்தல் முறையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, மலையகத்தை பொறுத்தவரை ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளைப் பெறக் கூடிய வாய்ப்பையே புதிய தேர்தல் முறை உருவாக்குமென்று கூறலாம். தற்போது, உள்ளது போல் பதுளை மாவட்டம் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மலையக பிரதிநிதித்துவம் கூட வர வாய்ப்பில்லாமல் போய்விடும். ஒட்டு மொத்தமாக பார்க்கின்ற போது வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் குறைவாகவும் மலையக மற்றும் முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலையே காணப்படுகின்றது.

இந்த அடிப்படையில் நோக்குகின்ற போது வட கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களாகிய நாமும் சிறுபான்மையினம் என்ற முறையில் ஏனைய சிறுபான்மை இனத்துக்கு பாதிப்பு வருகின்ற போது நாம் அதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது பற்றி தீர்க்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். வடக்கு கிழக்காக இருக்கலாம். அதற்கு வெளியேயுள்ளவர்களாக இருக்கலாம். சிறுபான்மை இனத்தவர்கள் இப்பொழுது எவ்வகை பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கின்றார்களோ அதேயளவு பிரதிநிதித்துவத்தை புதிய தேர்தல் முறையிலும் பெறுவதற்குரிய வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும். எனவே 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும் போது தொகுதிவாரியாகவோ அல்லது விகித முறையிலோ சிறுபான்மை மக்கள் தமக்குரிய பிரதிநிதித்துவத்தை பெறக்கூடிய வாய்ப்பு நிலை உருவாக்கி கொடுக்கப்பட வேண்டுமென்பதே த.தே. கூட்டமைப்பினராகிய எங்களது கோரிக்கையாகும்.

இலங்கையிலுள்ள சிறுபான்மை இனக்கட்சிகள் மற்றும் சிறுகட்சிகள் புதிய தேர்தல் முறை மாற்றம் பற்றி கூடி ஆராய்ந்து வருகின்றார்கள். இவர்கள் மேலும் மேலும் அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலமே நியாயமான தீர்வை 20ஆவது திருத்தத்தின் மூலம் அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். த.தே.கூட்டமைப்பை பொறுத்தவரை சிறுபான்மை சமூகத்துக்காக குரல் கொடுக்கவோ போராடவோ நாம் காத்திருக்கின்றோமென்பதை வெளிப்படையாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது கருத்தை தெரிவிக்கையில், புதிய தேர்தல்முறையென்பது தொகுதி வாரியும் விகிதாசாரமும் கலந்த முறையாகும்.
இதில் காணப்படும் பிரச்சினையென்னவென்று உதாரணமாகப் பார்ப்போமானால், வவுனியா மாவட்டத்தில் முதலாவது இடத்தில் த.தே.கூட்டமைப்பு அதிக வாக்கை எடுக்குமாக இருந்தால், இரண்டாவது தெரிவு த.தே.கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட மாட்டார். அடுத்த கட்சிகள் எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளார்கள் என்றே கணக்கிடப்படும். அதாவது கூட்டமைப்பு முதல் ஆசனத்தை பெற்றுவிட்டால் இரண்டாவது மூன்றாவது ஆசனத்தை பெற இம்முறையில் வாய்ப்பு இருக்காது. இம்முறையினால் சிறுபான்மையினர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் குறிப்பாக, மலையக மக்கள் கணிசமான அளவு பாதிக்கப்படுவார்கள். முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். புதிய தேர்தல் முறை கொண்டு வரப்படுவதால் வடகிழக்கு மக்கள் நன்மை அடைவார்கள் என்று கூறுவதைவிட பொதுவாகவே சிறுபான்மை சமூகம் முழுவதுமே பாதிக்கப்படு.மென்பதேயுண்மை. புதிய முறைப்பற்றி சிறுபான்மை கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூடித்தீர்மானித்திருந்தன புதிய இந்த தேர்தல் முறையை ஏற்றுக்கொள்வதில்லையென்று இதை அவர்கள் அரசாங்கத்துக்கும் அறிவித்துள்ளார்கள். ஆகவே குறித்த இந்த புதிய தேர்தல் முறையென்பது இருவகை முறையை தாங்கி வருவதனால் பல சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.

புதிய கலப்பு முறைத்தேர்தலை உடனடியாக கொண்டுவர வேண்டுமானால், மாவட்டங்கள் தோறும் புதிய வகையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதற்கு காலம் எடுக்கும். எனவே புதிய முறையில் தேர்தலை நடத்துவது என்பது உடனடியாக சாத்தியமாகுமென்று கூற முடியாது. ஆகவேதான் உடனடியாக மாற்றமெதையும் செய்யாமல் நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறையைப் பின்பற்றி தேர்தலை நடத்துவதுதான் உடனடியாக தேர்தலை நடத்துவதற்குரிய உபாயமாக இருக்கும். எனவே புதிய தேர்தல் முறை நடைமுறைக்கு கொண்டு வருவதனால் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதுதவிர தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகம் ஆகியவற்றின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் வியூகம் வகுக்கப்பட வேண்டும்.

வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரை புதிய தேர்தல் முறை (கலப்பு முறை) கொண்டுவரப்படுவதனால் நன்மை கிட்டும் என்று சொல்லிவிட முடியாது. தற்பொழுது தொகுதி வாரியாக மூவரும் விகிதாசார முறையில் மூவருமாக ஆறு உறுப்பினர்கள் வன்னியில் உள்ளனர். இதே நேரத்தில் புதிய தேர்தல் முறையில் த.தே.கூட்டமைப்பு மூன்று ஆசனத்தை பெற்றிருந்தால் நான்காவது ஐந்தாவது ஆசனங்கள் கிடைக்க வாய்ப்பில்லாமலே போய்விடும். இதுவே புதிய தேர்தல் முறையின் வகுப்பு முறையாகும்.
போட்டியிடும் மாற்றுக்கட்சிகளே நான்காம் ஐந்தாம் இடங்களுக்கு வரமுடியும், இது ஏற்புடைத்தான முறையென்று கூறிவிட முடியாது. யாழ்ப்பாணத்தில் ஏலவே 11 தொகுதிகள் இருந்து வந்துள்ளன. ஆனால் அவை சனத்தொகையின் அடிப்படையில் தற்பொழுது 7ஆக குறைக்கப்பட்டுள்ளன. புதிய தேர்தல் வகுப்பில் யாழ். மாவட்டத்துக்கு எத்தனை ஆசனங்கள் ஒதுக்கப்படவுள்ளன என்பது பற்றி தற் போதைக்கு கூற முடியாது. ஆனால், வன்னியின் நிலை மூன்று தொகுதிகள், அத்துடன் மேலும் மூன்று பேராக ஆறு பேர் தெரிவு செய்யப்படும் நிலை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படலாம். நடைமுறையிலுள்ள விகிதாசார முறையில் மாவட்டம் முழுவதும் எந்தக் கட்சி கூடிய வாக்குகளைப் பெற்றிருக்கிறதோ அதற்கே போனஸ் ஆசனம் வழங்கப்படுகின்றது. ஆனால், புதிய தேர்தல் முறையில் இம்முறை கொண்டுவரப்படுமா என்பது கேள்விக்குறியான விடயம். காரணம் தொகுதி முறையில் ஒரு கட்சி முன்னணி வகிக்கின்றதென்றால் அக்கட்சிக்கு தொகுதி ஆசனம் வழங்கப்படும். அதே தொகுதியின் இரண்டாவது ஆசனத்துக்கான வாக்கு தொகுதியில் முன்னணி வகிப்பவருக்கு எண்ணப்படமாட்டாது. மாற்று கட்சிகளுக்கே எண்ணப்படும். எனவே புதிய தேர்தல் முறையானது சிக்கல் கொண்டது மாத்திரமில்லை, ஒரு மாவட்டத்தின் மக்களின் விருப்பு வெறுப்புக்கள் சரியான முறையில் பிரதிபலிக்க வாய்ப்பில்லாமல் போய்விடுமென செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்தார்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates