Headlines News :
முகப்பு » » வவுனியா பூந்தோட்ட அகதிகளுக்கு உதவி

வவுனியா பூந்தோட்ட அகதிகளுக்கு உதவி


மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா பூந்தோட்டக் கிராமத்தில் நிர்க்கதியற்ற நிலை யில் வாழும் மலையக மக்களுடைய அவலநிலை தொடர்பாக கடந்த ஞாயிறு வீரகேசரி வாரஇதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைக்கு பலன் கிட்டியுள்ளது.

இந்த மக்களுடைய துன்ப துயரத்தை ஞாயிறு வீரகேசரியின் ஊடாகப் படித்தறிந்த சிவன் புதிய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நாயகம் கணேஷ் வேலாயுதம், அங்குள்ள மக்களுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மறுநாள் திங்கட்கிழமை வவுனியா பூந்தோட்டப் பகுதியலுள்ள குறித்த இடத்திற்கு சென்றிருந்தார்.

பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்ததைப் போன்று மன அதிர்வுகள் ஏற்படும் வகையில் அந்த மக்களுடைய வாழ்க்கை முறை இருந்தது. எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அந்த மக்களுடைய நிலை காணப்படுகிறது.

1983 ஜுலை கலவரம் காரணமாக இந்த மக்கள் இடம்பெயர்ந்து வவுனியாவில் வாழ்ந்தாலும் அங்கும் அவர்களுடைய வாழ்க்கை முறை கொஞ்சம்கூட மாறவில்லை என்று தான் கூற வேண்டும். லயன் வாழ்க்கையைப் போன்றே சிறிய குடியிருப்புக்களில் தங்களுடைய வாழ்க்கையை முடக்கிக் கொண்டுள்ளனர்.
மலையத்தில் சிவன் புதிய தொழிற் சங்கம், சிவன் வலது குறைந்தோர் நிலையம் போன்ற பெயர்களில் தன்னுடைய சொந்த நிதியில் பல்வேறு மனிதபிமான உதவிகளைச் செய்து வரும் கணேஷ் வேலாயுதம், அங்குள்ள மக்களுக்காக உடனடித் தேவையாக ஒரு வாரத்திற்கான உலருணவுப் பொதிகளை வழங்கினார்.

இதில் அரிசி, பால்மா, பருப்பு, சீனி, வெங்காயம், உருளைக் கிழங்கு , சவர்க்காரம், உப்பு, உள்ளிட்ட பொருட்களுடன் பாய் போன்ற படுக்கை விரிப்பு ஆகியவையும் அடங்கியிருந்தன.

அகதிகள் முகாமிலுள்ள மக்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், பருத்தித்துறைக்கு அருகில் குடத்தனை என்ற இடத்தில் 10 ஏக்கர் காணி உள்ளது எனவும் அதில் ஐந்து ஏக்கர் காணியை மேற்படி அகதி முகாமிலுள்ள மக்களுக்கு தந்துதவுவதாகவும் எஞ்சியுள்ள ஐந்து ஏக்கர் காணியில் விவசாயம் செய்து வாழ முடியுமெனில் அதனையும் தன்னால் தந்துதவ முடியும் என்றும் கூறினார்.

அதற்கு குறித்த மக்கள் தாம் பழக்கப்பட்ட பகுதியிலேதான் வாழ விரும்புவதாகவும் அத்துடன் சுயதொழில் துறையில் ஈடுபடுவதற்கு உதவிகள் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார்கள். அதற்கு ஏற்ப ஆடு, மாடு, கோழி வள ர்ப்புக்கு அவர் உதவி செய்வதாக அம்மக்களி டம் உறுதி அளித்தார்.

இதில் முக்கிய அம்சமாக இங்கு வாழும் 110 குடும்பங்களுக்குரிய தலைவராக ஒரு சிங்களவரே இருக்கிறார். இவர் 1983 ஜுலை கலவரத்தின் போது இந்த மக்களுக்கு அடை க்கலம் கொடுத்து பாதுகாத்தவர்.

மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த இவர் 1989 இல் நாட்டில் நிலவிய பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்து பாதுகாப்புக் கருதி இம்மக்களுடன் இணைந்து கொண்டவராவார். இவருடைய பிள்ளைகள் யாவரும் தமிழ் மொழியே பேசுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates